இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். நீரதிகாரத்தில் தண்ணீரின் பல்வேறு குணநலன்கள் மற்றும் ரகசியங்களை பார்த்துள்ளோம். தண்ணீருடன் மற்ற பொருட்களுக்கு என்ன தொடர்பு என்பதை இதுவரை பார்த்த நாம், தண்ணீருக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை இந்தப் பதிவில் பார்த்து நீரதிகாரத்தை நிறைவு செய்யப் போகிறோம்.
மன ஓட்டமும் நீரோட்டமும்
உங்கள் உடலில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக நீர் நிறைந்திருப்பதால் நீரின் குண நலன்கள் உடலின் ஒவ்வொரு திசுவிலும் அமைந்துள்ளது என்பது நன்கு புரிந்திருக்கும். ஆனால் நீரின் குணம் அத்துடன் முடிந்து போவதில்லை. உங்கள் மனது கூட அப்படித்தான். அதன் செயல்பாடு எப்பொழுது நீருடன் ஒத்துப் போகிறதோ அதுவரை எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் இயல்பாக இருக்க முடியும். ஆனால் நீரின் கோட்பாட்டிலிருந்து சற்று மாறினால் கூட மிகப்பெரும் யுத்தங்களில் சென்று முடிந்துவிடும். மனதும் நீரும் எவ்வாறு ஒத்துப் போகிறது என்று தெரிந்து கொள்வோமா?
நீர் இயல்பாக எந்த ஒரு சூழ்நிலையிலும் திடம், திரவம், வாயு ஆகிய பல வழிகளில் தன்னை உருமாற்றிக் கொள்ளும் திறமை வாய்ந்தது. மனம் கூட அதேபோல்தான். சூழ்நிலைக்கு ஏற்றார்போல தன்னைத்தானே உருமாற்றிக் கொள்ளும். இயற்கையிலேயே மனம் தண்ணீர் போன்ற குணம் கொண்டிருந்தாலும் காலப்போக்கில் பல்வேறு உயிரினங்களும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் சுற்றுச்சூழலைப் மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றன. ஆனால் இந்த முயற்சியில் பெரும்பாலும் கிடைப்பது என்னவோ தோல்வி மட்டும் தான். அதுமட்டுமல்லாது பல்வேறு சமூக பிரிவினைவாதத்திற்கு இது அடித்தளம் இடுகிறது. காலப்போக்கில் தன்னை மாற்றிக்கொள்ள முயலாத உயிரினங்கள் அனைத்தும் உலகத்தை விட்டு அழிந்து போய்விடுகின்றன. இதைத்தான் சார்லஸ் டார்வின் எழுதிய Natural selection எனும் கோட்பாடு கூறுகிறது.
ஓடும் நீரானது அதன் பாதையில் குறுக்கிடும் அனைத்து தடங்கல்களையும் நேரடியாக எதிர்ப்பதில்லை. உதாரணமாக, தன் வழியில் ஒரு பெரிய பாறை இருந்தால் அதனுடன் நேரடியாக மோதி பாறையை உடைக்காமல் வளைந்து சென்று தனக்கென்று ஒரு வழியை உண்டாக்குகிறது. தொடர்ச்சியாக இதுபோல நடந்து கொண்டிருக்கும் பொழுது காலப்போக்கில் பாறை கூட வலுவிழந்து தண்ணீரில் கரைந்து விடும்! இதேபோல் இரண்டு பாறைகள் தான் செல்லும் வழியில் குறுக்கிட்டு மோதிக்கொண்டால் இரண்டுமே வெடித்து சிதறி இருக்கும் அல்லவா? ஆனால் நீர் பாறைக்கு ஏற்றார்போல் விட்டுக்கொடுத்து பின்பு பாறையே கரைத்துவிடுகிறது! அப்படியானால் வெற்றி பெற்றது நீர்தானே. மனமும் இயற்கையில் விட்டுக் கொடுத்துப் போகும் தன்மையை கொண்டிருந்தாலும் வழி தொலைந்து போனால் பாறை போல் தன்னை இரும்பாக்கி கொண்டு தன்னுடன் சேர்த்து எதிரியையும் அழித்துவிடுகிறது.
நீருக்கு நிறம், மணம் போன்ற எந்த ஒரு தனிப்பட்ட குணமும் கிடையாது. ஆனாலும் நான் செல்லும் வழியில் கடந்து செல்லும் அனைத்துப் பொருட்களின் குணங்களையும் தனக்குள்ளே எடுத்துக் கொள்கிறது. இருந்தாலும் எப்பொழுதுமே தனக்குள் அந்த குணத்தை வைத்துக்கொள்ளாமல் சிறிது நேரத்திலேயே அந்த குணத்தை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் தெளிந்தும் விடுகிறது. மனம் கூட தனக்கென்று எந்த ஒரு குணத்தையும் ஆரம்பத்தில் வைத்துக்கொள்வதில்லை. ஒரு சிறு குழந்தையை பார்த்தாலே உங்களால் அதனை புரிந்து கொள்ள முடியும். ஆனால் காலப்போக்கில் தான் கடந்து செல்லும் பாதையில் உள்ள அனைத்து குணங்களையும் தங்களுடைய குணமாக எடுத்துக் கொள்வது மனதின் இயல்பு. அதனை சரியாக செய்யும் மனம் பின்பு அந்த குணங்களை இறக்கிவைக்க மறுப்பதனால் வாழ்நாள் முழுவதும் வேறு எந்த ஒரு குணத்தையும் பார்க்கமுடியாமல் பரிதாபமான நிலைக்குப் போய்விடுகிறது. குணங்களைக் கடந்து அனைத்தையும் பார்த்து செல்லும் சாட்சியாக மட்டுமே தண்ணீர் போல செயல்படும் மனம் இறை நிலையை அடைந்து விடுவதாக உலகில் உள்ள அனைத்து மதமும் கூறுகிறது. இருந்தாலும் பல்வேறு உயிரினங்களும் (குறிப்பாக மனிதர்கள்) மனதை தண்ணீர் போல வைத்துக்கொள்ள ஒப்புக்கொள்வதில்லை.
நீர் எவ்வளவு ஆர்ப்பரித்து ஓடினாலும் இறுதியில் அமைதியான சமுத்திரத்தை அடைகிறது. சமுத்திரத்தின் கரைகளில் மட்டும் தான் அலை அடிக்குமே தவிர ஆழக்கடலில் என்றுமே அலை அடிப்பது இல்லை. ஆர்ப்பரித்து ஓடும் நீரின் அளவு சமுத்திரத்துடன் ஒப்பிட்டால் மிகச் சொற்பம் தான். ஆக மொத்தத்தில் பூமியின் மேற்பரப்பை அதிகப்படியாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நீரானது ஓடாமல் ஓரிடத்தில் அமைதியாக நிலைகொண்டுள்ளது. வெளி உலகில் நடக்கும் எந்த ஒரு விஷயமும் உங்கள் மனதை ஆக்கிரமித்து அலைபாய வைக்கலாம். ஆனாலும் அதையும் கடந்து அதிகப்படியான நேரத்தில் மனம் அலைபாயாமல் எப்போது ஒருமுகப்பட்டு இருக்கிறதோ அப்பொழுதுதான் நீர் போன்று அதிக அளவில் பரவி உங்களால் செயல்பட முடியும்.
நீரால் உருவாகிய உங்கள் உடலும் மனமும் நீரைப் போல் செயல்படவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். புரிந்து கொண்டால் மட்டும் பத்தாது, நீரைப் போல் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். முயன்றுதான் பாருங்களேன்! கடந்த ஐந்து பகுதிகளாக நீரதிகாரத்தை பார்த்து வந்த நாம் இத்துடன் இந்த அதிகாரத்தை நிறைவு செய்து புதியதொரு தலைப்பில் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன். அதுவரை காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.