பாடு நிலாவே .. தேன்கவிதை ! – பகுதி 5

உன்ன மறந்திருக்க ஒருபொழுதும் அறியேன்..!

- Advertisement -

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

சந்தனக்கிண்ணத்தைக் கையில் வைத்துக்கொண்டு சந்தனத்தைத் தனக்குத்தான் பூசவேண்டும் என்று சொன்ன எஸ்.பி.பி என்ன செய்கிறார் என்று பார்ப்போமா?
ஒன்பான்கோள்களையும் தன் அரியணைக்கு ஏற்றிச்செல்லும் படிக்கட்டுகளாக்கிக் குப்புறப் படுக்கவைத்திருந்த இராவணன்போல ஒன்பான்சுவைகளையும் விரல் சொடுக்குவதைப்போல எளிதாகவும் அழகாகவும் தன் குரல்வளைக்குள் படிக்கட்டுகளாகக் குப்புறப் படுக்க வைத்திருப்பவர் அல்லவா நம் எஸ்.பி.பி. பாடலுக்குத் தேவையான சுவையை மட்டும் பாடும்போது மல்லாக்க மாற்றிவிடுவார். ஆனால் இப்போதோ மகிழ்வு மட்டும் கொஞ்சம் தூக்கலாகத் தெரிய காரணம் என்ன? அவரே ஏதோ பாடுகிறார் .. பாட்டைக் கேட்டால் தெரிந்துவிடப் போகிறது..!

அவரின் முன்னே ஓர் அழகி வேறு நிற்கிறாள். யாராக இருக்கும்? அட அவள் வேறு யாருமல்ல, நம் இசையின் மகளாகிய பாடலழகிதான். அவளைப் பார்த்துத்தான் நம் எஸ்.பி.பி பாடுகிறாரா? பாட்டு என்றாலே மயங்கிவிடுவார் எஸ்.பி.பி.. இந்தப் பாடலழகியோ மண்மணம் கமழும் நாட்டுப்புறப் பெண்ணழகியாக வேறு இருக்கிறாள்.. சொல்லவா வேண்டும் எஸ்.பி.பிக்கு.. அவிழ்த்துவிடுகிறார் பாட்டை… பாடலழகியிடம் தன் காதலைச் சொல்ல பாட்டைத்தான் தூதாகத் தேர்ந்தெடுக்கிறார் எஸ்.பி.பி.

பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கெளருதடி என்ன படு ஜோரு …

பாண்டியனோட தேருக்குப் பட்டுடுத்தி நடக்கவிட்டால் இருக்கும் அழகைவிடவும் அதை எஸ்.பி.பி பாடும்போது நம் மனத்தைக் கிளறி அழகை விதைத்துவிடும் அவரின் மாயக்குரல்.

தன்னந்தனியா எண்ணி ரசிச்சா
கண்ணு வல தான் விட்டு விரிச்சா..
இங்கே தன்னந்தனியாக எஸ்.பி.பி பாடலழகியைப் பார்த்து மெய்மறந்து பாட, அவளோ தன் கண்ணாலே வலைவிரித்து எஸ்.பி.பியைத் தனக்குள் இழுத்துக் கொள்கிறாள். எஸ்.பி.பியும் பாடலழகியும் கொஞ்சிக்கொள்ளும் பொழுதெல்லாம் நாமே அவர்தம் கூடலுக்குள் சிக்கிக்கொள்கிறோம். அதில்தான் எத்தனை இன்பம்!

ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து…
என்று வலைக்குள் சிக்கிக்கொண்ட எஸ்.பி.பி அங்கிருந்தே காதல்வலை பின்னுகிறார். ஏறெடுத்துப் பாத்து என்று அவர் சொல்லும்போது பாட்டுலகமே அவரை ஏறெடுத்துப் பார்க்கும்.. நீரெடுத்து ஊத்து எனும்போது நம் கண்களின் சுரப்பிகள் தானாய்ச் சுரந்து விழிப்படலத்தில் ஈரமாய்ப் பரவும்.
சீரெடுத்து வாரேன் என்று கொஞ்சும்போதே பாடலழகி அவர் மனக்கட்டிலில் மஞ்சமிட்டு விடுவாள்போலும். எஸ்.பி.பியே இறையால் வழங்கப்பட்ட ஒரு சீர்தான்.. அவரே சீரெடுத்து வாரேன் என்று சொன்னால் பன்மடங்கு பேரின்பமல்லவா அது! எத்தனையோ பொழுதுகளில் தன் சந்தனக்குரலால் எத்தனை எத்தனையோ உள்ளங்களைத் தேற்றிய எஸ்.பி.பி இங்கே தன் காதலியிடம் தன்னைத் தேற்றுமாறு கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.

முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு

என்று தன் பாடலழகியிடம் அன்புக்கட்டளை போடுகிறார். இவ்வரிகளில்கூட என்னவொரு பொருத்தம் பாருங்களேன்.. இயற்கையிலேயே விளைந்த முத்தின் வழுவழுப்பைப் போன்றதொரு குரலைக்கொண்ட எஸ்.பி.பியும் ஒரு முத்தையன்தானே. அவர் பாடும் ஒவ்வொரு பாடலும் நமக்கு முத்திரைக்கவிகள்தானே. என்ன ஒன்று, நாம் பதில் சொல்லக்கூட முடியாமல் மெய்மறந்து அவர் பாடலைக் கேட்டுக்கொண்டிருப்போம்.

ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்

என்ற வரிகளில் காதலின் ஆழத்தையும் ஒருமுகத்தன்மையையும் அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார் கங்கைஅமரன். அதை அப்படியே எஸ்.பி.பி தன் பாடலழகியிடம் சொன்னதோடு மட்டுமல்ல, சொன்னபடிதானே வாழவும் செய்தார். ” எனக்குத் தெரிந்தது ஒன்றேயொன்றுதான் – அது நீ. எனக்குத் தெரியாததும் ஒன்றேயொன்றுதான் – அது உன்னை மறப்பது ” என்று சொல்லி இரண்டே இரண்டு வரிகளில் ஒரு காதல்கோட்டையைத் தன் பாடலழகிக்குக் கட்டிவிடுகிறார் எஸ்.பி.பி.

சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூ தாரேன்
கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்தவழி போறேன்
சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு
முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு –

நடுச்சாமத்தில் வந்து சாமந்திப்பூ தருகிறேன் உனக்கு என்று பாடும் எஸ்.பி.பியைப் பார்த்து பாடலழகி முறைக்க, அந்த முறைப்பில் நுரைத்துப் பொங்கும் காதலைக் கண்டுவிட்ட எஸ்.பி.பியோ ” அம்மாடியோ..இப்படிக் கோபப்பட்டால் சாமந்திப்பூவோடு சத்தமில்லாமல் திரும்பிப் போய்விடுகிறேன்” என்று பொய்யாய்ப் பயப்படுகிறார். உடனே பாடலழகி புன்னகைக்க, சற்றும் காலந் தாழ்த்தாது, ” சந்தனத்தைக் கரைத்து எனக்குப் பூசிவிடு , அப்புறம் முழுமையாக நான் உனக்குத்தான் ” என்று அடுத்த காதற்கணையை வீசித் தன் காதலை உறுதிப்படுத்திவிடுகிறார்.
இப்படியெல்லாம் காதலைச் சொன்னால் யார்தான் ஏற்றுக்கொள்ளாது போவார்கள்!
இருவரும் சோடியாகச் சுற்றும்போது மீண்டும் அதே பாடலை எஸ்.பி.பி பாட இப்போது பாடலழகியும் சேர்ந்து பாடுகிறாள். காதலைச்சொல்லும்போது இருந்ததைவிடவும் கூடுதலான மென்மை எஸ்.பி.பி குரலில் வந்துவிடுகிறது. காதல் வந்தாலே மென்மை வரவேண்டுமல்லவா!! அதுதானே இயற்கையின் விதி. காதலைச் சொல்லும்போது மிடுக்குடன் வெளிவந்த குரல் காதலி அருகிலிருக்கையில் குழைவுடன் வெளிவருகிறது.

காலத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு யம்மா
நானாக மாற இப்போ நெனைக்குதம்மா மனசு – என்று பாடலழகியிடம் எஸ்.பி.பி சொல்கிறார். வெள்ளிக்கொலுசு என்று சொல்லாமல் ஏன் தங்கக்கொலுசு என்று சொல்கிறார்? வெள்ளிக்கொலுசின் முத்துக்கள் உரசுகையில் உண்டாகும் ஓசையின் அதிர்வு கூடுதலாகவும் அடர்த்தியாகவும் இருக்கும், அதைப் பாடலழகியின் சிரிப்புக்குத்தான் ஒப்பிடவேண்டும். தங்கக்கொலுசில் ஓசையின் அதிர்வு குறைந்தும் மெலிதாகவும் இருக்கும். பாடலழகியின் பேச்சுக்கு அதை ஒப்பிடுவதுதான் சிறந்ததாக இருக்கமுடியும் என்று சிந்தித்து எழுதிய கங்கைஅமரனுக்கு நம் தனிப்பாராட்டு.
இப்படியெல்லாம் காதலைச் சொன்னால் பாடலழகியும்தான் பாவம் என்ன செய்வாள்? ஒன்னும் புரியவில்லை மனசு எங்க போச்சு என்று பதிலுக்குக் கேட்கிறாள். அதற்கு எஸ்.பி.பி.
” இந்த மனசு நஞ்ச நிலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்” என்று தனக்குள் அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று அவளின் கலக்கம் தீர்க்கிறார். எஸ்.பி.பியின் தொண்டைநிலத்தில் விழுந்த அத்தனை பாடல்விதைகளுமே நல்ல விதைகள்தாம். அத்தனையும் குரல்விளைச்சலில் முப்போகம் கண்டவை.

மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தைக் கூற ” என்று அவள் பாட மீண்டும் மகிழ்வின் உச்சத்தில் ” சந்தனம் கரைச்சுப் பூசணும் எனக்கு முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு ” என்று உருகுகிறார்.

நாள்தோறும் பாடலழகி சந்தனத்தைக் கரைத்து எஸ்.பி.பியின் குரல்வளைச் சுவர்களில் பூசுகிறாள். அவரோ தான் வாழ்நாளின் மொத்தத்தையும் “இந்தா பிடி” என்று அவள் கையிலேயே கொடுத்துவிட்டார்.
என்ன பாட்டு என்று இந்நேரம் நீங்களும் கண்டுபிடித்திருப்பீர்களே. கரகாட்டக்காரன் படத்தில் வரும் மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு என்ற பாடலில்தான் எஸ்.பி.பி இவ்வளவுநேரம் சந்தனம் பூசிக்கொண்டிருந்தார். தனிப்பாடலில் முழுவதும் நாட்டுப்புற மணத்தினைத் தன்குரலோடு பூசியே பாடியிருப்பார்..வழக்கமான அவரின் குரலைவிட சற்றே மாறுபட்டிருக்கும். அதிலும் அந்தச் சோடிப்பாடலில் இரண்டாவது சரணம் முடிந்ததும் வரும் மாங்குயிலே பூங்குயிலே வரிகளை நன்கு கூர்ந்து கேட்டுப்பாருங்கள். எஸ்.பி.பி குரலில் அத்தனை மென்மையும் குழைவும்…எஸ்.பி.பி தொடுகை அது ! அட அட .. வாய்ப்பேயில்லை.. அவர்க்கு நிகர் அவர்தான்.!

பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக்கிளப்பித் தூள்பறத்திய கரகாட்டக்காரன் படத்தில் தனிப்படலாகவும் சோடிப்பாடலாகவும் வரும் மாங்குயிலே பூங்குயிலே பாடலில் இராமராஜன், கனகாவிற்குப் பதிலாக எஸ்.பிபியையும் அவரின் பாடலழகிக் காதலியையும் வைத்துப்பாருங்கள்.. பாடல்வரிகள் அப்படியே பொருந்திவிடும்.

சீரெடுத்து வாரேன் என்று உருகிய எஸ்.பி.பி காதலி ஒப்புதல் அளித்ததும் பேச்சு மாறிவிடுகிறார். நீதான் சீர் தரவேண்டும் என்று காதலியிடம் சொல்கிறார். ஏன் இப்படி மாற்றிமாற்றிப் பேசுகிறார் எஸ்.பி.பி? என்னவாயிற்று அவர்க்கு என்று வரும் செவ்வாயன்று தெரிந்துவிடப் போகிறது.

கங்கையில் நிலா இன்னும் முத்துக்குளிக்கும்…!

பாடு நிலாவே .. தேன்கவிதை ! – பகுதி 6

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

8 COMMENTS

    • ஆமா… எப்பவுமே மகிழ்வூட்டித் தாளம்போட வைக்கும் பாடல்

  1. சிறப்பான பதிவு வாழ்த்துகள்..

    எப்பொழுது கேட்டாலும் மகிழ்ச்சியாகவும் மறக்கமுடியாத பாடலாகவும் இருக்கிறது..

    • ஆமாங்கண்ணா… அதுபோன்ற இன்னொரு படத்திற்கு வாய்ப்பேயில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

  2. இனிமையான பாடலைப் பற்றியதொரு
    அருமையான ஆய்வுரை.. ?

    //தனிப்பாடலில் எஸ்.பி.பியின் குரல் சற்றே மாறுபட்டிருக்கும்..//ஆம் உண்மைதான்
    நானும் இத்தனை நாளாக
    அந்தத் தனிப்பாடலைப் பாடியது மனோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன் தங்களின் இந்த பதிவைப் படித்த பிறகுதான் மீண்டும் ஒருமுறை அந்தப் பாடலைக் கேட்டு அது எஸ்.பி.பிதான் என்று உறுதிப் படுத்திக் கொண்டேன்..

    ‘வங்கத்துல வெளஞ்ச மஞ்சக்
    கிழங்கெடுத்து உரசி
    இங்கும் அங்கும் பூசிவரும்
    எழிலிருக்கும் அரசி’

    இந்த வரிகளில் ழ’ கர ல’ கரங்களைச் சிறப்பாக உச்சரிக்கும்போதே அது எஸ்.பி.பிதானென்று எப்படித்தான் அறியாமல் போனேனோ?..

    தங்களின் எழுத்து வானத்தில் பாடும் நிலா பன்மடங்கு ஒளிகூடிச் சுடர்விடுகிறது..
    தொடர்ந்து எழுதுங்கள் தொடக்க காத்திருக்கிறோம்..

    • ஆமா.. சட்டுனு மனோ குரல் மாதிரிதான் இருக்கும். அப்படியொரு வேறுபாட்டை எஸ்.பி.பி காட்டியிருப்பார். மனுசன் குரலிலேயே கரகமாடியிருப்பார்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -