கடக்கமுடியாத காலங்களில் எல்லாம்
உன்னை அழைத்து விடுகிறேன்
உன்னைத்தான் தேடிவருகிறேன்
சொல்லவந்ததைக்
கோவையாக்கத் தெரியாமல்
தடுமாறும் என்னிடம்
உன்னைப்போல
யாரும் கேட்டதில்லை
துரோகம், பழிவாங்குதலைச் சொல்லாத அன்பில்
என்னைக் கடத்திக்கொண்டிருந்தாய்
அமைதியாகக் கடந்துகொண்டேன்
வாழ்நாளில்
யாருக்கெல்லாமோ நடத்திருக்கிறது
உனக்கும் நடக்கும் என்று சொல்லி
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்
என்னைப் பேசச்சொல்கிறாய்
துளிர்க்கவிருக்கும் கண்ணீரைக் கடத்தி
நீண்டதொரு உரையாடலில்
என்னை அரவணைத்துவிடுகிறாய்
எவ்வளவு நேரம்
உன்னைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேனோ
எவ்வளவு நேரம்
உன்பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறேனோ
அவ்வளவும்
வழிப்பாட்டுக்கான கணங்கள்
உன் முன்னால் மண்டியிடவில்லை
அவ்வளவுதான்
இங்கு யாரும் கைவிடப்படவில்லை
என்னை நீ அறிந்திருக்கிறாய் யமுனா.
யமுனா வீடு -35
தொடர் கவிதைகள்