Scam 1992 – விமர்சனமும் சிந்தனையும்

- Advertisement -

இன்று இந்தியாவின் அடித்தட்டு மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் துறையாக பங்குச்சந்தை மாறி வருகிறது. நேரடியாக மிகச்சிலரே பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டாலும், ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய திட்டம், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற பல்வேறு திட்டங்களால், அதிகப்படியான மாதச் சம்பளக்காரர்கள் மறைமுகமாக பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று வீட்டில் உட்கார்ந்து கொண்டபடியே உங்கள் கைப்பேசியின் துணைகொண்டு சில நிமிடங்களுக்குள் உங்களால் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். ஒரு 30 வருடங்களுக்கு முன்பு திரும்பிப்பார்த்தால் மிகக் குறைந்த நபர்களே பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியும். பங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலே அதற்கு அரும்பாடு படவேண்டும். மேலும் வாங்க வேண்டுமென்றால் நமக்கு ஒரு ப்ரோக்கரின் உதவி தேவைப்படும். 1990களில் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய புரோக்கராக இருந்தவர் தான் ஹர்ஷத் மேத்தா. இவர் எவ்வளவு குறுகிய காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்தாரோ அதேவேகத்தில் அதல பாதாளத்திலும் விழுந்தார். கீழே விழுந்த சில காலத்திலேயே மீண்டும் எழ முயன்று அதிலும் தோற்று சிறைச்சாலை சென்றார். 2001இல் சிறைச்சாலையிலேயே அகாலமரணமும் அடைந்தார். இப்படிப்பட்ட ஒருத்தரைப் பற்றி பேச என்ன இருக்கிறது என்கிறீர்களா? அதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் SonyLiv வலைதளத்தில் இந்த வருடம் வெளியிடப்பட்ட “Scam 1992” என்னும் வலைத் தொடரைக் காண வேண்டும். மொத்தம் பத்து பகுதிகளாக, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மணி நேரம் என்று பத்து மணி நேரம் ஓடக்கூடிய வலைத்தொடர் இது. சற்று நீளமான தொடர் என்றாலும் மிகவும் நேர்த்தியாக எடுத்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளிவந்துள்ளது. இந்தத் தொடரை நான் பார்த்த பின்பு எனக்கு ஏற்பட்ட சில சிந்தனைகளையும், இந்த தொடரின் விமர்சனத்தையும் இங்கே உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

பொதுஉடைமையும் முதலாளித்துவமும்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அணிசேரா நாடுகள் என்னும் கூட்டமைப்பில் சேர்ந்துகொண்டு எந்த ஒரு வல்லரசுக்கும் அடிபணியாமல் தனித்து வாழ்ந்து வருகிறது. அப்படி இருந்தால் கூட அமெரிக்கா அல்லது சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா) போன்ற வல்லரசுகளிடம்தான் ஆயுதம், தொழில்நுட்ப வசதிகள் போன்றவைக்காக கையேந்த வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பு, 1991 வரை ஐக்கிய ஒன்றியம்(அமெரிக்கா) மற்றும் சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா) ஆகிய இரண்டு வல்லரசுகளும் கடுமையான பனிப் போர் நிகழ்ந்து வந்தது. அமெரிக்கா முதலாளித்துவத்தை முன்னிலைப்படுத்திய ஒரு புதிய உலகை நிர்மாணிக்க முயன்றது. சோவியத்தோ பொதுவுடமை சார்ந்த ஒரு உலகத்தை உருவாக்க நினைத்தது. ஆகவே இந்த பனிப்போர் இரண்டு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் இரண்டு சித்தாந்தங்களுக்கு நடந்தது. இந்தியா இரண்டு நாடுகளின் பக்கமும் சாயவில்லை என்றாலும் பல்வேறு தேவைகளுக்காக சோவியத்தை நாடியே சென்றது.  அதனால் பல சமயங்களில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டி இருந்தது. சோவியத்தை நாடி இருந்ததால் இந்தியாவிலும் பல்வேறு பொதுவுடைமை சார்ந்த திட்டங்கள் நடைமுறைக்கு வந்தது. உதாரணமாக, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பொதுவுடமை ஆக்கப்பட்டது. டாடா குழுமத்தில் இருந்த விமான சேவையை கைப்பற்றிய அரசாங்கம், ஏர்-இந்தியா என்னும் பொதுவுடமை நிறுவனத்தை உருவாக்கியது. 

இந்த நிலையில்தான் 1991-ஆம் வருடம் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியன், போட்டியில் தோற்று பல்வேறு சிறு நாடுகளாக சுக்குநூறாக சிதறியது. பொதுவுடமை கொள்கைகளை பின்பற்றி வந்த பல்வேறு நாடுகள் தனது கொள்கையை பின்பற்ற முடியாமல் சர்வாதிகார ஆட்சியாக மாறிப்போனது. இந்தியா நல்லவேளையாக சர்வாதிகார ஆட்சிக்கு மாறாமல் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு அடித்தளமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக முதலாளித்துவத்திற்கு மாறத் துவங்கியது. இதற்கும் இந்த தொடருக்கும் என்ன சம்பந்தம்? முக்கியமான தொடர்பு இருக்கிறது. பங்குச்சந்தை என்பது நாட்டில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களை கூறுபோட்டு விற்கும் ஒரு சந்தையாகும். இங்கே ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. மதிப்பு நிர்ணயம் என்பது மிகவும் சவாலான ஒரு காரியம். பொது உடைமையும் முதலாளித்துவமும் இங்கே முக்கிய பங்கு வகிக்கும். 

பொதுவுடமைக் கொள்கையை பின்பற்றி மதிப்பிட்டால் எந்த ஒரு நிறுவனமும் அது கொடுக்கும் உழைப்பிற்கு ஏற்ற மதிப்பு வழங்கப்படும். முதலாளித்துவத்தில் அந்த நிறுவனம் உருவாக்கும் பொருள் அல்லது சேவை தரும் பயன்பாட்டினை கொண்டு அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படும். ஒரு சிறிய உதாரணத்தை கூறிவிடுகிறேன். நீங்கள் மரத்தினால் செய்த ஒரு பொம்மையை வாங்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். பொதுவுடமை கொள்கைப்படி அந்த மரத்திற்கு ஆகும் செலவும், மரத்தை செதுக்கும் தொழிலாளிக்கு கொடுக்கும் கூலியும் சேர்த்தது தான் அந்த மர பொம்மையின் மதிப்பு.  முதலாளித்துவக் கொள்கையில் அந்த மர பொம்மையின் பயன்பாட்டால் உங்களுக்கு கிடைக்கும் லாபத்தைப் பொருத்து அந்த பொம்மைக்கு விலை நிர்ணயிக்கப்படும். சிறு குழந்தைகள் விளையாடும் பொம்மை என்றால் அதன் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் கோயிலில் வைத்து வழிபடும் சிலையாக இருந்தால் அதன் மதிப்பு முதலாளித்துவத்தில் மிகவும் அதிகமாகிவிடும். ஒரு பொம்மையின் விலையை நிர்ணயம் செய்வதற்கே இவ்வளவு பிரச்சனை இருந்தால் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை மதிப்பிடுவது எவ்வளவு சிரமமான காரியம் என்று யோசித்துக் கொள்ளுங்கள்! 1991 இல் இந்திய பங்குச்சந்தையில் இதே பிரச்சனை தான் வந்தது. கொள்கைகள் திடீரென்று மாறினால் கூட சட்டங்கள் அவ்வளவு எளிதாக மாறவில்லை. மாறாத அந்த சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்துக்கொண்டு பல்வேறு பண முதலைகள் பங்குச்சந்தையில் பணம் சம்பாதித்து வந்தன. இந்த ஓட்டைகளை தனி ஒரு மனிதனாகக் கற்றுக்கொண்டு, அதை வைத்தே புகழின் உச்சத்தை அடைந்த மனிதர் தான் ஹர்ஷத் மேத்தா.


விமர்சனம்
ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஹர்ஷத் மேத்தாவின் கனவுகளுடன் தொடர் ஆரம்பமாகிறது. தங்குவதற்கே சிரமமான சிறிய வீட்டில் இருக்கும் ஹர்ஷத் மேத்தாவின் பெரிய குடும்பத்தில் பல்வேறு தொல்லைகளுக்கு நடுவில் ஹர்ஷத் மேத்தா மட்டும் பெரிய பெரிய கனவுகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆரம்ப காலங்களில் இவர் பாம்பே பங்குச்சந்தையில் பங்கு விற்கும் ஒரு தொழிலாளியாக வேலை செய்கிறார். இந்தத் தொடரில் எந்த ஒரு கற்பனை கதாபாத்திரம் பெயரும் உபயோகிக்காமல் சிறு பாத்திரம் முதல் பிரதம மந்திரியின் பெயர் வரை நேரடியாகப் பயன்படுத்தியுள்ளார்கள். இது ஒரு பாராட்டத்தக்க விஷயம். தொடரைப் பார்க்கும் போது ஏதோ நேரடி நிகழ்வையே படம்பிடித்துக் காண்பிப்பதைப் போல அருமையாகப் படமாக்கியுள்ளார்கள். இதற்காகவே மொத்தக் குழுவையும் மனதாரப் பாராட்டலாம். ஒரு சாதாரண மனிதன், பணக்காரர்களின் விளையாட்டிற்குள் நுழைந்தால் என்ன ஆகும் என்பதை தத்துரூபமாகக் காட்டியுள்ளார்கள். 

பொதுவாக எந்த ஒரு படத்திலும் நாயகன் தவறு செய்தாலும் ராபின்ஹூட் போன்று ஒரு நல்லவனாக காட்டவே முயற்சி செய்யப்படுவது வழக்கம். இங்கே அப்படி செய்யாமல் ஹர்ஷத் மேத்தா செய்த தவறுகளை தவறாகவே காட்டியுள்ளார். எந்த விதத்திலும் நம்பகத்தன்மை மாறாமல் உள்ளதை உள்ளபடி, அதே சமயம் சுவாரஸ்யம் குறையாமலும் எடுப்பது ஒரு சவாலான விஷயம். படக்குழுவினர் அதனை சாதித்துக் காட்டியுள்ளனர். இருந்தாலும் சில இடங்களில் மட்டும் ஒரு ஆவணப்படம் போன்ற தோற்றம் வந்துவிடுகிறது. SGL (Subsidiary General Ledger), BR (Bank Receipt), Bull, Bear, Money market, Brokerage, P/E ratio, Bankerage போன்ற பல்வேறு பங்குச்சந்தை தொழில்நுட்பங்கள் இந்த தொடரை பார்த்தாலே அருமையாக விளங்குகிறது. அந்த விதத்தில் இது ஒரு பாடம் என்று சொல்லலாம்.

மிகக்குறுகிய காலத்திலேயே பாம்பே பங்கு சந்தையின் “Big Bull” என்று ஹர்ஷத் மேத்தா அழைக்கப்படுகிறார். அவர் கூறும் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக விலை ஏற்றம் காண ஆரம்பிக்கிறது. அவருடைய கன்சல்டன்சி நிறுவனத்தில் அனைவரும் பணத்தைக் கொட்டத் துவங்குகின்றனர். இதனிடையே சிட்டி பேங்க் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இவரை குறிவைத்து அழிக்கத் துடிக்கின்றனர். அனைத்தையும் ஹர்ஷத் மேத்தா சாதுர்யமாக சமாளிக்கிறார். பன்னாட்டு நிறுவனங்கள் இலைமறைகாயாக சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்துவதை ஹர்ஷத் மேத்தா நேரடியாக மறைக்காமல் செய்கிறார். அரசாங்கம் முதல் நாட்டில் உள்ள பெரும்புள்ளிகள் அனைவரும் ஹர்ஷத் மேத்தாவின் துணை கொண்டு பல்வேறு காரியத்தை சாதித்துக் கொள்கின்றன. 

ஏகப்பட்ட பகைவர்களை சம்பாதித்துக் கொள்ளும் ஹர்ஷத் மேத்தா ஒரு கட்டத்தில் வசமாக சிக்கிக் கொள்கிறார். சிபிஐ, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, சிட்டி பேங்க் பண முதலைகள் மற்றும் பத்திரிக்கையாளர் சுசேதா தலால் போன்ற அனைவரும் விரிக்கும் வலையில் வசமாக மாட்டிக் கொள்ளும் ஹர்ஷத் மேத்தா ஒரு பெரிய அரசியல் சுழலில் சிக்கிக் கொள்கிறார். அவரின் உதவியை நாடிய பல்வேறு அரசியல்வாதிகளும் பெரு நிறுவனங்களும் பிரச்சனை வந்தவுடன் சத்தமில்லாமல் பின்வாங்குகின்றன. அவருடைய குடும்பம் ஒன்று மட்டும்தான் அவருக்குத் துணையாக வருகிறது. அனைத்தையும் ஹீரோயிசம் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி கடக்கிறார் என்பதை உண்மையாக படம் பிடித்துள்ளார்கள். 

இந்தத் தொடரில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஹர்ஷத் மேத்தாவாக நடித்த ப்ரத்திக் காந்தி மற்றும் பத்திரிக்கையாளர் சுசேதா தலாலாக நடித்த ஸ்ரேயா தன்வந்திரி அருமையான தேர்வு. மிகக்குறுகிய காலத்திலேயே தொழிலின் உச்சத்தையும், ஜெயில் வாழ்க்கையையும் அனுபவித்த ஹர்ஷத் மேத்தா, இறுதியில் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு 2001ஆம் ஆண்டு சிறையிலேயே நெஞ்சுவலி வந்து உயிரையும் விடுகிறார். இவரால் இந்திய பங்குச் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது தெரியுமா? பல பேர் திடீர் பணக்காரர்கள் ஆனார்கள். பலபேர் பங்குச்சந்தையில் இவர் பேச்சைக் கேட்டு வாழ்க்கையை தொலைத்தனர். முக்கியமாக, இவர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வெளிப்படையாக பயன்படுத்திக் கொண்டதால் மக்களும் அரசாங்கமும் விழிப்படைந்து கொண்டு முதலாளித்துவத்தில் செயல்படும் Free Market எனும் கோட்பாட்டை வெகு வேகமாக செயல்படுத்தி சட்ட மாற்றங்களையும் கொண்டு வந்தனர். SEBI போன்ற பங்குச்சந்தை அமைப்புகளுக்கு அரசாங்கம் அதிக அதிகாரம் கொடுத்து பங்குச்சந்தையை வெளிப்படைத் தன்மை உள்ளதாக மாற்றியது. இன்று சாதாரண மக்கள் கூட பங்குச்சந்தையில் பயன்பெறும் வகையில் சிஸ்டத்தை(System) மாற்றியதற்கு ஹர்ஷத் மேத்தா ஒரு முக்கிய காரணம். இதனை செய்தித் தாள்களில் பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு சென்ற சுசேதா தலாலுக்கு பத்மஸ்ரீ விருது கூட வழங்கப்பட்டது. நான் மேற்கூறிய அனைத்து தகவலையும் புரியும்படி ஒரு வகுப்பாக எடுத்தால் தூக்கம் வந்துவிடும். ஆனால் இவை அனைத்தையும் ஒரு கதைபோல அனைவருக்கும் புரியும் வண்ணம் அருமையாக இந்தத் தொடரில் எடுத்துள்ளார்கள். 

ஒரு தனிமனிதனால் நாட்டின் சட்டதிட்டங்கள் மாற்றப்படுகிறது என்பது சாதாரணமாக நடக்கும் காரியமல்ல. நேரடியாக போராடினால் கூட இதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால் எதிர்மறையான செயல்களை செய்து சட்டத்திட்டங்களை வேகமாக மாற்றியதுதான் இந்த ஹர்ஷத் மேத்தாவின் கதை. இந்த வருடம் வந்த வலைத்தொடர்களில், “Scam 1992” ஒரு சிறந்த தொடராக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -