ஊழ்…! – 4

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

சாங்கி விமானநிலையத்தில் இருந்து ஊதா நிற டாக்சி ஒன்று அமுதன், மதுமதியோடு சேர்த்து இரண்டு பெரிய பெட்டிகளையும் இரண்டு சிறிய பெட்டிகளையும் சுமந்துகொண்டு சிரங்கூனில் அவர்கள் வீடு இருக்கும் ப்ளாக்கை அடைந்தது.

ஓட்டுனரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு டிக்கியில் இருந்த பெட்டிகளை இறக்கினான் அமுதன். வண்டியில் இருந்து இறங்கி தான் வாழப்போகும் வீட்டைப் பார்க்கும் ஆவலில் உயர்ந்து நின்ற அந்தக் கட்டிடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மது. பெட்டிகளை ஒவ்வொன்றாக இழுத்து வந்து மின்தூக்கியில் ஏறினார்கள். பத்தாவது மாடியில் வீட்டை அடைந்தவுடன் பயணக்களைப்பு இருவரையும் அசத்தியது. ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டை வாடகைக்குப் பிடித்து ஒரு பார்ட் டைம் பணிப்பெண்ணை வைத்து சுத்தம் செய்திருந்தான் அமுதன். ஒரு மாதமாக பூட்டியிருந்த அந்த வீட்டிற்கு இப்போது இன்னும் நிறைய சுத்தம் தேவைப்பட்டது. அத்தனைக் கதவுகளும் சன்னல்களும் சாத்தியிருந்தாலும் எப்படித் தான் இவ்வளவு தூசு உள்ளே நுழைந்ததோ என்று புலம்பிக்கொண்டே விளக்குமாறை எடுத்துவந்தான். அவனிடமிருந்து அதை வாங்கிய மது முழு வீட்டையும் கூட்டி முடித்தாள். படுக்கையறையில் இருந்த தூசியை ஓரளவு விரட்டியவுடன் இருவரும் மெத்தையில் விழுந்து உறங்கினர்.

அடுத்த சிலநாட்கள் மது அந்த வீட்டில் ஒளிந்திருந்த அத்தனை தூசியையும் விரட்டியடித்து அவள் கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்களால் நிறைத்தாள். ஒவ்வொரு நாளும் இதை அங்கும் அதை இங்குமாக மாற்றி மாற்றி வைத்து வீட்டை அழகு படுத்தி இரசித்தாள். அவன் வேலைக்குச் சென்ற பொழுதுகளில் அவள் அந்த வேலையில்தான் மூழ்கிக் கிடந்தாள்.

மணிக்கொரு முறை அழைத்துப் பேசுவான். அவனுக்காகப் புதிது புதிதாக உணவு வகைகளைக் கற்று சமைத்துக் கொடுத்தாள். இப்போதெல்லாம் அவன் மதிய வேளைகளில் வெளியில் சென்று நண்பர்களுடன் சாப்பிடுவதில்லை. அவன் அலுவலக நண்பர்கள் கூட கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அமுதனின் வீடு சிரங்கூனில் இருந்தது. அவன் சிட்டிஹாலில் வேலை செய்தான். ஒவ்வொரு நாளும் இரண்டு இரயில்கள் மாறிச்செல்ல வேண்டும். அவுட்ரம் பார்க்கில் இறங்கி இரண்டாவது ரயிலைப் பிடிக்க அண்டர்கிரவுண்ட்டில் நடந்து செல்லும்போது அவன் உசேன் போல்ட்டாகவே மாறியிருப்பான். உண்மையில் உசேன் போல்ட்டே வந்தாலும் அவனை முந்த முடியாது. அலுவகம் முடிந்து வீடு திரும்பும் அத்தனை பேருமே கிட்டத்தட்ட உசேன் போல்ட் தான். ஐந்து நிமிடத்திற்கு ஒரு இரயில் வந்துகொண்டே இருந்தாலும் அத்தனை பேருக்கும் என்ன அவசரமோ தெரியாது ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

அவன் வீடடைய ஆகும் அந்த அரைமணி நேரப் பயணமே அவனுக்குத் தாங்கிக்கொள்ள முடியாததாய் இருக்கும். ஐந்தாறு முறை அழைத்து அது வேணுமா? இது வேணுமா? வரும் போது என்.டி.யூ.சி சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி வரவா? ஓல்ட் சாங்கியில் சிக்கன் விங்ஸ் வாங்கி வரவா? கறி பப்ஸ் வாங்கி வரவா? கேட்டுக்கொண்டே இருப்பான். அத்தனைக்கும் அவள் முத்தாய்ப்பாய் வழங்கும் ஒரே பதில். “நீங்க வந்தா மட்டும் போதும்….” ஒவ்வொரு வார்த்தையையும் இழுத்துச் சொல்லுவாள்.

ஒவ்வொரு நாள் மாலைப்பொழுதும் அருகில் இருக்கும் நெக்ஸ் மாலிலும் பக்கத்தில் இருந்த பார்க்கிலும் கழித்தார்கள். வீட்டிற்குள்ளே அடைந்து கிடப்பதில் விருப்பமில்லாதவள் அவள். எதையாவது துருதுருவென்று செய்துகொண்டே இருப்பாள். புத்தகங்களின் மீது அவளுக்கு இருந்த காதலுக்காக முதல்முதலில் நெக்ஸ் மாலில் இருந்த தேசிய நூலகத்தில் நுழைந்தான் அமுதன். அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் போல அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தின.

“இத்தனைப் புத்தகங்களையும் யாராவது படிக்கிறாங்களா? இல்லை அழகுக்கு அடுக்கி வச்சிருக்காங்களா?”

‘க்ளுக்’ என்று சிரித்த மது வாயைக் கையால் மூடிக்கொண்டாள்.

ஆங்கிலம் மேண்டரின் மலாய்ப் புத்தகங்களை விட தமிழ்ப் புத்தகங்கள் குறைவுதான். ஆனாலும் அந்தப் பகுதிக்குள் சென்றுவிட்டு அவள் வெளிவரவே முக்கால்மணி நேரம் ஆனது. இத்தனைக்கும் அவள் ஒரு புத்தகத்தைக்கூட எடுக்கவில்லை வெறுமனே வேடிக்கைதான் பார்த்துவந்தாள். உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்ட பின் அது அவளின் வேடந்தாங்கலாக மாறிப்போனது. பல சமயங்களில் அவன் அலுவகத்தில் இருந்து வரும்போது அவள் அங்கிருந்துதான் புத்தகமும் கையுமாக வருவாள்.

காதலித்து கைப்பிடிப்பதில் ஒரு சுகம் என்றால் கைப்பிடித்தவளைக் காதலிப்பதில் இன்னொரு தனிச்சுகம் உண்டு. ‘இவள் எனக்கானவள் என்ற உரிமை’ அவளின் ஒவ்வொரு தொடுதலிலும் அவனுக்கு உற்சாகமூட்டியது. ஒரு மாதமாய் உறவினர்களின் பிடிக்குள் அடைந்து கிடந்த நிலையில் இப்போது கிடைத்திருக்கும் சுதந்திரம் எல்லையற்றதாக இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளை முத்தத்தில் நனைத்தான். அவர்கள் தூக்கம் தொலைத்த இரவுகளின் உற்சாகம் குறையவே இல்லை. பகல்பொழுதோ போகாமல் இருந்து கொண்டு இம்சித்தது. அலுவலகத்தில் யாரைப் பார்த்தாலும் அமுதனுக்கு ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. கண் முன் கணினி இருந்தாலும் கவனம் முழுவதும் கட்டியவளிடம் தானிருந்தது.

அவன் அலுவக நண்பர்கள் குழு குழுவாக விருந்திற்கு அழைத்தார்கள். அவர்களில் இந்தியர் அல்லாதவர்கள் லிட்டில் இந்தியாவின் முத்து கரீஸ்க்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்தனர். இந்திய நண்பர்கள் ஸ்வென்சென்ஸ் ரெஸ்டாரண்ட்க்கு அழைத்துச்சென்றனர். ஆடு, கோழி, வாத்து, மாடு, மீன், நண்டு, நத்தை, சிப்பி என அட்டையில் விதவிதமாக சமைத்து வைக்கப்பட்ட படங்கள் அத்தனையும் உண்டு தீர்த்துவிடும் ஆவலைத் தூண்டின. அவன் மஸ்ரூம் சூப், ஆட்டுக்கறி சாப்ஸ் என்றான். மது ஊருக்குப் புதிது என்பதால் எதைச் சொல்வது என குழம்பிக் கொண்டிருந்தாள் அவளுக்கும் சேர்த்து அவனே ஒரு ஹவாயன் பீட்சாவும் பொறித்த கோழியையும் சொன்னான். அவளால் அத்தனையும் சாப்பிட முடியாது என்று அவனுக்குத் தெரியும் இருந்தாலும் அவனால் சாப்பிட முடியும் என்ற நம்பிக்கையில் சொன்னான்.

அங்கே அவர்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்த அழகிய சீன நங்கையை அவன் நண்பன் ஒருவன் கேலி செய்தான் “செம கட்டை…” எனச் சத்தமாகவே கூறினான். அந்தப் பரிசாரகி அங்குமிங்கும் செல்லும்போதெல்லாம் அவன் ஓரப்பார்வையை அவள் பக்கம் ஓட விட்டு அதற்கு அவள் வெட்கப்படுவதைப் பார்த்து இரசித்தான் அவன். கூடயிருந்த மற்ற நண்பர்களும் அவனை ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தனர்.

“உங்க ப்ரண்டுக்கு கொஞ்சம்கூட அறிவே இல்லையா?..” என்று அமுதன் காதைக் கடித்தாள் மது. அதன்பின் அந்த விருந்தில் அவள் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு அந்தக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பொம்மை போலாகிவிட்டாள்.

திரும்பும் வழியில் “என்னாச்சு உனக்கு? ஏன் திடீர்னு அமைதியாகிட்ட?” என்றான் அமுதன். அவன் பக்கம் திரும்பாமல் டாக்சியின் சன்னலையே பார்த்துக்கொண்டு வந்தவளிடம்

“உன்கிட்டத் தான் கேட்குறேன். என்னாச்சு?”.

“ஒண்ணுமில்ல கொஞ்சம் தலைவலி” என்றாள்.

“என்ன தலைவலி? உண்மைய சொல்லு, ரகு அந்தப் பொண்ண கிண்டல் பண்ணுனதுல இருந்துதான் நீ இப்படி இருக்க. அவன் சும்மா ஒரு ஜாலிக்கு சொன்னான். இதெல்லாமா பெருசா எடுத்துக்குவாங்க?”

“உங்க அக்காவ அப்படிச் சொல்லிருந்தா நீங்க அப்படிதான் எடுத்துக்குவீங்களா?” அப்போதைக்கு அந்தப் பேச்சை தொடர்வது அவ்வளவு சரியாகப்படவில்லை. அமுதன் முகம் கோபத்தில் சிவந்தது. புருவத்தை உயர்த்திக்கொண்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். வீடுவரை இருவரும் அமைதியாகவே சென்றார்கள்.

“சின்ன விசயம் இதைப்போய் ஏன் இவளோ சீரியஸா ஆக்குற?” என்று அவனே சமாதானப் பேச்சைத் தொடங்கினான்.

“ப்ளீஸ்… என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க. எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு…” உடை மாற்றிக்கொண்டு உறங்கப் போய்விட்டாள்.

அவன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு சிறிதுநேரம் அவன் நண்பர்கள் அனுப்பிய வாட்ஸ்ஆப் புகைப்படங்களைப் பார்த்துகொண்டிருந்தான். அன்று விருந்தில் எடுத்த அனேகப் புகைப்படங்களில் மதுவின் முகம் மங்கியே இருந்தது. விளக்குகளை அணைத்துவிட்டு அவள் அருகில் சென்று படுத்தான் அவள் விழித்துக்கொண்டு தானிருந்தாள் ஆனால் எதுவும் பேசவில்லை.

************************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

************************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 5

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -