ஊழ்…! – 1

தொடர்கதை

- Advertisement -

 “எப்படி மறந்தேன்?”

“இத்தனை கால் அடிச்சும் எடுக்கமாட்றா? என்னாச்சு இவளுக்கு?”

தான் வந்த ஊதா நிற மகிழுந்தின் ஓட்டுனரிடம் பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு வேகமாக இறங்கி அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மின்தூக்கி இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான் அமுதன். நல்ல உயரம், ஐந்தேமுக்காலடிக்கு மேல் இருப்பான். வலப்பக்கம் வகுடெடுத்துச் சீவப்பட்ட கலையாத தலைமுடி. நீளமான மூக்கு, பரபரப்பாக அவசரத்தைக் பிரதிபலித்திக்கொண்டிருக்கும் கண்கள். மீசை தாடி முளைத்ததற்கான எந்த அடையாளமும் தெரியாமல் மொழு மொழுவென வழித்தெடுக்கப்பட்ட முகம். சிங்கப்பூரில் அவன் நிறம் கருப்பு தானென்றாலும் அவன் சொந்த ஊரில் அவனைக் கருப்பு என்று யாரும் கூறுவதில்லை அங்கே அதைப் புது நிறம் என்பார்கள்.

யோசிப்பதும், தனக்குத்தானே பேசுவதுமாக நகத்தைக் கடித்துக்கொண்டு மின்தூக்கிக்காகக் காத்திருந்தான்.

“என்னாச்சு இவளுக்கு…? அவ போனுக்கு அடிச்சாலும் சுவிட்ச் ஆப்ன்னு வருது. நம்ம போனையும் வீட்ல மறந்து வச்சுட்டுப் போயிட்டோம் அதுக்கு அடிச்சாலும் எடுக்க மாட்றா?”

ஏழாவது மாடியில் நின்றுகொண்டிருந்த மின்தூக்கியை கீழே வர வைக்க அதன் பொத்தானை மீண்டும் மீண்டும் அழுத்தி அவசரப் படுத்தினான். அது கீழே வந்து நின்றவுடன் ஒரு வயதான சீனப்பெண்மணி மூன்று சக்கர வண்டியில் மின்தூக்கியின் உள்ளிருந்து வெளியேறினாள். அது உடல் ஊனமுற்றவர்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மின்சாரவண்டி. எளிமையாக இயக்குவதற்காக பொருத்தப்பட்டிருந்த ஜாய்ஸ்டிக்கை முன்னும் பின்னும் அசைத்து அவள் வண்டியோடு வெளியேறும் வரை மின்தூக்கியின் பொத்தானை அழுத்திக்கொண்டே காத்திருந்தான். இந்த நேரத்தில் மேலும் மூன்று பேர் மின்தூக்கியில் ஏறுவதற்காக வந்து காத்துக்கொண்டிருந்தனர்.

பத்தாவது மாடியில் இருக்கும் அவன் வீட்டிற்குச் செல்லும் முன், இடையில் மின்தூக்கி மேலும் மூன்று முறை நின்றது. எப்போதும் இல்லாமல் அவனை அறியாமலே அவனுக்குள் ஒரு பரபரப்பு உருவாக்கியிருந்தது. “என்னாச்சு இவளுக்கு?” “என்னாச்சு இவளுக்கு?” என்று தனக்குத்தானே பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தான். பத்தாவது மாடிக்கு வந்து இறங்கும்போது உடல் முழுவதும் வியர்த்துப்போயிருந்தான்.

தான் அணிந்திருந்த சப்பாத்துகளை கழட்டி வீட்டிற்கு வெளியில் இருந்த சிறிய அலமாரியில் வைத்தான். முன்னால் இருந்த கம்பிக் கதவின் கைப்பிடியை அழுத்தினான் அது திறந்துகொண்டது. உள்ளே இருந்த மரக்கதவும் திறந்தேயிருந்தது.

“மது…. மது….” இரண்டு முறை அழைத்தான் எந்த பதிலும் இல்லை.

“மது… மது…” ஹாலில் இருந்த சோபா, டிவி, கணினி மேசை எல்லாவற்றையும் தாண்டி அடுப்படிக்குச் சென்று பார்த்தான்.

“மது…. மது….” தங்கள் படுக்கையறைக்குள் சென்றான். படுக்கையறைக்குள் இருந்த குளியலறை திறந்தே இருந்தது. உள்ளே யாருமில்லை. படுக்கை கொஞ்சம் கலைந்து கிடந்தது.

“மது…. மது….” அடுத்த இரண்டு அறைகளுக்குள்ளும் சென்று தேடினான். அடுப்படிக்கு அருகில் இருக்கும் குளியலறைக்குச் சென்றான். அதுவும் திறந்தே இருந்தது.

“ம்ம்ம்…. என்னாச்சு? எங்க போனா? இப்படி வீட்டைத் திறந்துபோட்டுட்டு போக மாட்டாளே!” பழைய சாமான்களைப் போட்டு வைக்கும் ஸ்டோர் ரூம் பூட்டியிருந்தது. “இதுக்குள்ள போயி ஒளிஞ்சிருப்பாளா? ம்ஹீம்…” வேகமாக வெளியே வந்து செருப்பு வைக்கும் அலமாரியைத் திறந்து பார்த்தான்.

“என்ன அவளோட ஒரு செருப்பையும் காணோம்?” யோசித்துக்கொண்டே நிமிர்ந்து திறந்துகிடந்த வீட்டைப் பார்த்தான். வேகமாக உள்ளே நுழைந்து.

“மது…… மது…..” சத்தமாகக் கத்தினான். அந்த வீட்டில் அவன் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை.

********

துமதி, சிறிய சரிகை கொண்ட அழகான பச்சை நிறப்பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு நான்கைந்து பெண்களுக்கு மத்தியில் ஒரு தேவதை போல் நின்றுகொண்டிருந்தாள். வட்டமுகம். கண்ணனில் பாதி நிறம். நீளத் திராட்சைப்பழம் போன்ற உதடுகள். கழுத்தை ஒட்டிய நெக்லசும் மார்புக்கு கீழ் வரை தொங்கிய ஆரமும் அவளுக்கு மிகப்பொருத்தமாக இருந்தன. காதில் அணிந்திருந்த காதணிகள் ஆரத்தை ஒத்திருந்தன.

சோபாவில் தன் அப்பாவிற்கும் அக்கா கணவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த அமுதன் நிமிர்ந்து பார்க்கலாமா வேண்டுமா என்ற யோசனையில் யாராவது கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு கீழே குனிந்துகொண்டான். அமுதனின் அக்கா கொத்தாக ஒரு மல்லிகைப்பூ சரத்தைத் தூக்கிக்கொண்டு சென்று மதுமதியின் தலையில் ஏற்கனவே இருந்த மலர்ச் சரங்களுடன் கோர்த்தாள்.

“நேத்து தான் மாப்ள சிங்கப்பூர்ல இருந்து வந்தாப்ள. இன்னைக்கு நல்லநாளா இருந்துச்சா அதான் உடனே பொண்ணப் பாத்துடுலாம்ன்னு கூட்டியாந்துட்டேன்.” இந்தத் திருமணத்தை எப்படியும் நடத்தியே தீரவேண்டும் என்று கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் திருமணத் தரகர் வெங்கடேசன். அவர் சாதனையைக் கூறி முடித்தார்.

அமுதன் ஒரு அசட்டுச் சிரிப்போடு அவரைப் பார்ப்பது போல் நிமிர்ந்து கொஞ்சம் தூரத்தில் நின்றுகொண்டிருந்த மதுமதியைப் பார்த்துவிட்டு வேகமாகக் குனிந்துகொண்டான்.

“அப்பறம் சிங்கப்பூர்ல நீங்க என்ன செய்றீங்க?” யாரோ பெண் வீட்டுக்காரர் போல  நல்ல வாட்டசாட்டமாக ஜீன்ஸ் பேன்ட் சட்டை அணிந்து அமுதனின் எதிரில் அமர்ந்துகொண்டு கேட்டார்.

“சாப்ட்வேர் என்ஜினியர்” என்று கூறி ஒரு லேசான புன்னகையை வீசினான். இப்போது மதுமதியைப் பார்க்கும் துணிச்சல் அவனுக்கு வரவில்லை.

“திருச்சி ப்ளைட்ல நேரடியா வந்துட்டீங்களா? இல்லை மெட்ராஸ் ப்ளைட்ல வந்தீங்களா?”

“திருச்சி ப்ளைட்ல தான் வந்தேன்”

“ஆமா அதான் ஈசி. விசுக்குன்னு வந்துரலாம். அடுத்து மதுரைக்கும் கூட ப்ளைட் விட போறாய்ங்லாமே?”

“எந்தக் கம்பெனி?”

“சிங்கப்பூர்ல எத்தனை வருசமா இருக்கீங்க?”

அடுத்தடுத்த கேள்விகள் வேறு வேறு நபர்களிடமிருந்து வந்து விழுந்துகொண்டே இருந்தன. எல்லாவற்றிற்கும் அமுதனே பொறுமையாக பதிலளித்துக்கொண்டிருந்தான்.

“எங்க மாமா கூட சிங்கப்பூர்ல தான் இருவது வருசமா இருந்தாரு” என்று அங்கே இருந்த ஒருவரைச் சுட்டிக்காட்டினார் அந்த ஜீன்ஸ் பேன்ட் ஆசாமி. “ஆமா ஷிப் யார்ட்ல இருந்தேன்” என்று கூறிவிட்டு அந்தச் சிங்கப்பூர்காரர் அமைதியாகிவிட்டார். பெண்ணின் தந்தை எதுவும் பேசாமல் நடப்பதைக் கவனித்துக்கொண்டே இருந்தார்.

“பொண்ணும் பையனும் கொஞ்சம் தனியா பேசட்டும்” தரகர் வெங்கடேசன் அமுதன் எதிர்பார்த்த அந்த வசனத்தை பெண்ணின் தந்தையைப் பார்த்துக்கூறினார். அவருக்கு இதில் சம்மதம் என்றாலும் சமூகம் என்ன கூறுமோ என்று தெரியாமல் அங்கிருப்பவர்களைப் பார்த்தார்.

“இந்தக்காலத்துல இதெல்லாம் சகசம் தான். அதுகளும் பேசி தெரிஞ்சுக்கணும்ல. நம்ம காலம் மாதிரியா?” எனக் கூட்டத்தில் ஒரு பெரியவர் ஆதரிக்க. மறுப்பேதும் சொல்லாமல் அவர்கள் இருவரையும் தனியாக வீட்டின் முன்புறம் இருந்த வராண்டா பகுதியில் அனுமதித்தார்கள்.

ஏதோ பரிட்சைக்குப் படிப்பவன் போல இரவு முழுவதிலும் கேள்விகளைத் தயார் செய்து வைத்திருந்தாலும். என்ன பேசலாம் எப்படித் தொடங்கலாம் எனப் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான் அமுதன். அவர்கள் கொடுத்த பத்து நிமிடம் வேகமாகக் கரைந்து கொண்டிருந்தது. இரண்டு சிறுவர்கள் அவர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் ஓடிஓடி வெளியேறினர்.

“உங்களோட ஹாபீஸ் என்ன?” அவள்தான் முதல் கேள்வியைத் தொடங்கினாள்.

அவள் கேள்வி அவன் மூளையை அடைய பத்து நொடிகளுக்கு மேல் ஆகியிருக்கும். அவன் எண்ணங்கள் முழுவதும் அவளை இரசிப்பதிலேயே தான் இருந்தன. இங்கும் அங்கும் அவன் கண்கள் அலைபாய்ந்தன. அவன் பதட்டத்தை அவள் உணராமல் இருக்க தோள்களைக் குலுக்கிக்கொண்டு “புத்தகம் படிப்பேன்” என்றான்.

“ஓ சூப்பர்! ரமணிச்சந்திரன்லாம் படிச்சுருக்கீங்களா?” அவளின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என அவனுக்குத் தெரியவில்லை. ‘யார் இந்த ரமணிச்சந்திரன்? ஒருவேளை இவள் சொந்தக்காராக இருப்பாரோ?’ அவனுக்குள்ளே கேட்டுக்கொண்டான்.

யோசித்துக்கொண்டே “இல்லை” என்றான்.

“உங்களுக்கு புடிச்ச ரைட்டர் யாரு?”

சில நேர்முகத்தேர்வுகளில் இப்படித்தான் தெரியாததைத் தெரியும் என்று கூறி எக்கச்சக்கமாக மாட்டிகொள்வார்கள். அவர் எதைத் தெரியும் என்பாரோ அதை ஒட்டியே அடுத்தடுத்த கேள்விகள் வந்துகொண்டிருக்கும். இதற்கு முன்பே தெரியாது என்று கூறியிருந்தால் இத்தனை கேள்விகள் வந்திருக்காது. இருந்தாலும் இப்படிப் பல நேர்முகத்தேர்வுகளில் மாட்டிக்கொண்ட அவன் முன்னனுபவம் இப்போது கொஞ்சம் கைகொடுத்தது.  பேச்சை மாற்றினால் ஒழிய இவளின் கேள்விகளில் இருந்து தப்ப முடியாது. என்று எண்ணிக்கொண்டே.

“எனக்கு சுஜாதா புடிக்கும்” என்று முடிக்காமல் அவனே தொடர்ந்து “உங்ககிட்ட பாஸ்போர்ட் எல்லாம் இருக்கா?” என்று வேறுபக்கம் திருப்பினான்.

“அதெல்லாம் இருக்கு… சுஜாதா நாவல்ல உங்களுக்கு புடிச்சது எது?” எந்தக் கேள்வி வரக்கூடாது என நினைத்தானோ அது இப்போது வந்துவிட்டது. கண்டிப்பாக இதற்கு அவனிடம் பதில் இல்லை. ஏதாவது படித்திருந்தால் தானே இருப்பதற்கு.

“அப்பறம் எல்லாம் பேசிட்டீங்களா?” என்றவாறே ஒற்றைக்காலைச் சாய்த்து சாய்த்து நடந்துகொண்டு மெதுவாக உள்ளே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க சற்று பருமனான பெண் வந்தாள்.

மதுமதி,” பேசிட்டோம் அத்தை “என்றாள்.

‘அப்பாடா தப்பிச்சோம்’ என்பது போல் இருந்தது அமுதனுக்கு. ஆனாலும் பத்து நிமிடத்தில் என்ன பேசிவிட முடியும்? அவர்கள் கொடுத்த அந்தப் பத்து நிமிடத்தில் இப்போது ஆறு நிமிடங்கள் தான் முடிந்திருக்கின்றன. அதற்குள் அவளின் அத்தை வேறு இப்போது புகுந்துவிட்டார். இனி அவன் தயாரித்து வைத்திருந்த கேள்விகள் எல்லாம் வீண் தான்.

அடுத்து அவள் அத்தையிடமிருந்து அடுக்கடுக்கான கேள்விகள் வந்து விழுந்தன அவற்றில் முக்கால்வாசி அவன் வேலையைப் பற்றியும் சம்பாத்தியத்தைப் பற்றியுமே இருந்ததால் பதில் சொல்ல அவன் சிரமப்படவில்லை.

இருவீட்டாரும் முன்பே ஒருவரை ஒருவர் விசாரித்து அறிந்திருந்ததால் இந்தப் பெண் பார்க்கும் சடங்கு பெண்ணையும் மாப்பிள்ளையும் சந்திக்க வைத்து அவர்கள் சம்மதத்தை பெறுவதற்காக மட்டுமே நடந்தது. மற்றவைகள் தரகர் வெங்கடேசன் மூலம் கிட்டத்தட்ட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தன. 

ஒருவழியாகப் பரிட்சையில் தேர்வான மாணவனைப்போல் நிச்சயதார்த்த தேதியைக் குறித்துவிட்டே அந்த வீட்டில் இருந்து வெளியேறினான் அமுதன்.

********

து…… மது……” இதற்கு மேல் கத்தி எந்தப் பலனும் இல்லை. அவள் நிச்சையமாக வீட்டில் இல்லை. அப்போது தான் ஹாலில் இருக்கும் கணினி மேசையைக் கவனித்தான். அங்கே கம்ப்யூட்டர் மானிட்டருக்கு முன் அவனுடைய அலைபேசி இருந்தது. அதை எடுத்தான். அதற்கு கீழ் அவனுக்காக ஒரு வரியில் ஒரு கடிதம் காத்துக்கொண்டிருந்தது……

***************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

***************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 2

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

2 COMMENTS

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -