லக்னத்தில் பத்தாவது இடம்

- Advertisement -

மரணம் ஒரு ஊதுபத்தியின் புகை போல் மெல்ல மெல்ல பிரிந்துப்போய்கிடக்கிறது. தலைக்குமேலே சப்தம் எழுப்பிக்கொண்டே கூட்டமாய் பறக்கும் பறவைகளுக்கு எனது சாவு உறுதி என தீர்க்கமாய்த் தெரிந்துவைத்திருக்கிறது. என் உடலை சுற்றி கூடியிருக்கும் கூட்டத்தில் என்வயதை ஒத்த சீனன் ஏதோதுண்டுசீட்டில் குறித்துக்கொண்டிருக்கிறான். உனக்கு இங்கே வேலையில்லை வெளியே போடா பைத்தியக்காரா… என்று விரட்டிய எனது முதலாளிக்கு இன்னும் ஒரு மணி நேரத்திலோ, இரண்டுமணி நேரத்திலோ தெலோக் பிளாங்கா கிரசண்ட் மார்க்கெட்டிற்கு நேர்எதிரே உங்கள் கடைபையன் இரத்தத்தில் உறைந்து கிடைக்கிறான் என செய்திப்போகும். இரவு ஏழரைக்கு சிப்ட்முடிந்து போன் வரும் என பினாங்கில் காத்திருக்கும் செல்விக்கு இன்னும் சில நிமிடங்களில் தலையில் இடிவிழும் செய்தி போக கூடும். கூடிய கூட்டம் எனது இடுப்பு எலும்பை தூக்கி நகர்த்திய போது நான்விட்ட பெருமூச்சு , கன்டெய்னர் லாரிவேகத்தடையின் மேல் ஏறி இறங்குவது போல் மூச்சுவாங்கியது. அதைக்கண்டு உடலை தூக்கியவன் பயந்தேபோனான். பின் மண்டைக்கு கீழே நெளிந்து பாம்பு போல் ஓடி உறைந்த இரத்தம் எனது பின்பாக்கெட்டை நனைத்திருக்கிறது. உள்ளிருக்கும் வேலட்டில் இடப்பக்கம் நான், செல்வி ,குட்டிம்மா பங்சார்கோவிலில் படையல் போடப்பட்டபோது எடுத்தப்படம் – இடப்பக்கம் ரெண்டு மூன்று ரெஸ்த்தா ரெண்ட் விசிட்டிங் கார்டுகள் , அதன் பின் வொர்க் பெர்மிட் அட்டை, அதற்குப்பின் மலேசிய ஐசி. அதற்கு பின் நம்பர்சீட்டு.

அதிர்ஷ்டம் என்றைக்காவது வரும் வரும் என தேவதைக்கு காத்துநின்றால் மிஞ்சுவது துரதிஷ்டம். சாகும்வரைஉடன் இருக்கும் தேவி. ஆனால் அதிர்ஷ்டம் பாக்கெட்டில் தனது ஆதர்ஷநாயகியின் புகைப்படத்தை ஒளித்துவைத்து மானசீகமாக ஆராதிக்கும் ரசிகனை போல், தினமும் ஆராதிக்கிறேன். ஏறெடுத்தும் அவள்பார்ப்பதில்லை. விரட்டுகிறேன். பின்னாங்கால் தெறிக்க ஓடுகிறாள்.

நிலைக்குத்திநிற்கும் என் கண்கள் ஒரு கடையை நோக்கி நிற்க்கிறது. அதன் வழியே ஒருவன் இஷ்டதெய்வத்தை நினைத்து வானத்தை நோக்கி ஊதுபத்திகளை ஏந்தி அழைக்கிறான். வந்துவிடுவாய் தேவதை. ஏறிட்டு பார்த்த எனக்கு சீனக்கோப்பி கடை உள்ளே தொங்கிக்கொண்டிருக்கும் கடிகாரம். அதற்குமேலே ஆசீர்வதிக்கும் சீனதேவதை. சீனபுத்தாண்டை வரவேற்கும் சிவப்பு தோரணங்கள் – சிவப்பு விளக்குகள் என ஷாப் ஹவுஸ்களை அலங்கரித்திருந்தன. சிலநாட்களுக்கு முன்பு ஜோகூர் தாமன் மோலோவில் பால்யநண்பன் சுவா, இந்த வருசம் எலி வருசம் 84ல பிறந்த உனக்கு கைகூடுற காலம் ..லைஃப்ல நீ எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் வரும் என்று மோட்டார் பைக்கில் ஏறும் போது முதுகை தட்டி வழியனுப்பி வைத்தான்.

கடிகாரத்தின் பெரிய முள் சிறிய முள் 04:04 தெளிவாய் தெரிந்தது. கூட்டிக்கழித்து ரேக்ளா பந்தையகுதிரையப்போல சாவுநேரத்திலும் வந்து நிற்கும் அந்த நான்கு இலக்கத்தை நான் என்ன சொல்ல? நான்கு மனிதர்கள் ஒன்று சேர்ந்து நின்றாலே நம்பர்களாக தெரிவதன் சூன்யம் என்ன ? உயர்ந்து நிற்கும் இரண்டு பெரியமாடிக்கட்டிடங்கள் பெரிய பதினொன்றாக தெரிந்தது. சாங்கியம் சொல்லும் சீனனை நம்பி 4335க்கு கட்டிதோற்றுப்போனது. ஜேபி சுடுகாட்டில் மூங்கில் கழிகுத்தி சேவல் வாங்கிக்கொடுத்து மந்திரவாதி பேயிடம் பேசிவாங்கி தந்த நம்பர். புலாவ் பசார் பாபாக்கு நேர்ச்சை செஞ்சு எடுத்த நாலு நம்பர். இந்த நட்டகணக்குதெரிந்தே நீரில் கரையும் உப்புச்சோப்பை போல் வருமானம் கரைந்தது. எல்லாம் நம்பரும் நொட்டிக்கொண்டுபோனது. கட்டி இழுப்போம் வந்தால் மலை.

டபுள்சிப்ட் அடித்தாலும் சம்பளம் வாங்கி பினாங்குக்கு அனுப்பினாலும் நாலுவெள்ளிக்கு நம்பர் வாங்கலன்னாகையரிக்கும். இப்படித்தான் நம்பர் உலகம் அறிமுகம் எனக்கு. பூஜ்யம் முதல் ஒன்பது வரை எல்லா எண்களும் அறிமுகம். தற்கால நிகழ்வுகளும் விபத்துகளும் காலமும் உருவாக்கும் இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒருபுள்ளியில் எனக்கு கிடைக்கும் தொடர்பு சூத்திரம். அது வெட்டிப்போடும் தாயக்கட்டகைள் நான்கு நம்பர். இந்தப் பைத்தியத்தை உடைக்க பங்சாரில் படையல் போட்டு செல்வி சொன்னாள். மாமா.. எனக்கு பாப்பாவுக்கு கொஸ்ரமாவுது இந்த நம்பர் விட்டுடுலா.. சத்தியம் பண்ணு..வெறி புடித்து நம்பரை எடுத்து ஆடும்பதெல்லாம் அதிர்ஷ்டம் தனது புட்டத்தை காட்டி ஓடும்… நழுவி ஓடும் அவளை பிடிக்க எவ்வளவு முயற்சி. பூசை , படையல், நேர்ச்சை எல்லாம் செஞ்சுப்பார்த்து ஓய்ந்துப்போனவள் செல்வி.

சுவா சொன்னதுபோல் டாய்லெட்டைப் பூட்டிக்கொண்டு நம்பர்சீட்டை பிஞ்ச செருப்பால் அடித்தால்.. இனிவருவியா வருவியா என துரதிஷ்டத்தை விரட்டினால்.. லாபம் கொழிக்கும்.. அப்படி அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் பாஸ் வந்தார். சூடா வியாபாரம் நடக்கும் நேரம். ரொட்டி பட்டறையில நிக்காம, இப்படிசெருப்பு கையுமா என்ன ஜெயா இது.. இப்படி கிறுக்கு புடிச்சு சுத்துறவன் ஏன் கடைக்கு வேணாம்… ரொட்டிபட்டறையில ஏறாதனு கறாரா சொல்லி துரத்திவிட்டுவிட்டார். அவரே ரொட்டி வீச பட்டறையில இறங்கினார். மேனஜரை போன்ல கூப்பிட்டு கிருக்கு பயலுகள ஏன்யா என் கடைக்கு கொண்டாந்த. பாஸை வெட்டிவிடுயா என சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். பாஸ் உக்கிரமாகி திட்டின நேரம் 11:13, வந்தவன் ரொட்டிசெனா மூன்று கேட்டான். இந்தநேரத்திலும் மண்டைக்குள் குடைந்து சூத்திரம் ஓடி நான்கு நம்பர் குதிரை நின்றது. இன்னுமா நிக்கிறாய் என கடையவிட்டுப்போ என கல்லாவில் கைவிட்டு நாலு ஐம்பது வெள்ளி தாளை மூஞ்சில் எறிந்தார். யோவ் போயா ..என இரண்டு ரொட்டிசென்னாவையும் மீன்கறியையும் எடுத்துக்கொண்டு கடையை விட்டு வெளியேறிவிட்டேன்.

வாழ்க்கை வெறுத்துப்போனது. ஓரத்தில் இருந்த கடையில் சில்லுனு நாலு பீர் போத்தல் வாங்கி அருகில் இருந்த பார்க்கில் அமர்ந்தேன். மெதுவாக ஆரம்பித்து மூணு..நாலாவது ரவுண்ட் ..போய்க்கொண்டிருந்தது. போதை தலைக்கு ஏற ஏற எதிரே நின்ற வணிகவளாகத்தில் ஏறிட்டுப்பார்த்தேன். மறுநாள் நடக்கவிருக்கும் சீனப்புத்தாண்டின் சந்தோசம் எல்லோர் முகத்திலும் அப்பியிருந்தது. கூட்டமாக நின்றுக்கொண்டு ‘புஹாகா’ என வெடித்து சிரித்துக்கொண்டிருந்தனர். யாருடைய வருகைக்காகவோ காத்திருந்த கூட்டத்தில் ஒரு சிவப்பும் மஞ்சளுமாய் ட்ராகன் புகுந்தது. சிங்கத்தலைக்கொண்ட ட்ராகனின் தலைக்குள் ஒருத்தனும் , வாலுக்குள் ஒருத்தனும் ஏறி கெட்ட ஆட ஆரம்பித்திருந்தார்கள். தாளலயங்களுக்கும் ஜிங்கு தட்டுகளுமாய் ஒத்திசைக்க ஆரம்பித்தன. அவற்றின் இசைக்கு ஏற்ப நாட்டியக்குதிரைப்போல் தனது உடலை வளைந்துநெளிந்தும் , ஓர் அருவி மலைமுகடுகளில் குதித்து எழுவது போல் குதித்தும் விழுந்தும் வளாகத்தின் வாசலில் ஜாலங்களை பூதம் காட்டியது. பூரானின் கால்களையும் ரயில் பூச்சியின் மெல்லிய கால்கள் அடுக்கடுக்காகபாய்வது போல் நுணுக்கமான நடனத்தை வெளிகாட்டினார்கள் இருவரும். இரண்டு பெரிய முனைப்பெருத்த உருட்டுக்கட்டைகளில் மோளத்தை அடிப்பவன் வேகத்தைக் கூட்டகூட்ட இப்போது பூதம் உருவெடுத்து சுழன்றது. முகப்பில் போடப்பட்ட முக்காலியின் மேல் உடுப்புக்குள் மறைக்கப்பட்ட அவனது கால்கள் ஏறி வானாள பூதம் உயரே பறந்து பூசாரி கை உலுக்கும் உடுக்கைப்போல் சுழன்றது. முக்காலிக்கு முன்பு அடுக்கப்பட்ட ஆரஞ்சுபழங்கள் மீது ஆக்ரோசத்தோடு பாய்ந்த பூதம், எதிர்ப்பட்ட திசையில் ஆரஞ்சு பழங்களை பிய்த்துஎறிந்தது. கிடைத்த அதிர்ஷ்ட பழங்களை பவ்யமாக தாங்கள் பைகளுக்குள் வைத்துக்கொண்டனர். இப்போது மேளக்காரன் சுதியை ஒரே மீட்டரில் ‘டர் ..டர்..‘ என இழுத்துக்கொண்டிருந்தான். சாமியாடி ஓய்ந்தவனைப் போல் பூதம் ஆடிநின்றதும் டிராகன் தலையிலிருந்து வெளிப்பட்டவன் ஐஸ் மைலோவை உறிஞ்சிக்கொண்டிருந்தான். ஆட்டம் முடிந்ததும் அரைநாள் விடுப்போடு வளாகத்தில் வரிசையாக முதலாளியிடம் பரிசுப் பொதிகளை மரியாதையாக தங்கள் உடலை குனிந்து வேலையாட்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். ட்ராகன் ஆட்டம் ஆடியவன், மோளம் அடித்தவன், ஜிங்குசான் தட்டியவன் என தங்களது கொடிகளை அள்ளிக்கொண்டு பரிசுப்பையும் ஊதியமும் வாங்கிக்கொண்டு வேனில் ஏறினர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு போதை கடுப்பாகிஅங்கிருந்த இரண்டு காலி பீர்போத்தலை எடுத்தேன். கிடந்த கல்மேசையில் உடைத்துப்போட்டு விட்டு ரொட்டிசென்னாவையும் மீன்கறியெயும் பார்க்கில் தூக்கி எறிந்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். இறங்கிரோட்டுக்கு நடந்தேன்.

ரோட்டின் சிக்னலில் ‘ஜிங்.. ஜிங்..ஜிங் ஜிங்..ஜிங்.. ஜிங்..’என மோளமும் ஜிங்குசானுமாக வேன் நகர்ந்தது. அடித்த பீரோடு சரி. வயிறு வங்கொலையாக காய்ந்து கிடந்தது. சிங்கத்தலையை கழட்டியவன் என்னைப்பார்த்து சிரித்தான். எனக்கு போதையில் எது கையில் கிடைத்தாலும் எடுத்து அவனை சாத்தலாம் போல் இருந்தது. சிக்னலில் இருந்து மெல்ல நகர்ந்த வேன், ப்ளாட்பாரத்தில் நின்றுக்கொண்டிருந்த என்னை நோக்கி சிங்கத்தலைக்காரன் ஒரு பையை எறிந்தான். பிரித்துப்பார்த்தேன் ஒரு கவருக்குள் நம்பர் சீட்டும் நாலுவெள்ளியும் இரண்டு ஆரஞ்சுபழமும் இருந்தது.

ஆரஞ்சுபழத்தை தோலை உறித்து தின்றுவிட்டு நம்பர் சீட்டை வேலட்டுக்குள் திணித்தேன். முடிவுபண்ணிய மாதிரி எனது கால்கள் உயரமான கட்டிடத்தை தேடியலைந்துக்கொண்டிருந்தன. பிளாக் 10 நம்பரைபார்த்ததும் மண்டைக்குள் ஓடிய மீட்டரை பொட்டில் அடித்து நிறுத்தினேன். பிளாக்கின் பின்புறம் ஸ்டேர் கேஸ்வழியே படிகள் , ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு நினைவுகளாக போதையில் தலைக்கு ஏறியது. பால்யத்தின்நினைவுகளிலிருந்து தொடங்கி , அம்மா இறந்தது, அப்பா ரெண்டாம் தாராமாக சித்தியை கட்டிவந்தது, கொடுமை தாங்க இயலாமல் வீட்டை விட்டு ஓடியது, நண்பன் சுவாவுடன் சிறார் ஜெயில் போனது, செல்வியைச் சந்தித்தது, திருந்தி வாழலாம்ணு முடிவுசெய்து சிங்கப்பூர் வந்தது, நம்பர் ஆசையில போய் விழுந்தது எனஉயரத்தில் ஏறியதும் பெருமூச்சு வாங்கியது.

ஆம்புலன்ஸ் வந்து நின்றது. தரையில் மயக்கயமாய் குத்தி கிடந்த எனது கண்கள் வழியே சிவப்பு விளக்குவெளிச்சத்தில் என் முதுகுக்கு பின் கிடந்த உடம்பைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்து யாரிடமோபேசிக்கொண்டிருந்தார்கள். இறந்துவிட்டதாக கூறினார்கள். அவனது முகத்தை உற்றுப்பார்த்தேன். எங்கோபார்த்த முகம். நான் சாவுறதுக்கு முன்னாடி கடைசியா பார்த்த முகம். கூட்டத்தில் இருந்த ஒருத்தன், தண்ணீர்போத்தலை என் முகத்தில் ஊத்திவிட்டு சொன்னான்.

‘குடிகாரப்பயலே.. சாவணும்னு முடிவு பண்ணுனா கடல்ல விழவேண்டியது தானே.. ஏன்டா இவன் மேலவிழுந்த…’

லேசா அடித்த போதை கொஞ்சம் கொஞ்சமாக கிறங்கிக்கொண்டிருந்தது.

அனிஷா மரைக்காயர்
அனிஷா மரைக்காயர்https://minkirukkal.com/author/kmohamedriyas/
சிங்கப்பூரில் 9 ஆண்டுகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைபார்த்துவருகிறேன். பட்டது, பார்த்தது, படித்தது என எனை பாதித்த மனிதர்கள் என சிலநேரம் மனசிக்கலுக்களுக்குள் உள்ளாவதுண்டு.இதிலிருந்து விடுப்படுவதற்கும் அகவிடுதலையடைவதற்குமே புனைவை வடிகாலாக தேர்ந்தெடுத்தென்.

1 COMMENT

  1. குடியும், சூதும் தனி மனிதனை மட்டும் பாதிக்கா..ஒரு சமுதாயமே பாதிக்கும்

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -