உடைக்கும் செய்திகள்

சிறுகதை

- Advertisement -

“உமா… பாத்தியா நான் சொன்னேன்ல… அனேகமா சிங்கப்பூர்லையும் ஊரடங்கு வரப்போகுதாம்”

“உங்களுக்கு வேற பேச்சே கிடையாதா வரும் போதே இதானா?”

“உனக்கென்ன வீட்டுக்குள்ள சந்தோசமா இருக்க. வேலைக்கு போற எங்களுக்கு தான் பக்கு பக்குன்னு இருக்கு”

“இந்த நியூஸ் பார்க்காம இருந்தாலே ஒரு பக்கும் இல்லை. “

“உன்னை மாதிரியே தத்தியா இருக்க சொல்றியா? கிளம்பு வீட்டுக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வந்துருவோம். அப்பறம் கடையெல்லாம் அடச்சுட்டா ஒன்னும் கிடைக்காது.”

சங்கர் என்னுடைய கணவர் உலக விசயங்களை விரல் நுனியில் வைத்துக்கொண்டு அலைபவர். தத்தி என்று என்னை அழைப்பதன் மூலம் அறிவாளியானவர். திருமணமான புதிதில் எரிச்சல் வரும். பின் அவர் அப்படித் தான் என்று விட்டுவிட்டேன்.

“நந்தா தூங்கிட்டு இருக்கான்ங்க. எழுந்தவுடனே போகலாம்”

எங்கள் மூன்று வயது மகன் நந்தா. உலக அழகன். எப்போதும் அவன் அப்பா அலுவலகத்தில் இருந்து வரும் வரை கதவருகிலேயே காத்துக்கொண்டிருப்பான். இன்று தூங்கிவிட்டான். அலைபேசியை அவரிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும் திறமை அவனுக்கு மட்டுமே இருந்தது.

அவசரமாக அணிந்திருந்த கால்சட்டையை கழற்றி எறிந்துவிட்டு துண்டைக்கட்டிக்கொண்டு கழிப்பறைக்குள் ஓடினார்.

“அங்க போகைல கூட போனோட தான் போவிங்களா? “

எங்கள் வீட்டின் ஊமைச்சங்கு நான். என்ன ஊதினாலும் அவருக்கு கேட்பதேயில்லை. அரைமணிநேரம் கழித்து வந்தார். நானும் நந்தாவும் தயாராக இருந்தோம்.

“நந்தா குட்டி கிளம்பிட்டீங்களா?” கால்சராய் ஒன்றை எடுத்து மாட்டிக் கிளம்பினார்.

“போதுங்க…” எவ்வளவு தடுத்தும் கேட்காமல் வருடத்திற்கு தேவையானதை கடைத் தள்ளு வண்டிகுள் நிறைத்தார். அவற்றில் பல காலாவதியாகி குப்பையை அலங்கரிக்கும் என்று தெரிந்தும் ஊமைச்சங்கு ஊதிப் பயனில்லை என்று விட்டுவிட்டேன்.

சிங்கப்பூரிலும் ஊரடங்கு அமலானது. அவசிய தேவைகளுக்கு மக்கள் சில கட்டுப்பாடுகளோடு வெளியே அனுமதிக்கப்பட்டனர்.

எங்கள் மூன்றறை வீட்டின் ஒர் அறை நந்தாவின் பொம்மைகளுக்கு. இன்னொன்று படுக்கையறை. மூன்றாவது அறையில் சங்கர் பால்காய்ச்சிக் கொண்டார். ஆரம்பத்தில் “இனிமேல் ஒர்க் ப்ரம் ஹோம். ஜாலி தான்” என்று சந்தோசமாகத் தான் குடிபுகுந்தார். நாள்கள் ஓட உணவு இடைவேளைகளில் மட்டும் வந்து போகும் அந்நியனாகவே ஆகிப்போனார்.

“இவளோ வேலையா குடுப்பாணுக” இப்படித்தான் தொடக்கத்தில் அவர் முதலாளியைத் திட்டிகொண்டிருந்தேன். ஆனால் சங்கர் தரும் கொரோனா புள்ளி விவரங்கள் என் எண்ணத்தை மாற்றியது. பாவம் அவர் முதலாளி செய்தி பார்ப்பதற்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறார்.

அவர் நடத்தைகளும் வெகுவாக மாறியது. நந்தாவிடம் அதிகமாக எரிந்துவிழுந்தார். எனக்கு ஆத்திரமாக வந்தது

“அவன் என்ன செய்வான் சின்னப் பையன் அவனும் வீட்டுக்குள்ளேயே தானே இருக்கான்” ஊமைச்சங்கு தான் ஆனாலும் ஊதியதில் ஒரு நிம்மதி.

ஒருநாள் அவர் அறைக் கதைவைத் தட்டினேன்.

“சாப்பாட தட்டுல எடுத்துட்டு வந்து கதவுக்கு வெளில வச்சுட்டு போ” உள்ளே இருந்த படி கத்தினார்.

“என்னங்க என்னாச்சு? வெளில வாங்க”

“சொன்னா கேட்க மாட்டியா? என்னை கொன்னுறாத? வச்சுட்டுப் போ. “

மறுநாள் அலைபேசியில் அழைத்தார்.

“வீட்ல இருக்க பாலித்தீன் பை நாலஞ்சு பெரியதா எடுத்துக்கிட்டு வந்து என் கதவுக்கு வெளில வை”

இவருக்கு என்னாச்சு வேறு எதுவுமா. அச்சம் நெஞ்சுக்குள் குத்துசண்டையிட்டது. உடல் நடுங்கியது. ஒரு பதற்றத்துடன் “என்னங்க ப்ளீஸ் என்னாச்சு சொல்லுங்க. ரொம்ப பயமா இருக்குங்க”

“என்னை எதுவும் கேட்காத. நான் சொன்னதை மட்டும் செய் ப்ளீஸ்…” என்றார்.

கதவு திறந்து ஞெகிழிப்பைகள் விருட்டென உள்ளே சென்றன.

“நந்தாவ கூட்டிகிட்டு ரூமுக்குள்ள போ. திருப்பி சொல்ற வரை வெளில வரக்கூடாது”

எனக்கு இப்போது ஓரளவுக்குப் புரிந்தது. கதவு இடுக்கு வழியாகப் பார்த்தேன் ஞெகிழிப்பைகளைச் சுற்றிக்கொண்டு விண்வெளி மனிதர்போலச் சென்றார்.

999க்கு அழைத்து நடந்தவற்றைக் கூறினேன்.

செவிலியர்களும் மருத்துவ உதவியாளர்களும் சங்கரின் அறைக்கதவைத் தட்டினார்கள். “உங்களுக்கு உதவி செய்யத் தான் வந்திருக்கோம். ப்ளீஸ் கோவாப்ரேட் பண்ணுங்க”

சங்கரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப் பட்டது.

“36.7 நார்மல் தான், அப்பறம் ஏன் இப்படி பிகேவ் பண்றீங்க?”

“நோ டாக்ட்டர். நான் எல்லாம் படிச்சுட்டேன். ஸி…ஸி… இங்க பாருங்க என் கால்ல” சிவப்பு சிவப்பு புள்ளிகளாக இருந்தது. “இது கூட கொரோனா சிம்டம் தான். தலை சூடாத் தான் இருக்கு. தொண்டை அரிச்சுக்கிட்டே இருக்கு. மூச்சு விட கஷ்டமா இருக்கு” மூச்சு விடாமல் படபடத்தார். “ஐ நோ எவ்ரிதிங். கண்டிப்பா எனக்கு கொரோனா இருக்கு” அடித்துச் சொன்னார்.

“உங்க இரத்த மாதிரியையும் சளி மாதிரியையும் எடுத்துட்டுப் போறோம். நாளைக்கு ரிசல்ட் வந்துரும் அப்போ நீங்க நம்புவீங்கள்ள?”

“நீங்க தான் நம்பனும் டாக்டர்” சொல்லி முடித்துப் பெருமையாகப் பார்த்தார்.

மறுநாள் காலை அவர் அறைக் கதவைத் தட்டினேன் திறக்கவேயில்லை. காவலர்கள் வந்து தான் கதவை உடைக்க வேண்டியிருந்தது. வெறித்த கண்கள் விட்டத்தை நோக்கியபடி அசைவற்றுக் கிடந்தார்.

நந்தாவை இறுகக் கட்டிக்கொண்டேன். நெஞ்சுக்குள் காற்று பெருகிக்கொண்டே இருந்தது. அடக்க அடக்க விழிகளைப் பிய்த்துவிடுவது போல் கண்ணீர் அழுத்தி தள்ளியது. காவலர்கள் சொல்லப் போகும் செய்தியைக் கேட்க மறுத்தது காது.

அன்று வந்த கொரோனா ரிசல்ட் மட்டுமல்ல இறுதிவரை அவர் எண்ணங்களும் எதிர்மறையாகவே இருந்துவிட்டன…..

– முற்றும்

– இது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் மாதாந்திர கதைக்களப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -