ஊழ்…! – 3

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

‘உங்களை நம்பி நானும் ஏமாளியாக விரும்பவில்லை. குட் பை…’

முகம் முழுவதும் குழப்பத்தோடு கடிதத்தில் இருந்த அந்த ஒற்றை வரியை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தான் அமுதன்.

‘என்னை நம்பி ஏமாளி ஆகுறாளா? என்ன சொல்ல வர்றா.’

‘நான் அவளை எமாத்துனேனா?’

‘நேத்து வரை எந்தப் பிரச்சனையும் இல்லையே’

‘இல்லை… இல்லை… நேத்து நைட்டு அவ என் கிட்ட சரியா பேசல…. ஏதோ மனசுல வச்சுத்தான் பேசாம இருந்திருக்கா.’

‘என்னவா இருக்கும்? தலை வலின்னு சொன்னாள்… நிஜமாவே தலைவலி தானா? பைத்தியம் கிய்த்தியம் புடிச்சிருச்சா?’

அதுநாள்வரை அவர்களுக்குள் எந்த மனக்கசப்பும் இருந்ததில்லை. அந்தத் துண்டு காகிதத்தில் எழுதியிருந்தை அவனால் நம்பவே முடியவில்லை. அந்த காகிதத்துண்டிற்கு மேல் இருந்த அவன் அலைபேசியின் செய்திகளைச் சோதித்தான். அவன் கடனட்டையைப் பயன்படுத்தி $474 வெள்ளிப்பணம் பரிவர்த்தனை செய்ததற்கான செய்தி இருந்தது.

‘ஒருவேளை அவ தான் இன்னைக்கு காலைல வேணும்ன்னே போன எடுத்து வச்சிருப்பாளோ?’

அருகில் சில மெமரிக்கார்டுகளும் அவளின் அவசரத் தேவைகளுக்காக அவன் கொடுத்திருந்த கடனட்டையும் இருந்தது.

$474 வெள்ளி பணப்பரிவர்த்தனை பற்றி தெரிந்துகொள்ள. வங்கிக்கு அழைத்தான்.

சில நிமிடக் காத்திருப்பிற்குப் பின் ஒருவர் அழைப்பில் வந்தார். அவனின் அடையாளங்கள் சிலவற்றைக் கேட்டுச் சோதித்தார்.

“உங்கள் கடனட்டையில் இருந்து டைகர் ஏர்வேசில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.

அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அந்த அதிகாரியே தொடர்ந்து.

“நீங்கள் முன்பதிவு செய்யவில்லையா? புகாரளிக்க விரும்புகிறீர்களா?” என்றார்

“என் மனைவி பண்ணியிருப்பாள்… நான் அவளிடம் விசாரித்துவிட்டு அழைக்கிறேன். மன்னித்துவிடுங்கள்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

வேகவேகமாக சாங்கி விமான நிலைய அட்டவணையை அவன் அலைபேசியில் தேடிப்பார்த்தான். அன்றைய டைகர் விமானம் ஏற்கனவே திருச்சி சென்றுவிட்டிருந்தது.

அந்த விமானத்தில் அவள் சென்றிருப்பாளா? அல்லது வேறு யாருக்காவது விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்தாளா?

வேறு யாருக்காவது எடுத்துக்கொடுத்திருந்தால் ஏன் இந்தக் கடிதம்?

கணினி மேசைக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்து தன் கைகளைப் பின்னந்தலையில் கட்டினான். சக்கரங்கள் இருக்கும் அந்த இருக்கை அவனை லேசாக பின்னால் நகர்த்தியது.

திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் தான் ஆகியிருக்கின்றன.

அவள் ஏதும் விளையாடுகிறாளா? மீண்டும் மீண்டும் வீட்டிற்கு வெளியும் உள்ளேயும் தேடித்தேடிப் பார்த்தான். அவள் அலைபேசிக்கு அழைத்தான். அது உபயோகத்தில் இல்லை என்றது.

மீண்டும் அழைத்துப் பார்த்தான். அதே பதில் தான்.

அவளின் இந்திய எண்ணிற்கு அழைத்தான். அழைப்பு ஒலித்தது. ஆவலாய் காத்துக்கொண்டிருந்தான். எதிர் முனையில் அழைப்பு துண்டிக்கப்பட்ட சந்தம் கேட்டது.

மீண்டும் அழைத்தான். அதே சத்தம்.

மீண்டும் அழைத்தான்….. அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக கூறியது.


பஞ்சுமெத்தை முழுவதும் மல்லிகையும் ரோஜா இதழ்களும் மிதந்துகொண்டிருந்தன. பாலைக் குடித்துவிட்டு பெண் பார்க்க வந்தபோது விட்ட கேள்வியில் இருந்து தொடங்கினாள் மதுமதி.

அமுதன் இதற்கிடையில் இரண்டு மூன்று சுஜாதா நாவல்களை வாங்கி படித்திருந்ததால். கொஞ்சம் சமாளித்தான்.

அவன் பெண் பார்த்துவிட்டுச் சென்ற நாளிலிருந்து அவனிடம் கேட்பதற்கு என்றே நிறைய தயாரித்து வைத்திருந்திருப்பாள் போல. கேட்டுக்கொண்டே இருந்தாள்.

அவன் அவளிடம் எதை எப்படி எங்கு தொடங்குவது என்றே தெரியாமல் திணறிக்கொண்டிருந்தான். அலைபேசியில் பலமுறை அழைத்த பொழுது கூட அவள் இவ்வளவு பேசியதில்லை. மொத்தமாக தேக்கி வைத்திருந்திருப்பாள் போல. அவள் ஆர்வம் இதில் தான் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. நிறைய தெரிந்து வைத்திருக்கிறாள். எதை எதையோ பேசுகிறாள். என்னன்னவோ கேட்கிறான்.

அமுதனின் ஆர்வம் அவள் மீது மட்டுமே இருந்தது.

‘திடீர் என்று கட்டியணைத்து விடலாமா?’

‘அவள் மடியில் படுத்துக்கொள்ளலாமா?’

‘முத்தம் கொடுத்து விடலாமா?’

‘செய்தால் என்ன செய்வாள்?’

‘கத்தி விடுவாளோ? ச்சீ… இவன் கேவலமானவன் என்று எண்ணிக் கொள்வாளோ? ‘

அவன் மனதிலும் கேள்விகளும் சந்தேகங்களும் மழை போல் பொழிந்துகொண்டிருந்தன. அவள் வாய் ஓய்ந்தபாடில்லை.

சரி எப்படியும் இன்று நடக்கவேண்டியது நடக்காது என்பதைப் புரிந்துகொண்டு அவனும் அவள் பேச்சிற்குள் புக முயற்சி செய்துகொண்டிருந்தான். அவள் எலெக்ட்ரானிக்ஸ் படித்ததோடு மட்டுமல்லாமல் அதில் அதிக ஆர்வமும் கொண்டிருந்தாள். மென்பொருள் எழுதும் அமுதனுக்கு அவள் சொல்லும் ரெசிஸ்டர்களும் கெப்பாசிட்டர்களும் சர்க்கியுட்களும் புரியவே இல்லை. இருந்தாலும் அவள் மீண்டும் மீண்டும் விளக்கினாள்.

குடும்பக் கதை பேசுவதிலும் வல்லவளாய் இருந்தாள்.

“உங்க தாய்மாமா பொண்ணு ரேவதி உங்களுக்காகவே காத்திருக்காளாமே? அப்பறம் ஏன் நீங்க என்னை கல்யாணம் பண்ணுனீங்க?”

“அவ கிடக்க குள்ளக்கத்திரிக்கா… அவளை நான் அந்த மாதிரி நினைச்சதேயில்லை. எங்க மாமா தான் தேவையில்லாம கோவிச்சுகிறாரு… பார்த்தியா கல்யாணத்துல கூட ஊர்ர்ன்னு வந்துட்டு சாப்பிடாம கூடப் போயிட்டாரு.”

“உங்க சொந்தக்காரங்கள்ள ரெண்டு மூணு பேரு வந்து என்கிட்ட சொல்லிட்டாங்க… அழகு பெத்த பொண்ணு… இவன் தான் கட்டிகிட மாட்டேன்ட்டான்னு….” அவனை கேலி செய்து சிரித்தாள்.

சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவன் போல அவள் கையைப்பிடித்து இழுத்து. “இந்த அழகிய கட்டனும்னு தான் அவளை வேண்டாம்னேன்” என்று அவள் கன்னத்தைக் கிள்ளினான்.

“ச்சீ… போங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு..” என்று விட்டு அவள் அவன் பிடியில் இருந்து விலகிக்கொண்டாள்.

உடல் அசத்தியது ஏதோ ஒரு கணத்தில் அவளை அறியாமல் தூங்கிப் போனாள். மெதுவாக விளக்கை அணைத்துவிட்டு அவளின் இடைமீது அவன் வலது கையைப் போட்டுக்கொண்டு அவனும் தூங்கினான்.

காலையில் இருவரும் கட்டிக்கொண்டு கிடந்தார்கள். அவள் அவனை அவளிடமிருந்து பிரித்து ஒதுக்கிவிட்டு எழுந்தாள். மெத்தையில் மிதந்துக்கொண்டிருந்த பூக்கள் அனைத்தும் கட்டிலின் இரண்டு பக்கங்களிலும் சிதறிக் கிடந்தன.

அவன் அவளைப் பார்த்து ஒரு மாதிரியாக புன்னகைத்துவிட்டு “குட் மார்னிங்….” என்று பெரிதாகக் கூறி கைகளை விரித்து சோம்பல் முறித்தான்.

அவள் “வவ்வவே…” என்று உதட்டை கொன்னை வைத்தாள்.

அவன் அவள் கைகளைப் பிடித்து இழுக்க முற்பட்டான்.

“ச்சீ… லேட் ஆகிடுச்சு… இவளோ நேரமா தூங்குறது” என்றுவிட்டு குளியலறைக்குள் சென்றாள்.

அவன் அதே கட்டிலில் அவன் தூக்கத்தைத் தொடர்ந்தான். அதன்பின் வந்த நித்திரையற்ற இரவுகளும், அவன் உறவினர்கள், அவள் உறவினர்கள் என மாற்றி மாற்றி கொடுக்கப்பட்ட விருந்துகளும் அவர்களுக்குள் இருந்த கூச்சத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தன.

திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குப்பின் இருவரும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்கள்.

************************************** 

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்…. 

***************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 4

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -