Deep Work

நூலாசிரியர்: Cal Newport

- Advertisement -

இன்றைய காலம் என்பது கவனச் சிதறல்களுக்கான காலாமாக ஆகிவிட்டது. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் அது சாம்பார் வைப்பதாக இருந்தாலும் சரி, சாப்ட்வேர் புரோக்ராம் எழுதுவதானாலும் சரி, மற்றொரு விஷயம் மண்டைக்குள் ஓடமால் இவற்றைச் செய்ய முடிவதில்லை. இயற்பியலின் சிக்கலான கோட்பாட்டைக் கூட ஒரு மாணவன், காதில் அனிருத்தின் இசையோடுதான் படிக்கிறான். பெரும்பாலான நேரங்களில் அந்த வேலை முடிந்ததை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்ளும் நாம், அதனால் விளையும் பயன்களின் தன்மை பற்றி அதிகம் கவலைகொள்வதில்லை. இந்தக் கவனக் குவிப்பு இல்லாத மேம்போக்கான செயல்களால் உருவாகும் படைப்புகளுக்கு ஆயுள் மிகக் குறைவு.

இன்று நாம் சிலாகிக்கும் பல படைப்புகளும் அவை உருவாக்கப்பட்டுவிட்டதாலேயே சிறப்பானதொரு இடத்தைப் பெறவில்லை. அதனைப் படைக்கும் படைப்பாளனின் தனித்துவமான கைவேலையே படைப்பை அதன் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது. ஆழமான கவனக்குவிப்பு இன்றி அத்தகைய craftmanship அமைவது மிகக் கடினம். ஆழமில்லாத படைப்புகள் அதிகம் உருவாக்கப்படும் இந்நிலையில் தான் ஆழமான வேலைக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அதுவே காலாகாலத்திற்கும் நீடித்து நிற்கும் ஒரு படைப்பை உருவாக்கவும் முடியும். அத்தகைய ஆழமான வேலைக் காலாசாரத்திற்குள் மூழ்கி எப்படி முத்தெடுப்பது என்பதைத்தான் Cal Newport தனது பிரபல நூலான ‘Deep Work’ இல் குறிப்பிடுகிறார்.

புத்தகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கும் Newport, முதல் பகுதியில் ‘ஆழமான வேலை’க்கான அவசியத்தையும் இன்றைய உலகில் அதன் மதிப்பையும் இடத்தையும் விவாதிக்கிறார். நிறுவனங்களில், ஊழியர்களின் வேலை நேரம் பெரும்பாலும் மின்னஞ்சல்கள் அனுப்புவதிலும், தொலைபேசி உரையாடல்களிலும், சந்திப்புக் கூட்டங்களிலும்தான் அதிகம் செலவிடப்படுகிறது. இது போன்ற அடிக்கடி கவனம் கோரும் சிறு சிறு வேலைகளால், ஆக்கப்பூர்வமான வேலைக்கு மிகவும் குறைவான நேரத்தையே அவர்களால் ஒதுக்க முடிகிறது. ஆனால் இது அவரின் செயற்திறனில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்ள தக்க அளவுகோல்கள் இல்லாமையால் நிறுவனங்கள் ஊழியர்களிடமிருந்து பல சமயங்களில் ஆழமில்லாத வேலையையே மேலும் மேலும் எதிர்பார்க்கின்றன.

இன்று Facebook, Square போன்ற சில பெரிய நிறுவனங்கள் ஊழியர்களுக்குள் தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக தங்களின் பணியிடங்களைக் குறுகிய சிற்றறைகளுக்குள் (cabins) அடைக்காமல் திறந்த வெளிகளாக அமைக்கின்றன. இத்தைகைய அமைப்புகளால் சில நன்மைகள் இருந்தாலும், அவை ‘ஆழமான வேலை’ செய்வதற்குப் பெரும் தடையாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் Newport.

மாறி வரும் பொருளாதாரச் சூழலில், ஒருவர் வெற்றி பெறத் தேவையானதாக இரண்டு முக்கியத் திறன்களை அவர் அடையாளம் காட்டுகிறார்:

அ. கடினமான விஷயங்களில் எளிதில் தேர்ச்சி பெறும் திறன்
ஆ. கற்றுக்கொண்டவற்றிலிருந்து தரமானதாகவும் விரைவாகவும் சிறந்த படைப்பை உருவாக்கும் திறன்

இந்த இரண்டு திறன்களையும் அடைவதற்கு deep work மட்டுமே துணை புரியும் என்பது அவரின் வாதம். வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கும் deep work, இன்றைய இணைய உலகில் மக்களிடையே மிகவும் அரிதாகிக் கொண்டே வருவதாகக் குறைப்படும் அவர், பரபரப்பாக இருப்பதை (busy), செயல்திறனோடு விளங்குவதாக(productive) இன்று தப்பர்த்தம் கற்பிக்கப்படுவது குறித்துக் கவலை கொள்கிறார்.

புத்தகத்தின் இரண்டாவது பகுதியில், எவ்வாறு நமது அன்றாட வாழ்வில் deep workகினைப் புகுத்துவது என்பதற்கு சில வழிமுறைகளை வகுக்கிறார். உலகில் சாதனையாளர்களாத் திகழும் பலரும் கைகொள்ளும் நான்கு வித நடைமுறைகளை அவர் பட்டியலிடுகிறார். நம் ஒவ்வொருவரின் வேலை மற்றும் வாழ்க்கை முறை பொறுத்து அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சலிப்பூட்டும் தருணங்களைக் கண்டு விலகி ஓடமால் அதனைத் தழுவிக் கொள்ளுங்கள் எனக் கூறும் அவர், சமூக ஊடகங்கள் உண்மையில் நமக்கு அவசியம் தானா? என்கிற முக்கியமான கேள்வியை நம் முன்னே வைக்கிறார். நமது தினசரி நடவடிக்கைகளில் ‘ஆழமில்லாத வேலை’களை (shallow work) கண்டறிந்து அவற்றை முடிந்தவரைக் குறைப்பதற்கான சில டிப்ஸ்களையும் தருகிறார்.

புத்தகம் முடிக்கையில் நாம் எந்த அளவிற்கு கவனச் சிதறலான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற உண்மை நமக்கே அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அந்த விழிப்புணர்வே deep work நோக்கி நமது முதல் அடியை எடுத்து வைக்கத் தூண்டுகோலாகவும் அமைகிறது. விளக்கமான நிஜ உலக உதாரணங்களோடு ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கத்தோடு அணுகியிருக்கிறார் Newport. ஆனால் புத்தகத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்க நீங்களும் கொஞ்சம் deep work செய்வது அவசியம்.

-இந்துமதி மனோகரன்

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -