மெய்நிகர் உலகம் – 2

- Advertisement -

வணக்கம். சென்ற பகுதியில் “நிலையில்லாதன்மை” பற்றி பேச ஆரம்பித்தோம். ஒரு பொருளின் ஸ்திரத்தன்மை இவ்வாறு அதன் மதிப்பைக் கூட்டுகிறது என்றும் அது எவ்வாறு ஒரு மெய்நிகர் தன்மையை உருவாக்குகிறது என்று இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

ஒரு பொருளின் மதிப்பு உங்கள் மனதில் மட்டும்தான் இருக்கிறது என்று சென்ற பகுதியில் கூறினேன். ஒருவருடைய மனதில் மதிப்பு என்பது எவ்வாறு உருவாகிறது? இந்த உலகில் மாறாமல் இருப்பது “மாற்றம்” மட்டும்தான். உங்கள் உடல் முதற்கொண்டு நீங்கள் பார்க்கும் அனைத்தும் தினந்தோறும் ஏதாவது ஒரு மாற்றத்தை அடைகின்றது. தொடர்ச்சியாக மாற்றங்களே பார்த்துவந்த மனிதனுக்கு மாறாமல் இருக்கும் ஒரு பொருளை பற்றிய சிந்தனை அதிகமாக ஏற்பட்டது. அதன் விளைவாகத்தான் மனிதன் ஒரு கலைஞனாகவும் ஆராய்ச்சியாளராகவும் மாறினான். 

தனது உடல் முதற்கொண்டு அனைத்தும் பருவத்திற்கு ஏற்றது போல் மாறிக் கொண்டே வருவதை கவனித்த மனிதன் கற்களை கொண்டு மாறாத சிலைகளையும் ஓவியங்களையும் குகைகளில் தீட்டி ஒரு கலைஞனாக மாறினான். அஜந்தா குகை போன்ற இடங்களில் இன்று வரையில் அதனை உங்களால் பார்க்க முடியும். ஆனால் இந்த ஓவியங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு பண்ட மாற்றம் செய்ய முடியாது. அதற்காக பூமியில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டு வரும் பொழுது அவனுக்கு கிடைத்த புதையல் தான் தங்கம். மனிதனுக்கு கிடைத்த இரும்பு மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் காற்றில் படும்பொழுது அதன் வடிவம் மாறி ஏறிவிடும். பின்பு அந்த அடிப்படை உலோகத்தின் குணம் அதற்கு இருக்கவே இருக்காது. மிகவும் வலிமையான இரும்பு உலோகம் துரு ஏறிய உடன் வலுவிழந்துவிடும். ஆனால் தங்கம் அப்படி கிடையாது. தங்கத்தை நீங்கள் வெப்பம் குளிர் போன்ற எந்த ஒரு நிகழ்வுக்கு உட்படுத்தினாலும் அது தன்னுடைய நிலைமையிலிருந்து மாறவே மாறாது. மேலும் அதனை எப்படி நீங்கள் வளைத்தாலும் தட்டையாக்கிநாலும் மீண்டும் உங்களுக்கு தேவைப்பட்ட எந்த வடிவத்திற்கும் கொண்டு வந்துவிட முடியும். 

நான் சென்ற பகுதியில் வைரத்தை பொடியாக்கினால் அது முழுவதும் மதிப்பு எழுந்துவிடும் என்று கூறினேன் அல்லவா? ஆனால் தங்கத்தை அப்படி செய்யவே முடியாது. அதனால்தான் இன்றுவரை தங்கத்தை வாங்கிய விலைக்கு விற்க முடியும். ஆனால் வைரத்தை மீண்டும் விற்க முடியாது. ஆதிகால மனிதன் தங்கத்தின் தன்மையை புரிந்து கொண்டவுடன் அதனை நாணயமாக அடிக்க ஆரம்பித்தான். மற்ற பொருட்கள் அனைத்தும் காலத்தில் அழியக் கூடியதாகவும் இந்த தங்க நாணயங்கள் என்றுமே மாறக் கூடிய தாகவும் இருந்தது. நாம் இப்பொழுது கூட நாளிதழில் படிக்கும் பழங்கால தங்க நாணயங்கள் கொஞ்சம் கூட மாறாமல் அதன் மதிப்பு அப்படியே தான் இருக்கிறது. சொல்லப்போனால் பன்மடங்கு அதிகரிக்கவும் செய்திருக்கிறது. ஆக மொத்தத்தில் தங்கத்திற்கு மதிப்பு கொடுப்பது அதனுடைய மாறாத் தன்மை தான். 

மனிதன் விவசாயத்தை ஆரம்பித்தவுடன் அதிலிருந்து கிடைக்கும் உணவு தானியங்களை பண்டமாற்று முறையில் விற்று வந்தான். ஆனால் காலம் செல்ல செல்ல இதுபோன்ற தங்க நாணயங்களுக்கு அகவும் தானியங்களை மாற்றிக் கொள்ளும் முறை வந்துவிட்டது. ஆயிரம் ஆண்டு காலங்கள் ஆனாலும் மதிப்பு மாறாத தங்கத்தை சில காலங்கள் மட்டுமே இருக்கக்கூடிய தானியங்களுக்கு எவ்வாறு மாற்ற முடியும்? அப்படியானால் அனைவரும் தங்கத்தை மட்டும் தானே சேமித்துக் கொள்ள விரும்புவார்கள்? இங்குதான் இயற்கை மனிதனுக்கு சவால் விடுகிறது. நாம் எவ்வாறு நம்மிடம் இருக்கும் பொருட்கள் நிலையாக இருக்க விரும்புகிறோமோ அதுபோலவே இயற்கையும் நம்முடைய உடலை நிலையாக வைத்துக் கொள்ள முயல்கிறது. இதற்கு உணவு தேவைப்படுவதால் நமக்கு பசி என்ற ஒன்று தோன்றுகிறது. ஆகவே நம் உடலை பேணுவதற்கான உணவை தங்க காசுகள் போன்ற வேறு ஒரு நிலையான பொருளுடன் பண்டமாற்றம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

நிலையாமை என்னும் ஒரு கோட்பாட்டுக்கு உட்பட்டுதான் அனைத்து மதிப்பும் முடிவு செய்யப்படுகிறது. ஒரு பசியுள்ள மனிதனுக்கு முன்பு உணவை வைத்தால் அதுதான் உனக்கு கடவுளாக தோன்றும் என்று கூறுவதுண்டு. ஏனென்றால் அந்த மனிதனுக்கு அந்த நொடியில் மிகவும் அவசியமான பொருள் உணவு மட்டும்தான். இப்படி ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனியாக வேறுபட்ட மதிப்புக்கள் இருக்கும்பொழுது அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு மதிப்பை எவ்வாறு ஏற்படுத்த முடியும்? இதைத்தான் விரிவாக அடுத்த பல பகுதிகளில் பார்க்கப்போகிறோம். அடுத்த வாரம் அதனை தொடர்கிறேன். 

-மீண்டும் சந்திக்கலாம்

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -