மெய்நிகர் உலகம் – 1

- Advertisement -

அன்பு வாசகர்களுக்கு வணக்கம். இன்று முதல் மெய்நிகர் உலகம் என்னும் இந்த தொடரின் மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மெய்நிகர் என்றால் என்ன? உண்மைக்கு நிகராக அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடிந்த ஒரு பொருளையோ செயலையோ பயன்படுத்துவதுதான் மெய்நிகர் எனப்படுகிறது. விஞ்ஞானிகள் ஏதோ வருங்காலத்தில் இதனை நடைமுறைப்படுத்துவார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தினசரி வாழ்க்கையில் நாம் இதனை உபயோகித்துக் கொண்டுதான் வருகிறோம். இதற்குள் அடங்கிய வரலாறு, அறிவியல், ஆச்சரியங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டுவிட்டால் நமது தினசரி வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருக்கக்கூடும். இவை அனைத்தையும் இந்த தொடரில் உங்களுக்கு தொகுத்து வழங்கலாம் என்று இருக்கிறேன். நம்முடைய பயணத்தை இங்கிருந்து தொடங்கலாம் வாருங்கள்.

ஜெகமே மாயம்

இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்களும் ஒருவிதத்தில் மாயைதான் என்று பல்வேறு தத்துவங்களிலும் மதங்களிலும் கூறப்பட்டு வருகிறது. அனைத்துமே மாயை என்றால் நீங்களும் நானும் கூட மாயை தானே. அப்படிப்பட்ட மாயையான நாம் மற்ற மாயைகளை பயன்படுத்தும்பொழுது அது நமக்கு உண்மையாக தானே தோன்றும்! அப்படியானால் நம்மை சுற்றியுள்ள அனைத்தும் உண்மை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இங்கே எவற்றை மெய் அல்லது மெய்நிகர் என்று பிரித்துப் பார்க்கும் பொறுப்பை நான் உங்களிடம் விடப் போகிறேன். அப்படி நீங்கள் முடிவு எடுப்பதற்கு முன்னால் அவற்றைச் சுற்றியுள்ள சுவாரசியமான பல்வேறு தகவல்களை உங்களுக்கு கூறப்போகிறேன். உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாததாக இருக்கும் பணத்திலிருந்து இந்த விவாதத்தை தொடங்கலாம்.

பண்டைய காலங்களில் மக்கள் தங்களுக்கு தேவையானதை மற்றவர்களிடமிருந்து பெரும்பொழுது அதற்கு ஈடாக மற்றொரு பொருளை கொடுத்து வந்தனர். இப்படி கொடுத்து வரும் பொழுது முதலில் ஒவ்வொரு பொருளுக்கும் மதிப்பு என்பதை தீர்மானிக்க வேண்டும் அல்லவா? இந்த மதிப்பு என்பது தான் நீங்கள் உருவாக்கிய முதல் மெய்நிகர் தத்துவம் ஆகும். ஏனென்றால் நீங்கள் ஒரு பொருளை அதிக மதிப்புடையது என்று மனதில் நினைத்துக் கொண்டால் அது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடும். அப்படிப்பட்ட பொருட்கள் இன்றும் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக வைரக்கற்கள் எடுத்துக்கொள்ளலாம். வைரம் என்றால் என்ன? நீங்கள் சாதாரணமாக அடுப்பு எரிப்பதற்கு பயன்படுத்தும் கரி மிகுந்த அழுத்தத்தில் அடைபட்டிருக்கும் போது வைரமாக மாறி விடும். வைரத்தின் ஜொலிக்கும் தன்மை அதன் மீது தீட்டப்படும் பட்டையால் கிடைப்பதுதான். ஒரு வைரக்கல்லை நீங்கள் எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் அதனை பொடி பொடியாக உடைத்து விட்டால் பூஜ்ஜியம் ஆகிவிடும்! அப்படியானால் வைர கல்லில் இருக்கும் மதிப்பு வைரக்கல் இல்லை ஆனால் உங்கள் மனதில் மட்டும் தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டீர்கள் தானே?

பண்டைய காலத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தேவைக்கு ஏற்ப மதிப்பு இதுபோன்றுதான் நிறுவப்பட்டது. பல நாள் பட்டினி கிடக்கும்போது உனக்கு முன்னால் உணவை கொண்டு வந்தால் இந்த மொத்த உலகத்தையே கொடுத்து அதனை வாங்கி விட வேண்டும் என்றுதானே தோன்றும்? ஆனால் இங்கேதான் ஒரு சிக்கல் உள்ளது. பண்டமாற்று என்று வந்துவிட்டாலே வாங்குபவர் மற்றும் விற்பவர் என்று 2 சம்பந்தப்பட்ட நபர்கள் வந்து விடுவார்கள். இதில் ஒருவருக்கு தோன்றும் மதிப்பு மற்றொருவருக்கு தோன்றவில்லை என்றாலும் பண்ட மாற்றம் நிகழாது. இந்த இரண்டு நபர்களையும் சம்மதிக்க வைப்பதற்காக பொதுவான சில மெய்நிகர் தத்துவங்களை நமது மூதாதையர்களை உருவாக்கினார்கள். இவற்றில் முதலாவது தத்துவம்தான் ” நிலையானதன்மை”. இந்தத் தத்துவம் மெய்யானது அல்லது மெய்நிகர் ஆனதா என்பதே மிகப்பெரிய கேள்வி தான். இவற்றை சுற்றியுள்ள பல்வேறு தகவல்களையும் அடுத்த வாரம் உங்களுக்கு கூறுகிறேன். 

-மீண்டும் சந்திக்கலாம்

மெய்நிகர் உலகம் பிரதி திங்கள் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு மின் கிறுக்கல் தளத்தில் உங்களை தேடி வரும்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -