அழுக்குக்கண்ணாடி – 6

- Advertisement -

வெளிப்புற வாழ்க்கை என்கிற கண்ணாடியில் பிரதிபலிக்கும் குறைகளின் ஆணி வேர், அதன் மூல பிம்பமான மனதிலிருந்தே ஆரம்பமாகிறது. ஒருவனுக்கு தான் செய்யும் வேலையில் சந்தோஷம் இல்லாமல் இருக்குமானால், வெளிப்புறமாக அவன் ஆயிரம் காரணம் சொன்னாலும், உள்ளே அவன் ஆழ்மனதில் வேறு வேலையின் மீது தீராத காதல் இருக்கும். அதை அவன் உணராத காரணத்தால் வெளி விஷயங்களின் மேல் கோபமும், எரிச்சலும் அடைந்து அங்கேயே சுழல்வான். தினம் தினம் அதே பிரச்சனைகளை எதிர்கொண்டு, மேலும் தன்னை வறுத்திக்கொள்வான். அவன் செய்ய வேண்டியதெல்லாம், இருக்கும் இடத்தில் உள்ள குறைகளைப் பெரிதாக்கிப் பேசுவதை விட்டு, தனக்கு எது பிடிக்கும் என்பதைத் தேடி அதை நோக்கிச் செல்வது மட்டுமே. தனக்குப் பிடித்த திசையில் எடுத்து வைக்கும் ஒரு சிறு அடிகூட அவன் வாழ்க்கையைத் தலைகீழாக புரட்டிப்போட்டுவிடும் என்பதே ஆச்சர்யமான உண்மை.

ஆனால் தனக்குப் பிடித்தது எது என்பதை கண்டுபிடிப்பதே ஒரு மிகப்பெரிய சாதனைதான். ஏனென்றால் அதற்கு ஆழ்ந்த அமைதியான பார்வை வேண்டும். அலைகள் அடங்காமல், ஆழத்தில் இருப்பதை கண்டறிவது என்பது இயலாத காரியம். மனதில் தோன்றும் எண்ண அலைகளுக்கு தீனி போடும் விஷயங்களைத் தவிர்த்து, சிறிது நேரமாவது நம்மோடு நாம் செலவிட வேண்டும். தினமும் ஒரே ஒரு நிமிடமாவது கண்களை மூடியபடி நமக்குள் நடப்பதை பார்க்க பார்க்க, சிறிது சிறிதாக எண்ணங்கள் அடங்குவதை உணரலாம். நாளடைவில் வாழ்க்கைப் பிரச்சனைகளின் அனைத்துக் காரணமும் ஆழ் மனதில் ஒளிந்திருப்பதை கண்கூடாகக் காணலாம். நமக்குப் பிடித்தது எது?… எதைச் செய்தால் நாம் மனநிறைவுடன் இருப்போம் என்பதும் தெளிவாகப் புரியும்.

அப்படியே நமக்குப் பிடித்ததை கண்டிபிடித்துவிட்டாலும் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதில்தான் இருக்கிறது நாம் தாண்ட வேண்டிய கடைசித் தடைக்கல். நாம் எத்தனையோ நல்ல விஷயங்களை கேள்விப்படுகிறோம், அதைச் செய்ய வேண்டுமென்று அந்த நேரத்தில் நமக்குத் தோன்றும், ஆனால் வெகுவிரைவாக கவனம் வேறு எதிலோ திசைமாறி கடைசியில் அந்த நல்ல விஷயங்களை நம்மால் செய்யமுடியாமலே போய்விடும். உதாரணத்திற்கு, காலையில் 5 மணிக்கு எழுவது நல்லது என்றும் அதனால் உண்டாகும் நல்ல பலன்களையும் கேள்விப்படும்போது, உடனே ஒரு உந்துதல் ஏற்படும். இனிமேல் தினமும் 5 மணிக்கு எழுவது என்ற முடிவை எடுப்போம் ஆனால் தொடர்ந்து ஒரு வாரம்கூட அதை செயலில் கொண்டுவருவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும். எளிதில் அதை மறந்துவிடும் அபாயமும் உண்டு. இதுபோல் எத்தனையோ நல்ல விஷயங்களை நாம் ஆரம்பித்து ஆரம்பித்து பாதியில் நிறுத்தியிருப்போம். அவைகளை யோசித்துப் பட்டியலிட முடிகிறதா பாருங்கள்.

ஏன் அவைகளைச் செய்யமுடியாமல் போகிறது.? எங்கே பிரச்சனை என்று யோசித்தால் அவை மனதிற்குப் பழக்கமில்லாதவை என்பது புரியும். மனம் எப்போதுமே புதிய விஷயங்களைச் செய்ய பயப்படுகிறது. அதனால்தான் நாம் அனைவருமே பழக்கப்பட்ட விஷயங்களையே தொடர்ந்து வாழ்க்கையில் செய்துகொண்டே இருக்கிறோம். அதில் ஒரு பாதுகாப்பு இருப்பதாக உணர்கிறோம். அதில் ஏதாவது சின்ன மாற்றம் ஏற்பட்டால்கூட பதறுகிறோம். வழக்கமான சாலையில் செல்லமுடியாமல் ஒரு நாள் வேறு வழியாக சென்று, அன்று ஏதாவது பிரச்சனை ஏற்ப்பட்டால் உடனே மனம் அந்த புதிய சாலையை ஆபத்தான பாதையாக குறித்துக்கொள்ளும். நாம் மீண்டும் எப்போது அவ்வழியாக சென்றாலும் ஏதாவதொரு அசம்பாவிதம் நடந்துவிடுமென்று மனம் திடமாக நம்பும். அந்த எண்ணம் வலுப்பெற வலுப்பெற அவையெல்லாம் நடக்கத்தொடங்கிவிடும். உடனே மனம் சொல்லும் “நான் அப்போதே சொன்னேன் இவ்வழி ஆபத்தென்று…”. இந்த உதாரணம் சாலைக்கு மட்டுமல்ல, நீங்கள் நிதானமாக உங்கள் வாழ்வில் நடந்த நிறைய நிகழ்ச்சிகளை அசைபோட்டு பாருங்கள், அதில் 90 சதவிகித பிரச்சனைகளை மனம்தான் இவ்வாறு நமக்கே தெரியாமல் உருவாக்கி வைத்திருக்கும். அவைகளைக் கண்டறிந்து ஒவ்வொன்றாக உடைத்தெறிய வேண்டும்.

அதே போல் பழக்கமில்லாததை மனம் எளிதில் பிடித்துக்கொள்ளாது என்றும் தீர்மானமாகச் சொல்லிவிட முடியாது. எவையெல்லாம் நமக்கு நல்லதில்லையோ, அவற்றை மனம் உடனடியாக பழக்கிக்கொள்ளும். அதற்கான மெனக்கெடல்கூடத் தேவைப்படாமல் சீக்கிரமாக உள்வாங்கிக்கொள்ளும். நீங்கள் ஒரு வீடியோ கேமை பதிவிறக்கம் செய்து விளையாட ஆரம்பியுங்கள். ஒரு நாளில் பல மணி நேரம் உங்களையும் அறியாமல் அவற்றில் வீணாவது தெரியும். ஏன் வீடியோ கேம் விளையாட்டில் இருக்கும் ஆர்வம் போல் காலையில் 5 மணிக்கு எழுவதில் ஆர்வம் ஏற்படுவதில்லை? ஏன் அது சுவாரஸ்யமாக இல்லை? ஏனென்றால் கேளிக்கைகளில் ஈடுபடும்போது “தன்னை” மறக்கிறோம். “தன்னை” மறத்தலே சுவாரஸ்யத்திற்கு அடிப்படைக் காரணம். மனிதன் எப்போதும் தன்னை மறக்கவே விரும்புகிறான். அதன் மூலம் தன் பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க நினைக்கிறான். அதனால்தான் தன்னை மறக்கவைக்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வியாபாரங்களும் உலகில் கொடிகட்டிப் பறக்கிறது. உலகிற்கே பொதுவான ஒரு பெரிய உதாரணம் சொல்லவேண்டுமென்றால் சினிமா. மற்ற கேளிக்கை விஷயங்கள் அனைத்தும் இதற்குள் அடங்கும். ஒரு சினிமா நடிகரோ அல்லது ஒரு பாப் ஸ்டாரோ புகழ் அடையும் அளவிற்கு ஒரு விஞ்ஞானியாலோ இல்லை மருத்துவராலோ புகழ் அடைய முடிவதில்லை. தன்னை மறத்தலில் ஏன் அத்தனை சுகம் மனிதனுக்கு…? எதைப்பற்றியும் யோசிக்காமல் எண்ணங்களற்று இருப்பதால்தான் அவன் தான் சுகமாக இருப்பதாக உணர்கிறான். அதனால் தான் உலகில் உள்ள எல்லா வகை போதைப் பொருட்களுக்கும் எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. நேரடி போதைப் பொருட்களைத் தவிர்த்துப் பார்த்தாலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு போதை கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். புகழ் போதை, பணம் சம்பாதிப்பதில் போதை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இது தான் காரணமென்று தெரியாமலேயே, எண்ணங்களைக் குறைக்க, தன்னை மறக்க, எல்லா மனிதனும் ஏதாவதொரு போதையைத் தேடி அலைகிறான். ஆனால் அவையெல்லாம் தற்காலிகமாகவே அவனுக்கு நிம்மதியைத் தருகிறது. போதைப் பொருள் கிடைக்காத நேரத்தில் அதைப் பயன்படுத்துபவன் எப்படி தவித்துத் துடிப்பானோ அப்படியே நம் எல்லோருடைய போதையும் எதில் இருக்கிறதோ அதில் குறை ஏற்பட்டால் மனம் அடியோடு நிம்மதியை இழக்கிறது. ஒரு நரகத்தை உருவாக்கிக்கொண்டு அதற்குள் வாழ்கிறது. இவ்வாறாக அல்லாடாமல், நிரந்தர ஆனந்தத்தோடு இருக்க ஒரு ஆரோக்கியமான வழிமுறை இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்பதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டுமென்று நினைத்து பாதியில் விட்டுப்போன நல்ல விஷயங்களின் பட்டியலை தயாராக வைத்திருங்கள்……

-தொடரும்.

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -