என் அன்பிற்கினிய யமுனா
எவ்வளவு நேரமாகக்
காத்துக்கொண்டிருப்பது ?
சலிப்புடன்தான் தொடங்குகிறேன்
உன் ஒவ்வொரு வருகையிலும்
நேரம்கடத்தாமல் உடனே புன்னகைத்துவிடுவாய்
ஒரு கோப்பைத் தேநீரைப்
பகிர்வதில் தொடங்கி
இருள் வந்தபின்பு
நிலாவின் வெளிச்சைத்தைக்காட்டி
விடைபெறுகிறாய் நீ
புன்னகைத்து விடுகிறேன்
உன் கண்களிலிருந்து
விலகிப்போகிறேன்
விரைவுச்சாலையில்
ஒளிரும் விளக்குகளை
ஒன்றாய் இணைப்பது நீதான்
போகும்தொலைவு வரை
பார்த்துக்கொண்டிருக்கிறாய்.
உறங்கி எழும்பொழுதில்
இயல்போடு இருக்கிறேன்
என்னைப் புரிந்துகொண்டேன்
எதை நினைத்தும் பயமில்லை
சரியாகத்தான் தொடங்குகிறது
உன் நம்பிக்கைக்காக
எதையும் செய்ததில்லை
வருத்தப்பட வேண்டாம்
கடவுளிடம் சொல்கிறேன் என்கிறாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பயமில்லாமலிருக்க
முருகனை வேண்டுகிறேன்
இங்கு எதுவும் தனித்ததல்ல
ஒன்றைச்சார்ந்துதான் படைக்கப்பட்டிருக்கிறது
நான் சார்ந்திருக்கிறேனா ?
யமுனா
நீதான் சொல்லவேண்டும்