பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 24

பொட்டுவைத்த நிலவு புத்தம்புது உறவு..!!!!

- Advertisement -

முழுநிலவொளியினில் பைங்கிளிக்கு முத்தம் கொடுக்கலாமா? என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னேனல்லவா? கொடுத்தாரா இல்லையா? என்று பார்ப்போம் வாருங்கள்.

இவ்வுலகத்தின் ஆதிக்குடி நாம்தான்.. ஆம் நம் தமிழினம்தான் முதலில் தோன்றியது. அவ்வுலகம் எவ்வாறு தோன்றியது? அணுப்பிணைப்பின் மூலமாக நிகழ்ந்த பெருவெடிப்பு என்ற அளப்பரிய செயலினால் நமது சூரியக்குடும்பம் உண்டாயிற்று.. சூரியனை முன்னிலைப்படுத்தித் தத்தம் இயக்கங்களை ஒவ்வொரு கோளும் உருவாக்கிக்கொண்டது . சூரியன் என்பதை எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் அது ஒளியும் வெப்பமும் கலந்த ஓர் உடு. சூரியன் இல்லாதுபோனால் என்னவாகும்? குளிரில் உறைந்து இருளில் மடிந்து போவோம்.. ஆக நம் புவியின் வாழ்க்கைக்கே விளக்கேற்றி வைத்த பெருந்தெய்வம் சூரியனே!

பெரும்பான்மையாக நாம் நம் வாழ்வின் சுழற்சியை ஒளியை மையப்படுத்தித்தான் வைத்திருக்கிறோம். அதனால்தான் நற்செயல்கள் எல்லாவற்றிற்கும் உவமையாக ஒளியேற்றுதலைக் கூறுகிறோம். வெளியில் ஒளிதருவதற்காக இரு விண்விளக்குகள் பகலிலும் இரவிலும் இருந்தாலும் வீட்டுக்குள்ளே ஒளியேற்ற கண்டுபிடித்த ஒன்றுதான் விளக்கு. அதிலும் மங்களகரமான விளக்கு என்ற ஒன்றைக் கண்டுபிடித்து நம் அருள்நெறி வழிபாட்டில் அதை முதன்மையாக்கினோம். ஒளியை இறைவனாக வழிபடுகிறோம்.

சரி இதற்கும் பதிவுக்கும் என்ன தொடர்பு? ஒரு தலைவன் தன் தலைவியிடம் நீதான் என்வாழ்வில் ஒளியேற்றி வைக்கிறாய் என்று கூறுகிறான். அதை நம் எஸ்.பி.பியின் குரலில் கூறுகிறான்.

**** பல வண்ணப்பூக்கள் பாடுது பாக்கள்

அது ஏன் தேன் சிந்துது அது நீ பூ என்குது *****

இவ்வரியைப் பாடும்நிலா பாடுகையில் மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டிருந்தாலும் அதன்பின்னர் அதன் பொருளை ஆராய்ந்தேன். பூக்கள் ஏன் தேன் சிந்துது என்ற வரி, பூக்களின் கண்ணீர்தான் தேன் என்று என்னைக் கற்பனை செய்யவைத்தது. தலைவியைப் பார்த்து நீதான் தலையாய அழகிய பூ,  நாங்கள் கொஞ்சம் மாற்றுகுறைந்த பூக்கள்தாம் என்று மகிழ்கண்ணீரோடு  சொல்வதாக நான் நினைத்துக்கொண்டேன்.

இதுவொரு வழக்கமான மெல்லிசைப்பாடல் அல்ல. நமது டி.ஆர் எதிலும் மாறுபட்டு நிற்கவேண்டுமென்ற கொள்கையினைத் திரைத்துறையில் கடைபிடித்தவர். அவரது இசையும் அவ்வாறுதான்.. மாறுபட்டே இருக்கும். தலையை ஆட்டிக்கொண்டே கேட்கும் துள்ளலிசைப் பாடல்கள் பல இருக்கின்றன.. ஆனால் உச்சிமுதல் பாதம்வரை ஆட்டம்போட்டுக்கொண்டே கேட்கலாம் என்றவாறு துள்ளலிசையையும் மெல்லிசையையும் கலந்து சுவைமிகுந்ததாகக் கொடுத்திருக்கிறார். இம்மாதிரியான புதுப்புது பரிமாணங்களில் எல்லாம் தன்னை முழுமையாக ஒப்படைத்துப் புகுந்து விளையாடுவதுதான் நம் பாடும்நிலாவுக்குப் பிடித்தமான ஒன்று..

சரணத்தின் முதல்வரியை மெலிதாய் இழுத்தாற்போல பாடிவிட்டுப்பின் சட்டென்று அடுத்தவரியில் பட்டென்று வெட்டிவெட்டிப் பாடுகிறார். ஒரு கைப்பந்தினை முதலில் மேல்நோக்கி எறிந்துவிட்டு அது கீழே வரும்போது அதைத் தரையைத் தொடவிடாமல் சின்னசின்னதாகத் தட்டிவிடுவதைப்போல இருக்கிறது நம் எஸ்.பி.பி பாடும்விதம்.

**** சோலைக்கொரு வசந்தம்போல் நீ வந்தாய்

காளைக்கென்றும் சொந்தமென்று நீ ஆனாய் *****

தன்னிறைவில் மனம் நிரம்பியிருக்கும் ஒருவனைப்போல எஸ்.பி.பியின் குரலில் காதலின், அன்பின் நிறைவு வழிகிறது. ஒரு தாய்  தொட்டிலை ஆட்டுவதுபோல அந்த நிறைவின் வெளிப்பாட்டினை மென்மையில் பிசைந்து பாடியிருக்கிறார். இசைக்கருவிகளின் ஒலியானது மிக வேகமாகவும் பாடகர்களின் பாடும்விதம் மிதவேகமாகவும் அமைந்திருப்பது தான் நம் மனத்தைச் சொடுக்கியிழுத்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக இரண்டாம் வரியில் வருகின்ற ” நீ ஆனாய் ” என்பதைக் கொஞ்சமும் பிசகாமல், நீயானாய் என்று மாற்றிவிடாமல் நீ ஆனாய் என்றே பாடியிருக்கிறார்… அதுதான் எஸ்.பி.பி. இருவிதமாகப் பாடினாலும் பொருள் ஒன்றுதான்.. ஆனால் கவிஞரின் சொற்களுக்கு மதிப்பினைக் கூட்டும்விதமாகத்தான் எஸ்.பி.பியின் சொற்பலுக்கல் இருக்கும். நுண்ணிய பலுக்கலில் கூட ஒரு மின்னல்கீற்றைப்போல நம் மனத்தைக் கவர்ந்துவிடுவார்.

***** இரகசியக் கனவு தந்த இந்த இரவு

ஏன் நமை வாட்டுது? அது ஏன் சூடேற்றுது?****

இரண்டாவது சரணத்தைப் பாடுபவர் நம் ஜானகியம்மா. எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும் சேர்ந்துவிட்டால் அங்கே தென்றலுக்கும் சூடேறும், புயலும் குழையும்.. அந்தளவுக்கு இருவரும் குரலில் மாயம் செய்து மயக்கிவிடுவர். நம் எஸ்.பி.பியைப்போலவே அவ்வப்போது சிணுங்கல் சிரித்தல் என்னும் மயக்கொலிகளைச் சொற்களுக்கு நடுவிலும் சொற்களோடும் கலந்து தூவும் திறன் ஜானகியம்மாவுக்கும் உண்டு. இரண்டாம் சரணத்தின் வரிகளை மெல்ல சிரித்துக்கொண்டே தொடங்கிவிடுகிறார் ஜானகியம்மா. அதன்பிறகு பாடும்நிலா சும்மாயிருப்பாரா?

***** பொட்டுவைத்த நிலவு புத்தம்புது உறவு

இன்று ஏன் தடுமாறுது? சுகம்தான் பரிமாறுது..*****

பொட்டுவைத்த நிலவு  என்று பாடுகையில் நிலவுக்கு மெய்யாகவே பொட்டுவைக்க வேண்டுமென்று தோன்றிவிடும்தான்..  அடுத்தவரியில் ஏன் தடுமாறுது? என்று கேட்கையில், கேட்கும் நம் மனம் தடுமாறாமல் இருந்தால் அது வியப்பே. தடுமாறுது என்ற ஒற்றைச்சொல்லிற்குள் ஒருமூட்டைப் போதையைப் பொதிந்து பாடுகிறார்.

****** பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம் தான்

பைங்கிளி முத்தம்பெற கூச்சம் தான்

நானும் மெல்ல அள்ள நாணம் உன்னை கிள்ள ***

இம்மூன்று வரிகளிலும் அவர்களிருவரும் விளையாடியிருக்கும் அழகினைச் சுவைக்க நமக்கு ஆயிரம் மனம் வேண்டும்..  முத்தம்பெற என்று ஜானகியம்மா பாடுமிடத்தில் நம் எஸ்.பி.பி சிரிக்கும் அந்தச் சிரிப்பிற்கு உயிரை உலுக்கும் திறன் உண்டு என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? அடுத்தவரியில் நானும் மெல்ல அள்ள என்று பாடும்நிலா உருகித் ததும்புகையில் ஜானகியம்மா சிரிக்கிறார். இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு நம் மனத்தைக் கொள்ளையடிக்கின்றனர்…

***** குத்து விளக்காக குல மகளாக

நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

என் வானிலே நீ வெண்ணிலா

நட்சத்திரம் உன் கண்ணிலா

ஒளி சிந்த வந்த தேரே

என் உள்ளம்தனில் ஓடும் தேனே *****

இதுதான் பாட்டின் பல்லவி.. பல்லவியை முழுவதுமாக நம் பாடும்நிலாதான் பாடுகிறார். பல்லவியின் ஒட்டுமொத்த அழகையும் அந்தக் கடைசி இரு வரிகளில் உள்ளடக்கிப் பாடிவிடுகிறார் நம் எஸ்.பி.பி. குறிப்பாக அந்த ” ஒளி சிந்த வந்த தேரே ” என்னும் வரி சற்றே கடினமான இசைகுறிப்பினில் பாடப்பட்டிருக்கிறது. சிந்த வந்த என்ற இரு சொற்களையும் அடுத்தடுத்து கொஞ்சமும் பிசகாமல் பாடவேண்டும். அதைப்போலவேதான் வந்த தேரே என்ற இரு சொற்களையும் பாடவேண்டும். இரு சொற்களையும் சேர்த்திணைத்தும் பாடிவிடாமல் தனியே சொல்லும்போது  நெருடலில்லாமலும் பாடவேண்டும். கூர்ந்து கேட்டுப்பாருங்கள் அதை நம் எஸ்.பி.பி எத்துணைச் சிறப்பாகப் பாடியிருக்கிறார் என்று…

கூலிக்காரன் திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் ரூபிணி இணைந்துபாடும் இணைப்பாட்டு இது. பாடலையெழுதி இசையமைத்திருப்பவர் நம் தேசிங்கு இராஜேந்தர். ஒரேயொருமுறை கேட்டுவிட்டு வேறொரு பாடலைக் கேட்கலாம் என்று நினைத்தால் உங்களால் முடியாது.. திரும்ப திரும்பக் கேட்கத் தூண்டும் ஒரு பாடல் இது.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பிறந்த பிள்ளைகளுக்கு அதிலும் குறிப்பாக ஆண்பிள்ளைகளுக்கு அப்போதைய மனங்கவர்ந்த நாயகனாக உறுதியாக நடிகர் விஜயகாந்த் இருந்திருப்பார். அப்படி அவரின் படங்களை விரும்பிச் சுவைத்தவர்களுக்கெல்லாம் இப்பாடல் தேவாமிர்தம்போல…!!!

குத்துவிளக்காக வந்தவள் நீ என்று தலைவியைப் புகழ்ந்த எஸ்.பி.பி அடுத்து சந்தனமும் குங்குமமும் ஒன்றாகப் பாட்டில் எடுத்து வருகிறார்.  சந்தனமும் குங்குமமும் கொண்டு அலங்காரம் செய்தால்தானே குத்துவிளக்கு பேரழகாகப் பொன்னிறத்தில் மினுங்கும். அவர் செய்யும் அலங்காரங்களை அடுத்த செவ்வாயன்று காண்போம். அதுவரையிலும் அப்பாடல் என்னவென்று சிந்தித்துக் கண்டுபிடியுங்கள்…!

தேசிங்குராசாவின் இசையில் பாடும்நிலா அம்மானை பாடிவரும்…!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

2 COMMENTS

  1. மிகச் சிறப்பான அலசல் பிரபா..
    அன்பான வாழ்த்துகள்..

  2. மிகச் சிறப்பு.. தொட்டிலை ஆட்டும் தாய் தூக்கத்தில் கொண்டு போய் குழந்தையை விடுவதை போல்… தேடித்தேடி பாடல்களில் இருக்கும் கவிதையை கண்டறிந்து சொற்களால் கட்டமைத்து எல்லோருக்கும் மின்(கிறுக்கல்கள்) இலையில் பரிமாறும் கவிதாயினி பிரபாதேவி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..????☺️

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -