எச்சரிக்கை; பெண்பாவம் பொல்லாதது

நகைசுவைக் கட்டுரை

- Advertisement -

தேன்மொழி அழைத்திருந்தார். ஓரிருமுறை அல்ல. ஐந்து மிஸ்டுகால்கள். அதுவும் அரைமணி நேர இடைவெளிக்குள். ஏதோவொரு அவசரமாகத்தான் இருக்கவேண்டும். என்னவாக இருக்கும்? சரவணனுக்கு ஏதுமா? அல்லது அவருக்கு?

இதுபோன்று அடுத்தடுத்து வந்து நிற்கும் அழைப்புகளுக்கு அவசரம் அல்லது ஆபத்து என்றுதான் அர்த்தம் வைத்திருக்கிறோம். ஏதோ ஒன்று சரியில்லை, ஏதோவொன்று பழக்கமில்லாதது. ஏதோ ஒன்று இன்னொரு காதை, தோளை அல்லது மனதைத் தேடுகிறது அல்லது குறைந்தபட்சம் பர்ஸைத் தேடுகிறது, இப்படி ஏதோவொன்று.

தேன்மொழி என் கல்லூரித்தோழி. காதலிக்கலாம் என்றுதான் நினைத்து இருவரும் பழகிவந்தோம். இல்லை பழகிவந்தேன். இடையில் அவளுக்கு என்ன கிறுக்கு பிடித்ததென்று தெரியவில்லை. என்னை அப்படியெல்லாம் நினைக்கவில்லை என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டாள். அவளுக்குச் சாதாரணம். எனக்கு சதா ரணம். பரவாயில்லை ஒரு பார்த்திபக்கவிதை சிக்கிவிட்டது. இப்படித்தான் பல்லுக்கிடையில் மாட்டும் உணவுத்துணுக்கைப்போல கவிதைத்துணுக்கு கட்டுரைக்கிடையில் எனக்கு மாட்டும். உங்களுக்கும்தான். ரசித்துவையுங்கள். பிறகொருநாள் இதெல்லாம் வராது.

தேன்மொழி கதைக்கு வருவோம். தேன்மொழி என்று பெயருள்ள பெண்களெல்லாம் குள்ளமாக ஆனால் கவிதை ரசனையோடு இருப்பார்கள் என்றொரு தேவவாக்கு இருக்கிறதா, தெரியவில்லை. இவளும் அப்படித்தான். நானும் ஒரு எதுகை மோனைக் கவிஞன் என்பதால் என்னையும் அவள் கவிஞன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறாள்.

திருப்பி அழைப்போமா என நினைத்தேன். காரில் செல்லும்போது அழைப்பது உசிதமில்லை. அவசரம் என்றால் மூளையும் வேலைசெய்யாது. சாலையிலும் மூளை செல்லாது. (செய்யாது-செல்லாது இன்னொரு கவிதைத் தருணம்.) ஒரு மிஸ்டுகால் கொடுத்துப்பார்ப்போம் என்று நினைத்து அழைத்தேன். எடுக்கவில்லை. எனக்கு இப்போது பதட்டம். என்ன ஆச்சு?

ஏறக்குறைய வீட்டை அடையும் சாலை வந்துவிட்டது. வீட்டுக்குள் சென்றால் பேசமுடியாது. அதற்குள் பேசிவிடலாம். சிக்னல் வந்துவிட்டது. போனை எடுத்தேன். கார் மெதுவாக நின்றதும் மீண்டும் அழைத்தேன். தேன்மொழி சீக்கிரம் எடு. என்னானது? எடுத்துவிட்டார். குரலில் பதட்டம்.

டேய், ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம். லைனில் இரு. உன்னிடம் பேசவேண்டும். இரு.. கூப்பிடுகிறேன்…என்று குரலில் படபடப்பு. இணைப்பும் துண்டித்துவிட்டது.

இவ்வளவு படபடப்பாக இருக்கிறாரே என்னவாக இருக்கும்?

தேன்மொழி திருப்பி அழைப்பார் என காரில் காத்திருந்தேன். கார் நிறுத்துமிடமும் வந்து பத்து நிமிடமாகிவிட்டது. இன்னும் அழைக்கவில்லை. காத்திருப்போமா வேண்டாமா என்ற குழப்பம். அழைக்காமல் போனாலும் மனம் அதையே நினைத்துக்கொண்டிருக்கும். என்ன செய்வது? ஏதேனும் ஆபத்தில் இருந்தாலொழிய இப்படி அழைக்கமாட்டாரே, என்ன செய்வது?

தேன்மொழி என்னோடு இப்போதெல்லாம் அவ்வளவாகப் பேசுவதில்லை. வாட்சப் காமெடி ஜோக் அனுப்புவது இப்படித்தான் இதுவரைக்கும். நேரடி அழைப்பில் பேசி சிலகாலமாவது ஆகிவிட்டது. ஒருமுறை சரவணன் சபரிமலைக்குப் போகிறான் என்று அழைத்துச்சொன்னார். பக்திகாலங்களில் என்னை அழைத்து இதெல்லாம் சொல் என்று நானா சொல்லியிருந்தேன்? பக்திகாலமே என்னோடு பேசுவதற்கு பாதுகாப்பு உள்ள காலம் என்று நினைத்தாரோ தெரியவில்லை.

இன்னும் ஒரு பத்துநிமிடங்கள் கடந்தன. நான்கு காகங்கள் தலைக்குமேலே பறந்துசென்றன. இரு புறாக்கள் நின்று மூக்கை உரசியபடியும் நடந்து ஆடியபடியும் கால்நடையில் ஒரு காதல்நடையை (கவிதை!) முடித்துவிட்டும் பறந்துவிட்டன. நானும் காரின் எஞ்சினை அணைத்துவிட்டு எழுந்துவிட்டேன். இனியும் காத்திருக்கவேண்டாம். அவசரம் ஒருவேளை சரியாகியிருக்கலாம். அவளே அதைச் சரிசெய்திருக்கலாம். இல்லை, அதைச் சரிசெய்துவிட்டு அழைப்போம் என்று சரிசெய்யும்முனைப்பில் தற்போது இருக்கலாம்.

நடந்து வீட்டை அடையும் முனையில் நின்று ஒரு புகையை இழுக்கலாம் என நின்றேன்.

தேன்மொழி அழைத்தார்.

என்னாச்சு? எல்லாம் ஓகேதானே?

நீ எப்டி இருக்கே?

நான் இருக்கேன். ஐந்து மிஸ்டு கால் இருந்ததே? என்னாச்சு?

பெரிய கதைடா. மனசு இன்னும் அடங்கலை. படபடப்பா இருக்கு.

அச்சச்சோ, சரி பி ரிலாக்ஸ். ஒன்னும் பிரச்சனையில்லையே?

ஒரு பெரிய பிரச்சனை. யார்ட்டே சொல்லமுடியும்? சராவுக்கு கால் பண்ணினா என்னன்னு கேட்டுட்டு போனை வெச்சுட்டான். திருப்பி அடிச்சா எடுக்கமாட்டேங்குறான்.

சரி பிஸியா இருப்பான். என்னன்னு சொல்லு? பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?

என்ன பிஸி? என்னையவிட வேலைதான் அவனுக்கு முக்கியமா? உன்னைப்பாரு, உடனே கால் ரிட்டன் பண்றே? அவன்?

இருக்கட்டும்மா, என்ன பிரச்சனைன்னு சொல்லு. ஆர் யு ஆல்ரைட்?

நான் இருக்கேன். எல்லாம் ஒகேதான். ஆனா, இந்த ஆம்பளைங்க ஏண்டா இப்டி இருக்குறாங்க?

(ஆஹா) என்னாச்சு? என்னாச்சுங்க தேன்மொழி?

மனசே ஆறமாட்டேங்குது. என்னையப்பாத்தா எப்படி இருக்கு? நீயே சொல்லு.

நல்லா அழகாத்தான்மா இருக்கு, இப்போ என்ன அதுக்கு?

பாத்தியா உனக்கும் பொறுமையில்லை. ஏண்டா என்னை யாரும் புரிஞ்சிக்கமாட்டேங்குறீங்க. சரா ரொம்ப என்னை இக்னோர் பண்றாண்டா. எனக்கு ஒரு பிரச்சனையின்னா அது அவனுக்குப் பிரச்சனையில்லையா சொல்லு.

கண்டிப்பா, அப்படில்லாம் பண்ணமாட்டான். ஏதாச்சும் வேலையில இருந்திருப்பான். அதைவிடு. என்ன பிரச்சனையின்னு சொல்லு?

என்ன வேலையிருந்தாலும் நான் கால் பண்ணினா திருப்பி அடிக்கனும் அதானடா அன்பு, பாசமெல்லாம்.

என்னாச்சு, உனக்கும் சராவுக்கும் ஏதும் சண்டையா?

என்னடா இப்டிக்கேக்குற? சராவுக்கும் எனக்கும் சண்டை வரணுமாடா? ஏண்டா இப்படில்லாம் யோசிக்கிறே?

நான் யோசிக்கலை மா. என்னாச்சுன்னு சொல்லலையே நீ. அதான் கேட்டேன்.

பெரிய பிரச்சனையிடா. பஸ்லேகூட இப்படில்லாம் நடக்குமாடா?

பஸ்லயா? எந்த பஸ்? என்னாச்சு? நீ வேலைக்கும் போறதில்லையின்னு சொன்னே?

வேலைக்குபோகும்போது கூட இப்படி என்னை யாரும் பாத்ததில்லைடா.

எந்த பஸ்? என்னாச்சு?

கும்பகோணத்துல இருந்து பட்டுக்கோட்டை போற பஸ்டா. பிள்ளைங்கள கூட்டிட்டிக்கிட்டு அம்மா வீட்டுக்குக் கிளம்பி போனேண்டா. நாலு நாள் புள்ளங்களுக்கு லீவு. வந்து விட்டுட்டுப்போடான்னு சராவைக் கூப்பிட்டேன். ’ஒரே பஸ்தான், போயிட்டு வாங்க’ன்னு சொல்லிட்டாண்டா.

சரி

தெரியாம போய் பஸ்முன்னாடி உக்காந்துட்டேண்டா. வந்துச்சி வினை.

என்னாச்சு.

டிரைவராடா அவன்? ஒண்ணாம் நம்பர் பொறுக்கிபோல. பஸ்லே ஏறுனதுல இருந்து பட்டுக்கோட்டையில எறங்குறவரைக்கும் என்னையே பாக்குறாண்டா.

ஹ்ம்ம்.

சேர்ந்தாப்ல, ரோட்டைப் பாத்து ஒரு பத்துநிமிஷம்கூட ஓட்டியிருக்கமாட்டாண்டா.

ஹ்ம்ம்.

என்ன ஹ்ம் போடுற? என்னைப்பார்த்தா எப்டிடா இருக்கு? நீயே சொல்லு.

உன்னையவா அப்படி பாத்தான்?

என்னடா நக்கலா இருக்கா? எவ்ளோ படபடப்பும் வேதனையுமா இருக்கேன்? நீ கிண்டல் பண்றியா?

அடடா, இல்லைம்மா. சொல்லு என்னாச்சு அப்புறம்..

ரோடு ரொம்ப மேடு பள்ளமா இருக்காம். அதான் குலுங்குதாம். நான் கேட்டனாடா?

ஹ்ம்ம் (ஹிஹி)

என்ன அமைதியாயிட்டே? பட்டுக்கோட்டை வாறவரைக்கும் பாட்டு.. என்ன பாட்டுங்குறே? இளையராஜாவோட பாட்டுடா. எல்லாம் காதல் பாட்டு. ஒவ்வொரு பாட்டுலயும் வாற நல்ல காதல் வரிக்கு என்னைப் பாத்துட்டு ரோட்டைப் பார்க்குறாண்டா!

என்ன வரி, என்ன மாதிரி?

இப்போ ’கொடியிலே மல்லிகைப்பூ… பாட்டு இருக்குல?

ஆமாம், கடலோரக்கவிதைகள்?

என்ன கடலோ எந்த கவிதையோ? அதுல ஒரு வரி வருமே… ‘பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவள மல்லித் தோட்டம், நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்’

ஆமா

அந்த வரி வரும்போது என்னைப் பாக்குறாண்டா!

அந்த வரிக்கு மட்டுந்தானா?

என்னடா சொல்ற?

இல்லை, ’நித்தம் நித்தம் உன் நெனப்பு.. நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு.. பாதை ரெண்டு.. வண்டியெங்கே சேரும்

பொத்தி வச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்ல.. இந்தத் துன்பம் யாரால’ இந்த வரிக்கும் அவன் உன்னைப் பாத்தானா இல்லை…?

பாத்தாண்டா.

அதான பாத்தேன், பாத்திருக்கணுமே! வேற ஏதும் பாட்டு போட்டானா?

’மங்கை நீ.. ரதி தேவி தங்கை நீ, மன்னன் நீ.. இள நெஞ்சின் கள்வன் நீ

சிறு இடை சிறை.. சிறையிடு எனை, கண்ணுக்குள் காவல் துறை.. வா.. கைதாக்கும் ஆயுள் வரை’ அப்படின்னு ஒரு பாட்டு வருமே!

ஆமா, பாக்கியராஜ் ஆடுவாரு. ரொம்ப பழைய பாட்டே இருக்கே,

என்னடா கிண்டலா இருக்கா?

இல்லை தேனு, வேற ஏதும் புதுப்பாட்டு, ஊ சொல்றியா இல்லை ஊஹூம் சொல்றியா இப்டி?

அதெல்லாம் இல்லை. இளையராஜா பாட்டு மட்டுந்தான்.  

சரி என்னாச்சு அப்புறம்? நேரிடையா ஏதும் உங்கிட்டே பேசினானா?

ஆமாடா, சாடை முடிஞ்சு அப்புறம் நேரிடையா,  பாட்டு நல்லாயிருக்கான்னு என்னைப்பாத்து கேக்குறாண்டா?

பாட்டைக் கேட்டுருப்பான், அதுக்கு என்ன?

நீயும் ஒரு ஆம்பளைதானே, அதான்.

அடடா, சரி விடு. உன்னை எதுவும் தொல்லை பண்ணினானா?

என்னடா இப்படிக்கேக்குறே? இதுவரைக்கும் அவன் செஞ்சதெல்லாம் என்னவாம்?

இல்லை, பிஸிக்கலா?

பிஸிக்கலா பண்ணினாத்தான் தொல்லையா? என்னடா இப்படிப்பேசுற?

இல்லை ரொம்ப டென்ஷனா இருக்கியே, அதுக்காகக் கேட்டேன்.

ஆமாடா, ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன். என்ன பண்றதுன்னு தெரியலை. சராவுக்கு அடிச்சா எடுக்கலை. அதான் உனக்கு கால் பன்ணினேன். பட்டுக்கோட்டை வந்து இறங்குறவரைக்கும் அவ்ளோ டென்ஷன். உங்கிட்டே கேட்டா ஏதாச்சும் சொல்வே, எப்பிடி இதை ஹேண்டில் பண்றதுன்னு, அதான் அடிச்சேன், ஆனா நீயும் எடுக்கலை.

சரி, விடு. வந்து பத்திரமா இறங்கிட்டியா? உன்கிட்டே ஒண்ணும் அவன் வாலாட்டலையே?

பண்ணிருவானா? கும்பகோணம் எனக்குத் தெரியாத ஊரு, புகுந்த ஊரு. பட்டுக்கோட்டை அப்படியா? பொறந்த ஊராக்கும். பட்டுக்கோட்டை வாற வரைக்கும் காத்திருந்தேன். பட்டுக்கோட்டை பஸ்ஸ்டாண்ட் வந்திச்சு. பிள்ளைங்களை ஒரு கைல பிடிச்சுக்கிட்டேன். ஹேண்ட்பேக்கை ஒரு கைல வெச்சுக்கிட்டு அவன் கிட்டே போனேன்.

நீயா? நீயே போனீயா? அப்புறம்?

சிரிச்சான். சொல்லுங்க மேடம்ன்னான்.

ஹ்ம்ம், அப்புறம்?

நீயெல்லாம் அக்கா தங்கச்சிகூட பொறந்திருக்கியான்னு நருக்குன்னு கேட்டுட்டு படக்குன்னு கீழே இறங்கிட்டேன். எல்லோரும் பாத்தாங்க. எல்லோரும் பாக்கட்டும்ன்னுதான் அப்படிச் சொன்னேன். அவன் மூஞ்சி போன போக்கு இருக்கே! இனிமே எவகிட்டேயும் இப்படி வெச்சுக்குக்கமாட்டான்!

ஆத்தாடி! இணைப்பைத் துண்டித்தேன்.

எம்.கே.குமார்
எம்.கே.குமார்https://minkirukkal.com/author/mkkumar/
எம்.கே.குமார் சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதி வருகிறார். குறும்பட இயக்குனர். 'தி சிராங்கூன் டைம்ஸ்' இதழின் ஆசிரியர் குழுவில் பங்காற்றினார். எம்.கே.குமார் உயர்நிலைப்பள்ளியில் படிக்கையில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நடத்தியுள்ளார். எம்.கே.குமாரின் முதல் சிறுகதை 'நேவா’ 2003-ஆம் ஆண்டு 'திண்ணை’ இணைய இதழில் வெளியானது. காலச்சுவடு, வார்த்தை, தி சிராங்கூன் டைம்ஸ், நாம் போன்ற அச்சிதழ்களிலும் வல்லினம் போன்ற இணைய இதழ்களிலும் எம்.கே.குமாஎ எழுதிய படைப்புகள் வெளியாகி உள்ளன. தமிழோவியம் மின்னிதழில் எம்.கே.குமார் எழுதிய 'மாஜுலா சிங்கப்பூரா’ என்ற சிங்கப்பூர் வரலாறு குறித்த தொடரை எழுதியுள்ளார். . எம்.கே.குமார் எழுதிய சிறுகதையான 'அலுமினியப்பறவைகள்’ திரு.உதயகண்ணன் தொகுத்த 'உலகத் தமிழ்ச்சிறுகதைகள் – 25’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. சாகித்ய அகாடமிக்கென திரு.மாலன் தொகுத்த உலகச் சிறுகதைகளில் இவரது கதை இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -