ஊழ்…! – 2

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

சூரிய கிரணங்கள் இருளைக்கிழித்து மேகங்களை வெள்ளைப் பஞ்சாக்கியது. அந்த ஒளியில் மின்னிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ‘ஸ்ஸ்ஸ்…’ என்ற சத்தத்தோடு வானில் மிதந்துகொண்டிருந்தது. நீலவானில் மிதந்து கொண்டிருந்த வெள்ளைப் பஞ்சுப் பொதிகள் விலகி வழிவிட விமானத்தின் சன்னல் வழி பார்ப்பவர்களை வரவேற்றது சிங்கப்பூர் கடற்கரை. 

‘வீல்…’ என்ற ஒரு குழந்தையின் அலறலால் விமானத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் சிலரின் கனவுகள் கலைந்தன. அமுதன் கண் விழித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்கும். இன்னுமும் தன் மனைவி மதுமதியையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் விமானத்தில் வழங்கிய மெல்லிய சந்தன நிறப்போர்வையைக் கழுத்து வரையில் போர்த்திக்கொண்டு ஒரு குழந்தையைப்போல் உறங்கிக்கொண்டிருந்தாள். அவளின் சுருள் முடிகளில் சில, கலைந்து முகம் வரையில் படர்ந்திருந்தன. அமுதன் திருமணமான இந்த ஒரு மாதத்திற்குள் ஓராயிரம் முறையாவது அவள் அழகை வர்ணித்திருப்பான். அவளுக்கு கவிதை பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு முறையும் எழுத முயன்று அவளிடம் எதையாவது கூறுவான். ஒவ்வொரு முறையும் அவள் வெடித்துச் சிரித்துவிடுவாள். வெட்கத்தில் அடுத்த முறை எழுதி வருகிறேன் என்று சவால் விடுவான். இப்போதும் கவிதை தான் யோசித்துக்கொண்டிருக்கிறான். 

விமானத்தில் அலறிய அந்த முதல் குழந்தையின் வீலைத் தொடர்ந்து அடுத்தடுத்த குழந்தைகளின் ‘வீல்…வீல்…’ சத்தங்கள் விமானத்தை நிறைத்தன. மதுமதி அவளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அமுதனைப் பார்த்து புன்னகைத்து ஒரு கவிதை போல் தன் தூக்கத்தைக் கலைத்தாள். 

‘இதன் பின்னும் கவிதை எழுத வரவில்லை என்றால் இனி வாழ்நாளில் எப்போதும் கவிதை எழுதப்போவதில்லை. ‘ என்று அவனே அவனுக்குள் நினைத்துக்கொண்டான். 

“குட் மார்னிங்….” என்றாள். 

“குட் மார்னிங் சொன்ன மதியே… உனக்காக நான் வடிக்கப்போகிறேன் கவியே…” 

சத்தமாக சிரித்துவிடுவோமே என்ற அச்சத்தில் மிகவும் சிரமப்பட்டு வாயை முடிக்கொண்டு அவள் மடியிலேயே மடங்கிக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தாள். அமுதன் தன் புலமையை எண்ணி தானே புளாங்கிதம் அடைந்துகொண்டான். 

“ஸ்ஸ்ஸ்… ஆ…” என்று இடது காதை ஒரு விரலால் போர்த்திக்கொண்டு. “காது வலிக்கிது…” என்றாள். 

அமுதன் வேகவேகமாகத் தன் கால்சட்டைப் பைக்குள் இருந்த புளிப்பு மிட்டாய்களை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் ‘பல் விளக்கவில்லை ‘என்று சைகை காண்பித்தாள். 

“பரவாயில்லை… சும்மா ஒண்ண வாயில போட்டுக்க” என்று காகிதத்தை நீக்கிவிட்டு அவள் வாயில் திணித்தான். ஆரஞ்சு நிற இரப்பர் துண்டுகள் இரண்டை எடுத்துக்கொடுத்து அவளின் காதுகளை அடைத்துக்கொள்ளச் சொன்னான். அவள் அடைத்துக்கொண்டாலும் அவளால் அந்த வலியைத் தாங்க முடியவில்லை. 

“விட்டு விட்டு தெறிக்குது…” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்தாள். அவன் அவளை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு “இன்னும் கொஞ்ச நேரம்தான்… ப்ளைட் கீழ இறங்கிருச்சுன்னா வலி விட்ரும். அப்பறம் ஒண்ணும் தெரியாது” என்றான். 

விமானப் பணிப்பெண் ஒருத்தி அருகில் வந்து இருக்கையை நேராக்கி ‘சீட் பெல்ட்டை’ அணியச் சொன்னாள். 

குழந்தைகளின் கதறல்களுக்கு மத்தியில் விமானம் ‘தொப்’ என்று விழுந்து தட தடவென ஓடி தன் வேகம் குறைத்தது. இன்னும் சில குழந்தைகள் அழுகையை நிறுத்தவில்லை. திடீரென எங்கிருந்தோ வந்த மழை விமானத்தை நனைத்துக்கொண்டிருந்தது. சன்னலில் குட்டிக் குட்டி கண்ணாடிப் பாம்புகளாய் நீர்த்துளிகள் வழிந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தன. 

விமானம் வேகத்தைக் குறைத்த அடுத்த நிமிடத்தில் பெரும்பாலானோர் இருக்கைகளுக்கு மத்தியில் இருக்கும் பாதையில் நின்று அவரவர் பெட்டிகளையும் பைகளையும் இறக்கிக்கொண்டிருந்தனர். இதற்குமேல் தன் குரலுக்கு மதிப்பில்லை என அறிந்த விமானி பேசாமல் அமைதியாகிவிட்டார். விமானம் சரியான இடத்தில் நின்று அதன் கதவுகள் திறக்க மேலும் பதினைந்து நிமிடங்கள் ஆகின. கதவு திறந்தவுடன் ஒருவர் பெட்டியை இன்னொருவர் காலில் மோதிக்கொண்டும் பைகளை வைத்து முன்னால் செல்பவரை இடித்துக்கொண்டும் இறங்கினார்கள். சிறிது நேரம் பொறுத்து அமுதனும் மதுமதியும் அவர்கள் தோள் பைகளையும் சிறிய பெட்டியையும் கண்டுபிடித்து எடுத்தனர். ‘டர்ர்ர்…’ என இழுத்துக்கொண்டே விமானம் விட்டு வெளியேறினர்.

கிளையாறு ஒன்று பெரிய ஆற்றுடன் ஓடி இணைவதுபோல் இவர்கள் நடந்து சென்ற குகைப்பாதை ஒரு பெரியபாதையுடன் சேர்ந்தது. எதிர்எதிர் திசைகளில் மக்கள் யாரையோ விரட்டிப் பிடிக்கும் ஆவலில் முன்னேறிக் கொண்டிருந்தனர். திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் இருந்து திடும்மென சிங்கப்பூர் விமானநிலையம் வந்த மதுமதிக்கு தரையில் நகரும் மின்பாதைகளில் இருந்து சீனப்புத்தாண்டை வரவேற்க வைக்கப்பட்டிருந்த புலி பொம்மைகள் வரை அத்தனையும் வியப்பை ஏற்படுத்தின. 2010ம் ஆண்டுக்கான இளையர் ஒலிம்பிக் போட்டியை சிங்கப்பூர் நடத்தியது. அதற்காக லியோவும் மெர்லியும் பொம்மைகளாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். சில பொம்மைகளுக்குள் மனிதர்கள் ஒளிந்துகொண்டு வருவோருக்கு கையசைத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொன்றோடும் ஒரு தற்படம் மற்றும் மதுமதியின் தனிப் புகைப்படம் எடுத்துகொண்டே சென்றார்கள். 

சிங்கப்பூரில் வேலைசெய்யும் அனுமதி அட்டை வைத்திருந்ததால் அமுதன் ஆட்டோமாட்டிக் பாதை வழியாக அட்டையை ஸ்கேன் செய்துவிட்டு வெளியேறிவிடலாம். ஆனால் மது முதல்முறை நுழைவதால் குடியுரிமைச் சோதனைக்கான வரிசையில் நின்றாள். அடர் ஊதா நிறச் சீருடையில் ஒரு சீன அதிகாரி அமர்ந்திருந்தார். மது அவளின் பாஸ்போர்ட்டையும் விசா காகிதங்களையும் அவரிடம் கொடுத்தாள். அமுதனின் பச்சை வேலை அனுமதி அட்டையைப் பார்த்தவுடன் “யூ கோ தட் சைடு” என்று தானியங்கி பாதை வழியாகச் செல்லச் சொன்னார். 

அவன் சிறியப் பெட்டியை இழுத்துக்கொண்டு சிறிது தூரம் நடந்து அவன் பாஸ்போர்ட்டையும் கைரேகையும் ஸ்கேன் செய்துவிட்டு குடியுரிமைச் சோதனையைத் தாண்டினான். அவன் சென்ற சிறிது நேரத்தில் மதுவும் அவனிடம் வந்து சேர்ந்தாள். அங்கே ஜொலித்துக்கொண்டிருந்த மதுக்கடை ஒன்றில் நுழைந்து இரண்டு புட்டிகளைத் தூக்கினான். 

“எனக்கில்லை என் பிரண்ட்ஸ்க்கு…” என்று வழிந்தான். அவள் உதட்டைப் பிதுக்கிவிட்டு கடையைச் சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

தள்ளுவண்டிக்கு வெளியே பிதுங்கிக் கொண்டிருந்த இரண்டு பெரிய பெட்டிகளையும் ஊதாநிற டாக்சி ஒன்றின் பின்னால் அடைத்தான். பின் அந்த மகிழுந்து அவர்கள் இருவரையும் சுமந்துகொண்டு விமானநிலையம் விட்டு வெளியேறியது. மகிழுந்தைத் தாண்டி சன்னல்களுக்கு வெளியே வைத்த அவள் கண்களை உள்ளே இழுக்கவேயில்லை. மழை பெய்து ஓய்ந்திருந்ததால் வெளியில் தெரியும் பசுமை அவள் கண்களுக்கு குளிர்ச்சியூட்டியது. இடையிடையில் 

“எவ்ளோ கிளீனா மெய்ண்டைன் பண்றாங்க”. 

“ரோடு நெடுக எவ்ளோ மரம் வச்சிருக்காங்க”. 

“அங்க பாருங்க நிறைய ப்ளைட்ஸ் நிக்கிது”. சொல்லிக்கொண்டே வந்தாள்.

அமுதன் அவளின் அத்தனை ஆச்சரியங்களுக்கும் கேள்விகளுக்கும் “ம்ம்ம்…”. “ஆமா” என்பது போல் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுடைய பதில்கள் எதையும் அவள் எதிர்பார்க்கவில்லை அவளின் விழிகளில் விரிந்த ஆச்சரியங்களை வெளிப்படுத்துவது மட்டுமே அவள் நோக்கம். கண்ணில் படும் ஒவ்வொரு செடியையும் செங்கலையும் இரசித்தாள். அமுதன் அவளை மட்டும் இரசித்துக்கொண்டிருந்தான். 

ஒரு திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு அழகாகத் தொடங்குகிறது! அதே அழகை எத்தனை பேரால் வாழ்க்கை முழுவதும் தக்கவைக்க முடிகிறது? 

தக்க வைத்து அதை இன்னமும் அழகாக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வமும் கனவும் மதுவின் கண்கள் முழுவதும் நிரம்பி இருந்தன. இவள் தான் என் வாழ்க்கை இவள் தான் இனி எனக்கு எல்லாம் என்ற பெரும் காதலும் காமமும் அமுதனை நிறைத்திருந்தன. 

நீயில்லாமல் நானில்லை… நானில்லாமல் நீயில்லை… எனும் அளவிற்கு ஒருவருக்கொருவர் தங்கள் மனதிற்குள் உருகிக்கொண்டே செல்லும் அந்த இருவரும் சந்தித்தே நான்கு மாதங்கள் தானாகின்றன. 

இருவருக்கும் இனிதே தொடங்கி இருக்கும் இந்தப் புதிய வாழ்க்கை இவர்களுக்கு என்ன தரக் காத்திருக்கிறது என்பதை நம்மைப் போலவே அவர்களும் அறிந்திருக்கவில்லை. 

குளுகுளுவென இருந்த அந்த மகிழுந்துக்குள் இருவரின் கைகளும் பின்னிக்கொண்டன… 

************************************* 

ணினி மேஜை முன் கடிதத்தோடு நின்று கொண்டிருந்தான் அமுதன். அவன் முகம் முழுவதும் குழப்பங்களால் நிறைந்து வெளிறிப்போய் இருந்தது. அந்தக் கடிதத்தில் ஒரே ஒரு வரி தான் இருந்தது. அது. 

‘உங்களை நம்பி நானும் ஏமாளியாக விரும்பவில்லை. குட் பை…’ 

************************************* 

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்…. 

***************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 3

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -