நான்காம் பரிமாணம் – 51

11. நீரதிகாரம் - 1ஆம் பகுதி

- Advertisement -


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். உங்கள் உலகின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதியை நீர்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அந்த நீருக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா? அதைத்தான் இந்த அதிகாரத்தில் பார்க்கப் போகிறோம். தொடங்கலாம் வாருங்கள்.

நீரின் அடிப்படை

நீங்கள் தெருவில் நடந்து கொண்டிருக்கும் பொழுது சகதியை மிதித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனடியாக என்ன செய்வீர்கள்? அருகில் இருக்கும் நீர்நிலைக்கு அல்லது வீட்டிற்கு சென்ற பிறகு தண்ணீர் கொண்டு நன்கு கால்களை சுத்தம் செய்து கொள்வீர்கள் அல்லவா? சகதி அல்லது தண்ணீர் இவை இரண்டுமே இயற்கையில் உருவாகும் ஒரு பொருள் தான். இவை இரண்டுமே சற்று நேரத்தில் தானாகவே உடலைவிட்டு உதிர்ந்துவிடும் தன்மை கொண்டது. அப்படியிருக்கும் பொழுது ஏன் நீங்கள் உங்கள் உடலில் தண்ணீர் பட்டு விட்டால் சகதியை கொண்டு கழுவ கூடாது?  இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். எருமை மாடு எப்பொழுதுமே சகதியில் போய் புரள்கிறது. அப்படியானால் அதற்கு தண்ணீரைவிட சகதி தான் மிகவும் பிடிக்குமா? எருமை மாட்டின் தோல் மிகவும் கனமாக இருப்பதால் ஏதாவது ஒரு வழியில் தன்னுடைய உடல் வெப்பத்தை அது தனித்து கொண்டாக வேண்டும். எருமை மாட்டிடம் நீங்கள் தண்ணீர் நிரம்பிய ஒரு நீர்நிலையையும் சகதியும் கொடுத்தால் அது நேரடியாக நீர்  நிலைக்குள்தான் செல்லும். எந்த ஒரு நீர் நிலையும் இல்லாத பட்சத்தில் குறைந்தபட்சமாக சகதியில் உள்ள தண்ணீரை மட்டுமாவது வைத்து உடல் சூட்டைக் குறைத்துக் கொள்ள முடியுமா என்ற முயற்சிதான் சகதியில் புரள்வது எல்லாம். ஆக மொத்தம் எருமை மாடு கூட நீரைக்கொண்டு தான் தன் உடலை பாதுகாத்துக் கொள்கிறது. இதன் காரணத்தை தெரிந்து கொள்வதற்கு முதலில் உங்கள் உடலில் உள்ள தண்ணீரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதன், விலங்குகள், செடி கொடி போன்ற தாவர சங்கமங்கள் அனைத்துமே அடிப்படையில் நீரை முதன்மையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது தான். மனித உடலில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான எடை நீரினால் மட்டும் தான் வருகிறது என்று அறிவியல் வகுப்பில் படித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். உங்கள் உடலில் எந்த பொருள் நிறைந்துள்ளதோ அத்த பொருளைத்தான் அனைத்திற்கும் பொதுவான ஒரு அடிப்படை பொருளாக உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளும். இதனால்தான் நீங்கள் உங்கள் கால்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொண்டீர்கள்! தண்ணீர் ஒரு அடிப்படை சராசரி பொருளாக மொத்த உலகத்திற்கும் இருப்பதில் ஒரு காரணம் உண்டு. அறிவியலில் இடையகம் (Buffer) என்ற வார்த்தை உண்டு. அதாவது எந்த இரண்டு எதிர்மறை குணம் கொண்ட நிலைப்பாடுகள் உலகில் இருந்தாலும் அவை இரண்டுக்குமே சரியான நடுநிலைமை கொண்ட ஒரு பொருளும் இருக்கும். உதாரணத்திற்கு வெப்பம் குளிர் எனும் எதிர்மறை நிலைகள் இருந்தால் இவை இரண்டுக்கும் நடுவில் அதிக சூடு அல்லது குளிர் இரண்டும் இல்லாமல் கூட சில பொருட்கள் இருக்கும். இந்த இருமை குணங்களுக்கு நடுவில் இருப்பதால் தான் இதனை இடையகம் என்று கூறுகிறீர்கள். அதுபோல அமிலத்தன்மை(acid) , காரத்தன்மை(base) எனும் இருமை குணமும் அனைத்து பொருட்களுக்கும் உண்டு. எந்த ஒரு அமிலமும் காரமும் சமஅளவில் ஒன்றாக சேர்ந்தால் இவை இரண்டுமே ஒன்றை ஒன்று சமன்படுத்தி கொண்டு கிடைக்கும் இறுதிப் பொருள் தண்ணீர் தான். இதனால்தான் தண்ணீருக்கு என்றுமே செயல் தன்மை என்ற ஒன்று கிடையவே கிடையாது. எந்தப் பொருளில் தன்னை சேர்த்துக் கொள்கிறதோ அந்தப் பொருளின் தன்மையை ஏற்றுக்கொண்டு விடும். 

தண்ணீருக்கு குணம் இல்லை தண்ணீரால் உங்கள் உடம்பிற்கு எந்த வித இயக்க சக்தியையும் கொடுக்க முடியாது. அப்படி இருந்தால் கூட உங்கள் உடலில் மிக அதிகமாக தேவைப்படும் வேதியியல் பொருள் என்றால் அது தண்ணீர் தான். சாப்பிடாமல் கூட உங்களால் இரண்டு நாட்கள் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இரண்டு நாட்கள் இருந்து பாருங்கள் பார்ப்போம். மொத்த உடலும் ஸ்தம்பித்துவிடும். தண்ணீருக்கு நேரடியாக எந்த ஒரு குணமும் கிடையாது என்றாலும் சூட்சமமான பல குணங்கள் உள்ளன. அந்த வகையில் அதன் முதல் குணம்தான் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வது. உங்கள் உடல் எவ்வாறு இயங்குகிறது? நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள இயக்க சக்தி உடலில் உள்ள அனைத்து திசுக்களிலும் செலுத்தப்படும் பொழுது உடல் செயல்படும். அந்த சக்தியை திசுக்களுக்கு கொண்டு செல்வதற்கு ரத்தம் எனப்படும் திரவம் உதவும். ரத்தத்திற்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் சக்தி கிடைப்பது தண்ணீரின் குணம்தான். ஒரு உடலுக்குள் மட்டுமல்ல. ஒரு சமூகம் தழைத்திருக்க வேண்டும் என்றால் அதனருகில் ஒரு ஜீவ நதி ஓடி இருந்தால்தான் முடியும். பண்டைய நாகரிகங்கள் அனைத்தும் ஒரு நதிக்கரையில் தான் அமைந்துள்ளது. நைல் நதி எனும் நதி இல்லை என்றால் எகிப்து எனும் நாடு உருவாய் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. தற்போது கூட எகிப்து நாட்டில் 90 சதவீதத்திற்கும் மேல் மக்கள் அனைவரும் தண்ணீரின் அருகாமையில் தான் வாழ்கிறார்கள். தண்ணீருக்கு இருக்கும் மற்ற குணங்களில் இன்னும் ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -