முகங்கள்

பத்தாவது முகம்

- Advertisement -

சென்னை வேளச்சேரியில் நான்கு பேர் தங்குவதாகக் கூறி ஒரு வீட்டில் என் நண்பர்கள் ஏழு பேர் தங்கியிருந்தார்கள். அண்ணாநகரில் தங்கியிருந்த நான், தீடீரென்று வீடு காலி செய்யும் சூழல் ஏற்பட்டதால் வேளச்சேரி சென்று என் நண்பர்களுடன் எட்டாவதாகத் தங்கிக்கொண்டேன். அது ஒரு இரண்டு அறை கொண்ட வீடு. இரண்டு அறைகள் என்பதை விட ஒரு அறைக்கு நடுவே சுவரு கட்டிய வீடு என்றே சொல்லலாம். இரண்டு அறையின் அகலமும் ஆறு அடிக்கு குறைவு தான். நீளம் பத்தடி இருக்கும் அதில் முதல் அறையில் அடுப்பு மேடை இருக்கும் அடுத்த அறையில் கழிப்பறையும் குளியலறையும் ஒன்றாக இருக்கும். அதிகம் வளர்ந்தவர்களாக இருந்தால் ஒன்று காலை மடக்கிக்கொண்டு படுக்க வேண்டும் அல்லது நீளவாக்கில் படுக்க வேண்டும். தாராளமாகப் படுத்தால் ஒரு அறைக்கு இரண்டு பேர் படுக்கலாம்.புதிகாகக் கட்டப்பட்ட நல்ல காங்க்ரீட் வீடு தான் இருந்தாலும் வாடகைக்கு விடும் நோக்கில் அப்படி குறுக்கிக் கட்டி இருக்கிறார்கள். எங்கள் வீட்டை ஒட்டியே வீட்டின் உரிமையாளர் வீடும் இருக்கும். வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டுமென்றால் சந்துபோல் அவர் வீட்டைக் கடந்து தான் செல்ல வேண்டும்

எனக்குப் பின் எங்களுடைய இன்னும் இரண்டு நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள். ஆக மொத்தம் பத்து பேர். நான்கு பேர் தாங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்ட வீட்டில் பத்து பேர் தங்கியிருந்தும் எதுவும் சொல்லாமல் பக்கத்து வீட்டிலேயே இருந்து பார்த்துக்கொண்டிருந்த வீட்டு உரிமையாளர் எவ்வளவு நல்லவராக இருக்க வேண்டும். அவர் தான் நம்முடைய இந்தவார முகம். 

“அந்த வீட்டுக்குள்ள எப்படி இத்தனை பேர் தங்கிருந்தீங்க?” என்கிறீர்களா. எங்கள் நண்பர்களில் சிலர் இரவு நேர வேலைக்குச் சென்றுவிடுவார்கள். மழை இல்லாத நாள்களில் மொட்டை மாடி எங்களைத் தாங்கிக்கொள்ளும். மழை நாள்களில் கிடைக்கும் இடுக்குகளில் எங்களைத் திணித்துக்கொண்டு தூங்கப் பழகியிருந்தோம். அந்த நாள்களில் கூட நிம்மதியாகத் தான் தூங்கினோம். 

வேளச்சேரியில் ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்திக்கொண்டிருந்தார் எங்கள் வீட்டு உரிமையாளர். சிறுவயதில் வெளியூரில் இருந்து வந்து அந்தப் பெட்டிக்கடையில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக அந்தக் கடையின் உரிமையாளர் ஆகி இருக்கிறார். பெட்டிக்கடை என்றவுடன் சிறிய கடை என்று நினைத்துவிட வேண்டாம். அது பெட்டியிலேயே கொஞ்சம் பெரிய டிரன்க்குப் பெட்டிகடை என்று வைத்துக்கொள்ளாம். அந்த வழியாக நடந்து போபவர்களுக்குத் தேவையான எல்லாம் கிடைக்கும். 

கருத்த தேகம், மெலிந்த உடல் வாகு, அவர் கைலி மற்றும் சட்டையைத் தவிர வேறு உடுப்பு உடுத்தி நான் பார்த்ததேயில்லை, சட்டைப்பை கொஞ்சம் கனமாக இருக்கும் அதில் ஒரு பேனா எட்டிப் பார்க்கும். முன் தலையில் முடிகள் உதிர்ந்து பாதி அளவிற்கு காலியாக இருக்கும். அவருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் இரண்டு பெண்கள் ஒரு பையன். மகன் மூத்தவன், பதினாறு வயதிருக்கும் பக்கத்தில் ஒரு அரசுப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான்.

“ஏன்டா உங்க அப்பாட்டாத் தான் நிறைய காசு இருக்கே? வேற பெரிய ஸ்கூல்ல படிக்க வேண்டியதானே?” என்று கேட்டால். 

“அட போங்க ண்ணா… அவரு இந்த ஸ்கூல்ல படிக்கிறதே டைம் வேஸ்ட்டு. நீ முழு நேரமா கடைக்கு வந்துட்டா இன்னும் நிறைய சம்பாதிக்காலாம்ன்னு சொல்றாரு” என்பான்

உண்மையில் அவனுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்கிற ஆசை. எந்த ஒரு உந்துதலும் இல்லாமலேயே அவன் நல்ல மதிப்பெண்கள் பெற்றுக்கொண்டிருந்தான். ஆனால் அவன் அப்பாவோ படிப்பை, பணம் மற்றும் நேர விரயம் என்று நினைத்தார். சொந்தமாகக் கடை இருக்கிறது வீடுகள் இருக்கின்றன அவற்றை மகன் சரியாக நிர்வகித்தாலே போதும் என்று நினைத்தார். நல்ல மனிதர் கடுமையான உழைப்பாளி அவருக்கு கல்வியின் மீது இவ்வளவு குறைவான மதிப்பிருந்தது கொஞ்சம் ஆச்சரியமான விடயம் தான்.

எங்களில் சிலர் அப்போதும் வேலை தேடிக்கொண்டிருந்தோம் சிலர் சிறிய நிறுவனங்களில் வேலை செய்தோம். அங்கே சரியான தேதிக்கு சம்பளம் வந்துவிடுவதில்லை. ஆதலால் சில மாதங்களில் வாடகை கொடுக்கும் தேதி பத்தைத் தாண்டும். அப்படி ஒருமுறை தாண்டிய போது எங்கள் வீட்டு உரிமையாளரின் மனைவி “ஏன்பா? எப்பதான் வாடகை குடுக்கப்போறீங்க? வேகமா குடுங்கப்பா… ஆமா”  என்று கொஞ்சம் சத்தமாக கூறினார். அந்தச் சத்தத்திற்கு எல்லாம் அஞ்சுகிறவர்களா நாம்.

“சரிக்கா… சரிக்கா…” என்று மண்டையை ஆட்டிவிட்டுச் சென்றுவிட்டோம். அதை எங்கள் வீட்டு உரிமையாளர் வீட்டிற்குள் இருந்து கவனித்துக்கொண்டிருந்திருக்கார். 

சாயுங்காலம் நான் நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது வழியில் எங்களைச் சந்தித்தார். 

“என்னப்பா வாடகை குடுக்கலைன்னு அக்கா சத்தம் போட்டாங்களா?” என்றார்.

“இல்லைண்ணா நாளைக்கு குடுத்துறோம் ண்ணா.” என்றேன்

“அட அதை விடுப்பா… நீங்க காசு இருக்கப்போ கொடுங்க… அக்கா சொன்னதை மனசுல வச்சுக்காதீங்க… அக்கா அப்படித்தான் கொஞ்சம் கோவமா பேசும்” என்று சிரித்தார்.

ஒரு வீட்டு உரிமையாளர் இந்த அளவிற்கு கூட சத்தம்போட்டு வாடகை கேட்க மாட்டாரா? அவர் கேட்டதில் என்ன தவறு? என்று எனக்குள்ளே நினைத்துக்கொண்டு. “அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே… நாங்க நாளைக்கு குடுத்துறோம்.” என்றேன்.

“சரிப்பா… சரிப்பா.. எல்லாரும் சாப்ட்டீங்கள்ள?” என்று அவர் எப்போதும் கேட்கும் கேள்வியைக் கேட்டு முடித்தார்.

ஆம் அவர் எப்போது எங்கு சந்தித்தாலும் “சாப்ட்டீங்களா?” என்ற கேள்வியை கேட்காமல் இருந்ததே இல்லை. எப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்தித்தாலும் அந்தக் கேள்வியைக் கேட்டுவிடுவார்.

இப்படித்தான் ஒரு நாள் நான் இரவு பதினோரு மணிக்கு மேல் வீட்டு மொட்டை மாடியில் ஒரு மூலையில் அமர்ந்து அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் பக்கத்து வீட்டு மாடியில் அந்த வீட்டு உரிமையாளர் குடியிருந்தார். அவர் ஒரு கண்டிப்பு ஆசாமி. அவர் பிள்ளைகளை அரட்டி உருட்டுவது சரி பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் என்னிடம் அவர் அதிகாரத்தைக் காண்பிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

“டேய் யாரா அது. இந்நேரத்துல இங்க உட்காந்திருக்கது?” என்று கத்தினார்.

“சார் நான் தான் தான் சார்… கீழ் வீட்ல குடி இருக்கேன்” என்றேன். என்னை அவருக்கு நன்றாகவே தெரியும் இருந்தாலும் அவர் அதிகாரத்தை நிலைநாட்ட “யாரா இருந்த என்ன? இந்நேரத்துல உனக்கு இங்க என்னடா வேலை?” 

எப்போதும் நாங்கள் மொட்டை மாடியில் தான் தூங்குவோம். அன்று மழை பெய்து தரை நனைந்து இருந்ததால் நண்பர்கள் வரவில்லை. அவ்வளவு தான். நான் மட்டும் இருந்ததால் என்னைக் கொஞ்சம் அதட்டிப் பார்க்க நினைத்தாரோ என்னவோ?

எனக்கும் அதற்கு மேல் அவரிடம் அன்பாக பேச எதுவும் இல்லை என்பதால். “யோவ்… உன் வீட்லைய உட்காந்திருக்கேன்… மரியாதாதையா போயிரு” என்று மரியாதையாகக் கூறினேன்.

“என்னையவே யோவ்ன்னு சொல்றியா…?”

“நீ போடா வாடான்ப உனக்கு நான் மரியாதை குடுக்கணுமா?” என்று நான் சொல்லியவுடன்.

“பாய்…. பாய்…” என்று என் வீட்டு உரிமையாளரை அழைக்கத்தொடங்கி விட்டார். பாவம் அவர் அப்போது தான் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்திருப்பார். நான் எதுவும் பேசவில்லை “ஹே…ச்சி… பே…” என்று விட்டு என் அலைபேசி உரையாடலைத் தொடர்ந்தேன்.

என் வீட்டு உரிமையாளர் வேகமாக மொட்டைமாடிக்கு வந்தார். “சார் என்ன சார்? நல்லா இருக்கீங்களா சார்?” என்ற அந்த பக்கத்து வீட்டு ஆசாமியிடம் சென்றார். 

“இந்தப் பையன் இந்நேரத்துல இங்க உட்காந்துதிருக்கான்… என்னடான்னு கேட்டா போயா வாயான்னு பேசுறான்…”

“ஐயய்யோ! நான் என்னன்னு கேக்குறேன்… நீங்க போங்க…” என்றார்.

“ஆமா பார்த்து ஒழுங்கா இருக்க சொல்லுங்க…”

“ஓகே சார் நான் சொல்றேன் சார்…. சாப்ட்டீங்களா சார்?” என்று அவரின் பிரதான கேள்வியைப் போட்டார். எனக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. 

பக்கத்து வீட்டுக்காரருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. “ஹான்… சாப்ட்டேன்… சாப்ட்டேன்…” என்று ஒரு ஹீன சுவரத்தில் கூறிவிட்டு அவர் வீட்டிற்குள் சென்று விட்டார்.

என் வீட்டு உரிமையாளர் என்னிடம் வந்து “என்ன தம்பி?” என்றார்.

“சும்மா போன் பேசிட்டு இருக்கேன் வந்து கத்துராருங்க.” என்றேன்.

“அப்படியா… அதை ஒன்னும் மனசுல வச்சுக்காதீங்க… சாப்டீங்கள்ள?” என்றார்.

நான் சிரித்துக்கொண்டே “சாப்ட்டாச்சு சார்” என்று தலையாட்டின். அவர் “சரி பாப்போம்” என்று படியில் இறங்கி வேகமாகச் சென்றுவிட்டார்.

இந்த மனிதனால் எப்படி எந்த விடயதிற்குமே கோபப்படாமல் இருக்க முடிகிறது? ஒன்று “என் வீட்டுல தங்கிருக்கவன திட்ட நீ யாருய்யா?” என்று அவரிடம் சண்டை பிடித்திருக்க வேண்டும். இல்லை “இந்நேரத்துல உனக்கு இங்க என்ன வேலை” என்று என்னைத் திட்டியிருக்க வேண்டும்.பதினோரு மணி வரை வேலை செய்து வந்தவரை தூங்கும் முன் இப்படித் தொந்தரவு செய்தால் கோபம் வருமா? வராதா?

அவரின் மூன்று பிள்ளைகளில் மூத்தவனும் கடைசிப் பெண்ணும் மிக அமைதி. அந்தப் பையன் கூட அடிக்கடி எங்கள் அறையில் வந்து “அண்ணே கம்ப்யூட்டர் சொல்லித்தாங்கண்ணே…” என்று நாங்கள் பார்க்கும் ஆங்கிலப் படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பான். அந்தக் கடைசிப் பெண் பேசி நான் கேட்டதேயில்லை. நிச்சயம் ஊமை இல்லை அவள் அண்ணனுடம் அம்மாவுடன் பேசும்போது பார்த்திருக்கிறேன் ஆனால் கேட்டதில்லை. இவர்கள் இருவருக்கும் இடையில் வந்து பிறந்த பெண் அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவள். பல நாள்கள் அவள் குரல் கேட்டுத்தான் எழுவோம். 

சென்னையின் பிராதன கெட்டவார்த்தைகள் அத்தனையும் அவள் ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது கூறிவிடுவாள். ஒருநாள் அவள் அண்ணனுக்கும் அவளுக்கும் சண்டை வலுத்து “போடா தேவுடியா பையா…. தேவுடியா பையா…. தேவுடியா பையா….” என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தால்.  இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்ட பின் வேறு ஒரு தந்தையாக இருந்திருந்தால் வெளுத்திடுதிருப்பார். நம்மவர் “அப்படி சொல்ல கூடாதுமா… அப்படி சொல்ல கூடாது… அப்படி சொல்ல கூடாதுமா… அப்படி சொல்ல கூடாது…” என்று கொஞ்சிக்கொண்டிருந்தார். அவர் அளவிற்கு அவர் மகன் பொறுமைசாளியில்லை தங்கையின் தலைமயிரை கொத்தாக கோதி சாத்தினான். அவனையும் அவர் கண்டித்தோ அடித்தோ பிரித்துவிடவில்லை. “வேணாம்பா விட்ரு… பாவம் தங்கச்சி….” என்று அதே கொஞ்சும் மொழியில் கூறிக்கொண்டிருந்தார்.

வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து அடிபட்டு மிதிபட்டு தன்னை வாழ்க்கையின் ஒரு நல்ல நிலைக்கு உயர்த்திக்கொண்டாலும். அதனால் திமிரோ தலைக்கனமோ கொள்ளாத நல்ல மனிதர். கல்வி பற்றி அவர்கொண்டிருக்கும் எண்ணம் மட்டும் தான் என்னால் ஏற்க முடியவில்லை. பார்ப்பவர்களிடமெல்லாம் “சாப்ட்டீங்களா?” என்று மறந்துவிடாமல் கேட்கிறார் என்றால் அவர் இளம் வயதில் அந்த சாப்பாட்டிற்காக எவ்வளவு அலைந்திருப்பார்?

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -11

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

2 COMMENTS

  1. சிறந்த மனிதர் எந்தநிலையிலும் பொறுமையைக் கடைபிடிக்கும் இதுபோன்ற மனிதர்கள் போற்றத் தகுந்தவர்கள்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -