மாஸ்டர் – விமர்சனம்

- Advertisement -

கடந்த 10 மாதங்களாக எந்த ஒரு பெரிய பட்ஜெட் தமிழ்ப் படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்ற குறையைப் போக்குவதற்காக இந்தப் பொங்கலுக்கு வெளியாகியுள்ள படம் தான் மாஸ்டர். விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இரண்டு பெரிய ஹீரோக்களும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்த படம் மூலம் மக்கள் தியேட்டருக்கு வருவது மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.


இந்த படத்தில் விஜய் ஹீரோ என்று கூறப்பட்டாலும் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் விஜய் சேதுபதியின் பார்வையிலேயே செல்கிறது. அதனால், மாஸ்டரை விஜய் சேதுபதி படம் என்றும் அதில் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூட கூறலாம். பல்வேறு வகையில் இந்தப் படம் ஒரு சராசரி படத்தை விட வேறுபட்டு இருக்கிறது. முக்கியமாக, படத்தில் தேவையில்லாத காதல் காட்சிகளோ டூயட் பாடல்களோ இல்லவே இல்லை. படம் முழுவதிலும் அனிருத்தின் கைவண்ணத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை புத்துணர்வாக இருக்கிறது.  படத்தின் முதுகெலும்பாக விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு இருக்கிறது. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை மற்றவர் மிஞ்சும் அளவிற்கு அருமையாக நடித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, விஜய் சேதுபதி குளிக்கும் போது தலையில் கொம்பு வைத்துக் கொள்ளும் காட்சியை சொல்லலாம். நடிப்பு என்று தெரியாத அளவிற்கு பாத்திரத்திலேயே ஒன்றிப்போய் உள்ளார். ஒரு 25 வயது வாலிபனை போல் விஜய் துடிப்புடன் நடித்துள்ளார். இவர்கள் இருவரைத் தவிர படத்தில் அதிகமாக நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள பாத்திரம் அர்ஜுன் தாஸ் உடையது. அவரும் தன் பங்கிற்கு நன்றாக நடிக்க முயன்றுள்ளார். படத்தில் சீர்திருத்தப் பள்ளிகளில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை அனைவருக்கும் புரியும் விதத்தில் படம் பிடித்து காட்டியுள்ளார்கள்.


இது ஒரு செமி சூப்பர் ஹீரோ படம்.  அதென்ன செமி சூப்பர் ஹீரோ படம்? உலகத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் பெரும்பாலானவை யதார்த்தமான படமாகவோ இல்லை அசாத்தியமான விஷயங்களை செய்யக்கூடிய ஒரு சூப்பர் ஹீரோவின் படமாக இருக்கும். மாஸ்டர் இவை இரண்டையும் கலந்து ஒரு எதார்த்தமான கதையில் அசாதாரணமான ஒரு ஹீரோவும்  சர்வ வல்லமை கொண்ட ஒரு வில்லனும் மோதிக்கொள்வது போல அமைத்துள்ளார்கள். அப்படியானால் இது ஒரு மெகா ஹிட் திரைப்படமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் ஆணிவேராக இருக்கக்கூடிய திரைக்கதையை மிகவும் சொதப்பி இருக்கிறார்கள். சுமார் 5-6 டைரக்டர்கள் தனித்தனியாக ஒரு குறும்படத்தை எடுத்து இறுதியில் அதை ஒட்ட வைத்தால் எப்படி இருக்குமோ அதே போல் தான் திரைக்கதையை அமைத்துள்ளார்கள். இதனை செமி சூப்பர் ஹீரோ படம் என்று கூறிவிட்டதால் படத்தில் லாஜிக்கை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் குறைந்த பட்சமாக படத்தில் சொல்லப்படும் அவர்களுடைய லாஜிக்கில் ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டுமல்லவா? அது கூட இந்த படத்தில் இல்லை. உதாரணமாக, படத்தில் வரும் கல்லூரியில் மாணவர் தேர்தல் நடக்கிறது. மாணவர் தேர்தலில் போட்டி போடும் ஒரு பெரும் புள்ளியின் மகன் தேர்தலில் தோற்றவுடன், பெரும்புள்ளியின் அடியாடகள் மொத்த கல்லூரியையும் அதகளப்படுத்துகிறார்கள்.  அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த குடும்பத்திலுள்ள அந்த மகன், படத்தின் இரண்டாம் பாதியில், நாகர்கோயில் லாரி சங்க தலைவராக முயலும் லோக்கல் தாதாவான விஜய் சேதுபதியால் கொல்லப்படுகிறார். தேர்தலில் தோற்றதற்கே ரகளை செய்த தந்தை, மகன் இறந்ததும் படத்திலிருந்து எங்கோ காணாமல் போய் விடுகிறார். பல மாதங்களாகவே நாகர்கோவிலில் வாழ்ந்துவரும் விஜய், திரைமறைவில் வாழ்ந்துவரும் வில்லனை பார்க்க முடியாதது போல் காட்டி வருகிறார்கள். ஆனால் மற்றொருபுறம் விஜய் சேதுபதி லாரி சங்க தலைவராக பொது வாழ்க்கை வாழ முயன்று வருகிறார்! எவ்வளவு போலீஸ்காரர்களும் கட்டுப்படுத்த முடியாத அடாவடியான சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள், விஜய் கண்கலங்கி ஒரு டயலாக் பேசியவுடன் மனம் திருந்தி விடுகிறார்கள். இவை அனைத்திற்கும் உச்சபட்சமாக லாரி வில்வித்தை சண்டையை வைத்துள்ளார்கள். 40 லாரிகளில் ரவுடிகளுடன் செல்லும் ஒரு கும்பலை, விஜய் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் ஒரு கன்வெர்ட்டிபிள் காரில் தொடர்ந்து வில்வித்தை விளையாட்டில் பயன்படுத்தும் வில்-அம்பை பயன்படுத்தி அனைவரின் கதையையும் முடிக்கிறார்கள். இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கும் வேளையில், மிகவும் அறிவாளியாக காட்டப்பட்டு கொண்டிருக்கும் நமது செமி சூப்பர் வில்லனான விஜய் சேதுபதி, அந்த 40 லாரியில் உள்ள ஒருவரை கூட தொடர்பு கொள்ளாமல் காத்துக் கொண்டே இருக்கிறார்.  இப்படி சொல்லிக்கொண்டு போனால் படத்தில் உள்ள முக்கால்வாசி காட்சிகளை கூற வேண்டும் என்பதால் கூறாமல் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். 


இந்தப் படத்தின் திரைக்கதையை ஒரு பாட்டாக கூறினால் எப்படி இருக்கும் என்பது தமிழ் படங்களிலேயே வந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தெய்வத்திருமகள் படத்தில் வரும் “ஒரே ஒரு ஊருக்குள்ள” பாட்டின் திரைக்கதையும் இந்த படத்தின் திரைக்கதையும் கிட்டத்தட்ட ஒரே வகைதான். கதைக்களம் மற்றும் கரு மட்டும்தான் வேறு. கீழே உள்ள காணொளிக் காட்சியை சொடுக்கி அந்த பாடலை ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்களில் சொல்லப்பட்ட இந்த திரைக்கதையை மாஸ்டர் படத்தில் சுமார் மூன்று மணிநேரம் எடுத்துள்ளார்கள். இப்படிப்பட்ட திரைக்கதையில் கூட பரபரப்பாக பார்வையாளர்களை உட்கார வைத்த விஜய் மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பை நாம் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். இருவரின் நடிப்பும் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என்று சொன்னால் மிகையாகாது. படத்தில் ஹீரோயின் வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காக சில காட்சிகளில் மட்டும் செயற்கையாக மாளவிகா மோகனன் வந்து போகிறார். கொரோணாவால் சுமார் ஒரு வருடம் திரையரங்கங்கள் மூடப்பட்டிருந்த பொழுதும் இந்த படத்தை OTTயில் வெளியிடாமல் திரையரங்கத்தில் வெளியிட்ட படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள். ஏனென்றால் இந்தப் படத்தின் முக்கிய அம்சமே பெரிய திரையில் கிடைக்கும் அந்த ஒரு அதிரடி effect தான். Cinematography மற்றும் Visual Effects குழுவினருக்கும் நமது பாராட்டுக்கள்.


கைதி போன்ற படங்களில் திரைக்கதையில் கச்சிதம் காட்டிய லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தை இயக்கினாரா என்ற சந்தேகம் படம் முழுவதும் நமக்கு வருகிறது. மொத்தத்தில், திரைக்கதையில் மட்டும் சற்று அக்கறை காட்டி இருந்தால் இந்த படம் ஒரு மெகா ஹிட் மாஸ் மசாலா படமாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும், பல காலம் கழித்து திரையரங்கம் வரும் ரசிகர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

  1. நடுநிலையான விமர்சனம். நல்ல விரிவான பார்வை.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -