சூர்யப்பாவை – 27

தொடர் கவிதை

- Advertisement -

கையொப்பமிட்ட வெற்றுத்தாளாய்
என்மனத்தை வைத்திருக்கிறேன்.
உடன்படிக்கையோ
முரண்படிக்கையோ ..
எதுவாயினும் நிரப்பிக்கொள்.
என் தேவையும் தேட்டமும்
நீ உடனிருப்பது மட்டுமே.
உயிரொப்பம் நீயிடத்தான்
உடல் தாங்குகின்றது உயிர்.
தாங்கலும் தாங்கல் நிமித்தமுமாய்த்
ததும்புகின்றது இளமையின் வள்ளன்மை.
கொடுத்து கொடுத்துச் சிவக்கும்
கொடைவள்ளலாய் உன்னால்
நான் ஆக்கப்படுகின்றேன்.

ஆள்தலும் ஆளப்படுதலுமான
இருபக்க நாணயத்தைச்
சுண்டிவிட்டே ஆட்டத்தைத்
தொடங்குகின்றாய்.
இருபுறமும் இருவரும் மாறிமாறி
இயங்குதல் கண்டு
குழம்புகிறது நாணயம் ..
குழப்பம் நேர்கையில் நீயோ
இதழ்யாழெடுத்து மீட்டத்
தொடங்கிவிடுவாய் ..
இன்பத்தைச் சேர்க்கத்
தொடங்குவது என் வேலையாகிவிடும்.

முரண்பாடுகளற்ற காதலில்
என்ன பெரிதாய்க் களிநயம்
இருந்துவிடப்போகின்றது?
கணுக்களின்றிக் கரும்பேது ..!
சீரான இடைவெளியில்தானே
செறிந்ததொரு பிடிப்பு தோன்றும்.
பிடித்துவிட்டாலே பித்தாகிவிடுகின்றது.
பித்துநிலை ஏறஏற சமனிலை
சதிராட்டம் கண்டுவிடுகின்றது.
யார்க்கு வேண்டும் சமனிலை?
முத்த வினையூக்கிகளால்
சமன்படுத்த முயன்றிடும்
இருபக்க வினைகளில்தானே
களித்துக் கிடக்கின்றது மனம்.

களிப்பும் களிப்பின் நிமித்தமுமாய்க்
காதல்செய்யும் கூட்டுக்காரன் நீ.
முரண்பாடுகளைப் பகுத்து
முத்தஈவு எடுக்கும் அரும்பெரு
முத்தமுனைவன் நீ சூர்யா..
முரண்படிக்கையோ
உடன்படிக்கையோ …
எதுவாயினும் நிரப்பிக்கொள்
உன் முத்தங்களால் …!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -