சந்திப்பு
இன்றவனைச் சந்திக்கலாம்
என வந்து சேர்ந்ததும்
வழக்கமான பொழுதில்
வழக்கமான சாலையில்
காத்திருந்தேன்.
எப்பொழுதுமல்லாது
இரைச்சலும் புகைநெடியுமின்றி
மௌனித்திருந்தது
சீன ‘கொய் தியோ’ கடையின்
எதிர்ப்புறம்.
எப்பொழுதுமல்லாது
அரவமற்று ஓய்ந்திருந்தது
தெருமுனை சந்திப்புகள்.
எப்பொழுதுமல்லாது
பூட்டுக்கடைக்காரனின்
சத்தமும் ஆர்பாட்டமுமின்றி
வெறிச்சோடியிருந்தது கடைவரிசைகள்.
எப்பொழுதுமல்லாது
‘நாசி லெமாக்’ பொட்டலங்கள்
திறக்கப்படாமல்
ஈக்கள் மொய்க்க
மேசையை அலங்கரித்திருந்தன.
எப்பொழுதுமல்லாது
இவற்றிற்கு நடுவில்
அவனுக்குக் காத்திருந்தேன்.
எப்பொழுதும்போல்
யாரென்ற தெரியாத அவனும்
எதற்கு வந்தேன் எனப் புரியாத நானும்
சந்தித்துக் கொள்ளவில்லை.
குறிப்பு:
கொய் தியோ – சீனர்களின் விருப்ப உணவு
நாசி லெமாக் – மலாய்க்காரர்களின் விருப்ப உணவு