நான்காம் பரிமாணம் – 54

11. நீரதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


காலம் என்னும் நான் நீர் அதிகாரத்தில் நீங்கள் உலகில் சாதாரணமாகப் பயன்படுத்தும் நீருக்குள் இருக்கும் பல்வேறு அதிசயங்களை பற்றியும் கூறி கொண்டு வருகிறேன். நீரின் ரகசியத்தை சென்ற பகுதியில் பார்த்த நாம், நீர் மற்ற அடிப்படை பொருட்களுடன் எவ்வாறு வினையாற்ற போகிறது என்பதை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

நீரும் நெருப்பும்


தண்ணீர் என்றுமே நெருப்புக்கு எதிரானது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். தண்ணீர் வெறும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவின் கூட்டுக் கலவை தான். இவை இரண்டுமே நன்கு எரிய அல்லது எரிவதற்கு துணைபுரியும் வாயுக்கள் ஆகும். ஆனால் இவை இரண்டும் கலந்து உருவாகிய தண்ணீர் நெருப்பை அணைப்பதற்கு உதவியாக இருப்பது சற்று விந்தையாக தான் தோன்றும். ஆனால் இதற்குள் ஒளிந்திருக்கும் அறிவியலை தெரிந்து கொண்டால் உங்களால் தண்ணீரை எரிய வைக்கக்கூட முடியும். அது எவ்வாறு என்று கூறி பிறகு அதன் அறிவியலையும் இங்கு விளக்கி விடுகிறேன். பூமியை விட அளவில் மிகப்பெரிய ஒரு தண்ணீர் பந்து சூரியனுடன் நேரடியாக மோதுகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது அந்த தண்ணீரால் சூரியனின் நெருப்பு அணைக்கப்பட வேண்டும் அல்லவா? ஆனால் இந்த கற்பனை நிகழ்வு உண்மையிலேயே நடந்தால் சூரியன் உடனடியாக இப்பொழுது இருக்கும் நிலமையை விட மிகுந்த பிரகாசத்துடன் எரியும்! ஒரு சிறிய கோப்பையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு துண்டு சோடியம் உலோகத்தை போட்டு பாருங்கள். அது ஒரு மிகப்பெரிய வெடிகுண்டாக மாறி வெப்பத்தை உருவாக்கும். நான் மேலே கூறிய நிகழ்வுகளை உங்களால் வீட்டில் செய்து பார்ப்பது முடியாது. அதன் மாதிரியை பரிசோதித்து பார்க்க தனி ஆராய்ச்சி அரங்கங்கள் தேவைப்படும். ஆனால் வீட்டிலேயே செய்து பார்க்க முடிந்த ஒரு பரிசோதனையும் உள்ளது. உங்கள் வீட்டிலேயே அதனை பலமுறை நீங்கள் பார்த்திருக்கலாம். வீட்டில் எண்ணெய்யை கொதிக்கவிட்டு பலகாரங்கள் செய்யும் பொழுது ஒரே ஒரு சொட்டு தண்ணீர் அதில் விழுந்து விட்டால் போதும். அதிக சத்தத்துடன் வெடித்து சிதற ஆரம்பித்துவிடும். இப்பொழுது ஒரு கோப்பை தண்ணீரை அந்த கொதிக்கும் எண்ணெய்க்குள் ஊற்றினால் அந்தத் தெருவே அதிரும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய வெடி விபத்தாக மாறிவிடும். (தயவுசெய்து இதனையும் வீட்டில் முயற்சித்து பார்க்க வேண்டாம்!) 


சரி. இப்பொழுது அதன் அறிவியலுக்குள் செல்வோம். ஒரு பொருள் தன்னுள் இருக்கும் வெப்பத்தை வெளிக்காட்டாமல் முழுமையாக தன்னுள் அடக்கிக் கொண்டால் என்ன நடக்கும்? மிகவும் குளிர்ந்து விடும் அல்லவா? அதுபோலவே ஒரு குளிர்ந்த பொருள்  கடும் வெப்பத்தை வெளியிட்டால் வெப்பம் அடைந்து விடும். இங்கே பொருட்களுக்குள் ஒளிந்திருக்கும் வெப்பம் மற்றும் குளிர்ச்சியை உங்களால் நேரடியாக உணர முடியாது. இதனை உங்கள் விஞ்ஞானிகள் மறை வெப்பம் (Latent heat) என்று கூறுகிறார். ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய இரு எரியும் குணம் கொண்ட பொருட்களும் தங்களின் எறியும் சக்தியை முழுமையாக அடக்கிக்கொண்டு ஒன்றிணைந்து அமைதி அடையும் நிலைதான் தண்ணீர். இந்த தண்ணீருக்குள் ஒளிந்திருக்கும் வீரியத்தை பார்க்க வேண்டுமென்றால் அதன் மூலக்கூறை பிளந்து அதனால் ஏற்படும் சக்தியை தன் பார்க்க வேண்டும். அதுதான் சோடியம் உலோகத்தை தண்ணீரில் போடுவது. சோடியம் தண்ணீரின் மூலக்கூற்றை தனியாக பிரிப்பதால் ஒரு கடுமையான வெடிவிபத்து உண்டாகிறது. இதனை விட அதிகமான சக்தி வெளியீட்டை பார்க்க வேண்டுமென்றால் சூரியன் போன்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் தண்ணீரை ஊற்றுவதால் பார்க்க முடியும். எரிந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தில் தண்ணீரை ஊற்றினால் முதலாவதாக அதன் எடை கூடும். அதிக எடையால் முதலில் அணுப்பிளவு(Nuclear fission) பின்பு சேர்க்கையும்(Nuclear fusion) அதிகரித்து தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்கள் தனியாகப் பிரிந்து அந்த நட்சத்திரத்தின் எரிபொருளாக மாறிவிடும். எண்ணெய்  பாத்திரத்தில் தண்ணீர் தெளிக்கும் போது ஏற்படும் வெடிப்பு வேறுவிதமானது. தண்ணீர் மற்றும் எண்ணெயின் விரிவடையும் குணம் வெவ்வேறாக இருப்பதனால் ஏற்படும் மாற்றத்தால் அந்த வெடிப்பு ஏற்படுகிறது. இந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணம் வேறு மாதிரியாக இருந்தாலும் உங்களால் ஒரு ஒற்றுமையை பார்க்க முடியும். தண்ணீர் பார்ப்பதற்கு தன்மையுடையதாக தோன்றினாலும் அதற்குள் ஒளிந்திருக்கும் சக்தி மிகவும் அபரிமிதமான வெப்பமாகும். அதே சமயத்தில் நெருப்பு மிகவும் வெம்மையாக தோன்றினாலும் அது முழு சக்தியையும் வெளியிட்டு தன்னுள் குளுமையாக இருக்கிறது. இதுதான் வெம்மையும் குளுமையும் ஒன்றோடு ஒன்று இணையும் தருணம். இந்த ஆச்சரியமான நிகழ்வை நிரூபிக்கும் சாட்சியாக இருக்கும் பிரதானமான பொருள்தான் தண்ணீர்!


உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் செயல்பட வைக்கும் ஆதார சக்தி என்பது நீர்தான். நீங்கள் மூச்சு விட உடலில் உள்ள ஒவ்வொரு திசுவும் தனித்தனியாக மூச்சுவிட வேண்டும். அவற்றின் ஒட்டுமொத்த வாய்க்காலாக தான் உங்கள் மூக்கு செயல்படுகிறது. அப்படியானால் ஒவ்வொரு திசுவுக்கும் தேவையான சுவாசக்காற்று எவ்வாறு அங்கு போய் சேர்கிறது? தண்ணீருடன் சில ரசாயனங்களை கலந்து இதற்காக உடல் உருவாக்கும் பொருள் தான் ரத்தம். தண்ணீரின் அடிப்படையான நகரும் குணத்தால் ரத்தம் உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு சிசுவையும் சுவாசக் காற்றை கொண்டு செரிவூட்டுகிறது. இயக்கம் எனும் நகர்வை மையமாக வைத்துத்தான் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை நீங்கள் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள் சரியா? அப்படியானால் அந்த இயக்கத்திற்கு ஆதாரமாக விளங்குவது இந்த தண்ணீர் தான்! தண்ணீரின் தொடர்பு உயிருடன் நின்று போவதில்லை. இதற்கும் மனதிற்கும் ஒரு ஆழமான தொடர்பு உள்ளது. அது என்ன என்பதை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -