நான்காம் பரிமாணம் – 17

4. ஒளி அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்கின்ற நான் ஒளி அதிகாரத்தைத் தொடங்கி உங்களால் பார்க்க முடிந்த வண்ணங்களைப் பற்றி கூறியுள்ளேன். இன்று ஒளியைப் பற்றியும் அதில் உருவாகும் வர்ணங்களைப் பற்றியும், மேற்கொண்டு சில விஷயங்களையும் கூறுகிறேன்.


ஒளியும் வண்ணங்களும்


ஒளியின் வெவ்வேறு விதமான அலைகள் ஒவ்வொன்றும் வேறு வண்ணத்தில் தெரியும் என்றும் சில குறிப்பிட்ட அலைகளை மட்டும் தான் உங்கள் கண்களால் பார்க்க முடியும் என்று கூறினேன் அல்லவா? அதன் காரணத்தை முதலில் கூறிவிடுகிறேன். உங்கள் கண்களில் மூன்றே மூன்று அலைகளை உணரும் செல்கள் மட்டும்தான் இருக்கின்றன.  அவை சிவப்பு, நீலம் மற்றும் பச்சை ஆகும். ஊதா மற்றும் நீலம் 420 நேனோ மீட்டர் அலைநீளம் கொண்ட ஒளி என்றும்  சிவப்பு நிறம் 700 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளி என்றும் நான் சென்ற பகுதியில் கூறியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இதில் பச்சை நிறம் என்பது இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கும் அலைநீளம் ஆகும். இந்த மூன்று விதமான செல்கள் உதவியால்தான் உங்களால் ஊதா முதல் சிவப்பு வரை உள்ள அனைத்து வண்ணங்களையும் பார்க்க முடிகிறது. நீங்கள் பார்க்க முடிந்த மற்ற வண்ணங்களை உருவாக்க வேண்டுமென்றால் இந்த மூன்று அடிப்படை வண்ணங்களின் கலவையைக் கொண்டு உங்களால் உருவாக்க முடியும். உதாரணமாக மஞ்சள் நிறத்தை உருவாக்குவதற்கு சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களை கலந்தால் போதும். இந்த மூன்று அடிப்படை வண்ணங்களை உங்களால் பார்க்க முடியாமல் இரண்டை மட்டும் பார்க்க முடிகிறது என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக சிவப்பு மற்றும் நீலத்தை மட்டுமே பார்க்கும் சக்தி உங்களிடம் இருந்தால் சிவப்பு நிறம் நீங்கள் இப்பொழுது பார்ப்பது போல் தோன்றாமல் கருப்பு நிறத்தில் தான் தோன்றும். அதேபோல நீலமும் வெள்ளை நிறமாக மட்டும்தான் தெரியும். உலகில் பிறக்கும் 30 ஆயிரத்தில் ஒருவருக்கு இதுபோன்று 2 விதமான செல்கள் மட்டுமே கண்ணில் இருப்பதால் அவர்கள் பார்ப்பது முழுவதும் கருப்பு வெள்ளையாக மட்டும் தான் அவர்களுக்கு தெரியும். இந்தக் குறைபாடு தான் நிறக்குருடு (Achromatopsia) எனப்படுகிறது. 

சரி. இரண்டு வண்ணங்கள் அதை உணர முடிந்தால் அனைத்தும் கருப்பு வெள்ளையாகவும் மூன்று வண்ணங்களை உணர முடிந்தால் ஏழு விதமான வண்ணங்களையும் அதனுள்ளே இருக்கும் பல்வேறு நிறங்களையும் பார்க்க முடிகிறது. அப்படியானால் அதற்கு மேல் பல விதமான வண்ணங்களை உணரும் செல்கள் உங்கள் உடம்பில் இருந்தால் இன்னும் அதிகமான வண்ணங்களை பார்க்க முடியுமா? கண்டிப்பாக முடியும். மனிதர்களை விடப் பல்வேறு பூச்சிகளுக்கும் விலங்குகளுக்கும் இந்த சக்தி உண்டு. இந்த விஷயத்தில் ஒரு விதமான இறால் மீன் உங்கள் அனைவரையும் மிஞ்சியுள்ளது. கும்பிடு இறால் (Mantis Shrimp) எனும் ஒரு வகை மீனுக்கு கண்களில் 16 விதமான வண்ணங்களை பார்க்கும் செல்கள் உள்ளது. இதன் உதவியால் அந்த மீனால் உங்களைவிட பலகோடி விதமான வண்ணங்களை எளிதாக பார்க்க முடியும். கடலின் அடியில் கிடக்கும் பல்வேறு உணவுகளை வேட்டையாட இந்த மீனுக்கு இந்த செல்கள் உறுதுணையாக இருக்கின்றன. வண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை சொல்லிவிட்டேன். இந்த வண்ணங்கள் உங்கள் கண்களை எவ்வாறு அடைகின்றன என்று தெரியுமா? 

ஒளி என்பது சக்தி வடிவமாக இருப்பதால் அது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கும். அதுவும் எவ்வளவு வேகமாக தெரியுமா? ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை இதனால் கடக்க முடியும். உங்களால் உணர முடிந்த பொருட்களில் மிகவும் வேகமாக நகரக்கூடிய பொருள் ஒளிதான். அதைவிட வேகமாக நகரும் ஒரு பொருளை நீங்கள் கண்டுபிடித்தால், அந்தப் பொருளால் கடந்த காலத்திற்கு கூட செல்ல முடியும் என்று ஐன்ஸ்டீன் எனும் விஞ்ஞானி ஒரு கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். இவ்வளவு வேகமாக நகரக்கூடிய ஒளி உங்கள் கண்களில் படும்போது தான் உங்களால் வண்ணத்தை உணர முடிகிறது. சிவப்பு முதற்கொண்டு நீலம் வரை உள்ள அனைத்து வண்ணங்களும் கலந்து உங்கள் கண்களில் படுவதால் தான் வெள்ளை எனும் நிறம் உங்களுக்கு தெரிகிறது.

ஒளி மிகவும் வேகமான சக்தியாக நம்மை கடந்து சென்று விட்டால்,  அந்த வண்ணத்தைக் கொடுக்கும் பொருட்கள் சீக்கிரமாகவே சக்தி குறைந்து அழிந்து விடும் அல்லவா? நீங்கள் நீல நிறத்தில் ஒரு பேனாவைப் பார்த்தால் எப்போதும் அது நீல நிறமாகவே தெரிகிறது. ஒளி எனும் சக்தியை வெளிப்படுத்தி விட்டு காற்றில் மறைந்து போய்விடுவதில்லை. ஏனென்றால், ஒளி இரண்டு விதமாக உங்கள் கண்களை வந்து சேர்கிறது. முதலாவதாக ஒளி உருவாகிய உடன் நேரடியாக உங்கள் கண்களை அடைவது. சூரியன் முதலாக உங்கள் வீட்டில் எரியும் மின்சார விளக்குகள் வரை அனைத்தும் இந்த வகைதான். இரண்டாவதாக,நீல நிற பேனாவை நீங்கள் பார்க்கும்பொழுது தானாகவே நீல ஒளியை உருவாக்குவதில்லை. மாறாக சூரிய ஒளியில் அல்லது வெள்ளை ஒளி மேலே படும்பொழுது அதனை உள்வாங்கிக்கொண்டு நீல நிற ஒளியை வெளிவிடுகிறது. அதெப்படி ஒரு நிறத்தை இன்னொரு நிறமாக மாற்ற முடியும்? இங்கே ஒரு அறிவியல் அதிசயம் ஒளிந்துள்ளது.

நான் கூறிய இரண்டாவது வகை வண்ணங்களில், பெருவாரியான பொருட்கள் ஒரு வண்ணத்தை புதிதாக உருவாக்குவதில்லை. மாறாக, தன்மேலே படும் வெள்ளை ஒளியில் உள்ள ஒரு வண்ணத்தை  மட்டும் வடிகட்டி வெளியே அனுப்பிவிட்டு மற்ற வண்ணங்களை தன்னுள் கிரகித்துக்கொள்கிறது. நீங்கள் பச்சை நிறத்தில் ஒரு பொருளை பார்க்கிறீர்கள் என்றால் அந்த பொருள் வெள்ளை ஒளியில் உள்ள 7 அடிப்படை வண்ணங்களில் பச்சையிட்ட தவிர அனைத்து வண்ணங்களையும் உள்வாங்கிக்கொண்டு பச்சையை மட்டும் வெளியேற்றுகிறது! வெள்ளை நிற பொருட்கள் அனைத்து ஒளியையம் பிரதிபலித்து விடுகிறது. கருப்பு நிற பொருளோ எல்லா வண்ணங்களையும் உள்ளே வாங்கிக்கொள்கிறது.

வெள்ளை நிற தோலுடைய மேற்குலக மக்கள் சூரிய குளியல் (sun bath) எடுக்க வேண்டிய காரணம் கூட அதுதான். அவர்களின் வெண்மை நிறம் சூரிய ஒளி அனைத்தையும் பிரதிபலித்து விடுவதால் அவர்களுக்கு சூரியன் மூலம்  கிடைக்கும் விட்டமின் ‘டி’ எளிதாக கிடைப்பதில்லை.  கருப்பு நிற தோலுடைய மக்கள், கிடைக்கும் சிறிய அளவு சூரிய ஒளியைக்கூட நேரடியாக எடுத்துக்கொள்ள முடிவதால் அவர்களுக்கு தனியான சூரிய குளியல் என்பது தேவைப்படாது.  இந்த வண்ணங்களுக்குள் பல்வேறு குணங்களும் ஒளிந்துள்ள. அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன். காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -