வலி – சிறுகதை

கார்கால சிறுகதைப் போட்டி - ஆறுதல் பரிசு

- Advertisement -

காத்திருப்பதைப் போல கடினமான ஒன்று எதுவும் கிடையாது என்று நினைத்துக்கொண்டே, வலதுகாதில் ‘விண்விண்’ என்று தெறித்த வலியை கண்களை மூடி பல்லைக் கடித்து கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருந்தாள் யமுனா. மகனின் தொலைபேசி அழைப்புக்காய் காத்திருந்தவள் தொடுதிரையில் பள்ளியின் பெயர் மின்னியதும் அவசரமாய் அழைப்பை ஏற்று ஞாபகமாய் தொலைபேசியை இடதுகாதில் வைத்து பேசினாள்.

“ஊசி போட்ட கை ரொம்ப வலிக்குதாடா”

“ம்ம்ம்.. கொஞ்சம் வலிக்குதும்மா! பேக் தூக்க முடியலை.. ப்ளீஸ் நீ கொஞ்சம் ஸ்கூலுக்கு வாயேன்”

மகனிடம் சரி என்று உறுதி கொடுத்துவிட்டு, தடுப்பூசி முதல் தவணையை பள்ளி மூலமாக போட்டுக் கொண்ட மகனை அழைத்துவர ஆயத்தமானாள். கதவைத் தாழிடுகையில், வெளியில் கேட்ட இடியோசை குடை எடுக்கப்படாததை நினைவூட்ட, கதவைத் திறந்து குடையை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

வழக்கமான நினைவில், ஃபோனில் ஹெட்செட்டை இணைத்து பாடலை கேட்கத் தயாராகுகையில் மீண்டும் வலதுகாது வலி வேலையை காட்ட ஆரம்பிக்க, ஃபோனை கைப்பைக்குள் திணித்துவிட்டு பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழி சடசடவென பொழிய ஆரம்பித்திருந்த மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். கண்ணாடியில் பட்ட மழைத்துளிகள் முழுவதுமாய் கண்ணாடியை நனைக்காமல் அங்கங்கே சிறிது இடைவெளி விட்டு நனைத்திருந்தது. மீதமுள்ள இடைவெளி எப்பொழுது நிரம்பும் என்ற ஆர்வத்தில் ஜன்னலை பார்த்துக் கொண்டிருந்தவள் பள்ளியின் அருகே உள்ள நிறுத்தம் வந்ததும் இறங்கினாள். அவளுக்காகவே காத்திருந்தவன் ஓடி வந்து ஊசி போட்ட கையை காண்பித்து ‘வலிக்குது’ என்று உதட்டை பிதுக்கிட, அவனது புத்தக பொதிமூட்டையை தன் தோள்களுக்கு மாற்றியவள்

“ரெண்டு நாள் கொஞ்சம் வலி இருக்கும் டா! அப்புறம் சரியாகிடும் பாரேன்” என்று தலைகோத

“வலில்லாம் ரெண்டே நாள்தான் இருக்குமா மா? உன் காதுவலி மட்டும் ஏன் இத்தனை நாளா சரியாகலை?” என்று எதிர்கேள்வி கேட்டவனுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவள், பேச்சை மாற்றி அவன் நண்பனுக்கு கைவலி இருக்கின்றதா என்று கேட்கையில் சரியாக பேருந்து வந்துவிட்டது.

மீண்டும் வலுத்த மழை இப்பொழுது பேருந்தின் கண்ணாடி ஜன்னலை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தது அவள் வலதுகாது வலியைப் போலவே! பத்து நிமிடத்திற்குள் இந்த மழைக்கு எப்படித்தான் அடித்துப்பெய்ய முடிகிறதோ என்ற யோசனையுடன் குடையை விரித்து, ஒரு கையில் மகனை இழுத்து அணைத்துக் கொண்டே பேருந்தைவிட்டு இறங்கி நடக்கலானாள்.

அரைமணி நேர மழைக்கே தண்ணீர் அங்கங்கே நிரம்பிநிற்க கால்கள் தண்ணீருக்குள் பட்டதும் தொற்றிக்கொண்ட சிலிர்ப்புடன் ‘தடதட’வென ஓடும் தண்ணீரைக் கண்டதும் கால்களுக்குள் ஒரு குறுகுறுப்பு வந்து ஒட்டிக்கொண்டது யமுனாவிற்கு. சமீபத்திய கனவின் பிம்பங்கள் காட்சிகளாய் கண்களுக்குள் உலாவர உடல் முழுவதும் மெலிதாக பரவ ஆரம்பித்த பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு மகனை இன்னும் இழுத்து இறுக்கமாய் அணைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

கதவை திறக்கும்பொழுது, கீதாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதாக தொடுதிரையில் ஒளிர்ந்தது. கீதா, யமுனாவின் நெருங்கிய தோழி. உடைகளை மாற்றிவிட்டு மகனுக்கு உணவை வைத்துவிட்டு நிதானமாக கீதாவின் குறுஞ்செய்தியை வாசிக்க ஆரம்பித்தவள், அவள் இணைத்திருந்த மருத்துவப் பத்திரிக்கையின் பக்கங்களை புரட்டிய பொழுது லேசாக அதிர்ந்தாள். கவனக்குறைவும், கை மருத்துவமும் நிரந்தரமாக காது கேட்காத நிலைக்கு தள்ளிவிடும் என்பதை முன்னிறுத்தி எழுதப்பட்டிருந்த மருத்துவக் கட்டுரை அது! வெளியே மழை இன்னும் அடர்த்தியாகப் பெய்ய ஆரம்பித்திருந்தது. ஜன்னல் கதவுகளை இழுத்து சாத்திய பொழுது, தரைத்தளத்தில் நிறைந்து நின்ற தண்ணீர் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்த அப்படியே கட்டிலில் வந்து சரிந்து கொண்டாள்.

காதில் வலி ஆரம்பித்த முதல்நாளை நினைவுக்குள் கொண்டுவந்தாள். அன்றைய நாளின் சம்பவங்களை நினைத்துக் கொண்டே இன்றோடு வலி ஆரம்பித்து பதின்மூன்று நாட்களை தாண்டிவிட்டதை எண்ணி, மருத்துவரிடம் செல்லவேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவள் அந்த நினைவுகளுடனேயே தூங்கிப்போனாள்.

இடிச்சத்தம் காதைப் பிளக்க, மின்னல்கள் வரிசையாய் அணிவகுத்துவர பேய்மழை கொட்டித்தீர்த்துக் கொண்டிருக்க யாருமில்லாத அந்த ஒற்றைப்பாலத்தில் கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்த யமுனாவிற்கு பேய்மழை குறித்தோ, ஆற்றில் ஓடும் வெள்ளம் குறித்தோ கவனமில்லை. ஹோவென்று பேரிரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரின் வேகத்தில் பாலம் இடிந்து விழ தண்ணீருக்குள் விழுந்த யமுனா உயிர் பிழைக்கும் முயற்சியில் கைகளுக்குள் அகப்படும் ஒவ்வொன்றயும் இறுக்கிப்பிடித்து கரைசேர்ந்திட துடிக்கையில், வெள்ளம் ஒவ்வொன்றாக தட்டிப்பறித்துக் கொண்டே சென்றது. எங்கிருந்தோ தண்ணீரில் அடித்து வரப்பட்ட மரத்தின் தண்டு கைகளில் சிக்க பிழைத்தலுக்கான கடைசி வாய்ப்பாக அதை நழுவவிடாமல் இறுக்கமாய் பிடித்தவளின் துரதிருஷ்டம் மீண்டும் துரத்த பிடிமானம் இழந்தவள் மெல்ல நீருக்குள் மூழ்க ஆரம்பித்தாள். வாய்க்குள்ளும் மூக்கிற்குள்ளும் நுழைந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் அவளை சமாதியாக்கிக் கொண்டிருந்தது. வெளிப்புறச் சத்தம் எதுவும் காதில் விழவில்லை. கனவில் கட்டையாகி மிதந்து கொண்டிருந்தாள்.

தூக்கத்தில் இருந்து திடுமென்று விழித்தவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்று ஒரு கணம் புரியாமல் தடுமாறி, எழுந்து அமர்கையில் கைகளுக்கு அருகே இருந்த ஃபோனின் அழைப்பு ஓசை மிக மெலிதாகக் கேட்டது. ஒரு முறை காதிற்குள் விரலை நுழைத்து மேலும் கீழும் ஆட்டிவிட்டு மீண்டும் உற்று கவனித்துப் பார்த்தாள். இப்பொழுதும் ஓசை மெதுவாகவே கேட்டது. இடதுகாதை இறுக்கமாகப் பொத்திக்கொண்டு கவனித்துப் பார்த்தாள். இப்பொழுது சுத்தமாக அவள் காதில் எதுவும் விழவில்லை. இதற்கு மேலும் வைத்திருப்பது சரியில்லையென்று உணர்ந்தவள், தன் திறன்பேசியில் அருகிலிருக்கும் காது,மூக்கு,தொண்டை சிறப்பு மருத்துவமனையின் விலாசத்தை தேடிப்பிடித்து எடுத்துக்கொண்டு, உடை மாற்றிவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்றாள்.

மருத்துவமனையில் கூட்டம் ஒன்றும் பெரிதாக இல்லை. இவளுக்கு முன் மூன்றுபேர் இருந்தார்கள். வரவேற்பறையில் விபரங்களை பதிந்துவிட்டு காத்திருப்பு அறையில் வந்து அமர்ந்தாள். ஒரு வயதான சீன முதியவர், ஆறு வயது மகனுடன் ஒரு மலாய் பெண்மணி, மற்றொரு பெண், யமுனா என மொத்தம் ஐந்து பேர் மட்டுமே இருந்த அந்த வரவேற்பறையில் ‘மற்றொரு பெண்’ மட்டும் சத்தமாக யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள். இரண்டு நிமிடத்திற்கொருமுறை ஜந்து பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டு பார்த்துக் கொள்வதும் பின் வேறு பக்கம் கவனிப்பதுவுமாக நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது. மலாய் பெண்ணின் முறை வர அவள் மகனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். சீன முதியவர் யமுனாவிடம் சைகையிலே என்னவென்று கேட்க காதுகளில் கை வைத்து வலி என்றாள். அவர் தொண்டையில் கை வைத்து வலி என்று காண்பிக்க அவர்களிருவரையும் பார்த்து சிரித்த ‘மற்றொரு பெண்’ அவளது இடதுகாதில் கை வைத்து வலி என்றாள். சின்னதாய் ஒரு நெருக்கம் தோன்ற மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

யமுனாவின் முறை வர உள்ளே சென்றவள், மருத்துவர் சுட்டிக்காட்டிய இருக்கையில் அமர்ந்தாள். மருத்துவருக்கு உண்டான இலக்கணங்கள் ஏதுமின்றி பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற தோற்றம் அவருக்கு இருந்தது. வரிசையாக கேள்விகளை ஆரம்பித்தார் மருத்துவர்.

“எத்தனை நாட்களாக வலி இருக்கின்றது?”

“பதிநான்கு நாட்களாக”

“ஏன் உடனே மருத்துவமனை வரவில்லை?”

பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாள் யமுனா

காதுகளுக்குள் ஓளியை பாய்ச்சி ஆய்வு செய்தவர், பின் வேறு சில கருவிகளின் உதவியுடன் சோதித்தார்.

“எப்படி வலி ஆரம்பித்தது?”

“தெரியவில்லை சார்…. திடீரென்று தான்…” வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.

“கை மருத்துவம் ஏதேனும் செய்தீர்களா?”

ஆமாம் என்று தலையாட்டியவள், செய்த கைமருத்துவங்களையெல்லாம் கூற கண்களை சுருக்கியவர், அங்கிருந்த ஒரு பெரிய பாகங்கள் குறிக்கப்பட்டிருந்த காது படத்தை காண்பித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். முதல்கட்ட விளக்கத்தின் முடிவில் மீண்டும் அதே கேள்வியை எழுப்பினார்

“எப்படி வலி ஆரம்பித்தது?”

திடீரென்று தான் சார்…. இப்பொழுது குரலின் நடுக்கம் அவளுக்கே அப்பட்டமாய் தெரிந்தது.

உன் காதுகளை சோதித்த அளவில் இன்ஃபெக்‌ஷன் போல எதுவும் தெரியவில்லை என்றவாறே கணிணியில் எந்த மருந்துகளையும் டைப் செய்யாமல் மீண்டும் அவளை உற்றுப்பார்த்து விட்டு அவள் செய்த கைமருத்துவத்தால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் சாத்தியங்கள் உண்டென்பதை அவருடைய திறன்பேசியில் இருந்த ஒரு வீடியோவை காண்பித்து விளக்கினார். மீண்டும் அவள் வலதுகாதில் சில சோதனைகளை செய்தவர் பழைய கேள்விக்கே திரும்பவும் வந்தார்.

“எப்படி வலி ஆரம்பித்தது?”

யமுனாவிடம் மௌனம் மட்டுமே பதிலாய் இருந்தது. அவள் மௌனத்தை கலைக்கும் விதமாக கதவை தட்டிக்கொண்டு அந்த ‘மற்றொரு பெண்’ உள்ளே நுழைந்தாள். மருந்துகளை உட்கொள்வது தொடர்பாக இருந்த சில சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்துவிட்டு கிளம்பினாள். மருத்துவர் அந்தப் பெண்ணை சுட்டிக்காட்டி அவள் இந்தோனேஷியாவிலிருந்து இங்கு வந்து பணிபுரிவதாகக் கூறினார். அவளின் முதலாளி அவள் செய்த சிறு தவறுக்காக கன்னத்தில் இரண்டு மூன்று முறை பலமாக அடித்திருக்கிறார் என்றும், அப்பொழுது விழுந்த அடி காதில் பலமாக பட்டதில் கடுமையான வலி ஏற்பட்டதையும் விவரித்தார். நல்லவேளை அந்தப்பெண் உடனடியாக மருத்துவமனை வந்துவிட்டாள் என்று பாராட்டிய மனிதர், மீண்டும் யமுனாவிடம் பழைய கேள்விக்கே வந்து நின்றார்.

“எப்படி வலி ஆரம்பித்தது ஞாபகப்படுத்திப் பாருங்களேன்?”

தலை குனிந்திருந்த யமுனா மருத்துவரை நிமிர்ந்து பார்க்காமலேயே,

“சார், நீங்கள் அந்த இந்தோனேஷியப் பெண்ணுக்கு பரிந்துரைத்த மருந்துகளையே எனக்கும் பரிந்துரைக்க முடியுமா?” என்றாள்.

புரிந்துகொண்ட மருத்துவர் பதிலேதும் கூறாமல் கணிணியில் மருந்துகளை தட்டச்சு செய்ய ஆரம்பித்தார். வெளியில் மருந்தகத்தில் பணம் செலுத்தி மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்திய மருத்துவரிடம் நன்றி சொல்லிவிட்டு விடைபெற்ற யமுனா, சுடிதாருக்கு மேலே வந்து விழுந்து கிடந்த தாலிச்சரடை உள்ளே மறைத்துக் கொண்டு மருந்தகம் நோக்கி நடந்தாள். மழை சற்று ஓய ஆரம்பித்திருந்தது.

மீனாட்சி
மீனாட்சி
என் பெயர் மீனாட்சி. கணவர், மகனுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறேன். சொந்த ஊர் திருநெல்வேலி. வாசிப்பதிலும், எழுதுவதிலும் நிறைய ஆர்வம் உண்டு. Fbல் கவிதைகள், கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். சமீப காலங்களில் இதழ்களுக்கு எழுதி அனுப்ப ஆரம்பித்திருக்கிறேன். சில கவிதைகள் மின்னிதழ்களில் பிரசுரமாகியிருக்கிறது.

2 COMMENTS

  1. தேர்வு செய்த ஆசிரியர் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -