பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 16

காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே...!

- Advertisement -

முத்துமாலைக்கு ஏற்றவாறு பொருத்தமான உடையைப்பற்றி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாரல்லவா நம் பாடும்நிலா? என்னதான் செய்தி என்று பார்ப்போம் வாருங்கள்.

இதுவொரு இணைப்பாட்டு.. காதலிணையோடு சோடிபோட்டுப்  பாடுவதென்றால் மனம் துள்ளி ஆடி மகிழத்தானே செய்யும்… ஆர்.வி.உதயகுமாரின் படங்கள் எல்லாமே சிற்றூர்ப் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள்தாம். அப்படிப்பட்ட படங்களென்றால் இசைஞானி சும்மா புகுந்து விளையாடி வீடுகட்டிவிடுவார். இப்படத்தின் பாடல்களை இயக்குனரும் கவிஞருமான ஆர்.வி.உதயகுமாரே எழுதியிருக்கிறார். பாடல்கள் இப்படத்திற்குப் பெரும்பலம் என்று சொன்னால் அது மிகையில்லை…

ஏக்கப்பட்டு பட்டு நான் இளைத்தேனே

ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே  —

என்று சரணத்தைத் தொடங்குவது நம் ஜானகியம்மா… கல்லூரியிலிருந்து ஊருக்கு வரும் மாமான் பொண்ணும் அவளுக்காக ஊரில் காத்திருக்கும் அத்தைமகனும் சேர்ந்து பாடும் சூழல்.

பள்ளிப்பாடங்களைப் படித்துச் சலித்த பெண்ணுக்குப் பள்ளியறை சொல்லும் பாடங்களைக் கேட்கும் ஆவல் வந்துவிடுகிறது மாமனைக் கண்டதும்.. ஏட்டுக்கல்வியால் சலித்தேன், ஏக்கத்தினாலேயே இளைத்தேன் என்று பாடுகிறாள்.

**** தூக்கம் கெட்டு கெட்டு துடிக்கும் முல்லை மொட்டு

தேக்கு மரத்  தேகம் தொட்டு தேடிவந்து தாளம் தட்டு***

என்று பதிலுரைக்கும் பாணியில் வரிபிடித்து வருகிறார் நம் எஸ்.பி.பி. தட்தட்டென்று கைகளைத் தட்டுதல்போல கொஞ்சமும் சொற்களை இழுக்காமல் நறுக்குத் தெறித்தாற்போல இவ்வரிகளைப் பாடுகிறார். அப்படித்தான் மெட்டும் அமைந்திருக்கிறது. கேட்பதற்கு அத்துணை நன்றாக இருக்கும் வரிகள்.

என் தாளம் மாறாதைய்யா

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும் சிந்தாமணி

தேக்குமரம் போன்ற மாமனின் தேகத்தில் முல்லையிவள் காதலோடு தாளம் தட்டினால் தாளம் தவறுமா என்ன! உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கின்றேன் என்று உருகுகிறாள் காதலி.

உண்ணாமல் உறங்காமல் யாரேனும் இருக்க முடியுமா? இலக்குவன் அப்படித்தான் பதினான்கு ஆண்டுகள் தனது அண்ணனுடன் இருந்தானென்று கம்பன் சொல்கிறான். இயல்பில் அப்படியிருக்க வாய்ப்புள்ளதா? கற்பனை என்றாலும் ஓர் அறமிருக்க வேண்டுமல்லவா? உயிர்களின் உடல் சீராய் இயங்க உணவும் உறக்கமும் கட்டாயம் தேவை. அப்படியிருக்கையில் இவ்வரி எப்படி தனக்கான அறத்தைச் சமன்செய்து கொள்கிறது?

நாம் உணவினை உண்ணும்போது புத்தகம் படிப்பதோ, தொலைகாட்சி பார்ப்பதோ அல்லது இக்காலத்திற்குப் பொருத்தமான கைப்பேசியை நோண்டுவதோ என ஏதொவொன்றைச் செய்யும்போது நம் பெற்றோர் “சாப்பிடும்போது அதென்ன செய்கிறாய்? சாப்பாட்டில் கவனம் இல்லையென்றால் அது எப்படி உடம்பில் ஒட்டும்? ஒழுங்காக உணவைப் பார்த்துச் சாப்பிடு” என்று அறிவுறுத்துவதை எல்லோருமே கேட்டிருப்போம்தானே. அதேதான் … கை உணவினை எடுத்து வாய்க்குள் போட்டுவிடுகிறது.. வாய் அதைத் தொண்டைக்குள் தள்ளி விழுங்கி விடுகிறது. என்ன உண்டோம்? என்ன சுவையை அவ்வுணவு கொண்டிருக்கிறது? எவ்வளவு உண்டோம்? வயிற்றுக்குப் போதுமான அளவு உண்டோமா? என்றெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஏனோதானோவென்று உண்ணும்போது அவ்வுணவினின்று எவ்வித ஊட்டமும் உடம்பில் ஒட்டுவதில்லை. காதலில் இதைத்தான் பசலை நோயென்று சொல்கிறார்கள்.

இதைப்போலவே தான் உறக்கமும்.. மனம் ஏக்கத்தில் அலைபாய்ந்துகொண்டே இருக்கும்போது சரியான உறக்கம் வருவதில்லை. கண்கள் மட்டும் மூடியிருக்கும் தவிர மனம் தூங்காது.. அறிவியல்படி சொன்னால் மூளை தூங்குவதில்லை. சிந்தனை ஓட்டம் அங்கே நடைபெற்றுக்கொண்டே இருப்பதால் மூளைக்கு ஓய்வு கிடைப்பதில்லை. அது சோர்ந்து போகிறது.. ஆசிரியரே தூங்கிவழிந்தால் மாணவர் கற்பது நடக்குமா? தாறுமாறாக மாறிவிடும் வகுப்பறை.. அதுபோல உடலின் இயக்கங்களும் மாறுபடுகிறது.. இதனால்தான் தேகம் இளைத்து, பொலிவு மங்கி, சோர்ந்து அயர்ந்து காணப்படுகிறது. காதலில் இவ்வகையான உண்ணாநிலை உறங்காநிலை எல்லோருக்குமே இருக்கும். அதுவொரு வகையான மயக்கம். பிடித்துத்தான் எல்லோரும் செய்வர்.

காஞ்சிப்  பட்டு ஒன்னு நான் கொடுப்பேனே

காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே

என்று இரண்டாம் சரணத்தில் மங்களகரமான சொற்களோடு மணப்பந்தல் கட்டுகிறார் நம் எஸ்.பி.பி.  நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.. ஆனால் கவிஞரென்றால் நேரடியாகச் சொல்வதைவிட , விதவிதமான கற்பனை கலந்து சொல்லி அதை உணர்த்திட வேண்டும்.. அதைத்தான் கவிஞர் செய்திருக்கிறார். காஞ்சிப்பட்டு கொடுப்பது ஊரறிய உலகறிய உரிமையாக்கிக் கொள்வதற்காக.. காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேன் என்று சொல்வதுதான் காதலின் வெளிப்பாடு.

காதலியைச் சுமப்பதைக்காட்டிலும் இனிமையானது அவள் மீதான காதலைச் சுமப்பது.. காதலைச் சுமந்துகொண்டே இருந்தால் காதலி ஒருபோதும் சுமையாகத் தெரிய மாட்டாள். சுகமான சுமையல்லவா அது!

மாமன் உன்னைக் கண்டு ஏங்கும் அல்லித் தண்டு

தோளில் என்னை அள்ளிக்  கொண்டு

தூங்க வைப்பாய் அன்பே என்று

அவளும் பதிலுக்குப் பாடுகிறாள்.  மானின் தோளில்தான் தூங்க வேண்டுமாம்.. மாமனின் தோளில் சாய்கையில் மழலையாய் அவள் மாறிவிடுகிறாள்.. அவனோ தாய்போல அவளைத் தூங்க வைக்கவேண்டுமாம்.. கவிஞரின் கற்பனை மிக நன்றாக இருக்கிறது…

என் கண்ணில் நீ தானம்மா

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும் பொன்னுமணி

என் கண்ணில் உன்னைத்தான் வைத்திருக்கிறேன் .. உன் மூலம்தான் நான் உலகைப் பார்க்கிறேன். என் கண்ணுக்குள் நீ இருப்பதால் மிகவும் பத்திரமாக இருப்பாய்.. என் கண்களுக்குள் இருந்துகொண்டு என்மூலமாக நீயும் இவ்வுலகைப்பார்.. நம் காதலுலகம் எத்துணைப் பேரழகானது என்று பார்!  – அந்த ஒற்றைவரியில் எனக்கு இத்தனை பொருள்கள் தோன்றிவிட்டன. தமிழைப்போலவே காதலும் சிறப்பானது.. ஒரு சொல்லுக்குப் பலபொருள் தரும். ஒரு பொருளுக்குப் பல சொற்கள் தரும்.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா?

அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா?

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே

உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே

உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி – இப்பாடலின் பல்லவியையும் நம் பாடும்நிலா தான் பாடுகிறார். இயல்பாகத்தான் இப்பாடலைப் பாடியிருக்கிறார். குரல் மாற்றங்கள் செல்லச் சிணுங்கல்கள் என எதுவுமே இல்லை. மென்மையான சிறுதுள்ளலுடன் பாடிய காதல்பாட்டு.

இதில் “உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே” என்ற வரியைப் பாடும்போது ஜானகியம்மா உன்னுருவம் என்று இணைத்துச் சொல்லிப் பாடுகிறார். ஆனால் நம் எஸ்.பி.பியோ குருவினை மிஞ்சிய மாணவனாக ” உன் உருவம்” என்று தனித்தனியாகச் சொல்லிப் பாடி ஒரு சின்ன வேறுபாடு காட்டிவிடுகிறார். அதைக்கேட்கையில் அத்துணை இனிமையாக இருக்கிறது. சின்ன சின்ன மாற்றங்களில்கூட ஓரழகைப் புகுத்தி நம் காதுகளில் தேனாகப் பாய்ச்சிடும் வித்தை நாம் பாடும் நிலாவுக்குப் போகத்தான் மிச்சம்.

கார்த்திக், சௌந்தர்யா நடித்த பொன்னுமணி படத்தில்வரும் பாடல்தான் இது. அத்தனை பாடல்களுமே புகழின் உச்சம் தொட்டன.. அப்படியொரு இசையை இசைஞானி கொடுத்திருப்பார். பொன்னுமணி சிந்தாமணி இருவருமே நம் மனத்தைக் கொள்ளைகொண்டுவிடுவர் இப்பாட்டினில்.

இதுவரை நாம் பார்த்த ஆர்.வி.உதயகுமார் பாடல்களைக் கவனித்தால், அவர் எல்லாப் பாட்டிலும் அடுக்குத்தொடரைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். அடுக்குத்தொடரைப் பாடும்போது கேட்பதற்கு மகிழ்வாகவும் அழகாகவும் இருக்கும்.. எளிமையான சொற்களால் நம் மனத்தைக் கட்டியிழுக்கும் வித்தை அவர் வரிகளில் இருக்கின்றது. அவர்க்கு என் பணிவான வணக்கம்..

என் கண்ணில் நீதானம்மா… என்று பாடிய எஸ்.பி.பி இப்போது என்ன செய்கிறார்? கண்கள் சொன்ன மொழி என்ன என்று அறியும் ஆராய்ச்சியில் இறங்கப் போகிறாராம். என்ன மொழியாய் இருந்தால் நமக்கென்ன? எஸ்.பி.பி பாடினால் அது தேனாகத்தானே இனிக்கும். இருந்தாலும் அவர் ஆய்வில் என்ன கண்டுகொண்டாரென்று அறியும் ஆர்வம் எழுகிறதல்லவா? ஆய்வின் முடிவினைத் தெரிந்துகொள்ள ஆவலாய்க் காத்திருங்கள், செவ்வாயன்று வந்து சொல்லிவிடுகிறேன்..

நிலவின் நாணம் இன்னும் உதயம் கொள்ளும் ..!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

2 COMMENTS

  1. சிந்தையைக் குளிர்விக்கும்
    சிறப்பானதொரு பதிவு

    உண்ணாமல், உறங்காமல் என்பதற்குத் தாங்கள் கொடுத்த விளக்கம் அருமை ?

    கைபேசியை ‘நோண்டுதல்’ என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாம்.

    என் கண்ணில் நீதானம்மா என்ற
    ஒற்றை வரிக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட
    பொருள்களை எடுத்தியம்பி தமிழைப்போலவே காதலும் ஒரு சொல்லுக்கு பல பொருள்களைக் கொண்டது என்று ஒப்பீடு செய்தமை அழகு..

    உன்னுருவம், உன் உருவம் என்று இருவரும் மாற்றிப் பாடுவதை நுண்மையாக கேட்டு,

    சின்னச் சின்ன மாற்றங்களில்கூட ஓர் அழகைப் புகுத்தி நம் காதுகளில் தேனாகப் பாய்ச்சிடும் வித்தை நம் பாடும் நிலாவுக்குப் போகத்தான் மிச்சம் என்று நீங்கள் கூறியிருப்பது பாடும் நிலாவிற்குச் சூட்டிய புகழாரங்களிலெல்லாம் உச்சம்.

    மென்மேலும் தொடர்க..வாழ்த்துகள்

  2. ஆகா மீண்டும் ஒரு அழகான காலத்தால் அழியாத எப்பொழுது கேட்டாலும் பழைய நினைவுகளில் மூழ்கடிக்கும். கேட்டு கேட்டு மூழ்கிக் கிடந்த நாட்களை எல்லாம் அள்ளி வருகிறது.கவிதாயினி பிரபா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ??

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -