நீர்வழிபடூம்

மூன்று கவிதைகள்

- Advertisement -

(1) நீர்வழிபடூம்

செம்போத்து  மாமரங்களூடே  தேடியலைகிறது
அதன்  குரலில்  துயரம்  கசிகிறது
காற்று  தயங்கி  தயங்கி  பின்தொடர்கிறது.
தாவணி  போட்டவள்  பாடித்திரிகிறாள்
காடெல்லாம்  செண்பகப்பூக்கள்
சேதி  கொண்டு  வர  வெண்கொக்குகள்  
பறந்து  போகின்றன.
பலரின்  நாக்கு  
சிலரிடம்  புழுவாய்  நெளிகிறது
சிலரிடம்  பாம்பாய்  சீறுகிறது.
கோடை  வெயில்
இலையற்ற  மரம்
மெல்ல  ஊர்கிறது  சிற்றெரும்பு.
நீங்கள்  செய்யும்  குற்றம்
தனக்கில்லை  என  நினைப்பது
எதையும்  வேடிக்கை  பார்ப்பது.
கிழக்கு வெளுக்குதோ 
மேற்கு  வெளுக்குதோ
மனம்  வெளுக்க  தாமதமகிறதே.
வலிகளை  எழுதுகிறேன்
வாதைகளை  பகர்கிறேன்
கண்ணீர்  சிந்த  வேண்டாம்.
கொலுசொலி
இதயம்  நர்த்தனமிடுகிறது
காதல்  சங்கீத  வைபோகமே.

?

(2) நிழலை பின் தொடர்ந்து
__________________________________

பன்னீராய்  தூறிச்  செல்கிறது  மழை
கவட்டுக்குள்  தலையை  வைத்துக்கொண்டு 
கருகுகிறான்  விவசாயி
தரையெல்லாம்  வாய்பிளந்து  யாரையெல்லாம்  விழுங்காலமென்று  கிடக்கிறது.
விஞ்ஞானம்  மெய்ஞானம்
அஞ்ஞானம்  தன்ஞானம்
எந்ஞானம்  எம்மை  கடைத்தேற்றும்?
விம்மித்  திணறுகிறாள்
தொண்டைக்  குழியில்  வார்த்தைகள்  சிக்கிக்  கொண்டன
துக்கம்  அவளைப்  பிய்த்துத்  தின்னுகிறது.
அழகிய  முகம்
விழிகள்  துள்ளுகின்றன
உதடுகள்  கூம்பியிருக்கின்றன.
உறுமீன்  வருவதைக்  காணாம்
ஒற்றைக்காலில்  நின்றது  போதும்
கிடைப்பதைத்  தின்று  பசியாற்றுகிறேன்.
உடல்  உண்டு
உயிர்  உண்டு
உருப்படியாய்  ஒன்றும்  செய்யவில்லை.

?

(3) அந்திமக் காலத்தின் ஏடு
___________________________________

காற்றடித்தது
கண்கள்  மூடியது
காலம்  காணாமல்  போனது
அடிமைப்படுத்துவது 
அன்போ… அதிகாரமோ…
துன்புறுத்துவது 
உறவோ…  பகையோ…
சுதந்திரம்  எக்காலத்தும்  எந்நிலையினும்  மேன்மையானது
உன்னைத்  தின்ன 
என்னால்  முடியவில்லை
என்னைத்  தின்ன 
உன்னால்  முடியவில்லை
காலம்  நம்மைத்  தின்ன  
கொக்காய்  காத்திருக்கிறது
அனாதையாய்  பிறப்பது 
எதிர்பாராத  காயம்
ஆதரவற்று  வாழ்வது  சீழ்கட்டிய  ரணம்
அவ்வப்போது  கனவுகளே  நித்ய  சுகம்
தேடித்தேடி  சேர்க்கிறார்கள்
மூடி மூடி  சேமிக்கிறார்கள்
மூடர்கள்  வாடி  உதிர்ந்து  மறைகிறார்கள்
நீண்ட  நாட்களாக  எதிர்பார்க்கிறேன்
இன்னும்  வந்து  சேரவில்லை
நானும்  காத்திருப்பை  விட்டு  விடவில்லை
ஆற்றில்  பூக்களை  தூவுங்கள்
சாகடிக்கப்பட்டவர்கள் 
ஏற்றுக்கொள்ள  மாட்டார்கள்
சாகடித்தவர்களை  தூக்கி  வீசினால்  பெற்றுக்கொள்வார்கள்
மூன்று  குழந்தைகள்  சாவு 
பசி  கொன்றுவிட்டது
தேசம்  வேடிக்கை  பார்க்கிறது.
எத்தனை  இதயங்களை  உண்பீர்கள்  ?
எத்தனை  உயிர்களை  குடிப்பீர்கள்  ?
எத்தனை  காலம்  வாழப்  போகிறீர்கள்  ?

?
வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -