மலை புராணம்

கவிதைகள்

- Advertisement -

மலை புராணம்

தவ ஞானியாய்
நிமிர்ந்து நின்று…
தரணியாளும் மன்னனாய்
தளும்பும் களிப்பு கொண்டு…
தன்னனடக்கமாய் மெளனித்து…
தவறிழைக்கும்
மனித குலம் கண்டு
தனக்குள் சிரித்தபடி…
கனவுகள் காணும்
இளைய சமூகம் போல்..
மனதுள் புதைந்திருக்கும்
எண்ணங்களை
பசுமை பொங்கும்
காடுகளாய்
பிரதிபலித்து…
வண்ணப்பறவைகள்
வட்டமிடும் வேளைகளில்…
வாசம் கமழும் பூக்களின்
ஆறுதல் தாலாட்டில்…
வானவில் கிரீடம் சூடி
இறுமாந்திருக்கும்
மா… மேருவே…!
உன் அழகை நானும்
எச் சொல்லில் தான்
அடக்கிடுவேன்…?
என்னவென்று தான்
பகர்ந்திடுவேன்…?

எக் காலம் தொடங்கி….
எக்காலம் வரை….
உன் வாழ் காலம்…?
எவர் தான்….?
அறியக் கூடும்.

??????????????????????????

நகைச்சுவை படலம்

கொடுவாள் மீசை
கூர் தூக்கி நின்றது.

கள்ளிப் பழமாய்
கண்கள் சிவந்திருந்தன.

இரும்பை நொறுக்கும்
சம்மட்டிக் குரல்.

நெருப்பைக் கக்கும்
சுளீர் வார்த்தைகள்.

வனமோ..!
அவன் தோளேறி
வீடு வரும்.

குடம் குடமாய்
சாராயம் குடித்தாலும்..
நிலை தடுமாறா தேகம்.

தூசி கிளம்ப
வலம் வருகையில்
தெருவே…
வெறிச்சோடிப் போகும்.

வீதிகள் அதிர
காலடியோசையில்
வெடி வெடிக்கும்.

விளக்குமாறு ஏந்தி வரும்
அவனின் வீட்டுக்காரியோ…
சுள்ளி உடம்புக்காரி.

அவள் வீசுகிற_
“எலேய்…
ஏலமாட்டாத பயலே….”
_எனும்
அம்புக்குத் தப்ப
அந்த சிங்கமோ…!
பிடறி குதிபட
பாய்ச்சலிடும்.

??????????????????????????

இயற்கை எனும் புதிர்

அகாலத்தில்
உருப்பெற்றது
அந்த செடி.

ஒரு பூ ஆண் முகம்..
இன்னொரு பூ பெண் முகம்..
இப்படி
ஏராளமான பூக்கள்.

மழையில்
குதித்து… குதித்து… ஆடியது…
பனியில்
மெளனமாய்
விழிகள் சொருகி
சிரித்தது…
காற்றில் பயந்து
நடுங்கித்
திண்டாடியது.

புயல் வந்தது..
தூறல் வந்தது..
தென்றல் வந்தது..
அடை மழை வந்தது..

கொஞ்சக் காலம் தான்
யாவும் என்றாலும்…
விதைக்குள் விருட்சம்
விருட்சத்திற்குள் விதை.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -