நெடுஞ்சாலைப் பயணம்

மூன்று கவிதைகள்

- Advertisement -

நெடுஞ்சாலைப் பயணம்

விளக்குகளின் வெளிச்சம்
எதிர்பட்டு கூச்சமெடுக்க
விழிகள் இருள்கின்றன
எரிபொருள் வாசனை
சுவாசத்தினை
திக்குமுக்காட்டுகிறது
நீல விளக்கின் ஒளிக்குள்
துயிலைக் குதப்பிக் கொண்டிருக்கும்
பேருந்தின்
சவக்கிடங்கின் கணப்பிற்குள்ளாக
இருக்கைகளில் யாவரும்
கியர் ஒடிபடும் சப்தம்
அயர்வினை அலமலங்கச் செய்கிறது
பிரேக்கிடும் போது
உயிரின் உள்ளீடு
பதறித் துடிக்க…
பாதுகாப்போ…
சந்தேகங்களாய் படபடக்கிறது
சாலையோர தாபாக்களின்
கிரீஸ் ரசம் மிதக்கும் நீரில்
டீ, காப்பி எனும் பானங்களாய்…
சூடு கமழ நேற்றைய புரோட்டாக்கள், சப்பாத்தி, பூரி என…
குவியல் குவியல்களாய்…
அடர் கசப்பினூடே
அந்த இரவு மோட்டல்களில்
நிலமோ வாழ்வோ இழந்து
தற்காலிகத் துக்கத்தை தின்று செரிக்க
கைத்துப் போனவர்கள்
ஏவலாட்களாய் திரிகிறார்கள்
சாலை மரங்களின் கீழாக
செயற்கை சிரிப்பும் நாறும் அலங்காரங்களும் மின்னிட
சாயம் போன சேலைக்காரிகள்
செல்லும் வாகனங்களை கைநீட்டி அழைத்தபடி….
துளித்துளியாய்
ஒளி சிதற.. சிதற
யாத்திரையின் அந்தம் நீள்கிறது
கறுத்த நெடிய பாதைகளுக்குள்.

??????????????????????????

உயிர் வாசத்தின் காலக் கணக்கு

பூக்கள் தோறும்
அமர்ந்த வண்டு
சிலந்தி வலையில் வெற்றுக் கூடாய் தொங்குகிறது
சாகாமல் சாகிறேன்
வேகாமல் வேகுகிறேன்
நோகாமல் வாழ்வது எக்காலம் ?
புகையாய் போய்க்
கொண்டிருக்கிறேன்
நிமிடங்கள் விலகி ஓடுகின்றன
கலைய கால தாமதம்
பெயரற்றவன்
அடையாளமிடப்பட்டவன்
எரியும் நெருப்பாய் தகிப்பவன்
அடிமைகள் தேசமாய் இருந்தது
அகிம்ஸை தேசம் ஆக்கினோம் என்றார்கள்
இம்சை தேசமாய் மாறிக் கொண்டிருக்கிறது
மலைகளாய் கெம்பீரிக்கணும்
நதிகளாய் இசைக்கணும்
மரங்களாய் சிரிக்கணும்
தேவதைகள் பூச்சொரிகின்றனர்
தேவகானம் இசைக்கப்படுகிறது
தெருவில் அனாதரவாய்
அவன் செத்துக்கிடக்கிறான்.

??????????????????????????

கரைந்து ஒழுகும் நிமிடங்கள்

அழுத நிலைமை முடியட்டும்

ஆங்காரம் நெஞ்சில் உதிக்கட்டும்

காலத்தை புதிதாய் வடிவமைப்போம்
கவிதை எழுதி உறங்கிப் போகாதே
கதைகள் சொல்லி உலர்ந்திடாதே
செழிப்பை சிருஷ்டிக்கும் வல்லமை உன்னிடம் உள்ளது
நள்ளிரவில் சர்வாதிகரம் பிறக்கிறது
நள்ளிரவில் கொலைபாதகங்கள் நடக்கின்றன
நள்ளிரவை ஏந்தும் சாத்தானை எரியூட்டுவோம்
வரிப்புலிகள் பாய்ந்து வருகின்றன
சாத்தான்களால் அவை ஏவப்படுகின்றன
வேட்டையாடு இல்லையெனில் வேட்டையாடப்படுவாய்
ஈசலாய் இருப்பு
மின்மினியாய் கனவு
தட்டாண் பூச்சியாய் பிழைப்பு.பூப் பறித்தேன்
அதன் நகங்கள் கீறின
கைகளில் காயங்கள்
கத்திக்கிட்டே இருக்கு ரெம்ப நாளா ஒரு நாய்
கட்ட அவிழ்த்து விடுங்கப்பா
கஞ்சி தண்ணீ ஊத்துங்கப்பா.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -