கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு – குறுந்தொடர்

தடுப்பூசியின் கதை - கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு - குறுந்தொடர்

- Advertisement -

தடுப்பு ஊசி பிறந்த கதையைப் பற்றியும் மிகவும் கடுமையாக இருந்த முறையை மேம்படுத்தி மனித குலத்தையே காப்பாற்றிய எட்வர்ட் ஜென்னர் பற்றி சென்ற பகுதியில் கூறியிருந்தேன். அதனை படிக்கவில்லை என்றால் இங்கே சொடுக்கவும். கொரோனா கொள்ளை நோய்க்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பதினாறு விதமான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து உள்ளனர். 16 வெவ்வேறு பெயர்கள் இருந்தால் கூட இவை அனைத்தையும் ஐந்து பிரிவாக பிரித்துவிட முடியும். அதனைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் தடுப்பூசியை பற்றிய ஒரு சிறிய அடிப்படையைக் கூறிவிடுகிறேன். 

தடுப்பூசியின் அடிப்படை:

ஒரு சிறு குழந்தைக்கு முன்னால் நெருப்பை பற்ற வைத்தால் அது என்ன செய்யும்? நெருப்பின் குணத்தைப் பற்றி சிறு குழந்தைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அந்த குழந்தை பாய்ந்து நெருப்பை தொட முயற்சி செய்யும். தொட்ட மறுகனமே சூடு தாங்க முடியாமல் குழந்தை அழுக ஆரம்பித்துவிடும். ஆனால் ஒருமுறை சூடு பட்டுவிட்டால் பின்பு நெருப்பை விட்டு விலகி இருக்கும் அல்லவா? இதுதான் தடுப்பூசியின் அடிப்படை. இங்கே நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் ஒரு குழந்தையாக பாவித்து கொள்ளுங்கள். அந்த குழந்தை போன்ற செல்லுக்கு புதிதாக வரும் நுண்கிருமி நல்லதா கெட்டதா என்ற அறிவு கிடையாது. அந்த அறிவை உடலுக்குள் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் புகட்டுவது தான் தடுப்பூசியின் மொத்தப் பணியும். இதனை செய்வதற்கு ஐந்து வழிமுறைகள் இருக்கிறது என்று கூறினேன் அல்லவா? அதனை சுருக்கமாக பார்த்துவிடலாம்.

உயிருள்ள நுண்கிருமி தடுப்பூசி:

எட்வர்ட் ஜென்னர் முதலில் பசுவிற்கு வரும் அம்மை நோயை கொண்டு மனிதர்களின் அம்மை நோயை போக்கினார் என்று கூறினேன் அல்லவா? இதற்கு காரணம் என்னவென்றால் பல்வேறு மிருகங்களுக்கு வரும் நோய்க்கிருமி மனிதர்களை தாக்குவதில்லை. ஆனால் மனிதர்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து விட்டு விடுகிறது. இந்த நூற்றாண்டு கால முறையை பின்பற்றி போலியோ போன்ற பல்வேறு நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. மனிதனுக்குள் உள்ள நுண் கிருமியை எடுத்து பல்வேறு வகை மிருகங்களுக்கு கொடுத்து விடுவார்கள். மிருகங்களுக்குள் புகுந்த கிருமி காலப்போக்கில் சிறிது சிறிதாக மாற்றமடைந்து மனிதர்களை பாதிக்காத வண்ணம் உருமாற்றம் (Mutation) அடைந்து விடும். இதனை பின்பு மனிதர்களுக்கு செலுத்தினால் மனிதர்கள் நோய்த்தொற்று பாதிக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்று விடுவார்கள். இந்த முறையில் இயற்கையாக உருவாக்குவதற்கு அதிக காலம் பிடிக்கும் என்பதால் கொரோனாவுக்கு இந்த வகையான தடுப்பூசியை தயாரிக்க முடியவில்லை.

செயலிழந்த நுண்கிருமி தடுப்பூசி:

மனிதனுக்குள் புகுந்து நோய்க்கிருமியை தனியாகப் பிரித்தெடுத்து அதனை சில ரசாயனங்களில் ஊற வைத்தால் அந்த கிருமி முற்றிலும் செயலிழந்து விடும். அதன்பிறகு செயலிழந்த கிருமியை மனித உடலுக்குள் செலுத்திக் கொண்டால், பாதிப்பு ஏற்படாமலேயே உடலுக்கு எதிர்ப்பு சக்தி தானாக வந்துவிடும். கொரோனாவுக்கு உலகில் கண்டுபிடிக்கப்பட்ட 16 தடுப்பூசிகளில் அதிகபட்சமாக 7 தடுப்பூசிகள் இந்த வகையைச் சார்ந்தது தான். இந்தியாவில் தயாரித்த Covaxin, சீனாவில் தயாரிக்கப்பட்ட CoronaVac அனைத்தும் இந்த வகை தான். இந்தவகை தடுப்பூசியை குறைந்த காலத்திலேயே எளிதாக தயாரிக்க முடியும்.

Subunit தடுப்பூசி:

ஒரு கிருமியை முழுமையாக எடுத்து தடுப்பூசி உருவாக்கினால், அதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளன. நுண்கிருமிகள் என்றுமே ஒரே ஒரு விளைவைத் தராது. அது கொடுக்கக் கூடிய பல்வேறு விளைவுகளுக்கு அவை உருவாக்கும் புரதத்தில் உள்ள சிறு சிறு பகுதிகள் காரணமாக இருக்கும். மேற்கொண்டு ஒவ்வொரு பகுதிக்கும் பல்வேறு பக்கவிளைவுகள் கூட இருக்கும். இவை அனைத்தையும் ஆராய்ச்சி செய்து தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு பல காலம் ஆகும் என்பதால், அந்த நுண்கிருமி விளைவிக்கும் ஆபத்தில் மிக தீவிரமாக இருக்கும் விளைவுகளுக்கு மட்டும் காரணமான புரதத்தை தனியாக எடுத்து அந்தப் பகுதியை மட்டும் தடுப்பூசியில் எடுத்துக்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத அதே சமயத்தில் குறிப்பிட்ட தீமையான விளைவுகளை மட்டும் தடுக்கக்கூடிய தடுப்பூசிகளாக இவை விளங்கும். கொரோனா ஒழிப்பில் தற்போதுவரை இரண்டு தடுப்பூசிகள் இந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கூடிய விரைவில் இந்தவகை தடுப்பூசி ஒன்றும் வர உள்ளது. இந்த தடுப்பூசியை அதிகளவில் தயாரிப்பது (mass production) மிக எளிதானது.

Virus vector தடுப்பூசி:

தடுப்பூசிகள் எப்பொழுதுமே எதிர்ப்பு சக்தியை நேரடியாக தருவதில்லை. நுண்கிருமிகளை உள்ளே விடுவதால் நமது உடல்தான் எதிர்ப்பு சக்தியை தயாரித்துக் கொள்கிறது. நமது உடல் எவ்வாறு எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும் என்ற கட்டளை நமது செல்களில் உள்ள டிஎன்ஏ-வில் (DNA) பதிந்துள்ளது. அந்தக் கட்டளையை மட்டும் மாற்றும் சக்தி நமக்கு கிடைத்து விட்டால் நம்மால் எந்த விதமான நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அந்தக் கட்டளையை நேரடியாக நமது உடலில் பதிய வைப்பது மிகவும் சிரமம். அதனால் சம்பந்தமே இல்லாத வேறு ஒரு நோயின் நோய்க்கிருமியை எடுத்துக்கொண்டு அதற்குள் இந்த கட்டளையை மட்டும் தனியாக செலுத்தி விட்டால் போதுமானது. உதாரணமாக இந்தியாவில் கிடைக்கும் CoviShield தடுப்பூசியில் கொரோனாவுக்கு சம்பந்தமே இல்லாத அடினோ வைரஸ் எனப்படும் நுண்ணுயிர் உள்ளது. ஆனால் இந்த நுண்ணுயிர்க்கு உள்ளே கொரோனா கிருமியை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்கின்ற கட்டளையை உடலுக்கு கொடுக்கக்கூடிய ஒரு பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உருவாக்கப்பட்ட 5 தடுப்பூசிகள் (CoviShield, Sputnik உட்பட) இந்த வகையை சேர்ந்ததுதான்.

DNA/mRNA தடுப்பூசி:

நான் மேலே கூறிய Virus vector தடுப்பூசிகள், கட்டளையை வேறு ஒரு நுண்ணுயிருக்குள் வைத்து அனுப்புகிறது என்று கூறினேன் அல்லவா? அப்படி இல்லாமல் அந்தக் கட்டளையை நேரடியாகவே உடலுக்கு செலுத்தக்கூடிய அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தடுப்பூசி தான் இது. தொழில்நுட்பத்தில் மேலானது என்றால் கூட இவற்றைக் கையாள்வது சுலபம் அல்ல. தொடர்ச்சியாக -20 டிகிரி வெப்பத்தை விட குறைவான நிலையில் இதனைப் பாதுகாக்க தவறினால் உடனடியாக கெட்டுப் போய் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிடும். இருந்தாலும் இதனை தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல் என்று கூறலாம். அமெரிக்காவில் செலுத்தப்படும் இரண்டே இரண்டு வகை தடுப்பூசிகள் (Pfizer, Moderna) மட்டும்தான் இந்த வகையை சேர்ந்தது. இந்தத் தடுப்பூசிகள் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை. 

இவற்றில் எந்தத் தடுப்பூசி சிறந்தது?

  • ஊடகங்களில் ஒவ்வொரு விதமான தடுப்பூசியும் 60-90% வரை வேலை செய்யும் என்று மக்களை தேவையில்லாமல் குழப்புகிறார்கள். இந்த சதவிகிதம் அனைத்துமே தொற்றின் லேசான அறிகுறியை தடுக்கும் விகிதம் மட்டும்தான். ஆனால் இவை அனைத்து தடுப்பூசிகளும் அதி தீவிர தொற்றை தடுப்பதில் 100% சிறப்பாக வேலை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டு பின்பு நோய்த் தொற்று ஏற்பட்டால் கூட அதனால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.
  • எந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வது என்று மூளையை கசக்கி கொள்வது முற்றிலும் தேவையில்லாத ஒரு செயல். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் நோய்த்தொற்றின் தீவிர பாதிப்பை தடுக்க வல்லது.
  • மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே வேறுவேறு விதமான தடுப்பு மருந்துகளை நாம் பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறோம். இவை இன்றோ நேற்றோ உருவானதல்ல. சொல்லப்போனால் கடுமையான வழிகளில் தடுப்பு மருந்து செலுத்திக் கொள்வதை விஞ்ஞானிகள் சமீப காலத்தில் மிகவும் எளிமையாக்கி இருக்கின்றனர். அதனால் எந்த ஒரு தேவையற்ற சிந்தனையும் இல்லாமல் பாதுகாப்பாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.
  • நோய்த் தொற்றில் இருந்து விடுபட தனி மனிதனோ இல்லை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது வேலை செய்யாது. மொத்த உலகத்திலும் உள்ள பெருவாரியான மக்களும் ஒன்றுபட்டு விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே நாம் இதனை வெல்ல முடியும்.
  • நோய்த் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர், செவிலியர் முதற்கொண்டு அனைத்து மருத்துவப் பணியாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து உலகத்தை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களது போராட்டம், ஒரு ராணுவ வீரன் யுத்தத்தில் காட்டும் வீரத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. நாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டினால், மருத்துவப் பணியாளர்களின் தியாகத்தை வீணடித்து விடுவது போல் ஆகிவிடும். அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
  • தடுப்பூசி கிடைக்கும் வரையில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பொறுப்பாக கடைபிடிக்க வேண்டும்.
  • தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு கூட பெருவாரியான மக்கள் தொகை தடுப்பூசி இட்டுக் கொள்ளும் வரை சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்று பிரிவினை இல்லாமல் மனித குலத்தை கொரோனா நுண்கிருமி அழிக்கிறது. அதனை எதிர்கொள்ள நாமும் எந்த ஒரு பிரிவினையும் இல்லாமல் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -