பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 30

நாணத்தின் ராகத்துல நான் செய்தேன் ஆலாபன... !!!!!!!!

- Advertisement -

வெட்கத்தை விட்டுவிட்டால் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த நம் பாடும்நிலாவின் பின்னாலேயே சென்று அங்கு நடந்ததைக் கையோடு சுருட்டிக்கொண்டு வந்தேன்.. அவற்றை எழுத்துகளாக்கி ஆர்வமுடன் காத்திருக்கும் உங்களுக்காக இங்கே உலாவ விடுகின்றேன். படித்து இன்புறுங்கள் மக்களே.

இன்று நாம் பார்க்கப்போவது ஓர் இணைப்பாட்டு. இணையோடு பாடல் என்றால் கொட்டிக்கிடக்கும் காதற்பாடல்கள் ஏராளம் ஏராளம்.. மற்ற இப்பாடல்கள் எல்லாமே அவற்றிற்குப் போகத்தான் மிச்சம்… மிக உன்னதமான ஓர் உணர்வான காதலுக்குப் பல்லாயிரக்கணக்கில் பாடல்கள் எழுதினால் கூட போதாதுதான். சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பதுபோல சொல்லித் தீர்வதில்லை மானுடக்காதல் என்று நானொரு புதுமொழியை உருவாக்கிவிட்டேன்..

விதவிதமாகக் காதலைச் சொல்வதில் தலையாயவன் தமிழன்தான் .. ஐயமே வேண்டாம்.. வேண்டுமென்றால் சங்க இலக்கியங்களைப் புரட்டிப்பாருங்கள் போதும். கெஞ்சுதமிழில், கொஞ்சுதமிழில், விஞ்சுதமிழில், மயக்குதமிழில், அயர்த்துதமிழில், கிறங்குதமிழில், கிளர்த்துதமிழில், சொக்குதமிழில் எனப் பலவகையான தமிழில் காதலைச் சொல்லி மகிழ்ந்த இனம் நம் தமிழினம். இங்கே காதலன் கிறங்குதமிழில் தன் காதலைச் சொல்கின்றான். அதற்குத் துணையாக நம் பாடும் நிலாவைக் கூப்பிட்டிருக்கிறான். ஆகப் பொருத்தமான ஆள்தான்.  

இப்பாடலின் பல்லவியை நம் எஸ்.பி.பி தான் தொடங்குகிறார். அதனால் பாட்டு அவர் போக்கிலேயேதான் செல்கிறது. பாடலைத் தன்போக்கில் இழுத்துவிடுவது  ஒரு வித்தை. அதை அழகான வித்தையாக்கும் கலை வெகுசில பாடகர்களுக்கே உண்டு. அதில் ஆண்களில் முதன்மையானவர் என்று நம் எஸ்.பி.பியைத்தான் சொல்லவேண்டும்…! இப்பாடலில் நம் எஸ்.பி.பியோடு இணைந்து கிறக்குபவர் பாடகி உமா ரமணன். தமிழில் பல அழகான பாடல்களை இவரும் பாடியிருக்கிறார். இவர்க்கும் நம் ஜானகியம்மாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஜானகியம்மா குரல்போல இல்லையே, வேறென்ன ஒற்றுமை என்றுதானே கேட்கிறீர்கள்? இருவருமே நின்று பாடும்போது அப்படியே ஒரு சிலை நின்று பாடுவதுபோல இருக்கும். தலையைக்கூட அவ்வளவாக ஆடவிடமாட்டார்கள். அசையாமல் நின்று பாடுவார் இருவருமே. ஆனால் குரலில் அத்தனை ஆட்டமும் துள்ளலும் கொண்டு பாடிவிடுவர். ஒவ்வொருமுறையும் இதை எண்ணி எண்ணி நான் வியப்பதுண்டு. இவர்கள் இருவருடனும் சேர்ந்து நம் எஸ்.பி.பி பாடும்போது அங்கே அச்சூழல் எப்படியிருக்கும்? என உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். சரி வாருங்கள் நாம் முதல் சரணத்திற்குப் போவோம். பல்லவியைத் தொடங்கியது எஸ்.பி.பி என்பதால் முதல் சரணத்தையும் அவரே தொடங்குகிறார்.

நீராடும் நேரத்துல

நான் பாத்தேன் மோகத்துல..

என்று பாடுகிறார் காதலியைப் பார்த்து.. ஈரம் எப்பவுமே நெகிழ்த்தும் தன்மையுடையது. யாரைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் மனத்தில் ஈரம் படர்கிறதோ அல்லது பெருக்கெடுக்கிறதோ அப்போது நீங்கள் அவர்கள்மேல் நெகிழ்ந்துநிற்கும் நிலை உருவாகிவிடும். அதேபோலத்தான் உடலில் ஈரம் படர்ந்த பொழுதுகளில் ஆண்-பெண் ஈர்ப்பு நெகிழ்வு நிலையில் நிற்கும். ஒரு தாய் தன் கைக்குழந்தையைக் குளிப்பாட்டும்போது அவள் மனம் அன்பின் உச்சத்தில் நெகிழ்ந்து நிற்கும். நீங்கள் நெகிழ்வோடு காணும்போது காணப்படுபவை யாவுமே உங்களுக்குப் பேரழகாக மாறிவிடும். அதிலும் நீராடும்போதுதான் எல்லோர்க்கும் இயற்கையான அழகு மிளிரும். அப்படி அழகுமிளிர்கின்ற தன் காதலியைப் பார்த்து நீராடும் நேரத்துல என்று சிறு ஏக்கத்தில் தொடங்குபவர் மோகத்துல என்று முடிக்கும்போது பேரேக்கத்தின் வாயிலில் நின்று பாடுகிறார்.

நாணத்தின் ராகத்துல

நான் செய்தேன் ஆலாபன…

என்று காதலி அவர்க்குப் பதிலுரைக்கிறாள். என்னிடம் நாணமிருப்பதால் நானும் கோட்டைத்தாண்டி வரமாட்டேன், நீயும் வரக்கூடாது என்று பூடகமாகச் சொல்கிறாள். எத்துணை ஏக்கத்தோடு பாடியவர் ! சும்மா சரியென்று சொல்லிவிடுவாரா என்ன! அடுத்த காதல்கணையை வீசுகிறார்.

 ஏய் ஈரம் பட்ட மேனியில

நானும் பட்டா தோஷம் இல்ல

வாயேண்டி கிட்ட வாயேண்டி

தாயேண்டி உன்ன தாயேண்டி

முன்னர் ஏக்கத்தில் பாடியவர் இப்போது ஏக்கம் வளர்ந்து அடுத்தநிலைக்குச் சென்று கிறக்கத்தில் பாடுகிறார். அவர் மட்டுமா கிறங்குகிறார்? கேட்பவர் அத்தனை பேரையும் கிறங்கடித்துவிடுகிறார்.. ஆண்கள் பெண்களை “டி” போட்டு அழைக்கும் வழக்கம் எங்கு எப்போது தொடங்கியது என்றும் , அவ்வழக்கம் எப்போது பழக்கமானது என்றும் எம் சிற்றறிவுக்குத் தெரியவில்லை. அதுபற்றி பின்னாளில் ஓர் பேராய்வு செய்யவேண்டும். எல்லா உணர்வுகளை வெளிப்படுத்தும்போதும் “டி” போட்டு அழைக்கலாம். அதன் குரலின் தொனி  மட்டுமே ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொருவிதமாக மாறுகின்றது. எல்லாவகையான உணர்வுகளில் அழைத்தாலும் கிறக்கத்தில் தன் காதலியையோ மனைவியையோ “டி” போட்டு அழைப்பதே தலையாயதாய் நிற்கின்றது. இல்லை என்று மறுப்போர் உடனே அவரவர் காதலியிடமோ மனைவியிடமோ இதை ஆய்வு செய்து பார்த்துக்கொள்ளுங்களேன். ஐயம் தீர்ந்துவிடும்.  இப்போது மீண்டும் அவ்வரிகளைக் கேளுங்கள். காதல் கிறக்கத்தின் சுழலில் நீங்களாகவே மகிழ்ந்து சிக்கிக்கொள்வீர்கள். அத்தகைய உணர்வினை முழுமையாக நமக்குள் கடத்திவிடுகிறார் நம் பாடும் நிலா.

இத்தனை கிறக்கத்துடன் காதலன் கேட்கும்போது காதலிக்கும் ஆவல் வராமலேயோ போகும்? வருகிறது.. ஆனால் அதை ஒரு தயக்கம் தடுக்கிறது.

கொஞ்சம் இடத்தத்தான் விட்டு விட்டா

மெல்ல மடத்தத்தான் புடிப்பீங்களே… 

என்று பதிலுரைக்கிறாள். அவளுக்குத் தெரியும் பெருமழையில் கொஞ்சமாய் நனைவதென்பது ஆகாத செயலென்று.. அவளின் தயக்கத்திற்கு மூலமாய் இருக்கின்ற வெட்கத்திரையை விலக்கிவிட்டால் அவள் சரியென்றுவிடுவாளே என்று கணித்து அவரும் பாடுகின்றார்.

நீயும் வெக்கத்த விட்டு விட்டா

நானும் சொர்க்கத்தை தொட்டுடுவேன்..ன்..ன்..ன்ன்ன்..

கிறக்கத்திலேயே பாடுபவர் தொட்டுடுவேன் என்று சிணுங்கலில் முடிக்கிறார். இவ்வாறு சிணுங்கும் குரலில் நம் எஸ்.பி.பியை அடித்துக்கொள்ள ஆண் பாடகர்களில் ஆளே கிடையாது. தனியொருவனாய்க் கோலோச்சியவர் !

இரண்டாவது சரணத்தையும்  எஸ்.பி.பிதான் தொடங்குகிறார்.

உன் மேனி மைதானத்தில்

நானுந்தான் விளையாடவோ?

என்று ஏக்கத்தோடு கோரிக்கை வைத்துப் பாடுகிறார்.

உத்தரவு இப்போதில்ல

தொந்தரவு தாங்கவில்ல

என்று காதலி மறுத்துவிடுகிறாள்.

ஏய் உச்சி முதல் பாதம் வரை

இச்செனவே முத்தம் இட்டா

தேனும்தான் இதழில் ஊறும்தான்

நானும்தான் சுவைக்க வேணும்தான்

என்று கிண்ணத்தில் நிறைந்திருந்த தேனானது ததும்பி அலம்பிக்  கிண்ணத்தின் விளிம்பினில் தள்ளாடிப்பின் வெளியே வழிவதைப்போன்றதொரு மிகுதியான கிறக்கத்தில் நம் பாடும்நிலா பாடும்போது பாவம் காதலியும் என்ன செய்வாள்? இலைமறைகாயாகத் தன் ஒப்புதலை அளிக்கும்விதமாகப் பதிலுரைக்கிறாள்.

பூந்தோட்டத்த உலுக்கி விட்டா

பூவக் கொட்டுமே மாலை கட்ட

காதலின் வெட்கம் மட்டும் சற்றே வியப்பானது. எதையும் கேட்டால் தானாகத் தராது. ஆனால் எடுத்தால் தடையேதும் சொல்லாது. அதைத்தான் அவளும் சொல்கிறாள்.

எழில் தோட்டத்தச்  சுத்தி வந்தேன்

ஒன்னும் கிட்டல நானும் கட்ட

வலுக்கட்டாயமாய் உலுக்குவதற்கு எனக்கும் விருப்பமில்லையடி பெண்ணே.. தானாய் உதிர்ந்தால் ஒன்றென்ன ஓராயிரம் மாலை கட்டிவிட மாட்டேனா? என்று அவரும்  காதலின் கட்டுப்பாட்டிற்குள் நின்று பெருமூச்சு விட்டுப் பாடுகிறார்.

ராக்கோழி கூவயிலே

என் ராசாத்தி நீயும் இல்லை

ராக்கோழி கூவயிலே

என் ராசாத்தி நீயும் இல்லை

தவிக்கிறேன்…. ஐய்யைய்யைய…

துடிக்கிறேன்…. ஐய்யைய்யைய

தவிக்கிறேன் ….. ஐய்யைய்யைய…

துடிக்கிறேன்…. ஐய்யைய்யைய…

ஏய் மச்சான் மச்சான்

மச்சான் மச்சான் மச்சான்

ஆசை வச்சான் வச்சான்

வச்சான் வச்சான் வச்சான்

இதுதான் பாடலின் பல்லவி. பலவியைப் பாடத்தொடங்கும்முன்  தனது ஒட்டுமொத்தக் கிறக்கத்தையும் ஒரு சாட்டையாகச் செய்து அதைத் தன் குரல்வளையில் பொருத்திக்கொள்கிறார் எஸ்.பி.பி . பாடத்தொடங்கியதும் ஒவ்வொரு சொல்லாக அவர் சாட்டையைச் சொடுக்கி சொடுக்கி நம்மை அவரின் குரல்வெளிக்குள் இழுத்துவிடுகிறார். பால்வெளியில் சூரியனைச் சுற்றிவரும் பூமிபோல நாமும் அவரின் குரலைச் சுற்றி சுற்றி வருமாறு செய்துவிடுகிறார். ராக்கோழியும் ராசாத்தியும் மாயம் செய்பவைதான்.. ஆனால் அவ்விரண்டையும் வைத்து ஒரு பெரிய காதல் மாயவலையே நெய்துவிடுகிறார் நம் எஸ்.பி.பி. சில பாடல்களை எஸ்.பி.பியின் குரலில் மட்டும்தான் கேட்கப்பிடிக்கும் .. கற்பனையில்கூட வேறொரு மாற்று என்பதை மனம் எக்காலமும் ஏற்றுக்கொள்ளாது. அவ்வகையில் இப்பாடலும் உண்டு. இதை இவ்வளவு சிறப்பாக எஸ்.பி.பியால் மட்டுமே பாட முடியும்… வேறு யாராலும் இதைப் பாடுவதைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

மயக்கத்தில் இருப்பவனைக்கூட சட்டென்று தெளிய வைத்துவிடலாம். ஆனால் கிறக்கத்தில் இருப்பவனைத் தெளிய வைப்பது இயலாத செயல்தான்.. தானாய்த் தெளிந்தால்தான் உண்டு.. இதே கிறக்கத்தோடுதான் அவர் இன்னும் காதலியிடம் காதல் மொழிந்து அல்ல அல்ல பொழிந்துகொன்டு இருக்கிறார். வாழைத்தண்டுக்குப் பொன் பூசியது யார்? தேராட்டம் அசைந்து வருவது யார்? என் நெஞ்சில் போராட்டமாய் இருக்கிறதே என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால் ஆறு மனமே ஆறு.. ஆறே நாள்கள் ஆற்றுப்படுத்துங்கள் மனத்தை.. ஏழாம்நாள் பதிவுடன் நான் ஓடோடி வந்துவிடுகிறேன்.

தேசிங்கு இராசாவின் தோட்டத்தில்  பாடும் நிலா ஏக்கம் விளைவிக்கும்….

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

2 COMMENTS

  1. அந்தப்பாடலை அமைக்கும் கலையில்.. எத்தனை வர்ணனைகளை,கற்பனைகளை அலையலையாக சந்தித்து அதை எழுதி இருப்பாரென்று உங்கள் விளக்க வரிகளின் கட்டமைப்பில் காண நேர்கிறது. படிக்கும் பொழுது எங்களை மீண்டும் நினைவுக்குள் அழைத்துச் செல்கிறது..

    கவிதாயினி பிரபாதேவி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ???❣️

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -