தூறல்கள் ஓய்வதில்லை!

கார்கால சிறுகதைப் போட்டி - ஆறுதல் பரிசு

- Advertisement -

அப்பொழுது எனக்கு ஆறு வயது. அப்பாவின் செல்லப் பெண். என்னை கண்டிக்க அம்மா எப்பொழுதாவது கை ஓங்கினால் கூட, உடனடியாக  தடுத்து, ‘பெண் குழந்தையை பூ போல பார்த்துக்கணும். அவ மேல கை வைச்சேன்னா, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்’..என்று கோபத்தில் கத்துவார். அப்படிப்பட்டவரின் கை, அன்று என் கன்னத்தில் லேசாக பட்டதும், வலியை விட, அப்பாவா அடிச்சது  என்ற அதிர்ச்சியில் உறைந்து போனேன். கேவல் சத்தம் கேட்டு, அம்மா ஓடி வந்து என்னை அணைத்தாள்.

“இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு..குழந்தையை ஏன் அரைஞ்சீங்க..? பிஞ்சு கண்ணம் எப்படி சிவந்து போச்சு பாருங்க. வர்ற வழியில், உங்க மனசுக்கு ஒவ்வாத எதையாவது பார்த்துட்டு, அந்த கோபத்தை, குழந்தை மேல காட்டறீங்க போல இருக்கு..” அம்மா குரலை உயர்த்தினாள்.

“நான் கொஞ்சம் நிதானம் இழந்துட்டேன்..”  குரல் தாழ்ந்து, அப்பாவின் கண்களில் கண்ணீர் வழிந்ததை பார்க்க முடிந்தது.

அம்மாவின் பிடியிலிருந்து விலகி, அப்பாவுக்கு அருகில் போய், அவர் கண்களை, என் கைகளால் துடைத்து விட்டேன்.

“எதுக்கு அழறீங்க..?” என் மேல ஏதாவது தப்பு இருந்தா, மன்னிச்சுடுங்க.” என்றேன்  

“தப்பு உன் பேரில் இல்லைம்மா கண்ணு. என் பேரில்தான் தப்பு. நீ நல்லா படிக்கணும்..பாட்டு கத்துக்கணும்..டான்ஸ் கத்துக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்த எனக்கு, இயற்கையின் வரங்களை பற்றி, இதுவரை உனக்கு சொல்லித் தர தெரியலை. தண்ணீர்ங்கறது,  இயற்கையின் ஒரு வரம்.  நான் வீட்டுக்குள் நுழையும்போது, குழாயை திறந்துவிட்டு, அதிலிருந்து தண்ணீர் கொட்டி கீழே போவது தெரியாமல், பாட்டுப் பாடிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்ததை பார்த்ததும் எனக்கு கோபம் வந்துடுச்சு. ஒவ்வொரு சொட்டு தண்ணீரும், தங்கம் மாதிரி.   அதை வேஸ்ட் பண்ணுவது, இயற்கைக்கு நாம் செய்யும் துரோகம்..” என்றவரின் கண்களில் கண்ணீர் மேலிட்டு நின்றதை காண முடிந்தது.

அந்த சமயத்தில், அப்பாவின் பேச்சு, எனக்கு முழுவதுமாக புரியவில்லை. 

“நீர் அடிச்சு, நீர் பிரியாது. நீங்க அடிச்சா, உங்க மகளுக்கு வலி தெரியாது .நடந்ததை மறந்துட்டு சாப்பிட வாங்க…என்று அம்மா அவரை சமாதானம் செய்ய முயன்றாள். 

“இது மறக்கற விஷயம் இல்லை. வாழ்க்கை முழுவது நினைவில் இருக்கும்படியாக, அந்த நீரையும், அது சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பற்றி என் மகளுக்கு, இனி நிறைய சொல்லித் தரப்போறேன்..” என்றவர், என் கையைப் பிடித்து தன் பக்கத்தில் உட்கார வைத்து, பாசத்துடன் தலையை கோதி விட்டார்.

“வர்ற வழியில், ரோடு ஓரத்தில் வளர்ந்திருந்த இரண்டு மரங்களை, புல் டோசரால் வெட்டித் தள்ளிக்கிட்டு இருந்ததை பார்க்க நேர்ந்ததும், என் கண்களில் ரத்தக் கண்ணீர் வந்துடுச்சு…” தன் ஆதங்கத்தை அம்மாவிடம் பகிர்ந்தார்.

“ஏன் மரங்களை வெட்டறீங்கன்னு, உடனே, அவங்ககிட்ட, சண்டை போட்டிருப்பீங்க. மரங்களை வெட்டாம, எப்படி ரோடை அகலப்படுத்த முடியும்னு அவங்க உங்களை பார்த்து கேலி பண்ணியிருப்பாங்களே..? நேரில் பார்த்தது போல், அம்மா வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாக கேட்டாள்.

“ஆமா..அப்படித்தான் சொன்னாங்க.. மரம்ங்கறது நம்ம உயிர் நாடி. அது நமக்கு தர்மமா தர்ற பிராண வாயுவாலதான்  உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். உயிரோட இருக்கிற மரத்தை வெட்டி சாய்க்காம, நீங்க நினைச்சதை பண்ணக் கூடாதான்னு கேட்டது, அவுங்க காதில் விழுந்தா மாதிரி தெரியலை. அந்த மன வருத்தத்துடன், வீட்டுக்குள் நுழையும்போது, தண்ணீர் வீணாவதை பார்த்து, கோபம் வந்து, என் மகளை அடிச்சுட்டேன்..”

“தண்ணீருக்கும், மரத்திற்கும் ஒண்ணுக்கொன்னு நெருங்கிய தொடர்பு இருக்கு. அதைப் பற்றி, ராத்திரி உனக்கு விளக்கி சொல்றேன்..” என்று என்னிடம் சொன்னவர், சாப்பிட்டுவிட்டு வெளியில் கிளம்பினார்.

மாலை வீடு திரும்பியவர், கைகால் சுத்தம் செய்துவிட்டு, முதல் வேலையாக, என்னை பூஜை அறைக்கு அழைத்து போனார்.

“இந்த சாமி யாரு தெரியுதா பாரு…!’ 

“பரமசிவன்..”

“அவர் தலையை உற்றுப் பார்….அதிலே என்ன வச்சுக்கிட்டு இருக்கார்…?”

“தண்ணீரை வச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி தெரியுது…”

“கரெக்ட்டா சொன்னே.. அதுக்கு கங்கை நதின்னு பேர். சாமியே, தலையில வச்சு கொண்டாடுறார்னு, தண்ணீருக்கு எவ்வளவு மதிப்புன்னு புரிஞ்சிருக்குமே..!” 

“நல்லா புரிஞ்சுக்கிட்டேன்..இனிமேல், இன்னைக்கு செய்த தப்பை செய்ய மாட்டேன்..” 

“அந்த நதியின் பெயரை தினமும் சொல்லணும்னுதான், உனக்கு கங்கான்னு பேர் வச்சேன்..”

எனக்கு என் பெயர் காரணம் புரிந்தது.

“மழை எப்படி வருதுன்னு தெரியுமா,,?” அப்பாவிடமிருந்து அடுத்த கேள்வி பிறந்தது.

“மேகத்திலேருந்துதான்..”

“அந்த மேகத்துக்கு மழையை அனுப்பறது யார் தெரியுமா..?

பதிலுக்காக, அப்பாவை ஆவலோடு பார்த்தேன்.

“மரங்கள்தான். மரங்கள் இல்லைன்னா, மழை இல்லை..மழை இல்லைன்னா நாம இல்லை..!”

மரங்களுக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்..?” ஆச்சரியத்தோடு கேட்டேன்.

“பூமிக்குள்ளேருந்து இழுக்கற தண்ணியை, தண்டுகள் வழியா, மரங்கள் இலைக்கு அனுப்புது. அந்த தண்ணீர் ஆவியாகி, அந்த ஆவி மேகமாகி, அந்த மேகம் மழையைத் தருது..!”

அந்த சிறு வயதில், ஊர்ந்து செல்லும் கருமையான  மேகக் கூட்டங்களை பார்த்து வியந்திருக்கிறேன். உற்றுப் பார்த்தால், சில மேகங்கள், யானை வடிவத்தில் இருக்கும். சில, பூனை வடிவத்தில் இருக்கும். சில சமயங்களில், புகை மூட்டம் போல், என்ன வடிவம் என்றே புரியாது.  சில சமயங்களில், நான் மனதில் என்ன நினைக்கிறேனோ அந்த வடிவத்திலும் தெரியும். ஆக மொத்தத்தில் மேகம் தெரிந்தால், மழை வரும் என்பது மட்டும் தெரியும்.  வரப்போகிற மழைக்கு கட்டியம் கூறி வரும், லேசான தூரல்கள் உடம்பில் பட்டதும் ஏற்படுத்தும் சிலிர்ப்பையும்,, குதூகல உணர்வுகளையும், அடிக்கடி அனுபவித்திருக்கிறேன்.  

“மழையில் நனைந்தால் உடம்புக்கு வந்துடும்..” என்று அம்மா கண்டிப்பாள். 

“நனைந்தால்தான், இயற்கையின் பேரழகை ரசிக்க முடியும்..” என்று தன்னுடன் என்னையும் மழையில் நிற்க வைத்து, அப்பா கைதட்டி, குதூகலிப்பார்.

அதனால், மேகத்தை தொடர்பு படுத்திய அப்பாவின் விளக்கம் எனக்கு ஓரளவு புரிந்தது. 

ஒவ்வொரு துளி தண்ணீரையும் கஷ்டப்பட்டு சேமிச்சு, அதை மேகமாக்கி,  மழை பொழிய வச்சு, மரங்கள் நமக்கு தண்ணீரை தருது. அந்த தண்ணீர் இருந்தால்தான், நாம தினமும் சாப்பிடற அரிசி, பருப்பு விளையும். நம்ம தாகத்தை அடக்குறதுக்கு தண்ணீர் தேவை. சமைச்சு சாப்பிடறதுக்கு தண்ணீர் வேணும். எதிலேயாவது நெருப்பு பத்திக்கிச்சுன்னா, அதை தண்ணீரால்தான் அணைக்க முடியும். அப்படிப்பட்ட தண்ணீரை வீணாக்கலாமா..?”அப்பாவின் கேள்வி என்னை பெரிதும்சிந்திக்க வைத்தது.

சிறிய தவறு என்ற என் நினைப்புக்கு பெரும் விளக்கம் கொடுத்தார்.

“இன்னைக்கு நான் பண்ணது பெரிய தப்புன்னு இப்ப புரிஞ்சுது. அதுக்காக, நீங்க ஏதாவது எனக்கு தண்டனை கொடுங்க..” 

அப்பா யோசித்தார். 

“சின்ன குழந்தை,.அவதான் கேட்கிறான்னா, நீங்களும், சீரியஸா யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க..தண்டனையாவது..மண்ணாவது…” அம்மா பயந்தாள்.

“அதைப் பற்றி நாளை காலையில் பேசுவோம்..” அப்பா தீர்ப்பை, காலை வரை தள்ளி வைத்தார்.

காலையில் சற்று தள்ளியிருந்த நர்சரி தோட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.

அங்கு என் வயதை ஒத்த சிறுவன், தோட்டத்திலிருந்த செடிகளைப் பற்றிய விவரங்களை, வருபவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்ததை பார்க்க முடிந்தது. 

“இந்த வயசிலேயே, மரம், செடி, கொடிகளின் மீது என் மகன் அரசுக்கு ரொம்ப ஆர்வம். ஸ்கூலுக்கு போற நேரம் தவிர, எப்பவும் இங்கேயாதான் இருப்பான். எல்லா செடிகளுக்கும் தண்ணீர் ஊத்தாம, அவன் சாப்பிடமாட்டான்னா பார்த்துக்கங்களேன். .அதான், இந்த சின்ன வயசிலேயே, தோட்டத்தைப் பத்திய எல்லா விவரங்களையும், கத்துக் கொடுத்துட்டு வரேன்…அவன் சொல்றதை தவிர, வேற ஏதாவது விளக்கம் வேணும்னா, எங்கிட்ட வந்து கேளுங்க…” என்றார் நர்சரியின் சொந்தக்காரர்.

அதற்கு அவசியம் இல்லாமல் போனது, அப்பா கேட்டபடி, மூன்று வேப்பங்கன்றுகளை செலக்ட் செய்து கொடுத்தான் அரசு.  

அந்த கன்றுகளை, தோளோடு தோளாக அணைத்து, நாய்குட்டி போல் தடவி கொடுத்து, முத்தம் கொடுத்தார் அப்பா. மரங்களின் மீதான அவருடைய பிணைப்பை அன்றுதான் கண்கூடாக பார்த்தேன்.

வீட்டுக் கொல்லைப்புறத்தில் இடைவெளி விட்டு, இரு சிறு குழிகள் வெட்டினார். ஒரு கன்றை என்னை நடச் சொல்லி, அதை சுற்றி, மண்ணால் மென்மையாக அணைக்கச் சொன்னார்.

மற்ற இரண்டு கன்றுகளை அவர் நட்ட பிறகு, இரண்டுக்கும் தண்ணீர் ஊற்றினோம்.

“இன்னைக்கு எனக்கு ஏதோ தண்டனை கொடுப்பதாக சொன்னீங்க..மறந்துட்டீங்களா..?’ அப்பாவை ஞாபகப்படுத்தினேன்.

“அதான் முடிஞ்சுடுச்சே..!”

முட்டிப் போடச் சொல்லுவது, அடிப்பது, வெளியில் நிற்க சொல்வது, பேசாமல் இருப்பது போன்றவைகளைத்தான் தண்டனை என்று அதுவரை கற்பனை செய்து வைத்திருந்தேன்.

“நீ செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக, இந்த மரக்கன்றை நட்டியே…அதுதான் தண்டனை..இனி ஒவ்வொரு நாளும், நானும், அம்மாவும் உன்னை அன்போட பார்த்துக்கறது போல, நீயும் அதை தங்கச்சி மாதிரி பார்த்துக்கணும். அதன் ஆரோக்கியமான வளர்ச்சியில், உன் மனசு ரொம்ப சந்தோஷமாகும்…!”

“இப்படி ஒரு தண்டனையா,,எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அந்த தண்டனை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

“ரெண்டு செடிகளை நட்டீங்களே..நீங்க என்ன தப்பு பண்ணீங்க..?” மனதில் இருந்த சந்தேகத்தை அப்பாவிடம் கேட்டேன்.

வளர்ந்து நிழல் தந்து கொண்டிருந்த இரண்டு மரங்கள் வெட்டப்பட்டதை, கண்ணால் பார்த்த பிறகும், அதை தடுக்க முடியலை. அதுக்கு நானே கொடுத்துகற தண்டனையாக, இந்த செடிகளை நட்டேன். இப்ப இந்த மூன்றும் சகோதரிகளும்..நம்ம வீட்டு பிள்ளைங்க…!”

பசுமையான அந்த சகோதரிகளின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியும், என் மன சந்தோஷத்தை பல அடி உயரங்கள் உயர்த்திப் பிடித்ததை, அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.

ஒரு நாள், நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வண்டியை மர நிழலில் நிறுத்தினார்.

“இந்த பக்கம் வந்து கொஞ்ச நாளாச்சு..சௌக்கியமா இருக்கியாம்மா..”அப்பா யாருடன், பேசுகிறார் என்று புரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தேன்.

அந்த மரத்துடந்தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.

“போன வருஷம், இந்த பக்கம் வந்தபோது, செடியா நட்டேன். இப்ப பெரிசா வளர்ந்து, எல்லோருக்கும் நிழல் தந்துக்கிட்டு இருக்கா..” அவர் குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

அன்று அப்பாவால் விதைக்கப்பட்ட இயற்கை மீதான பற்று என்ற விதை, என் மனதில் முளைவிட்டு, செடியாகி, மரமாக வளர ஆரம்பித்தது.

என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும், இயற்கையின் பங்கு இருக்கும். நான் அறிந்தும், அறியாமலும் செய்த ஒவ்வொரு தவறுக்கும் ஒரு செடியை நடுவதை வழக்கமாக ஆக்கிக் கொண்டேன். என் பிறந்தநாள் உள்பட, உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு என் தரப்பிலிருந்து பசுமையான ஒரு செடிப் பரிசு நிச்சயம் இருக்கும்.

படித்த பள்ளியில், நான் நட்ட பல செடிகள், தலை நிமிர்ந்து மரமாக வளர்ந்து கொண்டிருந்ததை கேள்விப்படும் போதெல்லாம்., என் மனதில் சந்தோஷ மேகக் கூட்டங்கள் ஒன்று திரண்டு, ஆனந்த மழை பொழியும். 

நான் நட்ட செடிகள் போல், நானும் வளர்ந்தேன், இப்பொழுது, நான் ஒரு மகப்பேறு மருத்துவர்.

என்னிடம் பரிசோதனைக்கு வரும் ஒவ்வொரு பெண்ணிடமும், ஒவ்வொரு மூன்றாம் மாத ஆரம்பத்திலும், பிறக்கப் போகிற குழந்தையின் நன்மைக்காக, ஒரு செடி நடுவதாக உறுதி மொழி வாங்கி, அதற்கான செடியையும் அன்பளிப்பாக அளிப்பேன். செடியை பாசத்தோடு வளர்த்ததால், சுகப் பிரசவம் ஆனதாக, பெரும்பாலானவர்கள் சந்தோஷப்பட்டார்கள்., அத்துடன், குடியிருக்கும் வீட்டில், மழை நீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டிருக்கிறதா என்பதை விசாரிப்பேன். இல்லையென்றால், அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லுவேன்.

அதனால், எனக்கு ‘செடி டாக்டர்’ ‘மழை நீர் சேகரிப்பு டாக்டர்’ என்ற பட்டப் பெயர்களும், என் மருத்துவர் பட்டத்தோடு ஒட்டிக் கொண்டது.  

அன்று ஒரு பிரசவ கேஸ் முடிந்து, அறையில் உட்கார்ந்திருந்தபோது, என்னைப் பார்க்க ஒருவர் காத்திருப்பதாக தகவல் வந்தது.

உள்ளே நுழைந்தவர், முகத்தில் மெல்லிய மீசையுடன், வாட்ட சாட்டமாக இருந்தார். இளம் சிவப்பு நிறத்தில் இருந்தவர், சினிமா நடிகர் போல் தோற்றமளித்தார்.

“உட்காருங்க….பேஷண்ட் வந்திருக்காங்களா..?” என்றேன்.

“என் அக்காவுக்கு ஆறு மாதத்திற்கு முன்னாடி, நீங்கதான் பிரசவம் பார்த்தீங்க..அப்ப நான் அமெரிக்காவில் இருந்தேன்….” என்றார்.

“தாயும், குழந்தையும் நலம்தானே..அமெரிக்காவில் என்ன பண்றீங்க..?”

“விவசாயம் சம்பந்தமா ஆராய்ச்சி படிப்பு முடிச்சுட்டு, இந்தியா திரும்பிட்டேன்..”

“என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க..?”

“மருந்துக்கான பிரஷ்கிரிப்ஷனை தவிர, கர்ப்பிணி பெண்களை செடிகள் வளர்க்கசொல்வது, மழை நீர் சேகரிக்கச் சொல்வதுன்னு இயற்கை சார்ந்த நல்ல விஷயங்களை அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கறதா கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டுப் போனேன்..என் பாராட்டை தெரிவிச்சுட்டு போலாம்னுதான் வந்தேன்..” என்றவர் தன் பெயர் அட்டையை என்னிடம் கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்தததும், உலகம் உருண்டை என்பது புரிந்தது. நீண்ட காலத்திற்கு முன்பு சந்தித்தவரை, எதிர்பாராமல் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அப்படித்தான் நினைக்க தோன்றும்.

“நர்சரி தோட்டம் வச்சிருந்த அரசுதானே நீங்க…?” ஆச்சரியத்தோடு கேட்டேன்.

“ஆமா..பகீரதன் சாரின் மகள் கங்காதானே நீங்கள்..?” என்று பதிலுக்கு கேட்டார்.

ஆமா..அப்பா இப்ப இல்ல..” என்றவுடன், வருத்தத்தை தெரிவித்தார்.

இருவரும், மலரும் நினைவுகளில் மூழ்கினோம். மீண்டும் சந்தித்தோம், பேசினோம். ஒருவொருக்கொருவர் மனதளவில் பொருத்தமானவர் என்பதை புரிந்து கொண்டோம்.

பெற்றோரின் சம்மதத்துடன் எங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆயிற்று.

திருமணத்திற்கு முன்பு, அப்பாவின் நினைவாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு திட்டத்தைப் பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தோம்.

நாங்கள் வசித்த ஊரில், எங்களுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தில், விளை பயிர்களுக்கு பதிலாக, மரமாக வளரும் செடிகளை நடுவது என்பதுதான் அந்த திட்டம். அவைகள் மரமாக வளர்ந்தவுடன், அந்த பகுதிக்கு, மழையை ஈர்க்கும் மையமாக அது அமையும் என்பதை நினைத்தவுடன் மனதில் சந்தோஷப் பூக்கள் மலர்ந்தன.  அவைகளுடன் பேசிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களை அடிக்கடி உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.

அத்துடன், அந்த மேகக் கூட்டங்களுக்கு இடையே அப்பாவின் முகத்தை உருவகித்து,  மழைத் தூறல்களில் நனைந்து, இயற்கையின் வரனை ரசிக்கப் போகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!

எஸ்.ராமன்
எஸ்.ராமன்
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவருடைய சிறுகதைகளும், கட்டுரைகளும், பிரபல பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ‘உறவும் உராய்வுகளும்’ என்ற இவருடைய கதைத் தொகுப்பு புத்தக வடிவில் வெளி வந்துள்ளது. மூன்று மொழி பெயர்ப்பு நூல்களும் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -