பழைய ஒரு சிறிய காதல் கதை

கதையாசிரியர்: வைக்கம் முஹம்மது பஷீர்

- Advertisement -

ஒரு புரட்சிக்காரன். சிறிய இளைஞர் கூட்டத்திற்குத் தலைவன். கொள்கைக்காக பயங்கரவாதத்தைக் கைகொள்ளவும் துணிந்தவன். அவனுக்குக் காதல் வந்தால்? பொருத்தமாய் இருக்காதுதான். ஆனாலும் இளமை எதையும் சாத்தியப்படுத்தும் தானே. எல்லாவிதமான பசியும் தாகமும் நிறைந்த பருவத்தில், தொடங்கிய வேகத்தில் முடிந்து போன ஒரு காதல் கதைதான், மலையாளத்தில் வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய, ”பழைய ஒரு சிறிய காதல் கதை”.

கதையின் தலைப்பே கூறிவிடுவது போல இது கதைசொல்லியின் வாழ்வில் நடந்த ஒரு பழைய்ய்ய… சின்னஞ் சிறி…ய ஒரு அத்யாயமே கதை. பஷீரின் கதைகளில் பெரும்பாலும் அவரே நாயகன். கதைசொல்லியின் மனவோட்டத்துடனே செல்லும் கதை இலகுவாக நகர்ந்து சென்று சிறு புன்னகையோடு முடிந்து விடுகிறது. அந்தக் காலகட்டத்தைத் தாண்டி வந்த பலருக்கும் அவர் சொல்லும் அனுபவம் பரிச்சயமே. கடந்து போகும் மேகங்களாய் சில காதல்கள் கடந்திருக்கும். சில வேடிக்கையான செயல்களைச் செய்ய வைத்திருக்கும். அத்தகைய சம்பவங்களை நினைவடுக்குகளில் இருந்து எடுத்து ருசிக்கச் செய்கிறது இந்தக் கதை.

கதையின் தொடக்கத்திலேயே பஷீர் தருவது இளமைக் காலத்தின் மனவெழுச்சியையும் அதன் முரண்களையும் தான். இந்த உலகையே புரட்டி போடும் வேகத்தோடு செயல்படும் இளைஞன் ஒரு அழகிய பெண்ணைக் கண்டதும் புரட்சி இரண்டடி பின்னால் வாங்க, காதல் உணர்ச்சிகள் மேலெழும்ப அதன் பொருட்டு எதையும் செய்யத் துணிகிறான். இந்த மாற்றம் நிகழும் இடம் கவித்துவமானது. ஆனால் கதை நெடுக வரும் அங்கதம் அதனைக் குலைத்திராத வகையில் இரண்டையும் கலந்தே தருகிறார் பஷீர்.

பேனாவின் முனையிலிருந்து நெருப்பு மழை பொழியும் ஒரு லட்சியாவதியான கதைசொல்லி, ஒருநாள் தற்செயலாக காணும் ஒரு பெண்ணிடம் காதல் கொண்டு விடுகிறார். அந்தப் பெண்ணைச் சந்திக்க செல்லும் வழியில் ஏற்படும் தடைகளைப் பல ‘சாகசங்கள்’ செய்து கடக்கிறார். அந்த சாகசங்கள் அனைத்தும் இறுதியில் வீணாகிப் போக தன் சகாக்களிடையே மானம் போய்விடாமல் காக்க அவர் படும் பாடே கதை.

கதையின் கருவில் பெரிதாகப் புதுமை இல்லைதான். இன்றைக்கு ஒரு மீமில்(meme) அடக்கிவிடக்கூடியது தான் என்றாலும் பஷீர் தனது தேர்ந்த சொற்கள் கொண்டு அதனை ஒரு இனிய வாசிப்பு அனுபவமாக மாற்றுகிறார்.

சிறு வயதில் நாம் வெகு முக்கியம் எனக் கருதிச் செய்யும் பல செயல்களும் காலமாற்றத்தில் அர்த்தம் இழந்து விடுகின்றன. நிகழும் நேரத்தில் கடந்து விட முடியா பெரும் இன்னல் எனத் தோன்றுபவை கூடப் பின்னாளில் அற்பமானதாகி விடுகின்றன. உணர்ச்சிக் கொந்தளிப்பில் “சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்க” எண்ணி ஒரு இயக்கத்தை நடத்தி வந்தவரால் அதே சம்பவங்கள் நினைவு கூறப் படும்போது பகடி செய்ய முடிவதே இதற்குச் சான்று.

சுய எள்ளலோடு தன் வாழ்வின் சில பக்கங்களைப் புரட்டுவதோடு நமக்கும் அந்த நிகழ்வுகளைச் சுவையுறக் கடத்துகிறார் பஷீர். அந்த வகையில் ஒரு அழகிய வாசிப்பின்பத்தைத் தரும் இந்த “பழைய ஒரு சிறிய காதல் கதை”.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -