பறவையாயணம்

மூன்று கவிதைகள்

- Advertisement -

பறவையாயணம்

பறவைக்கு நிறங்கள் ஏதுமில்லை
நிறம் பேசுபவர் இங்கு
உறவிழந்தவர்
வர்ணங்களில் பீறிடும் மனசுள்
வன்மம் மிருக அவதாரமெடுக்கும்
மலையைக் கொத்துகிறது
புன்னகைக்கிறது மலை
சிட்டுக்குருவி மலையை தானியமாக்கியது
எம் மூதாதையரின் உதிரம்
நிலமாக வடிவெடுத்திருக்கிறது
எம் உதிரத்தால் வேலியிடுவோம்
என் வட்டியில் சோறில்லை போராடுகிறேன்
உன் வட்டியில் சோறில்லை போராடுகிறாய்
நம் வட்டியில்லை என்று எப்போது? போராடுவோம்
இலவசக் கல்வி தந்தவர் இறந்து போனார்
காசுக்கு விற்பவர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள்
அவர் ஆன்மா
வியாபாரிகளை மன்னிக்காது.
கனவு காணாதே
கனவு உன்னைத் தின்று விடும்
நிஜத்தை எதிர்த்துப் போராடு.
அவள் சுதந்திரமாக நடமாடுகிறாளாம்
அந்த பறவை பறந்து களிக்கிறதாம்
அவன்கள் பீற்றித் திரிகிறார்கள்.

??????????????????????????

ஞமலி போல் வாழேல்

கங்காக இதயம்
கனவுகள் பொசுங்குகிறது
காலத்தோடு நடந்து போகிறேன்.
ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறது
என்னால் அமைதியாக
உட்கார முடியவில்லை
எனக்கு ஜென்னும் வேணாம்
ஒரு மண்ணும் வேணாம்.
காறித்துப்பும் எச்சில் போணி
கையூட்டு
பல்லிளிக்கும் வால் சுருட்டிகள்.
ஊடக செய்திகளால் கலவரமடைகிறேன்
உலகம் விஷமாகிக் கொண்டிருக்கிறது
வரும் தலைமுறையை எண்ணி கவலையாயிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் கடந்து போகிறது
ஒன்றும் அறியாமல் இருக்கிறேன்
எல்லாம் அறிந்தவர்கள் எவராவது இருக்கின்றனரா?
மெழுகுத் தண்டிலிருந்து
உருகிய
மெழுகுத்துளிகள்
கேட்பாரற்று.

??????????????????????????

காற்றில் படபடக்கும் காகிதமாய் வாழ்க்கை

சொன்ன துயர் கொஞ்சம்
சொல்ல வேண்டிய நிகழ்வுகள் ஆயிரம்
சொன்னாலும் தீராதது கணக்கிலடங்காது.
புத்தகங்கள் எதையும் ஒதுக்க முடியவில்லை
பூக்களை எல்லாவற்றையும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை
மனிதர்களை எல்லோரையும் நேசிக்காமல் தவிர்க்க முடியவில்லை.
இசை மலர் விழி மலர்கிறது
இதயத் தடாகம் முழுவதும்
கவின் பரவுகிறது
உயிர்த்தேன் ஊழி வெள்ளமாய் பெருக்கெடுக்கிறது.
துயரங்களின் பெருங்கடல்
கைவிடப்பட்ட தோணியொன்று மிதக்கிறது
கனவுகளின் சூறைக்காற்று மையம் கொள்கிறது.
சொல்லெடுத்து எறிந்தேன்
பழம் ஒன்று விழுந்தது
கல்லெடுத்து வீச
பறவை கவ்விச் சென்றது.
கடவுளின் அன்பளிப்பைப் பெற்றுக் கொள்வேன்
சாத்தானின் பரிசைக் கையில் தொடமாட்டேன்
நிரந்தரமானதையே என்றும் நான் தேடுவேன்.
என் உதிரம் குடிக்கிறார்கள்
என் சதைகளைத் தின்கிறார்கள்
நானும் அவர்களை நேசித்துக் கொண்டேயிருக்கிறேன்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

2 COMMENTS

    • தங்களின் பேரன்பிற்கு எனது தீராத நன்றிகள் நண்பரே

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -