பாபாவும் நானும் (7)

நீ நினைத்தது நடக்கும் அவரே நடத்துவார்

- Advertisement -

ஓம் சாய்ராம்,

கருவுண்டான செய்தி உறுதியான நாள் முதல் சுகப்பிரசவம் ஆக என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தேடிப் படித்தோம். ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி யோகா என என் மனைவி அவளைத் தயார் செய்துகொண்டாள். நாள் நெருங்கிக்கொண்டே இருந்தது. மே மாதம் 25 ஆம் தேதியை மருத்துவர் குறித்துக் கொடுத்திருந்தார். நான் பத்து நாள்கள் முன்கூட்டியே இந்தியா சென்றுவிட்டேன்.

மே மாதம் 25ம் வந்தது ஆனால் வலி வரவில்லை. சரி ஓரிரு நாள்கள் பொறுத்துப் பார்ப்போம் என்று காத்திருந்தோம். 26 அதிகாலை நான்கு மணியளவில் என்னை எழுப்பிய மனைவி தனக்கு வலி வருவதாகக் கூறினாள். வீட்டில் இருக்கும் மற்றவர்களை எழுப்புவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தோம். வந்த வலி அதற்குள் ஓடிவிட்டதாகக் கூறினாள். சரி விடியட்டும் மீண்டும் வலி வருகிறதா பார்ப்போம் என்று காத்திருந்தோம். ம்ம்ஹீம் வரவேயில்லை. 

காலை பொழுது புலர்ந்தது. வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக எழுந்துவந்தார்கள். மருத்துவமனையில் போய் சேர்ந்துகொள்வது நல்லது, ஒருவேளை திடீரென வலி வந்துவிட்டால் அவசரமாக ஓடித் திரியமுடியாது என்று முடிவு செய்து மருத்துவமனைக்குச் சென்றோம். சோதித்த மருத்துவர் எல்லாம் நார்மலாக இருக்கிறது. இன்றைக்குள் வலி வரவேண்டும் காத்திருங்கள் என்றார். மருத்துவமனையில் ஒரு அறையை எடுத்துக்கொண்டு அங்கேயே தங்கியிருந்தோம். அதிகாலையில் வந்த அந்த வலி அதன் பின் வரவில்லை. நேரம் ஆக ஆக எங்கள் நம்பிக்கை குறைந்துகொண்டே சென்றது. ஒருவேளை வலி வரவில்லை என்றால் கத்தியை வைத்துவிடுவார்கள். கருவுண்டான நாள் முதல் நான் பாபாவிடம் வேண்டிக்கேட்டது. சுகப்பிரசவம் ஆகிவிட வேண்டும் என்று மட்டும் தான். 

பொதுவாக பாபாவிற்கு எண் ஒன்பது சிறந்தது என்பார்கள். அதனால் ஒன்பது வாரங்கள் வியாழக்கிழமைகளில் விரதம் கூட இருந்தேன். சாயுங்காலம் மணி ஆறரை ஆகியிருந்தது மருத்துவர் வந்து சோதித்தார். இன்று ஓர் இரவு பார்ப்போம் வலி வரவில்லை என்றால் நாளை சிசேரியன் பற்றி யோசிக்கலாம். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று ஆறுதல் கூறினார். 

இரவு ஒன்பது மணி வரை எந்த அறிகுறியும் தெரியவில்லை. செவிலியர்கள் மருந்து கொடுத்தார்கள். ஒரு பத்து மணி போல் லேசாக வலி வருவதாகக் கூறினாள். நான் ஓடிப்போய் ஒரு வயதான செவிலியரிடம் கூறினேன். வெள்ளை சேலை அணிந்து நாலேமுக்காலடி உயரமிருப்பார். வேகமாக என் பின்னே எங்கள் அறைக்கு வந்தார். என் மனைவியைப் பார்த்தார் வயிற்றை அமுக்கிப் பார்த்தார். “இன்னும் தலையே திரும்பல தம்பி. நேரம் ஆகும். ஒண்ணும் கவலைப் படாதீங்க”. சொல்லிவிட்டு விறுவிறுவென நடையைக் கட்டிவிட்டார். என் மனைவியும் வலி இல்லாமல் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாள்.

ஒரு அரைமணி நேரத்திற்குப் பின் மீண்டும் வலி தொடங்கியது. இந்தமுறை முன்னைவிட வலி கொஞ்ச நேரம் அதிகமாக இருப்பதாக கூறினாள். மீண்டும் அதே செவிலியரிடம் ஓடினேன். இந்த முறை அவர் வயிற்றை அமுக்கிக் கூட பார்க்கவில்லை. முகத்தை மட்டும் பார்த்துவிட்டு இன்னும் நேரம் ஆகும்பா என்று கூறிவிட்டு போய்விட்டார். ஒரு பெண் வலியில் துடித்துக்கொண்டிருக்கிறாள். இந்தம்மா எனக்கென்னவென வந்து இன்னும் வலிக்கணும்ன்னு சொல்லிட்டுப் போகுது. எரிச்சலாக வந்தது. 

அடுத்த முறை ஓடியபோது அந்தம்மா அங்கிருந்து எழுந்து கூட வரவில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்ப்பா போப்பா என்று அனுப்பிவிட்டார். மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது என் மனைவி வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அந்தம்மா நன்றாகத் தூங்கிகொண்டிருந்தார். நான் போய்த் தட்டி எழுப்பினேன். ‘ஆ’ என்று கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்து வந்தார். வயிற்றை அமுக்கிப் பார்த்தார். இன்னும் தலை திரும்பலப்பா என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அந்த மருத்துவமனையில் இருந்ததில் சற்று பெரிய அறையை நாங்கள் எடுத்திருந்தோம். முன்னாள் வராண்டா மாதிரி சோபா செட் போட்ட ஒரு சிறிய அறையும் அதனைத் தாண்டி உள்ளே சென்று கதைவைத் திறந்தால் தான் படுக்கை போட்ட நோயாளி தங்கும் அறையும் இருக்கும். நானும் என் மாமாவும் முன் அறையில் இருந்தோம். உள்ளே என் அம்மா, அத்தை மற்றும் என் மனைவியின் பெரியம்மா ஆகியோர் என் மனைவியைச் சமாளித்துக் கொண்டிருந்தனர். நான் உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தேன். ஒரு மணியிருக்கும் இப்போது வலி கொஞ்சம் நீடித்ததாக இருந்தது. அதே செவிலியர் வந்தார் இன்னும் தலை திரும்பவில்லை. தலை திரும்பினால் தான் எதுவும் செய்ய முடியும் காத்திருங்கள் என்றார். 

முன்னறையில் விளக்குகள் அணைந்திருந்தன சோபாவில் அமர்ந்தேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் உயிர்போகும்படி உள்ளே வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் இன்னுமும் தலை திரும்பவில்லை. தலை மேல் நோக்கியே இருக்கிறது என்கிறார்கள். பாபா பாபா என்னப்பா இது சோதனை. உன்னைவிட்டா எனக்கு யாருப்பா இருக்கா? மனமுருகி பாபாவை வேண்டத் தொடங்கினேன். கண்களைப் பொத்துக்கொண்டு விழிநீர் சூடாக கன்னத்தை கடந்து நெஞ்சில் விழுந்தது. காவியுடை அணிந்த பாபாவின் அழகியத் தோற்றம் மட்டுமே என் உள்ளம் முழுவதும் நிரம்பியிருந்தது. அந்தத் தோற்றம் எனக்கு அமைதியையும் ஆறுதலையும் தந்தது. பாபா வந்துவிட்டார் இனி அவர் பார்த்துக்கொள்வார் என நம்பினேன். முகத்தைத் துடைத்துக்கொண்டேன். அங்கேயே சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.

உள்ளறையில் இருந்து என் அம்மா அவசரமாக வெளியே வந்தார். “டேய் இங்க தான் உட்காந்திருக்கியா ஓடுரா போய் நர்ஸ கூட்டிட்டு வா போ” என்று விரட்டினார். நான் எழுத்து ஓடினேன். அந்த செவிலியர் வேக வேகமாக வந்தார். வெளியே சென்றார் இன்னும் இரண்டு மூன்று இளம் செவிலியர்கள் வந்தார்கள். மனைவியைக் கூட்டிக்கொண்டு நான்காவது மாடியில் இருந்த பிரசவ அறைக்குக் கொண்டு சென்றார்கள். அந்த மொத்தக் காரிடரில் பிரசவ அறை மட்டும் தானிருந்தது. மற்ற அறைகள் எல்லாம் காலியாக இருந்தன. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஓரத்தில் அமர்ந்துகொண்டு வரப்போகும் செய்திக்காகக் காத்திருந்தோம். மணி அதிகாலை மூன்றைக் கடந்திருந்தது. இப்போது வரை மருத்துவர் வரவில்லை உள்ளே செவிலியர்கள் மட்டும் தானிருக்கிறார்கள். அந்த மருத்துவமனைக்குள் தான் மருத்துவரின் வீடும் இருந்தது. அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று காத்துக்கொண்டிருந்தோம். உள்ளே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. 

மின்தூக்கியின் கதவு திறந்தது மருத்துவர் வேகவேகமாக பிரசவ அறையை நோக்கி ஓடினார். அவர் சென்று ஒரு சிறிதுநேரம் இருக்கும். மணி அதிகாலை மூன்று நாப்பது. “வ்வியேன்….” என்று என் மகளின் அழுகைச் சத்தம் கேட்டது. 

ஓம் சாய்ராம்

-சாயி நாமம் ஒலிக்கும் 

அடுத்தப் பதிவைப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

பாபாவும் நானும் – 8

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -