மனிதம்

மூன்று கவிதைகள்

- Advertisement -

மனிதம்

பசிக்கு சோறிடுதல் புண்ணியம்
பாரபட்சம் பாராது நேசித்தல் தெய்வம்
பிறர் நலன் பேணுதல் மனிதம்
பழைய ஆற்றுப்பாலம் சிதிலமாகிக் கிடக்கிறது
எள்ளலோடு வேடிக்கை பார்க்கிறது புதுப்பாலம்
மெல்ல நகைக்கிறது பழைய பாலம்
பாவத்த திங்கிற
பாவத்துல கை கழுவுற
பாவம் ஒரு நாள் உன்னைத் தின்று கை கழுவிவிடும்.
கொண்டு வந்தவனும் எவனுமில்லை
கொண்டு போறவனும் எவனுமில்லை
பூனை பிய்ய ஒளிப்பது போல
ஏன் பதுக்குற?
வரலாற்றைப் புரட்டுங்கள்
அதிகாரம் எப்பவும் சீரழிந்து புதைகிறது
வாழ்கையில் மனிதராய் வாழ முயலுங்கள்.
எப்போதாவது சந்தோஷம்
எப்போதாவது துக்கம்
எப்படியோ கழியுது வாழ்க்கை
மனதை விட்டு வெளியேறு
வெப்பம் தாளவில்லை
நிலவென்று அனுமதித்தேன் சூரியனாகிவிட்டாய்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கனவில் வாழ்வது

நிறைய பேர் அழுது கொண்டிருக்கிறார்கள்
நிறைய பேர் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்
நிலவும் சூரியனும்
வந்து போய் கொண்டிருக்கின்றன
வட்டி வாங்குபவன்
கை அழுகணும்
கட்டப்பஞ்சாயத்து பேசுபவன்
வாய் அழுகணும்
அநியாயமாய்
சொத்து சம்பாரிப்பவன்
வம்சம் சாம்பலாகணும்
அவன் 100 ரூபாய் இழந்தான்
இவன் 10 ரூபாய் இழந்தான்
அவனவன் இழப்பு
அவனவனுக்கு பெரிசு
நடைபாதைகள் தோறும் குடும்பங்கள்
நாயினும் கேடான பொழப்பு
நாங்களும் இந்திய பிரஜைகள்
நிற்க நிழலில்லை
ஆந்து சோந்து போனா
ஆதரிக்க யாருமில்லை
நாதியத்த ஜனங்களடி கிளியே
யாரும் வரலாம்
யாரும் போகலாம்
நல்ல காரியங்கள் செய்வது தான் முக்கியம்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

தேடல்

புத்தரைத் தேடுகிறேன்
விகாரைகள் காலியாயிருக்கின்றன
ரத்தம் வழிய சதைத் துணுக்கைக் கவ்வியபடி நாயொன்று ஓடுகிறது
இரவிடம் பேசிக் கொண்டேயிருக்கிறேன்
பகலிடம் மெளனம் காக்கிறேன்
என்னோடு நடந்து வந்தவர்கள்
என்னை விட்டு ஓடுகிறார்கள்
அனல் இரும்புத் துண்டாக ஆக்கப்பட்டிருக்கிறேன்
யாவரும் என்னை உஷ்ணப்படுத்துகிறார்கள்
குளிர வகையற்று கொதித்துக் கொண்டேயிருக்கிறேன்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -