மணிமண்டபம்

வரலாற்றுச் சிறுகதைப் போட்டி - ஆறுதல் பரிசு

- Advertisement -

பத்தாம் நூற்றாண்டின் பின் பகுதி

“மன்னா ..நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவானது மிகவும் மோசமான முடிவு “இதற்கு எக்காலத்திலும் இந்த மந்திரிசபை ஒப்புதல் அளிக்காது மன்னா “

மன்னனைக் கண்டு எவ்வித பயமும் இல்லாமல் அனைத்து மந்திரிகளும் ஒருமித்த குரலில் மன்னனை நோக்கி சப்தமிட்டார்கள் .

“பாண்டிய படையைத் தோற்கடித்து இந்த கொங்க தேசம் வெற்றியடைய படைத்தலைவனாக வல்லான்  நிறைய உதவிகள் செய்து இருக்கலாம் .அதற்காக உங்களுக்கு இணையாக கோயிலில் அவனுக்கும் ஒரு சிலை எழுப்ப வேண்டும் என்பதெல்லாம் மிக வியப்பாக இருக்கிறது மன்னா !”

மந்திரிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய  எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்க மன்னன் எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக அரியணையில் அமர்ந்திருந்தான் .

“உங்களுடைய குலம் என்ன ?கோத்திரம் என்ன.. ?ஒரு கீழ் குலத்தில் பிறந்த ஒருவனை படைத்தலைவனாக வைத்துக் கொண்டதே மாபெரும் தவறு. இப்பொழுது அவன் உங்களுக்கு உதவி செய்தான் என்ற ஒரே காரணத்திற்காக அவனுக்கும் உங்களுக்கு இணையாக சிலை எழுப்ப வேண்டும் என்பதெல்லாம் மிகையாக இல்லையா மன்னா? “

குலத்தை பற்றி பேசிய உடன் மன்னன் மௌனம் கலைத்தான் .

“ஒரு தேசம் என்பது எல்லா குல மக்களும் கலந்ததுதான் .இங்கே குலம் ஏதும் இல்லை .ஒரு மன்னனாக எனக்கு எல்லோரும் சமம்தான் .அந்தக் கீழ் குலத்தில் பிறந்த மனிதனின் வீரத்தினால் தான் இன்று நாமெல்லாம் எதிரிகளிடம்  வீழாமல் இங்கு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள் .அவனது போர் திறமையையும் வீரத்தையும் தான் நான் பார்ப்பேனே அன்றி அவனது குலத்தை நான் என்றும் எக்காலத்தும் பார்த்ததில்லை “

அரசனின் பேச்சுக்கு எந்த மந்திரிகளும் கட்டுப்படவில்லை

” .இல்லை மன்னா ஆயிரம் சொன்னாலும் இந்த முடிவுக்கு எங்களால் கட்டுப்பட முடியாது “

“ஒரு மன்னனின் உத்தரவிற்கு பின்னரும் கூட நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் வாதாடுவது தான் எனக்கு வியப்பாக உள்ளது “

வருத்தத்தை மறைத்துக் கொண்டு கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடினான் மன்னன்  வீரமலை விஜயநாதன் .

ஒரு நிமிடம் மன்னனின் கோபத்தைக் கண்ட அரசவை அமைதியில் உறைந்தது .

அந்த அமைதி எல்லாம் சில நாழிகை தான் .அந்த அமைதியை கிழித்துக்கொண்டு அமைச்சர்  சாதவாகனரின் வார்த்தைகள் மன்னனை நோக்கி நெருப்பை உமிழ்ந்தன.

“மன்னா ….நீ பெரும் குற்றம் செய்ய பார்க்கிறாய் .இந்தக் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க என் குலத்தாரால்   முடியாது. .மக்கள் எவ்வழியோ அவ்வழி தான்  மன்னன் வாழ்ந்தாக வேண்டும். பெரும்பான்மை கூட்டமாக நமது குலம் இருக்க ஒரு கீழ் குலத்தில் பிறந்த ஒருவனுக்கு உங்களுக்கு சமமாக இடம்தர எப்படி துணிந்தீர்?   உங்களுக்குப் பிறகு அக்குலமக்கள் எங்களை இழிவாக பார்க்க மாட்டார்களா ? அதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் ?காலங்காலமாக கட்டிக் காத்த  குலப்பெருமையை உங்களது சிறு செயலால் குத்திக் கிழிக்க பார்க்கிறீர்களா மன்னா?

முக்கிய அமைச்சர் சாதவாகனாரின்ன் பேச்சைக் கேட்ட அனைத்து மந்திரிகளும் ஒரே மூச்சில் மன்னனை எதிர்க்கத் துணிந்தனர்.

“அமைச்சரே  …….மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய என் அமைச்சரே …..உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை !”

“வேறு வழி இல்லை ….மன்னா கொடிப்பெருமையும் குலப்பெருமையும் மிக முக்கியம்  என்பது அரசனாகிய உங்களுக்கு தெரியாததா .?.”நீங்கள் இந்த எண்ணத்தை உடனே கைவிட்டாக வேண்டும்… இல்லையெனில் வேறுபட்டு விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் “

அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னனின் முகம்  மாறிப்போனது .வருத்தத்தை மறைத்துக் கொண்டு” என்ன வவிளைவுகளை நான் சந்திக்க வேண்டி இருக்கும் அமைச்சரே …?கேட்டான் மன்னன் விஜயநாதன் .

எந்தவித யோசனையும் இன்றி அமைச்சர் ஒரே வரியில் சொன்னார்.

“உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை மன்னராக நியமிக்க நாங்கள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்தால் என்ன செய்வீர்கள் மன்னரே ..?

“இவ்வளவு வெற்றிகள் ,இவ்வளவு போர்கள், இவ்வளவு சிறப்புகள் இது அத்தனையும் என் நாட்டு மக்களுக்கு என்று இருந்தேனே…. என்னைப் போலவே என் நாட்டு மக்களும் அனைவரையும் சரிசமமாக நடத்துவார்கள் என்று  இருந்தேனே….. அந்த எண்ணத்தில் எல்லாம் மண் விழுந்து விட்டது ….என் முடிவை கேளுங்கள் …இனி இந்த நாட்டிற்கு மன்னனாக நான் எக்காலத்திலும் இருக்க மாட்டேன் படைத்தளபதி  எனக்காய் தன் உயிரையும் துச்சமாய் மதித்தவன் .உங்கள் மொழியில் சொல்வதென்றால் இழிகுலத்தில்   பிறந்த அவனுடன் இந்த நாட்டை விட்டு வெளியேறி போகிறேன் .இனிமேல் எனக்கும் இந்த நாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ….இந்த நாட்டை விட்டு செல்கிறேன் …”

மன்னன் வேகமாக அரியணையில் இருந்து இறங்கி அரண்மனையை விட்டு வெளியேறினான்.

 செய்தி கேள்விப்பட்ட வல்லான் வேகமாக ஓடி வந்து மன்னனுடைய காலைக் கட்டிக் கொண்டு ” மன்னா ….எனக்காக நீங்கள் யாரிடமும் சண்டையிட வேண்டாம்… எனக்காக இந்த நாட்டை விட்டு விலகிப் போக வேண்டாம் ….எனக்கு மரியாதை கொடுப்பதற்காக உங்கள் மரியாதையை இழந்து விடாதீர்கள் மன்னா …உங்கள் மரியாதை குறைவுக்கு நானே காரணமாய் இருந்து விடக்கூடாது மன்னா ..”.அழுகையில் கத்திக் கதறினான்.

“இல்லை வல்லா… உண்மையை புரிந்து கொள்ளாத …வீரத்தை புரிந்து கொள்ளாத… நாட்டு மக்கள் எனக்கு தேவையில்லை …எப்பொழுது திறமையை விட குலப்பெருமை  தான் முக்கியம் என்று இந்த நாட்டு மக்கள் போனார்களோ அதன் பிறகு இந்நாட்டில் எனக்கு வேலை இல்லை .நான் இந்த நாட்டை விட்டு விலகி செல்கிறேன்… நீ வருகிறாயா இல்லையா வல்லா ..?

“மன்னா …நீங்கள் இருக்கும் இடமே எனக்கு சொர்க்கம்.. நீங்கள் இல்லாத இடத்தில் எனக்கு எந்த வேலையும் இல்லை… எனக்காக நீங்க நாட்டை இழந்து செல்வது தான் என் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது “

“உனக்காக இல்லை வல்லா…. நான் இந்த மக்களுக்காக இனிமேல் உழைத்து என்ன பயன் ?

அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் அரசனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வீரத்தில் தீரத்தில் சிறந்து விளங்கிய மன்னன் நிற்கதியாய் அரண்மனையை விட்டு வெளியேறினான்.

வீரத்தில் சிறந்த வல்லாளும் அரசனுடன் அரண்மனையை விட்டு வெளியேறினான்.

வெற்றி வீரனாய் வெற்றி குதிரையில் வலம் வந்த தன்னாட்டை விட்டு வெறும் காலுடன் காட்டை நோக்கி நடந்தான் மன்னன் விஜயநாதன்.

வல்லானும் பின் தொடர்ந்து ஓடினான்.

  கால் போன போக்கில் நடந்த இருவரும் நாட்டை விட்டு வெளியேற மனமின்றி நடுக்காட்டில் அமர்ந்தனர். உணவின்றி தன் உயிரை மாய்த்துக்கொண்டான் மன்னன் .மன்னன் இறந்த அக்கணமே  தன்னுயிரையும் மாய்த்துக்கொண்டு இறந்து போனான் வீரமிகு படைத்தலைவன் வல்லான்.

காட்டில் வேட்டையாடி வந்த வேடவர்கள் இருவரது உடல்களையும் பார்த்து நாட்டில் நடந்த விஷயங்கள் அவர்களுக்கு தெரிந்து இருந்ததால்  இருவரது உடல்களையும் புதைத்து  அவர்கள் நினைவாக இரு நடுக்கல்களை அடர்ந்த காட்டி நடுவே நட்டு வைத்தார்கள் .நாட்டு மக்களுக்கு தெரியாமல் அவ்விருவர்களையும் சாமியாக பூஜித்து வந்தார்கள் வேடவர்கள் .

இன்று .

அந்த முக்கிய அரசியல் கட்சி அலுவலகம் பொதுக்குழு  கூட்டத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தது .

கட்சியின் தலைவரும் மாநிலத்தின்  எதிர்க்கட்சித் தலைவருமான சென்னகேசவ பெருமாள் விளம்பர பதாகைகளில் ஆங்காங்கே சிரித்துக் கொண்டிருந்தார்.

பொதுக்குழுவின் முக்கிய நோக்கமே வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு வகுக்க  வேண்டிய வியூகங்களை பற்றிய ஆலோசனை செய்வதற்காகத் தான்.

அலுவலகம் பரபரப்பில் இருக்க சரியான நேரத்திற்கு வந்தார் தலைவர் .

கூட்டத்தை தொடங்கி வைத்த தலைவர் நேரடியாக கேள்வியைக் கேட்கத் தொடங்கினார் .

“சென்ற முறை நாம்  தோற்றுப் போக மிக முக்கிய காரணமே கொங்கதேசத்தில் நமது வாக்குகளை இழந்தது தான்….இம்முறை நமது வாக்கு வங்கியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் நீங்கள் இப்போது கூற வேண்டும் .”

கொங்கதேச முன்னாள் அமைச்சர்கள்   ஒருமித்த குரலில் தலைவரை நோக்கி ,”தலைவரே கொங்க தேசத்தில் நமது வாக்கு வங்கி அதிகரிக்க வேண்டுமெனில் கொங்க தேசத்தில் சிறந்து விளங்கிய வீரமலை விஜயநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கை விடலாம்… இதனால் கொங்க தேச மக்களின் வாக்குகளை நாம் எளிதாக கைப்பற்றி விடலாம்”என்று கூறிவிட்டு தலைவரின் பாராட்டுக்காய் சிரித்துக் கொண்டு நின்றார்கள் .

“என்னையா இந்த யோசனை நல்லா இருக்கா? என்று மற்றவர்களை பார்த்து கேட்டார் தலைவர் .

“தலைவரே ..யோசன நல்லா தான் இருக்கு.. ஆனா இதுல வேற ஒரு பிரச்சனை வரும் .அத நம்மால சமாளிக்க முடியுமா? அதனால வெற்றி பாதிக்குமான்னு யோசிக்கணும்….. தலைவரே ..”என்றார் ஒரு முன்னாள் .

“சொல்ல வந்தத தெளிவா சொல்லுயா.. அப்பத்தான எல்லார்த்துக்கும் புரியும் …

அது…. வந்து…. தலைவரே நாம வீரமலை விஜயநாதனுக்கு மணிமண்டபம் கட்டணும்னு சொன்னா கூடவே இருந்த வல்லானுக்கும் சரிசமமா மணிமண்டபம் வேணும்னு அவங்க ஜாதிக்காரங்க நிப்பாங்க… தேவையில்லாம அங்கு ஒரு பிரச்சனை உருவாகும் ….ஏன்னா வல்லானோட சாதிக்காரங்க நிறைய பேரு நம்மகிட்ட அமைச்சரா கூட இருந்திருக்காங்க… இரண்டு பேருக்கும் சேர்ந்து கட்டலாம்னா கண்டிப்பா வீரமலை விஜய் நாதனுடைய குலத்தார் எல்லாம் ஏத்துக்க மாட்டாங்க… அதனால இந்த யோசனை எனக்கு சரியா படல தலைவரே “”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கொங்கதேச முன்னாள்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது .

“என்னையா பேசுறீங்க …எங்க ஆளுக்கு ஒரு மணிமண்டபம் கட்டலாம்னா வீணா பிரச்சனைய இழுத்து விடறீங்க எங்க ஆளுக கொட்டற  காசுனாலதான் கட்சியே நடந்துட்டு இருக்கு தெரியுமா …தெரியாதா…? இதெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா தலைவரே “கோபத்தில் பொரிந்து தள்ளினார்கள் கொங்கதேசம் முன்னாள்கள்.

“”என்னப்பா  நீங்க கொட்டற காசில தான் கட்சி நடந்துக்கொண்டிருக்கிற மாதிரி சொல்றீங்க ஏன் எங்க ஆளுங்க எல்லாம் இல்லையா சும்மா வந்துடானுங்க பேசிட்டு …

எதிரும் புதிருமாய் வாக்குவாதம் நடக்க தலைவர் திக்கு முக்காடி போனார். வார்த்தைகள் தடித்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள பொதுக்குழு கூட்டம் களோபரத்தில் முடிந்தது .

ஒரு மணி நேர பிரச்சனைக்கு பிறகும் பிரச்சினை தீர்ந்தபாடில்லாத காரணத்தால் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி நடையை கட்டினார் தலைவர்.

“இந்த பாழாப்போன பதவி ஆசை மட்டும் எனக்கு இல்லைனா …போங்கடா …நீங்களும் உங்க அரசியலும் அப்படின்னு போயிருப்பேன்…. கொஞ்ச நாள் முதல்வரா இருந்துட்டனே இதை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கு “என்று மனதிற்குள் நினைத்தபடியே வேகமாக கார் ஏறினார் தலைவர் .

“ஒரே தலைவலியா இருக்குதய்யா  பாட்டையாவது போடுயா “என்று ஓட்டுநரிம் கூறினார் தலைவர் .

“ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவனே என்று போற்றுவோம்” என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

பொன்.குமரேசன்
பொன்.குமரேசன்
நான் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.அவ்வப்போது சிறு பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதும் பழக்கம் உண்டு .கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு .

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -