யானைகளிடம் சிக்கிய எறும்புகள்

Ants Among Elephants

- Advertisement -

Ants Among Elephants: An Untouchable Family and the Making of Modern India

எழுதியவர் : சுஜாதா கிட்லா
ஆண்டு : 2017

‘Ants among Elephants’ படித்த போது பல இடங்களில் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். சாதிய ஏற்றத் தாழ்வுகள் ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்தவைதான் என்றாலும் ஆந்திராவில் அதன் கோரத் தாண்டவத்தை இந்தப் புத்தகம் மூலம்தான் உணர முடிந்தது. சம உரிமை வேண்டி அவர்கள் நிகழ்த்திய இரத்தம் தோய்ந்த போராட்டங்கள் மனத்தை ரணமாக்குபவை.

புத்தகத்தை எழுதிய சுஜாதா கிட்லா, ஆந்திராவில் தலித் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் இருவரும் கல்லூரிப் பேராசிரியர்கள். வாரங்கலில் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தேர்வில் தொடர்ந்து தோல்வியுறச் செய்த ஒரு பேராசிரியரை எதிர்த்து கலவரம் வெடித்தது. கலவரம் செய்த மாணவர்களைப் போலீஸ் கைது செய்தனர். அவர்களுள் சுஜாதா ஒரே பெண். அவரைத் தனியாக ஒரு செல்லில் அடைத்துத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சித்திரவதை செய்துள்ளனர். தன் பெண் எங்கே அடைக்கப்பட்டிருக்கிறாள் என்பதே அறியாமல் சுஜாதாவின் தாயார் தவித்திருக்கிறார். ஒருவழியாக அவர் பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை பெயிலில் அழைத்து வந்திருக்கிறார். காசநோயையும் உடன் அழைத்து வந்த சுஜாதாவைப் பார்த்து அவரது தாய் இடிந்து போக, அதன் பின் போராட்டக் களத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறியிருக்கிறார் சுஜாதா.

தீண்டத்தகாத குடும்பத்தில் பிறந்த காரணத்தால் தான் பட்ட துன்பங்களை சுஜாதா இவ்வாறு விவரிக்கிறார்:

“என்னைப் போல படித்தவளாக இருந்தால், பார்வைக்குத் தீண்டத்தகாதவளாகத் தெரியவில்லை என்றால் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் உண்மையைச் சொல்லலாம்.

பிறகு ஒதுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, தொல்லைக்குட்படுத்தப்படுவீர்கள், தற்கொலை செய்வதற்குக் கூடத் தூண்டப்படலாம்.

இல்லாவிட்டால் பொய் சொல்லலாம். அவர்கள் உங்களை நம்பாவிட்டால் அவர்கள் உங்கள் சாதியை எப்படியேனும் தெரிந்து கொள்வார்கள். உங்களிடம் சில வகையான கேள்விகள் கேட்பார்கள், “உன் சகோதரனின் திருமணத்தின் போது அவன் குதிரையில் வந்தானா?அவள் மனைவி சிவப்பு சேலை அணிந்திருந்தாளா? வெள்ளையா? அவள் எவ்வாறு சேலை உடுத்துவாள்? நீங்கள் மாட்டிறைச்சி உண்பீர்களா? உங்கள் குல தெய்வம் என்ன?

இதற்கு மேலும் நீங்கள் அவர்களை நம்ப வைத்தீர்கள் என்றால், இனி அவர்களிடம் ஒருபோதும் உங்களைப் பற்றி, உங்கள் குடும்பத்தைப் பற்றிப் பேச முடியாது. உங்கள் வாழ்க்கையைப் பற்றி வாய் திறக்க முடியாது. அது உங்கள் சாதியைக் காட்டிக் கொடுத்து விடும். ஏனெனில் உங்கள் வாழ்க்கைதான் உங்கள் சாதி, உங்கள் சாதிதான் உங்கள் வாழ்க்கை”.

தனது இருபத்தியாறாவது வயதில் அமெரிக்காவிற்குச் சென்ற சுஜாதா, அங்கே, தான் முதல் முதலாக சாதீய அடையாளமின்றி பார்க்கப்பட்டதை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார், “இங்கே நானும் ஒரு கறுப்புப் பெண். அவ்வளவுதான். சில அமெரிக்கர்களுக்கு இந்தியர்களைப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் அந்த விருப்பு வெறுப்பனாது சாதீய அடிப்படையில் அல்ல.”

அங்கிருந்தவர்களோடு பேசும்போதுதான் தனது கதையோ தனது குடும்பத்தின் கதையோ அவமானம் கொள்ளத்தக்கவை அல்ல என்பதை உணர்ந்திருக்கிறார். தனது குடும்பத்தின் நான்கு தலைமுறைக் கதையை எழுத்தில் கொண்டு வர நினைத்த சுஜாதா அதற்காகப் பதினைந்து வருடங்கள் செலவிட்டிருக்கிறார். அவரது தாய் மாமா சத்தியமூர்த்தி, ஒரு காலத்தில் ஆந்திராவில் கொரில்லா அமைப்பினை நிறுவி பலருக்கும் பயிற்சி அளித்தவர். காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். அவரிடமும், சுஜாதாவின் தாயாரிடமும் பெற்ற தகவல்கள் கொண்டு புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறார் சுஜாதா.

சுஜாதாவின் தாய்வழிப் பாட்டி இறக்கும் முன் தனது மூன்று குழந்தைகளையும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று அவர் கணவரிடம் சத்தியம் வாங்கிவிட்டு இளமையிலேயே இறந்து போகிறார். ஆனால் குடும்பப் பொறுப்பைச் சமாளிக்க முடியாமல் மூன்று பிள்ளைகளையும் தவிக்க விட்டு விட்டு ஓடிப் போகிறார் தகப்பனார். பிறகு பாட்டியின் பொறுப்பில் பிள்ளைகள் வளர்கின்றனர்.

குடும்பத்தின் நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்த மூத்தவரான சத்தியமூர்த்தி, படிப்பதற்கு காசின்றி மிகவும் சிரமப்படுகிறார். காங்கிரஸின் ‘வெள்ளையனே! வெளியேறு!’ இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதன் செயல்பாடுகளில் பங்கேற்கிறார். பின்னர் ஆங்கிலேயர்களுடன் காங்கிரஸார் நடத்திய பேச்சுவார்தைகள் திருப்தியளிக்காமல் வெளியேறுகிறார். அவரது நாட்டம் அப்போது தெலுங்கில் வெளியாகிக் கொண்டிருந்த புரட்சி இலக்கியத்தின்பால் திரும்புகிறது.

சத்தியம் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்குகிறார். சிறிது நாட்களிலேயே இங்கேயும் கட்சியின் செயல்பாடுகள் அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகின்றன. அங்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடம் சரியாக வழங்கப்படவில்லை என்று எண்ணுகிறார். அப்போது ஏற்பட்ட நக்சல்பாரியின் வளர்ச்சியாலும் சாரு மஜும்தாரின் தாக்கத்தாலும் சத்தியமும் கொண்டபள்ளி சீதா ராமையாவும் இணைந்து People’s War Group எனும் அமைப்பினை உருவாக்குகிறார்கள். இதற்கிடையில் தனது அர்பணிப்பு மிகுந்த செயல்களால் மக்களின் ஆதரவைப் பெறத் தொடங்குகிறார் சத்தியம்.

சகோதரனின் வாழ்க்கை இவ்வாறு நகர்ந்து கொண்டிருக்க, அவரது தங்கை மஞ்சுளாவின் (சுஜாதாவின் தாய்) வாழ்க்கைப் போரட்டம் மிகுந்த புறச் சூழலில் மிகவும் கடினமாகிறது. சாதியின் நிழல் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரைப் பின் தொடருகிறது. அவரது அண்ணனின் தலைமறைவு வாழ்க்கையின் போது, சரியான வேலை கிடைக்காமல் திண்டாடிப் போகிறார். இதற்கிடையில் பெண்களுக்கே உண்டான கஷ்ட நஷ்டங்களையும் சேர்த்தே அனுபவிக்கிறார் மஞ்சுளா. ஆனால் அத்தனை இடர்ப்பாடுகளுக்கிடையேயும் அவர் தனது வாழ்வை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு உண்டான அத்தனை முயற்சிகளையும் எடுக்கிறார்.

வன்முறையே தங்களுக்கு விடுதலை அளிக்கும் என்று நம்பிய சத்தியத்தின் தாக்கத்தால் எழுதப்பட்டதாலோ என்னவோ, தீண்டத்தகாதவர்களுக்காக காந்தி எடுத்த முயற்சிகள் புத்தகத்தில் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளன. நேருவின் செயல்பாடுகள் மீதும் சத்தியம் மிகுந்த கசப்பையே கொண்டிருந்திருக்கிறார்.

இந்தப் புத்தகம் சுஜாதாவின் குடும்பக் கதையாக இருந்தாலும் புத்தகம் அதையும் கடந்து அறுபது எழுபதுகளில் (அதற்கு முன்னரும்) ஆந்திராவில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை பற்றித் தெள்ளத் தெளிவான ஒரு சித்திரத்தை நமக்குள் உருவாக்குகிறது. தான் வாழ்ந்திராத ஒரு காலகட்டத்தின் இருண்ட படிகளில் தனது தாய் மற்றும் மாமாவின் கண்கள் கொண்டு அறிந்து இப்புத்தகத்தை சுஜாதா எழுதியிருக்கிறார். சுஜாதாவின் குடும்பத்தின் பயணம் என்பது பெரும்பாலும் கல்வியையைத் தேடிய ஒன்றாகவே இருக்கிறது. அதுவே அவர்களுக்கு மேலான வாழ்வையும் சுய மரியாதையயியும் பெற்றுத் தந்திருக்கிறது.

தீவிரமான விசயங்களைப் பற்றி எழுதினாலும், சுஜாதாவின் நகைச்சுவை கலந்த எளிய நடை, வாசிப்பை சுவாரஸ்யமாக்குகிறது. உதாரணத்திற்கு, சிறு வயதில் தங்களைச் சுற்றி ஏழ்மையே குடிகொண்டிருந்தது என்று கூறும் அவர், தனது தோழி ஒருத்தி ‘நாங்கள் கடந்த மூன்று நாட்களாக மான் இறைச்சியைத் தான் தொடர்ச்சியாக இரவுணவாக உண்கிறோம்’ என்று கூறியபோது, இருவரும் வயிறு வலிக்கச் சிரித்திருக்கின்றனர். காரணம், உண்மையில் மூன்று நாட்களாக அவர்கள் பட்டினி என்பதைத்தான் அந்தத் தோழி பகடியாக அப்படிச் சொல்லியிருகிறாள்.

புத்தகத்தைப் படித்து முடித்தாலும் அதில் வரும் எளிய மனிதர்களின் ஓலமும், அவமானமும் போராட்டமும் கலந்த அவர்களின் வாழ்க்கையும் பல இரவுகளுக்கு நம்மை உறக்கத்தில் துரத்தவே செய்யும். ஏனெனில் இன்றும் எறும்புகள் தொடர்ந்து யானைகளில் கால்களில் நசுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -