பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 31

வாழைத் தண்டுக்குப் பொன்பூசிக் கொண்டாடினாய்…!!!!!!

- Advertisement -

கிறக்கத்தில் இருந்த நம் எஸ்.பி.பி என்ன செய்கிறார் என்றறிய நீங்கள் எல்லோரும் ஆவலாய் உள்ளீர்கள்தானே? கிறக்கத்தில் இருப்பவரைக் கண்களைத் திறந்துகொண்டு கனவுகாண வைப்பதும் , அன்றேல் மகிழ்வுமலையின் கொடுமுடியில் ஏற்றி ஆட்டம்போட வைப்பதும் அவரவர் மனத்தின் பணி. 

தனக்குப் பிடித்த பெண்ணுடன் ஆடிப்பாடி மகிழும்போது பாடுகின்ற பாட்டும் கொண்டாட்டமாய் இருக்கவேண்டும் என்றுதானே எந்த ஆணும் விரும்புவான்! கொண்டாட்டமாய்ப் பாடுவதற்காகவே அவன் பாட்டினை நம் பாடும்நிலாவிடம் கொடுத்துவிட்டான்.. இதுவொரு தனிப்பாடல். ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அழகினைப்புகழ்ந்தும் வர்ணனைகள் செய்தும் பாடியிருந்தாலும் ஆண் பெண்ணைப்பற்றி பாடிய பாடல்களே மிகுதி. எவ்வளவுதான் மழை பொழிந்தாலும் கடல் நிரம்பி வழிவதில்லையே.. பெண் எப்போதுமே கடலானவள்… !

தனிப்பாடல் கோலோச்சுதலிலேயே பல பரிமாணங்களைக் கொண்டுவந்தவர் நம் பாடும்நிலாதான். ஒவ்வொரு பாடலுக்கும் அவரின் குரல் ஒவ்வொரு மாயவலை பின்னும். இப்பாடலிலும் அதேபோலத்தான்.. அந்த மாயவலைக்கென்று தனித்துவமான மாயம் இருக்கின்றது. ஆம். அவ்வலையை யாரும் நம்மீது வீசவேண்டாம். நாமே அவ்வலைக்குள் சென்று இன்பமாய்ச் சிக்கிக்கொள்வோம். குரல்வளையா- குரல்வலையா என்று வியக்குமளவுக்கு மாயவலை பின்னுவதில் மாமன்னன் அவர்.!

இப்பாடலின் மாயவலைக்குள் செல்லலாம் வாருங்கள்… ஒரு குத்தாட்டம் போடும் பாடல் என்பதால் சற்றே அதிர்வெண் கூட்டிய மென்மையில் பாடுகிறார். ஆங்காங்கே மெலிதான இழுத்தலும் பட்டென்று வெட்டுதலும் சற்றே தொனி உயர்த்துதலும் என எல்லாவற்றையும் ஒருங்கே தன் குரல்வளையினின்று வெளிப்படுத்தி நம்மை அயர்த்துகிறார். இதுதான் முதல் சரணம்… !

பாரி தேருக்கு முல்லைக்கொடி

வாரி அணைக்கத்தான் வந்தேனடி

வாடி இளைச்சுத்தான் போனேனடி

வாடைக் காத்துக்குத் தங்கச்சி நீ..  –

இளைச்சுத்தான் போனேனடி என்று அவர் ஆதங்கத்தினைத் தோய்த்துப் பாடும்போது கேட்கும் நமக்கே ஐயோ என்று ஏக்கம் வருகிறது. அதற்கேற்றவாறே இப்பாடலின் ஒவ்வொரு வரியையும் செதுக்கியிருக்கிறார் நம் டி.ஆர்…

சாமத்திலே கனவு ஹ ஹ ஹ

ஜாடையிலே நிலவு ஹோ ஹோ ஹோ

சாமத்திலே கனவு ஜாடையிலே நிலவு

தூக்கம்தான் கலைந்ததடி

ஏக்கம்தான் விளைந்ததடி…

இதில் ஏக்கம்தான் தூக்கம்தான் என்ற சொற்களை அழுத்திப்பாடுகிறார்.. ஆனால் அடுத்த சொல்லை மெலிதாகப் பாடுகிறார். சட்டென்று வன்மையும் சட்டென்று மென்மையும் எவ்வாறு அவரால் மாற்றிப்பாட முடிகிறது? இக்கேள்விக்கு விடையே இல்லை.. அதெல்லாம் அவரின் தனித்துவம் அவ்வளவுதான்.. வேறெந்த ஆய்வும் வெற்றியைத் தராது.

இடை நூலு இளைப்பாறு

தண்டைக்காலு ஜதி சேரு

வாழைத் தண்டுக்குப் பொன்பூசிக் கொண்டாடினாய்

வண்டு கண்ணுக்குள் அமுதத்தை ஏன் தூவினாய்?

அட அட அட..! எத்துணை அழகான உவமைகள்.. மொழிக்காதலும் மொழிப்புலமையும் ஒருங்கே சேராவிடில் இவ்வாறான எழுத்துத்தவம் யார்க்கும் கைகூடுவதில்லை. டி.ஆர்க்கு இதற்கென தனிவணக்கம் சொல்லவேண்டும். மெதுவாக ஓடும் சிற்றோடை நீர்போன்ற இசையில் முதலிரு வரிகளைப் பாடுகிறவர் அடுத்து வாய்க்கால் நீர்போல சலசலவென அடுத்த இருவரிகளைப் பாடுகிறார்…

மெல்லிய இடையென்பதால் அவர் குரல்வளை மெல்லிய ஆடை உடுத்திக்கொண்டதோ பாடும்போது..! அத்துணை மென்மையாகச் சொன்னால் இளைப்பாறாமல் எங்கேதான் போவது!

தார தப்பு மேளங்கொட்ட

ஊற வச்சி தாளம் தட்ட

என்ற வரிகளை உணர்வுக்குவியலில் நின்று அடித்தொண்டையிலிருந்து பாடுகிறார்..  ஆனால் அடுத்த வரியைப்பாடும்போது அப்படியே மகிழ்வும் நிறைவும் காதலும்  குரலில் கலந்துவிடுகிறார்.

அம்மன் கோவில் தேராட்டமே

அசைஞ்சா நெஞ்சில் போராட்டமே

என்று காதலோடு மயக்கவிடுமாறு பாடுபவர் அடுத்து என்ன செய்கிறார்?

ஆள வதைக்கும் என் அன்னமே –

என்னும் வரியை இரண்டாம்முறை பாடும்போது காற்றில் மிதக்கும் பட்டத்தை நினைவூட்டுகிறது அவர் குரல். பறக்கிறதா மிதக்கிறதா? என்று நமக்குத்தான் குழப்பம் வருகிறது.

குஞ்சத்தோடு சடையும் போட்டு

கூறை நாட்டு சேலை கட்டு

உடன் மஞ்சத்தில் கொஞ்சத்தான்

நெஞ்சத்தில் அலைபாயுது

மலர் கொத்துன்னை அள்ளத்தான்

நாளெல்லாம் மனம் வாடுது

பட்டத்தின் நூலினைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுண்டினால் பட்டம் அங்கும் இங்குமாய் , மேலும் கீழுமாய் வெட்டி வெட்டிப் பறப்பதைப்போல அடுத்துவரும் வரிகளைப் பாடுகிறார். எப்படிப் பாடினாலும் அவர் சொற்களைப் பலுக்குவதில் கொஞ்சமும் பிசகுவதேயில்லை.. பாடல்களில் அவரின் மொழியாளுமை எப்போதுமே கொடிகட்டித்தான் பறக்கும்…

இப்பாடலில் மூன்று சரணங்கள். மூன்று என்பதாலேயோ என்னவோ இப்பாடலில் மிகுதியாய்ப் பொங்கிவழிவது மூன்றாம்பால்தான்..! அதிலும் பொங்கிவழியும் பாத்திரம் பாடும்நிலா என்னும் அமுதக்குடமல்லவா! காதினுள் நுழைந்து இதயத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்துகொள்ளும் காந்தக்குரல் அது… !

தொட்டுக் குலுங்காத பூச்சரமே

தோகை மயிலுக்கு இலக்கணமே

கட்டுக்கடங்காத இளமனசு

கட்டுக்குழலோடு மல்லியப்பூ

லகர ழகரங்கள் அடுத்தடுத்து வரும்போதெல்லாம் நான் காதைத்தீட்டிக்கொண்டு தான் கேட்பேன்.. எங்கேனும் பிசிறடிக்கிறதா? என்று குறைகாண அல்ல.. எப்படி இவ்வளவு அழகாகத்  திருத்தமாக, துடைத்துவைத்த குத்துவிளக்கினைப்போல பளிச்சென்று சொற்களைப் பலுக்குகிறார் என்று வியப்பதற்காகவே..!

வச்சாளே ராசாத்தி ஹ

விளக்கணைக்கும் பொழுதாச்சு ஓஹோ

வீட்டுக்கதவெல்லாம் கண் மூடுமோ

கண்ட கனவெல்லாம் நனவாகுமோ –

இங்கேயும் கவிஞரின் புலமையை மெச்சாமல் கடக்க இயலவில்லை. வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் பாதுகாப்பாக வைக்கவும், உள்ளே இருப்பவை,நடப்பவை வெளியே தெரியாமல் இருக்கவும் நாம் கதவால் வீட்டைப் பூட்டுவோம்.. அந்தக் கதவுக்கே கண் முளைத்துவிட்டால்? அம்மாடியோ.. என்னவொரு கற்பனை!!!

இதழ் ஊற இருள் சூழ

நங்கை நாண நடை வாட

நாண எனும்போது மெல்லிழையாய்க் கேலியையும் வாடா எனும்போது குரலை வாடவும்விட்டுப் பாடுகிறார். குரல்களில் உணர்வுகளைக் கடத்திக் கோட்டை கட்டுவதில் நம் எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும் எப்போதுமே முதன்மையானவர்கள்..!

புது அச்சத்தை முகத்தோரம்

படிக்கத்தான் அச்சாக்கினாள்

இங்கே பெண்ணின் அச்சமானது தற்காலிகமானது என்றுணர்ந்ததால் , அவ்வச்சத்தைப் போக்கும் வழியையும் அறிந்திருந்ததால் அதைச்சொல்கையில் பொங்கும் மகிழ்வுடன்தான் சொல்கிறார். அச்சத்துடன் சொல்லவில்லை பாருங்கள்.

மது வெள்ளத்தில் மூழ்கத்தான்

மொத்தத்தில் ஆளாக்கினாள் ஹோய் –

ஒரு பெண்ணால் மதுவெள்ளத்தில் மூழ்க நேர்ந்தது என்று களிப்பின் போதையில் அவர் பாடிவிட்டு நம் எல்லோரையும் அவர் குரல் வெள்ளத்தில் மூழ்கடித்துவிடுகிறார்.

இப்போது பல்லவியைப் பார்க்கலாம் வாருங்கள்.

ரொம்ப  நாளாக ஆசை

நீ பக்கம் வாராயோ பேச –

இயல்பான ஏக்கத்தோடு முதல்வரியைப் பாடிவிட்டு அடுத்து சட்டென்று தூண்டிலை வீசுவதுபோல் நீ என்ற சொல்லைப் பாடுகிறார். தூண்டிலைப் போட்டு ஒரு கணம் காத்திருந்து அடுத்து அதை மேலே சுண்டியிழுப்பதைப்போல நீ என்று சொல்லுக்கும் பக்கம் என்ற சொல்லுக்குமிடையே ஒரு சுண்டுதலைப் புகுத்திப் பாடுகிறார்.

பட்டு ரோசாப்பூ உனைப்பாக்கவே

பாழும் உடம்புதான் நெருப்பானதே

எஹ் எஹ் ஹே ஹே ஹே –

பாடல்களில் ரோஜா என்று பாடுவதைக்காட்டிலும் ரோசா என்று பாடும்போது அச்சொல்லுக்கென்று தனியீர்ப்பு வந்துவிடுகின்றது. மழைபட்டதும் கிளர்ந்தெழுகின்ற மண்வாசனைபோல அது நம் மனத்திற்குள் ஒரு மணத்தை முழுவதுமாய் நிறைத்துவிடும் உணர்வினைக்கொண்டது. அவ்வாறான சில பேச்சுமொழிச் சொற்களைப் பாடும்போதெல்லாம் பாடும்நிலா நம் கைகளில் தவழ்கின்ற பிள்ளைநிலாவாய் உறவாகிவிடுவார்.

இராகம் தேடும் பல்லவி என்ற படத்தில் வரும் குத்துப்பாட்டுவகை இது. இப்பாடலில் ஆடியிருப்பவர் இராஜீவ்.. இப்பாடலைக் கூர்ந்து கவனித்தால் பல இடங்களில் நம் எஸ்.பி.பியின் குரல் இராஜீவ்வின் குரலைப்போலவே இருக்கும். ஏனெனில் அவர் எஸ்.பி.பி ! 

காதல்சொற்களால் கோட்டைக்கட்டித் தன் காதலியுடன் குத்தாட்டம் ஒன்று போட்டவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் ? ஏதோ அறிவியல் பாடம் நடத்துபவர்போல என்னென்னவோ சொல்கிறார்.. அட ஆமாம்.. வெப்பம் மேலேற மேலேற பால் பொங்கும் என்று ஒரு பெண்ணுக்கு அறிவியலை விளக்குகிறார். எதையோ அறியத்தான் இவ்வறிவியல் செய்தியினைத் தூண்டிலாக மாற்றியிருக்கிறார். என்னவென்று வரும் செவ்வாயன்று தெரிந்துவிடப்போகின்றது. காத்திருங்கள் மக்களே.!

தேசிங்கு இராசாவின் வானில் மோகமும் தாகமுமாய்ப் பாடும் நிலா!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

2 COMMENTS

  1. இந்தத் தொடரை ஒவ்வொரு வாரமும் எதிர்நோக்கி காத்திருப்போரில் நானும் ஒருவன். கங்கை அமரன், இளையராஜா, எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி,ஆர்வி உதயகுமார்,கடந்த சில வாரங்களாக டிஆர். பாடலாசிரியர்களின் கற்பனை வளம், மொழி வளம், பாடகர்களின் தனித்துவம் அனைத்தையும் ஒவ்வொரு வாரமும் மிகத்தெளிவாகவும், நம்மை பாடல் வரிகளோடு பழைய நினைவுகளோடும் பயணிக்கச் செய்யும் கவிதாயினி பிரபாதேவி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ????

  2. அடடா.. இந்தப் பாடலையே இப்பொழுதுதான் முதன்முறையாக கேட்கிறேன்.

    நல்ல பாடல் அருமையாக பாடியிருக்கிறார் நம் பாடும்நிலா சற்றே அதிர்வெண் கூட்டி மென்குரலில் இனிமையாய் ஒரு துள்ளல் பாடலாக ‘கூட்டத்துல கோயில் புறா’ என்ற பாடலை பாடியிருப்பார் அதே முறையில் உள்ளது இப்பாடல் .பொதுவாக துள்ளல் பாடல் என்றால் சற்றே குரலில் மாறுதல்காட்டிப் பாடும் நம் பாடும்நிலா மேற்கண்ட பாடல்களில் தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஓர் இனிமை கலந்த மென்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ” எவ்வளவுதான் மழை பொழிந்தாலும் கடல் நிரம்பி வழிவதில்லையே பெண் எப்போதும் கடலானவள்” தங்கள் சிந்தனை என்று நினைக்கிறேன் உண்மைதான் அதனால்தான் பெண்களின் மன ஆழத்தை யாராலும் கண்டறிய முடிவதில்லை போலும்.

    தங்களைப் போன்றுதான் நானும் நம் பாடும்நிலாவின் பாடல்களில் ல’கர ள’கர ழ’கர ஒலிப்புகள் எவ்வாறு உள்ளன என்று கூர்ந்து கேட்பேன் குறைகாண அல்ல அந்த ஒலிப்பு முறைகளைக் கேட்டு வியக்கத்தான்.

    ‘இடைநூலு இளைப்பாறு’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் எனக்கென்னவோ ‘எடை பாரு’ என்றுதான் பாடுவதாகத் தோன்றுகிறது.

    தூண்டில் முள்ளைச் சுண்டியிழுக்கும் உவமை அருமை..

    கதவுக்கு கண்கள் என்பது எனக்கென்னவோ வாயிற் கண்ணுக்கு கதவுகள்தான் இமைகள் என்றும் இமைகள் கண்களை மூடிக்கொண்டால் நடக்க வேண்டியது நடக்கும் என்று டி.ஆர் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.

    அருமையான செம்மையான ஆய்வுப் பதிவு.. வாழ்த்துகள் அக்கா..

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -