தோழர்களுக்கு அன்பு வணக்கம்,
மே 1 உழைப்பாளிகளுக்கான தினம். உழைத்துச் சிவந்த கரங்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது நம் வரம்! இக்கட்டுரை இக்கட்டான இன்றைய சூழலில் சூழன்றுகொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கான உற்சாக உரை ஆகும்.
விடை கொடுக்காத நாடுகளில் வீறுகொண்டு எழுந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்கிறபோது அதற்கான வழியைக் கையில் எடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால், அதன் விதை அழுகலானதாக இருக்கக்கூடாது; ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் எதுவும் சாத்தியமாகும்; சரித்திரமாகும். அன்று நடந்த தொழிலாளர் புரட்சியில் இதுபோன்ற விதை மிகவும் வலிமையானதாக இருந்ததால்தான் இன்று தொழிலாளர்களுடைய வாழ்க்கை, தூணாய் உயர்ந்துநிற்கிறது. தொழிலாளி இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்கிற சூழலில், அவர்கள் இன்று ஓரளவுக்குத் தங்களுடைய உரிமைகளுடன் வாழ்கிறபோதிலும், ஒருகாலத்தில் அவர்களுடைய உழைப்பு உறிஞ்சப்பட்டது; ஊதியம் குறைக்கப்பட்டது; உடல் காயம்பட்டது. அதிலிருந்து விடுதலை பெற்று அதன் பயனால்தான் இன்று உலகெங்கிலும் தொழிலாளர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மே தினத்தின் வரலாற்றுச்சுருக்கம்
தொழிலாளியின் நிலையை நன்றாகப் புரிந்துகொண்டதால்தான் பேரறிஞர் அண்ணா, ”தொழிலாளி வெறும் உழைப்பாளியாக மட்டும் இருக்கும் நிலை மாறி, அவன், தொழிற்சாலைகளிலே பங்காளியாகவும் ஆக்கப்பட்டால்தான் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்” என்றார்.
18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் நிச்சயமற்ற வேலை, மிகக்குறைந்த சம்பளம், நீண்டநேர வேலை என தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகக் கிடந்தனர்; பசி, பட்டினியுடன் மாடாய் உழைத்துக் கொத்துகொத்தாய் மாண்டனர்; பாரபட்சமின்றி அவர்களை எந்நேரமும் முதலாளித்துவத்தினர் கொடுமைப்படுத்தினர்; ஒருநாளைக்கு 12 முதல் 18 மணி நேரம்வரை வேலை செய்யத் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இப்படி, அன்றைய காலத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பல நாடுகள் புரட்சி செய்ததன் விளைவாக இன்று தொழிலாளர் நலனில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு விடியலாகவும், விடிவெள்ளியாகவும் நின்ற மாபெரும் தலைவர்களில் மாமேதை கார்ல் மார்க்ஸும் ஒருவர். குறிப்பாக அவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு அதில் வெற்றிபெற்றவர் கார்ல் மார்க்ஸ். ”எட்டு மணி நேர போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் முதலாளித்துவமே எல்லாப் பிரச்னைகளுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது” என்றார். அவரது நண்பர் ஏங்கல்ஸ், ”உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்” என்ற உயிரோட்டமுள்ள உன்னத வார்த்தையை அதன் அடிப்படைக் கோட்பாடாக முன்வைத்தார். இது இன்றும் மிக முக்கியம்- தற்போதைய கோவிட் 19 காலத்திலும் தேவை!
எந்தச் சிக்கல்களையும் எதிர்க்கொண்டு ஒற்றுமையாகவும் விவேகத்துடனும் தொழிலாளர்கள் நடந்துகொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.
உழைப்பாளிகளின் மகத்துவத்தைப் பறைசாற்றிய பட்டுக்கோட்டையார்
இருட்டை கழுவிய சூரியன் தன்னுடைய எழுத்தைபோலவே வாழ்ந்து முடித்தவர் கல்யாணசுந்தரம். உழைக்கும் வர்க்கத்தின் ஆசைகளையும் ஆவேசத்தையும், ஆதங்கத்தையும் பாடல்வரிகள் மூலம் எழுதித் தீர்த்தான் இந்த அலங்காரமற்ற மனிதன். குறுகிய காலமே வாழ்ந்தாலும் மகாகவி பாரதியாருக்கு பிறகு சமூக அக்கறை மிகுந்த பாடல்களை எழுதியதோடு அதை பாமரன் மனதிலும் பதியவைத்தான் இந்த பாவலன். சமுதாய இருட்டை கழுவிய இந்த சூரியனின் பாடல்கள் எல்லா காலங்களும் பொருந்தக்கூடிய ஒன்றே என்தை தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றியோடு நினைத்து பார்ப்பதுஅவசியம்.
மானிட வாழ்க்கை மகத்துவமானது. மற்ற உயிர்களைக் காட்டிலும் பண்பட்ட பக்குவ நிலையை உடையது. சூழலும், சூறாவளியும் சுற்றி வருவது போல மனித வாழ்க்கையும் மாறிக் கொண்டேயிருக்கிறது. தரிசு நிலங்களைக் கொத்திப் பதப்படுத்தி மண்ணைப் பொன்னாக்கும் வளமான பூமியாக மாற்றுவது உழவனின் கடமையாகும்.
சிந்தனை, செயல், விழிப்புணர்வு, விடுதலையுணர்வு, புரட்சி, மறுமலர்ச்சி மனமாற்றம் இவற்றிற்குக் காரணமாக விளங்கியவர்கள் பலர். அவர்களுள் அரிஸ்டாட்டில், ஆபிரகாம் லிங்கன், காரல் மார்க்ஸ், லெனின், பாரதியார், பாரதிதாசன், பெரியார் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர்களின் வழியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
கல்வி மனிதனுக்குத் தேவைதான் என்று கவிஞர் அழுத்திக் கூறுகிறார். ஆராய்ந்து அறிந்து கொள்ளும் உண்மை அறிவு கல்வியால்தான் வரும் என்பதோடு இந்த உலக இயக்கத்தைப் புரிந்து கொள்ளவும் கல்வியின் வழிபெறும் அறிவே தேவை என்கிறார். ஆனால் அதுமட்டும் அவன் வாழ்க்கையை மேம்படுத்திவிடாது என்று தொடர்ந்து கூறி நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.
“படிப்பு தேவை அதோடு
உழைப்பும் தேவை – முன்னேற
படிப்பு தேவை – அதோடு
உழைப்பு தேவை
உண்மை தெரியும், உலகம்
தெரியும் படிப்பாலே – நம்
உடலும் வளரும் தொழிலும்
வளரும் உழைப்பாலே”
ஏட்டுக்கல்வி ஒரு மனிதனின் மூளையைத் தான் கூர்மையாக்கும் என்று மு.வ அவர்கள் கூறு கின்றார். அறிவு வளர்ச்சி வேறு மூளை வளர்ச்சி வேறு. ஒரு மனிதன் எட்டில் படித்ததோடு நின்று விட்டால் அவன் அறிவு வளர்ச்சி பெற்றவனாக ஆகிவிடமாட்டான் என்ற அற்புத வாழ்வியல் உண்மையைப் பட்டுக்கோட்டையார் மிக எளிமையாகத் தமது பாடல்களில் கூறியுள்ளார். இங்குக் கூறப்படும் கல்வியோடு இன்றைய சூழலில் விழிப்புணர்வையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சமூகம்,நாடு, உலகம் என அனைத்து நிலைகளிலும் நிகழும் நல்லது கெட்டதைப் பகுந்தாய்ந்து பார்க்க பழகிக்கொள்ள வேண்டும்.
ஒளி விளக்குகளான தொழிலாளிகள்
தொழிலாளர்கள் உலகை நடத்திச் செல்லும் ஒளி விளக்குகள் என்றால் மிகையாகாது. உலகை வாழ வைக்கும் பாட்டாளி மக்கள் நலமுடன் வாழ்ந்தால்தான் மக்களினம் சிறப்புற்று வாழ முடியும். தொழிலாளர்கள் வாழ்விலே, பஞ்சம் புகுந்தால் அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகும். எனவே தொழிலாளர்கள் பூரண நலத்துடன் வாழ வேண்டும்.
“செய்யும் தொழிலே தெய்வம்
அந்தத் திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி
கொண்ட கடமைதான் நமது பதவி
பயிரை வளர்த்தால் பலனாகும்
அது உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும்”
என்று தொழிலாளர்களின் தன்னம்பிக்கையையும், செய்யும் தொழிலையும் திறமையாகச் செய்ய வேண்டும் என்ற பொதுவுடைமைக் கோட்பாட்டை உருவாக்கினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
“வளர்ந்து வரும் உலகத்துக்கே
நீ வலது கையடா”
என்று ஆற்றல், அறிவு, பண்பு ஆகியவற்றை உடைய தொழிலாளர் உலகின் வலதுகை என்கிறார்.
“காலுக்குச் செருப்பும் இல்லை
கால் வயிற்றுக் கூழும் இல்லை”
என்று ஜீவா கூறிய கருத்தை அமைத்து,
“கையில் ஒரு காசுமில்லை
கடன் கொடுப்பார் யாருமில்லை
கஞ்சிக்கொரு வழியுமில்லை
கொல் வறுமை தாழவில்லை
ஏங்கி இரந்துண்ணவோ எங்கள் மனம்
கூசுதடா”
என்கிறார்.
பசியிலும், தன்மான உணர்வைப் பலியிடத் தயங்கி ஏங்கும் உழைப்பாளர் குமுறலை வெளி யிட்டார்.
முடிவுரை
யார் வாழ்ந்தாலென்ன, யார் ஆண்டா லென்ன? தான் வாழ்ந்தால் போதும் எனத் தற் சார்போடு இயங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் கவிஞர் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார் என்பது அவரின் கவிதைகளால் வெளிப்படுகிறது. கவிஞரின் சமுதாய சிந்தனைகள் கவிதைகளாக மட்டும் உருவாகவில்லை. கால வரலாறாகவும் காணப் படுகிறது. அவரின் சிந்தனைகள் சமுதாயத்தில் பிரதிபலிக்கப்படுமானால் தமிழ்ச் சமுதாயம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து இருக்கும்.
பட்டுக்கோட்டையார் வழியில் வந்த நாம் நம் சமூகத்தினருக்கும் நம் இனப்பிள்ளைகளுக்கும் தைரியம், உழைப்பு, விடாமுயற்சி, பகுத்தறிவு, உலக விழிப்புணர்வு போன்ற விதைகளை விதைத்திட வேண்டும்.
விதைத்தால் மரம்!
வீழ்ந்தால் உரம்!
நாளை நமதே