ஊழ் (19)

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

வீசி எறியப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் பஞ்சாயத்தார் முன் சிதறிக்கிடந்து அமுதனின் ஒழுக்கத்தைக் கூறுபோட்டது. கவிழ்ந்த தலை நிமிராமல் இருந்தான் அமுதன்.

“பொண்ணப் பெத்தவிங்க மாதிரியாடா இருக்கீங்க? கொஞ்சமாச்சும் பொறுமை வேணாம். அத்துவிடு அத்துவிடுன்னுட்டு இருக்கீங்க. சேர்த்து வைக்கிறதுக்கு தாண்டா பஞ்சாயத்து” சபாபதி கோபமாகக் கத்தினார்.

“தாலி கட்டுன புருஷன் அவன். அவன் பொன்டாட்டிட்ட பேசணும்ன்றான். அவனை ரெண்டு வார்த்தை பேச விடுங்க. அதுகளா அதுகளுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். அவன் தான் இப்போ அந்த வெள்ளக்காரி கூட தொடர்பில்லைன்னு சொல்றான்ல” அமுதனின் பக்கமிருந்து அவன் பெரியப்பா ஒருவர் பேசினார்.

“என்னய்யா சொல்றீங்க. அதுக பேசி ஒரு முடிவு பண்ணட்டும்” என்று மதுவின் அப்பா இருந்த பக்கம் பார்த்துச் சொன்னார் சபாபதி.

“அதெல்லாம் சரியா வராதுங்க. எனக்கு இவனை வேணாம் இவன் மூஞ்சிலையே முழிக்கப் பிடிக்கலைன்னு சொல்ற புள்ளைய எப்படிங்க இவன்கூட பேச விட முடியும். இவன் பாட்டுக்கு என்னுமாச்சும் பண்ணிபுட்டான்னா?”

“அப்பறம் என்னதான்யா செய்ய சொல்றீங்க?” என்றார் சலிப்புடன் சபாபதி.

“இப்போ கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தோப்புவீட்ல வச்சு உங்ககிட்ட பேசுச்சே. அந்த புள்ளை என்ன சொல்லுச்சு. வேணாம்ன்னு தானே சொல்லுச்சு. அத்து விட்ருங்க. அந்தப் புள்ளையால இனி இவன்கூட வாழ முடியாது. இந்தப் போட்டாவல்லாம் பாருங்க, இந்தக்காலத்துப் புள்ளைக இதெல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்குங்களா?”

ஆம் உண்மை தான். அந்த புகைப்படங்களைப் பார்த்த எந்தப் பெண்ணும் இப்படி ஒரு ஆணுடன் சேர்ந்து வாழமுடியாது. ஆனால் இது நேற்று எடுக்கப்பட்டதில்லை. அவளை ஏமாற்றி அவன் யாருடனும் சல்லாபிக்கவில்லை. என்றோ நடந்தது அதற்காக இன்று அவன் அவமானப்படுத்தப்பட வேண்டுமா? என்ற கேள்வி அவன் உட்பட அங்கிருந்த பலருக்கும் இருந்தாலும் அதை ஞாயப்படுத்தும் துணிவு எவருக்கும் இல்லை.

அவள் எங்கே? எங்கே? என்று அமுதனின் மனம் தேடிக்கொண்டிருந்தது.

‘இங்கேதான் எங்கோ இருக்கிறாள். இந்த சபாபதியுடன் சற்றுமுன் பேசி இருக்கிறாள். அவளை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும்.’

மெதுவாக கூட்டத்தில் இருந்து விலகினான். பஞ்சாயத்து போய்க்கொண்டிருந்த வழி முடிவுராததாக இருந்தது. இதை தான்தான் எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு தோப்பின் இன்னொரு மூலைக்கு வந்தான்.

அங்கே தண்ணீரற்று வற்றிப்போன காலங்கரை சரிந்து இறங்கியது. இதில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்தால் யார் கண்ணிலும் படாமல் தோப்பின் பின்புறம் சென்று விடலாம். அங்கிருந்து மேலேறி ஒரு நூறு மீட்டர் நடந்தால் சபாபதியின் தோப்பு வீட்டிற்கு போய் விடலாம். பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் இருந்து அந்த வீடு தெளிவாகவே தெரிந்தது. யாருக்கும் தெரியாமல் பதுங்கிச் சென்றுகொண்டிருந்தான் அமுதன்.

காலங்கரையில் இருந்து தோப்பின் பின்புறம் மேலே ஏறினான். அங்கு யாருமில்லை. அங்கிருந்த ஒவ்வொரு மாமரத்திற்கு பின்னும் ஒளிந்து ஒளிந்து சென்றான். 


திடீரென அவன் கண்கள் இருண்டு கழுத்து இறுகியது. “டேய் அம்புட்டான்டா… அம்புட்டான்… ஓடியாங்கடா…. வேகமா ஓடியாங்கடா….” அவன் பின்னாலிருந்து ஒரு குரல் யாரையோ அழைத்தது.

அமுதனின் கைகள் காற்றில் துளாவின. யாரும் அகப்படவில்லை. அவன் தலையோடு சேர்த்து ஒரு துண்டால் மூடி பின்னால் இருந்து துண்டை முறுக்கிகொண்டே இருந்தான் ஒருவன். துண்டைப் பிடித்து அவனை அமுதன் அவன் பக்கம் இழுக்க முற்பட்டான். முதுகில் ஒரு அடி வேகமாக இறங்கியது. அது அங்கிருந்த மாமரத்தின் ஒடிந்த கிளையாக இருக்க வேண்டும். அவன் முதுகில் அது விழுந்த வேகம் அவனை வலியில் மண்டியிட வைத்தது.

மூஞ்சியை மூடியிருந்த துண்டை எடுத்துவிட்டு அவர்களிடம் விட்டுவிடும்படி கெஞ்ச வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. கைகளால் கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த துண்டைக் கழட்டி எடுக்க முயற்சி செய்தான். இப்போது அடி கைகளில் பலமாக விழுந்தது. அடுத்தடுத்து விழுந்த அடிகளின் வேகமும் தன்மையும் அவைகள் வெவ்வேறு மரக்கிளைகள் எனத்தெரிந்தன. குப்பற விழுந்து படுத்தான். வலி… வலி… வலி… உடலெங்கும் வலி. தாங்க முடியாத வலி. ஓயாத அடிகள். அவன் மீது பட்டு ஒடிந்து தெறிக்கும் கிளையின் ஓசையா? இல்லை அவன் எலும்பின் ஓசையா? இவ்வளவு கூச்சல்களுக்கு மத்தியிலும் சடக் சடக் என்று அந்த ஓசை மட்டும் கேட்டுக்கொண்டே இருந்து.

“போட்றா… போட்றா… ஒரு பொண்டாட்டி பத்தாதோ உனக்கு… பொறுக்கிப் பயலே… சாவுடா… இவனெல்லாம் மிதிச்சே கொல்லனும்டா…” என்ற அந்தப் மனிதப் புனிதன் அவன் காலால் அவன் விதைப்பைகளை ஓங்கி மிதித்தான். வலி அவன் தலைக்கு ஏறி ஒட்டு மொத்தமாக இருண்டு கிடந்த கண்களுக்குள் சிற்றொளிகள் ஊர்ந்தன. அவனே அவனுக்காக அவனுக்குள் வாதாடிக்கொண்டிருந்தான். ‘நான் இறக்கப் போகிறேன் இதோ எமதூதர்கள் என் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். இறந்துவிட்டேனா? இன்னும் இல்லை அடி விழும் உணர்வு ஆங்காங்கே என் உடலில் தெரிகிறது. கண்டிப்பாக இவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள். ஆம் சாராயத்தில் குளித்து வந்துள்ள இந்த உத்தமர்கள்தான் நீதியை நிலைநாட்டப் பிறந்தவர்கள். பெண்களின் பாதுகாவலர்கள், இதுவரை இவர்கள் வாழ்க்கையில் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவர்கள். ஆம் இந்த உத்தமர்கள் மதுவிற்கான நீதியை வழங்கிக்கொண்டிருக்கும் நீதிமான்கள்.’

இருண்டு கிடக்கும் கண்களுக்குள் மது சிரித்துக்கொண்டிருக்கிறாள். அவள் சிரிக்கத்தான் வேண்டும் அவளுக்கான நியாயம் இங்கே கிடைத்துக்கொண்டிருக்கிறது. அவளுக்காக இப்போது நான் சாகப்போகிறேன். ஆண்ட்ரியாவும் சிரித்துக்கொண்டிருக்கிறாள். அவளால்தான் நான் சாகப்போகிறேன். இல்லை இல்லை என்னால்தான் நான் சாகப்போகிறேன். அம்மா அம்மா என்னை மன்னித்துவிடு அம்மா. ஒழுக்கம் இழந்தவனாய் உன் வளர்ப்பில் குற்றம் ஏற்ப்படுத்தி விட்டுச்செல்கிறேன். என்மீது தான் உனக்கு எவ்வளவு பாசம்! எனக்காத்தான் நீ எவ்வளவு கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறாய்! இதோ நீ மொத்தமாக கண்ணீர் வடித்து முடிக்கும் தருணம் வந்துவிட்டது. இனி கண்ணீர் வடிக்காதே. உன் ஒழுக்கக் கேடான மகன் சாகப் போகிறேன்.’ வலி பொறுக்கமுடியாமல் புலம்பினானா இல்லை நெருங்கி வந்த மரணம் அவனைப் புலம்ப வைத்ததா தெரியவில்லை. மூர்ச்சையாகும் வரை புலம்பிக்கொண்டே இருந்தான்.

முதனின் அம்மா தேம்பித் தேம்பி அழுதுகொண்டே ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள். அவள் மூக்கை உறிஞ்சும் சத்தம் அவன் காதுகளுக்குள் ஏறி கண் இமைகளை அசைத்தன. தலையில் ஏதோ கனம் மொத்தமாக மரத்துப்போனதுபோல் ஒரு உணர்ச்சி. கண்களை மெல்லத் திறந்தான் மங்கலாக யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது. மருந்து வாசமும் மருத்துவமனை வாசமும் மூக்கிற்குள் ஏறியது. கொஞ்சம் கொஞ்சமாக பார்வை தெளிவடைந்தது. அதே நேரத்தில் எங்கெங்கோ இருந்த வலிகள் அத்தனையும் கைகள், கால்கள், முதுகு, தலை, வயிறு என அத்தனை பகுதிகளுக்கும் வந்து சேர்ந்தன.

அவன் அம்மா மீண்டும் ஒருமுறை மூக்கை உறிஞ்சி முந்தானையால் துடைத்தாள்.

**************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

**************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 20

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -