உச்சிப் பகல்

கவிதைகள்

- Advertisement -

உச்சிப் பகல்

அழித்துக் கொண்டிருக்கிறேன்
அழிய மாட்டேன் என்கிறது
நினைவுகள்
பறவையின் சிறகாய் இருந்திருக்கலாம்
மரத்தின் வேராய் இருந்திருக்கலாம்
பூவாய் இருந்து கழியுது காலம்
சொல்லில் முகிழ்க்கும் வண்ணப்பூ
உன் இதயத்தில் சூட்டிட விழைகிறேன்
என்னுள் நீ வந்தால்
என் வேலை சுலபம்
மெளனம் உக்கிரமானது
சப்தம் விழலுக்கு இறைத்த நீர்
ரெளத்திரம்
வெறுமையில் உருவாகும் ஆயுதம்
எதுவும் கூற முடியாதிருக்கிறது
ரணகளத்தில் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன
சமாதியிலடங்க முயற்சிக்கும் முனிவனாய் துயரம்
மெழுகுவர்த்திச்சுடர்
மான் குட்டியாய் நடுங்குகிறது
காற்றின் வீச்சு
புலியாய் தாவுகிறது
ஜீவ மரணப் போராட்டம்
கரையேற முயல்கிறேன்
கவ்வி இழுக்கின்றன புத்தகங்கள்
நிராதரவாய் முங்கி முங்கி
மூழ்கிப் போகிறேன்
உங்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன
எங்களிடம் கண்ணீர் இருக்கிறது
வெடிகுண்டுகளாய்
உம்மை சிதறடிக்கும்.

??????????????????????????

பறத்தலின் அரசியல்

குடும்பத்தை துறந்தான்
கனவுகளை தூக்கிக் கொண்டான்
காடு நகரமென அலைந்தான் புத்தன்
துயரத்தைச் சொல்லும் வாய்கள் பூட்டப்படுகின்றன
வலியை வெளிப்படுத்தும் கண்கள் அடைக்கப்படுகின்றன
தகிக்கும் பெருமூச்சு விசுரூபிக்கிறது
தோற்பதற்கு எதுவுமில்லை
ஜெயிப்பதற்கு எதுவுமில்லை
எளிய சாமான்யனுக்கு எதுவுமில்லை
என் பாத்திரம் நிரம்பவில்லை
உன் பாத்திரம் நிரம்பியதா ?
புத்தனின் பிச்சைப் பாத்திரத்தைக் காணவில்லை
கண்ணீரும் குருதியும்
வெள்ளமாகப் பாய்கிறது
பசிஓலங்கள்
பேரிரைச்சலாய் ஒலிக்கிறது
நிம்மதியாய் என்னால்
தேசீயகீதம் பாட முடியவில்லை.
உதட்டில் பூக்கள்
நெஞ்சில் குறுவாள்
துரோகம்
நதியின் இரப்பையை
கூழாங்கற்களின் ஓலம்
நொடிதோறும் அறுத்தபடி…
நடு இரவில் விசில் சத்தம்
விழித்தபடி கேட்கிறேன்
இருள் தன்னந்தனியாக
போய்க் கொண்டிருக்கிறது.

??????????????????????????

மாயையின் வானவில்

பரிசளிக்கப்பட்ட நாட்கள்
கை நழுவி.. விழுந்து
உடைந்து போகின்றன
பதை பதைப்புடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கடந்த காலம் கசப்பானது
நிகழ்காலம் முள்ளானது
எதிர்காலம் இருட்டானது
காரிருள் குகை
கால் போன போக்கில் நடை
பிழைக்க எத்தனை வதை
அடிபட்டவள் நிமிர்ந்தாள்
அடித்தவன் தலை குனிந்தான்
புழு பாம்பானது
தீராப் பசி
ஆறாப் பசி
தீயாய் எரியும்.
போதையூட்டுகிறது பெயர்
புகையாய் வெளியேறுகிறது உயிர்
பாலை மண்ணில் பாயுது கானல்நீர்
மனசுகளெங்கும் பூத்திருக்கின்றன
நிதம் பறிக்காமல்
உதிர்ந்தபடி இருக்கின்றன
கனவுகள் தான்
பூக்கட்டிக் கொண்டிருக்கின்றன
நேசத்தைத் தேடி
வனாந்தரங்களில் திரியும் பறவை
தொலை வானத்தில் ஒற்றை நட்சத்திரம்
வானம் பறந்து கொண்டிருக்கிறது
பூமி ஓடிக் கொண்டிருக்கிறது
நான் திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -