ஜூம் கலாட்டா – 3

தேன் ஜூம் நிலவு

- Advertisement -

தேன் நிலவிற்கு ஐரோப்பாவா?” என்று அதிர்ச்சியில் வாயை பிளந்த கணவனை அபிராமி வழக்கம்போல (புழுவை பார்ப்பதுபோல) பார்த்தாள்.

என் தோழி போன வாரம் அவ பொண்ணு கல்யாணம் ஆனவுடன் செந்தோசால தேன்நிலவிற்கு 2000$க்கு அறை பதிவுசெய்தாளாம். மாஸ்க் கிழிய பேசுறா. அதான் நம்ம பையன் ரமேஷையும் மருமகளையும் தேன் நிலவிற்கு ஐரோப்பானு நான் முடிவு செஞ்சிட்டேன்” என்றவளை வழக்கம்போல (புரியாமல்) பார்த்தார் குணா.

ஏன்மா இந்த கொரோனா காலத்துல நாம பொண்ணு பார்த்தது, கல்யாணம் செஞ்சது எல்லாமே ஜூம் மூலமா தான். இதுல எப்படிமா ஐரோப்பா தேன்நிலவு?” என்றார் குணா

நீங்க கேட்ட கேள்வியிலேயே பதில் இருக்குங்க. கல்யாணத்தையே ஜூம்ல செஞ்ச நான் தேன் நிலவை ஜூம்ல செய்ய மாட்டேனே ? சீக்கிரம் கிளம்புங்க நாம தேன்நிலவு ஏற்பாடுகளை போய் பார்க்கனும்” என்று அவசரபடுத்தினாள் அபிராமி.

காரை அபிராமி ஓட்ட ஆரம்பித்தவுடன் குணா கண்ணைமூடி தூங்க ஆரம்பித்தார். “என்னங்க இப்படி குறட்டை விட்டா எப்படி வண்டி ஓட்டுறது. எழுந்துருங்க இடம் வந்துடுச்சி” அவளின் சத்தம் கேட்டு கண் திறந்து பார்த்தவர் திகைத்தார். மகனின் கல்யாணத்திற்கு பெண் வீட்டார் ஏற்பாடு செய்திருந்த ஜூம் ஏற்பாட்டாளர் வணக்கம் சொல்லியவாறே நின்றிருந்தார்.

ஏய் அபிராமி, இவரு எதிர்கட்சி ஆளாச்சே? இங்கே எப்படி?” என்றவரிடம் பெருமையாக “ஆளை வாங்கியாச்சி. இப்ப இவரு நம்ம கட்சி. எப்படி என் ராணி தந்திரம் ?” என்றவாறே இறங்கினாள்.

வாங்க மேடம். எல்லா ஏற்பாடும் தயார்.  சார் வேண்டும்னா கார்ல இருக்கட்டும். அவருக்கு எப்படியும் நாம பேசுறது புரிய போறதில்லை.” என்று முதல் வசனத்திலேயே அபிராமியின் அபிமானத்தை பெற்றான் ஜூம் ஏற்பாட்டாளர் (ஜூமியன்).

பரவாயில்லை வரட்டும். வீணா எதுக்கு கார்ல ஏஸி. இறங்கி வாங்க” என்று மிரட்டலாய் அவள் கொடுத்த குரலுக்கு பின்னாலே ஓடினார் குணா.

மேடம். இது 5 நாள் ஐரோப்பா பயண திட்டம். பாரிஸ்ல ஈபிள் டவர், ரோம் நகரம், வெனிஸ் படகு சவாரி, பீசா கோபுரம் இந்த 5 நாளில் பார்த்துடலாம். உங்க பையனையும் மருமகளையும் இங்கே நாளைக்கு காலைல அனுப்பிடுங்க” என்றவாரே அந்த கட்டிடத்தில் மேல் தளத்திலிருந்த முதல் அறைக்கு அவர்களை கூட்டிச்சென்றான்.

யோவ் என்ன இடம்யா இது? அறை பெருசா தான் இருக்கு ஆனா முழுக்க முழுக்க பச்சை துணி சுவரெல்லாம் ஒட்டியிருக்கு? கட்டிலும் சோபாவும் மட்டும் இருக்கு?” என்று எகிறிய குணாவை கண்டுக்கொள்ளாமல் ஜூமியன் மேலும் விவரித்தான்.

மேடம் இந்த அறை முழுவதும் உயர் தொழிற்நுட்ப பச்சை துணியால் ஒட்டப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் நான் முன்பு சொல்லிய இடங்களில் ஜோடிகளாக சிலரை வேலைக்கு வைத்துள்ளேன். அவர்கள் தொப்பியில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அவர்கள் உங்கள் மகன் ஜூமில் சொல்லும் திசையிலும் இடத்திற்கு செல்வார்கள். அது இங்கு திரையில் தெரியும். மேலும் அறையில் வெளிச்சம், சத்தம், காற்று எல்லாம் அந்த இடத்திலிருப்பது போல தானாக மாறிவிடும். இது 3D திரைப்படம் பார்ப்பதை விட தட்ரூபமாக இருக்கும். 5 நாட்களிற்கு பிறகே அறையின் வெளியே வரமுடியும்” என்று அவன் சொன்னதை அபிராமி மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.

குணா வழக்கத்திற்கு மாறாக தான் அறிவாளி என்பதை நிருபிக்க வந்த வாய்ப்பாக நினைத்து கேட்டார் “நீ சொல்லுறது எல்லாம் சரி. ஆனால் தேன்நிலவிற்கு போனால் ஆசையாய் பரிசுகள் வாங்கனும், ஐரோப்பாவை உப்புமா சாப்பிட்டுக்குனு என் பையன் இந்த சுவரில் பார்க்கனுமா? ஐயோ ஐயோ” என்று குணா கிண்டலாக கேட்டார்.

மேடம் இவரோடு எப்படி வாழுறீங்க? இவரை வீட்லேயே விட்டு வந்திருக்கனும்” என்று மழுப்பினான் ஜூமியன்

டேய் டேய் நடிக்காதடா. பதில் சொல்லு” என்று மனதுக்குள் வீரமாக பேசினார் குணா.

சார், பரிசு பொருள் எது வேண்டுமென்றாலும் ஐரோப்பாவில் எந்த கடையில் வாங்கனும்னு நினைக்கிறாங்களோ அந்த கடைக்கு என் ஆளுங்க போவாங்க. இங்கே இருந்தே பொருளை பார்த்து விலையையும் இவங்க குரலில் ஜூமில் நேரடியாக பேசி வாங்கிக்கலாம். 2 நாளில் கைக்கு வந்திடும். இவ்வளவு யோசித்த நாங்க உப்புமா சாப்பிட வைப்போமா? இந்த 5 நாளில் சுற்றுலா தளங்கள் திரையில் காணும் இடங்களில் உள்ள எந்த உணவகமாக இருந்தாலும் இங்கே இருந்து அதே உணவை ஆர்டர் செய்யலாம். இங்கே தேர்ந்த சமையல்காரர்கள் சமைத்து அதை அறைக்கு உடனே அனுப்பி வைப்பார்கள்.

மலைப்பாக கேட்டுக்கொண்டிருந்த குணா தயங்கியவாறே “ஏம்பா இதுக்கு எவ்வளவு மொத்தமா கட்டவேண்டியிருக்கும்?” என்றார்.

சார், மேடம் ஏற்கனவே முழு தொகையும் கட்டிவிட்டார்கள். வெறும் 12000$ தான்.” என்றவன் குணா மயங்கி விழுவதை எதிர்பார்த்து காத்திருந்ததை போல தாங்கி பிடித்தான்.

– தொடரும் இந்த ஜூம் கலாட்டா….

ஜூம்-கலாட்டா-4

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

ஜூம் கலாட்டா

உமா சங்கர்
உமா சங்கர்https://minkirukkal.com/author/umasanker/
நகைச்சுவை பேச்சாளராக வளர விரும்புபவர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் குறும்பட இயக்குனர். Life Is Beautiful என்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு அதை செயல்படுத்த நினைப்பவர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -