சூர்யப்பாவை – 10

தொடர் கவிதை

- Advertisement -

கட்டாந்தரையைக் கொத்திப்
பண்படுத்தும் சிட்டுக்குருவியின்
பெருமுயற்சிபோன்றது
கடுமனக் களர்நிலத்தைக்
காதற்பயிர்நிலமாக்குவது.
சிற்றலகால் கொத்திப்
பெருநிலம் பண்படுத்துதல்
எங்ஙனமென்றால்
இரும்புக்கோல் கொண்டா
இளநெஞ்சத்தை உழுவது
என்றே விடை வருகிறது 

சின்னஞ்சிறு விழிகள்தாமே
பேருலகைக் காண்கின்றன.
பெரிதாயேதும் வினைகெட்டுச்
செய்யத்தேவையில்லை .
ஒருவாய்ச்சோற்றினில்
கனிவும் களிப்பும்
பிசைந்து கொடுத்தால்
பட்டினி மாளாதா?
ஒருவாய்ச்சொல்லில்
காதலும் நேயமும்
கலந்து உதிர்த்தால்
வெறுமை வீழாதா?

இருகையணைப்பினில்
இரக்கமும் ஆறுதலும்
இணைத்து ஈந்தால்
தனிமை தீராதா?
ஒற்றைப்பார்வையிலும்
கீற்றுப்புன்முறுவலிலும்
அகந்தையும் செருக்கும்
அழிந்தொழியாதா?

சின்னஞ்சிறு அடிவைத்தே
பெரிதினும் பெரிதான
காதலுலகம் அளப்போம்
அயர்ச்சியைத் தருவதல்லடி
அயராமல் அன்பைத்தருவதே
ஆகச்சிறந்த காதலென்கிறாய்.
சிற்றன்புப் பொன்துகள்களால்
பெருங்காதல் நகைசெய்யும்
காதற்பொற்கொல்லன் நீ சூர்யா.

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -