இடபம்

நூலாசிரியர் பா.கண்மணி

- Advertisement -

இடபம் – பா.கண்மணி
எதிர் வெளியீடு
விலை – ரூ 220
பக்கங்கள் – 208

சம காலத்தில், ஆங்கிலத்தில் எழுதும் பல இந்திய எழுத்தாளர்களின் நாவல்களில் பல ‘இடபம்’ வகைமையைச் சேர்ந்தவை தான். ப்ரீத்தி ஷெனாய், துர்ஜோய் தத்தா, ரவீந்தர் சிங் போன்றோரின் நாவல்கள் இன்றைய இளைஞர்களின் ‘பல்ஸ்’ அறிந்து உருவாக்கப்பட்டவை. ரவி சுப்ரமணியனின் வங்கித் துறையை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்கள் இந்திய ஆங்கில நாவல் வாசகர்களிடம் மிகப் பிரபலம். முதல் முறையாக தமிழில் பங்குச் சந்தையை கதைக்களமாக வைத்து எழுதப்பட்டது என்பதே இந்நாவலை நோக்கிய எனது ஈர்ப்பை அதிகமாக்கியது.

நாவல் எடுத்துப் படிக்கத் தொடங்கியதும் கீழே வைக்க முடியாதபடி நம்மைக் கவ்விக் கொள்கிறது, காரணம் காளையின் சீறிப் பாயும் ஓட்டம். இங்கே காளை என்பது கதாநாயகி கல்லா கட்டும் பங்குச் சந்தை மட்டுமல்ல. அவளே வாழ்வில் எதிர்வரும் சவால்களை முட்டி மோதித் தூக்கி எறியும் ஒரு காளையாகத்தான் தெரிகிறாள். தலால் ஸ்ட்ரீட்டில் மும்பைப் பங்குச் சந்தைக்கு வெளியே முரட்டுத்தனமும் கவர்ச்சியும் ஒருங்கே அமைந்த அந்தப் பெரிய காளையைப் பார்த்தவர்களுக்கு இந்த ஒப்புமையில் இருக்கும் உண்மை புரியலாம்.

மாதாந்திர சம்பளத்தின் பொருட்டு முன்னாள் காதலனின் அலுவலகத்தில் பெயரளவில் ஒரு வேலை பார்த்தாலும் கதாநாயகியின் சிந்தனை முழுவதையும் எப்போதும் ஆக்கிரமித்திருப்பது பங்கு வர்த்தகம்தான். தரகு நிறுவனமான லக்கி ஸ்டாக்ஸ்தான் அவள் தாய் வீடாக இருக்கிறது. பங்குகள் வாங்குவது விற்பதில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், அது trading மேல் இருக்கும் அவள் காதலைச் சிறிதளவும் பாதிப்பதில்லை. அவள் மேலும் மேலும் உற்சாகத்தோடு அதில் ஈடுபடுகிறாள். விரைவிலேயே அதன் நெளிவு சுளிவுகளை, நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளும் அவளுக்கு, அதன் மூலம் ஒரு பெரிய ஜாக்பாட் அடிக்கிறது. அதுவரை அவளைக் கத்துக்குட்டியாகப் பார்த்தவர்கள் மத்தியில் அவளைப் பெரும் உயரத்திற்குக் கொண்டு சென்றுவிடுகிறது.

தானே வரையறுத்துக் கொண்ட விழுமியங்களுக்குள் வாழும் அவள், தனது கொள்கைகளில் விடாப் பிடியாக இருக்கிறாள். வாடகைக்கு வீடு எடுத்துத் தனியாக பெங்களூரில் வசிக்கிறாள். தனக்குப் பிடித்த ஆண்களுடன் பொழுதைக் கழிக்கிறாள். Blind Date கூட முயற்சித்துப் பார்க்கிறாள். ஆனால் எதையும் பற்றிக் கொள்ளும் எண்ணம் அவளுக்கு இல்லை. வாழ்வை அதன் போக்கில் ஏற்கிறாள். தனது கட்டற்ற சுதந்திரத்தை எதற்காகவும் யாருக்காகவும் அவள் விட்டுத் தரத் தயாராக இல்லை.

அவளைப் போல் லக்கி ஸ்டாக்ஸிற்கு வர்த்தகம் செய்ய வரும் நபர்களைப் பற்றி அவள் தரும் அறிமுகங்கள் மிகவும் சுவையானவை. அவர்கள் ஒவ்வொருவரின் பங்கு சம்மந்தமான முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் மனோவியலையும் இணைத்தே தந்திருப்பது சுவாரஸ்யம் கூட்டுகிறது. மிக சேஃபாக பங்குகளில் விளையாடும் ஒரு பெண்மணியைப் பற்றி, அவர் ‘Baby’s Day Out’ படத்தில் வரும் குழந்தையைப் போல, சந்தையில் ஏற்படக்கூடும் எந்த ஆபத்துகளிலும் சிக்காமல் மெதுவாகத் தவழ்ந்து சென்று பாதுகாப்பாகக் கரையேறிவிடுவார் எனச் சொல்லும் இடத்தைப் புன்னகையோடு ரசித்துப் படித்தேன்.

Options, Futures, Put, Call எனப் பங்குச் சந்தையின் தொழில்முறை வார்த்தைகளுக்கு சிறிய விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்த வாசனையே அறியாத ஒரு வாசகனுக்கு அது ஏதோ சீன மொழியில் எழுதப்பட்ட வாக்கியங்களாகவே தோன்றும். Technical terms புரியாவிட்டாலும் அது இந்த நாவலை வாசிப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படுத்தாது. ஆர்வமிருப்பவர்கள் இதையே ஒரு சாக்காக வைத்து அவற்றைப் பற்றிய புரிதலைக் கொஞ்சமேனும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.

பங்குச் சந்தை என்பதே முற்றிலும் வேறான ஓர் உலகம். அங்கே கணக்குகள் அனைத்தும் அன்றாடம் தீர்க்கப்பட்டுவிடும். நான்கு மணிக்குள் அன்றைய வெற்றி தோல்வி தீர்கமானிக்கப்பட்டுவிடும் (ஒரே நிறுவனத்தின் பங்கை இருபது வருடங்களாக வைத்துப் பொத்திப் பாதுக்காப்பவர்களைப் பற்றி இங்கே கூறவில்லை). நிலையில்லாத இத்தகைய உலகில் தினம் தினம் சஞ்சரிப்பவளால் வாழ்க்கையிலும் எதிலும் நிலை கொள்ளாமல் ‘அன்றைய தினம் அன்றோடு’ எனச் சமூகம் தரும் நிர்பந்தங்களை அதன் அபத்தங்களை ஒரு தோள் குலுக்கலோடு புறந்தள்ள முடிவதில் ஆச்சர்யம் கொள்ள ஏதுமில்லை.

எதிலும் தெளிவாகச் சிந்தித்துத் தனக்கு வேண்டியதை மட்டும் செய்பவளாக மேம்போக்காகப் பார்க்கையில் தெரிந்தாலும் அவள் மனத்திற்குள் இருக்கும் குழப்பங்களையும் சஞ்சலங்களையும் சேர்த்தே படம் பிடிக்கிறார் கண்மணி. இன்றைய அவசர வாழ்வில் அனைத்தையும் உதறி முன்னேறுவதா அல்லது சமூகக் கட்டமைப்பிற்குப் பயந்து ஒரே இடத்தில் வேரூன்றுவதா என்பது இந்தத் தலைமுறைப் பெண்களை அலைக்கழிக்கும் முக்கியமான கேள்வி. அத்தகைய கேள்விகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு தனது கரிக்குருவியில் சீறிப் பாய்கிறாள் இந்த ‘இடபம்’ நாயகி.

-இந்துமதி மனோகரன்

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -