சாப்ளினுடன் பேசுங்கள்

நூலாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

- Advertisement -

சாப்ளினுடன் பேசுங்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் (சினிமாக் கட்டுரைகள்)

வெளியீடு – உயிர்மை பதிப்பகம்

2004ஆம் ஆண்டு இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் எஸ்.ரா எழுதிய வரிகள் இவை:

//இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சத்யஜித் ரே படத்தைப் பார்க்க வேண்டும் என்றால் திரைப்படச் சங்கம் திரையிடும்போது மட்டுமே சாத்தியம்.அதுவும் சிறுநகரங்களில் இருப்பவர்களுக்குச் சாத்தியமே இல்லை. எனது கல்லூரி நாட்களில் உலகத் திரைப்படங்களைப் பார்ப்பதற்காக திருவனந்தபுரம், டில்லி, மும்பை, கல்கத்தா என்று சுற்றியலைந்திருக்கிறேன்.

இன்று பல்பொருள் அங்காடியினுள் உலக சினிமா டி.வி.டிக்கள் காய்கறிகள் போல எளிதாகக் கிடைக்கின்றன. யார் இயக்குனர், எந்நாட்டுத் திரைப்படம் என்று கூடத் தெரியாமல் வாங்கிப் போகின்றவர்கள் அதிகமாகிவிட்டார்கள். பெரும்பான்மை கணினி உபயோகிப்பாளர்கள் உலக சினிமாவைத் தரவிறக்கம் செய்து பார்த்துவிடுகிறார்கள்.

ஆனால் இந்தப் புதிய பார்வையாளர்களின் ஒரே சிக்கல், எந்தப் படத்தைப் பார்ப்பது, அதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதே. அதற்காக அவர்கள் அதிகம் மெனக்கெடுவதுமில்லை. ஆகவே உலகத் திரைப்படங்கள் எளிதாக காணக்கிடைக்கக் கூடிய சூழலிலும் கூட அதைப் பற்றிய புரிதல் மேம்படவேயில்லை. அதற்கு உறுதுணை செய்வதற்காகவே எனது புரிதல் சார்ந்து சினிமாக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு வருகிறேன்.//

இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் அசுர வளர்ச்சியால் இன்று இந்த நிலை மேலும் மேம்பட்டிருந்தாலும் இன்றும் பலர் உலகத் திரைப்படங்களில் எவ்வாறு பரிட்சயம் ஏற்படுத்திக் கொள்வது? எதிலிருந்து தொடங்குவது? போன்ற குழப்பங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கெல்லாம் வழிக்காட்டும் வகையில் எஸ்.ராவின் கட்டுரைகள் அமைந்துள்ளன.

புத்தகத்தில் எஸ்.ரா பரிந்துரைக்கும் ஒவ்வொரு படமும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை. அம்மாவுக்கும் மகனுக்குமான உறவைப் பேசும் Tokyo Tower: Mom and Me and Sometimes Dad என்கிற ஜப்பானியத் திரைப்படம், வெற்றிபெற்ற ஒரு கவிஞனின் இன்றைய சோர்வுற்ற மனநிலையை வெளிப்படுத்தும் The Pear Tree என்கிற ஈரானியத் திரைப்படம், பதினெட்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட வாய்மொழிக் கதையை அடிப்படையாகக் கொண்ட Beauty and The Beast என்கிற பிரெஞ்சு திரைப்படம், தலைமுறை மற்றும் காலாச்சார இடைவெளியால் பிரிக்கப்படிருக்கும் தந்தையும் மகனும் இணையும் ஹஜ் பயணத்தைப் பற்றிய மற்றொரு பிரெஞ்சு திரைப்படமான Le Grand Voyage, கனவுத்தன்மையும் விசித்திரமும் கலந்த இளைஞர்களைப் பற்றிய ஹாலிவுட் படமான Arizona Dream எனப் பல்வேறு ரசனை உள்ளவருக்கும் தீனி போடும் பல திரைப்படங்கள் குறித்தும் இந்தக் கட்டுரைகளில் பதிவு செய்கிறார் எஸ்.ரா.

இந்தியாவின் முதல் சினிமாவை உருவாகிய தாதா சாஹேப் பால்கே பற்றிய மராத்திய படமான Harichandrasi Factory திரைப்படம் பற்றிய கட்டுரை சுவையானது. சாப்ளின் படங்களைக் காணும்போது கிடைக்கும் அதே ஆனந்தம் இந்தப் படத்திலும் சாத்தியமாகியிருப்பதாய்க் கூறுகிறார் எஸ்.ரா. முதல் முறையாக படம் எடுப்பதில் பால்கே சந்தித்த சில விசித்திரமான சிக்கல்களை நகைச்சுவை கலந்து அளிக்கிறது இத்திரைப்படம்.

ஒரு காலத்தில் மௌனப்பட உலகில் வெற்றிபெற்ற நாயகியாக வலம் வந்த நடிகை, இன்றைய சினிமா உலகால் புறக்கணிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாவதைப் பற்றிய Sunset Boulevard திரைப்படம் பற்றிய தனது ஆழ்ந்த பார்வையையும் முன்வைக்கிறார் எஸ்.ரா. கடந்த நூறாண்டுகளில் வெளியான சிறந்த பத்து படங்களில் ஒன்றாக இந்தப் படம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு எனப் படத்தின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் தனது நுண்ணிய அவதானிப்புகளை விரிவாக எடுத்துரைக்கிறார்.

திரைப்படங்கள் பற்றி மட்டுமல்லாது சில முக்கிய ஆவணப்படங்களைப் பற்றியும் இப்புத்தகத்தில் அறிமுகப்படுத்துகிறார். ஒரிகாமி கலையைப் பற்றிய Between The Folds, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வியட்நாம் யுத்த நினைவகத்தை வடிவமைத்த மாயா லின் சந்தித்த சவால்களைப் பேசும் Maya Lin: A Strong Clear Vision மற்றும் அவர் பணியாற்றிய சில ஆவணப் படங்கள் பற்றியும் எழுதியுள்ளார்.

இந்தக் கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்தது, நண்பர்களுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டு குறித்த ஆவணப்படம் எடுத்த எஸ்.ராவின் அனுபவக் கட்டுரைதான். அதில் ஒற்றைக் கண் காளைக்கும் அதனை அடக்க நினைக்கும் ஒரு இளைஞனுக்குமான வித்தியாசமான உறவை அவர் கூறியிருக்கும் விதம் மனத்தைப் பிசைவது. அந்த இடத்தில் அவருள் இருக்கும் சிறுகதையாசிரியர் விழித்துக் கொள்கிறார். தன்னை மறந்து அவர் காட்டும் காட்சியில் மனம் ஒன்றிப் போய்விடுகிறது.

நல்ல திரைப்படங்களைப் காண்பது மட்டுமல்ல அவற்றில் ஒளிந்திருக்கும் நுணுக்கங்களை எவ்வாறு கண்டறிந்து ரசிப்பது என்பதையும் சேர்த்தே குறிப்பிடுகிறார் எஸ்.ரா. சினிமாக் காதலர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். பார்க்க வேண்டிய லிஸ்டில் மேலும் பல நல்ல தரமான படங்கள் சேரும். உடனடியாக அவற்றைப் பார்த்து முடிக்கும் ஆவலைக் கட்டுப்படுத்துவது சிரமம்தான்.

  • இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -