யமுனா வீடு – 43

தொடர் கவிதைகள்

- Advertisement -

நிச்சயமாக இந்த வாழ்வு
மாயம் நிறைந்திருக்கப்போவதில்லை
ஒரு தேநீரைப் பருகியபடியே
என்னைத்தேடிக் கொண்டிருந்தேன்
நீ நினைப்பதுபோலல்ல என்றாள் யமுனா
எழுந்து நடக்கத்தொடங்கினேன்
யாரோ பேசிக்கொண்டே நடந்து வருவதுபோல இருக்க
நீளமான அந்தத் தெருவில்
இடைவெளி விட்டு பேசிக்கொண்டிருந்தவர்கள்
மிகக் கவனமாக
என்னைப்பார்த்துச் சிரித்தனர்
நிராகரிக்காமல் புன்னகையை எடுத்துக்கொண்டேன்
சிக்னலுக்காக காத்திருந்தவன்
எதிர்புரத்தில் உள்ள கோபுரத்தை தரிசித்தேன்
சிலர் நின்று வேண்டிக்கொண்டு அவசரமாக சென்றனர்
நோயின்பிடி கொண்ட ஒருவரைப்போல
மண்டியிட்டான் ஒருவன்
சாலையின் குறுக்காக
விழுந்து எழுந்தான் ஒருவன்
பெண்டுலமாகிக்கொண்டிருந்தான் ஒருவன்
இடைவெளி குறைத்து சிலர் வேண்டிக்கொண்டிருக்க
பலர் கடந்து சென்றுகொண்டிருந்தனர்
உன்னைத்தேடு என்றது குரல்
உறுதியாகச்சொல்லிக்கொண்டேன்
ஒரே சொல்லில் கடந்துவிடுகிறேன்
யமுனா
இந்தநாள் முடியட்டும்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -