தெருக்களே பள்ளிக்கூடம்

நூலாசிரியர் : ராகுல் அல்வரிஸ் (தமிழில்: சுஷில் குமார்)

- Advertisement -

ஆசிரியர்: ராகுல் அல்வரிஸ்

தமிழில்: சுஷில் குமார்

வெளியீடு: தன்னறம் பதிப்பகம் (www.thannaram.in)

விலை: ரூ.200

ஊரடங்கு காலத்திலும் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாதென எல்.கே.ஜி படிக்கும் தங்கள் பிள்ளைகளை ஆன்லைன் வகுப்பில் உட்கார வைக்கும் பெற்றோர்தான் இன்று அதிகம். ஆனால் ஒரு வருடம் பள்ளிப்படிப்பிற்கு இடைவெளி விட்டு தனக்கு விருப்பமானவற்றைச் செய்வதற்கு ராகுல் அல்வரிசின் பெற்றோர் அவரை அனுமதித்தனர். அந்த ஒருவருடம் தான் கற்றுக் கொண்ட விஷயங்களை, வாழ்க்கை அனுபவங்களைப் புத்தகமாக்கியிருக்கிறார் ராகுல். 16 வயதில் மற்றவர்கள் எல்லாம் அடுத்தவர் எழுதியவற்றைப் படிக்கையில் ராகுல் தானே ஒரு புத்தகம் எழுதியிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

இந்திய இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பின் (Organic Farming Association of India – OFAI) தலைவராக இருந்தவரும், தேசிய அளவில் சூழலியல் சார்ந்த பெரும் பொறுப்புகளை வகித்த சூழலியலாளருமான கிளாட் அல்வாரிஸ் அவர்களின் மகன் ராகுல் அல்வரிஸ். உண்மையான கல்வி என்பது வகுப்பறைக்கு வெளியே தான் இருக்கிறது என்பதை உணர்ந்த கிளாட் அல்வரிஸ் கற்றல் என்பது நிறுவனங்கள் தரும் வகுப்பறைக் கல்வியோடு முடிவதில்லை. தெருக்கள் தான் கல்வி கற்க சிறந்த இடம் என்பதை உணர்ந்தவர்.

ராகுலின் அம்மா நோர்மா அல்வரிஸ் ஒரு சந்திப்பில் கூறியதாவது, “அந்தக் காலகட்டத்தில் வீட்டில் டிவி இருப்பது கௌரவமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. எல்லோரும் தங்கள் வீட்டில் ஒன்று வாங்கி வைக்க முற்பட்டனர். எங்கள் வீட்டில் டிவி இருக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே டிவி அவ்வளவு நல்லதல்ல என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் அடுத்தவர் வீடுகளில் டிவி இருப்பதைப் பார்க்கும் எங்களின் மூன்று மகன்களுக்கு அதனைப் புரிய வைக்க நினைத்தோம். அவர்களை ஒருநாள் அழைத்துக் கூறினோம். டிவியைப் பொறுத்தவரை, இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு வகை, அருமையான இடங்கள் பலவற்றிற்கும் சென்று இந்தக் காணொளிகளை எடுப்பவர்கள். அவர்கள் உலகின் மூலை முடுக்குகளில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை அங்கு சென்று, படம் பிடித்து அனைவருக்கும் காட்டுபவர்கள். இரண்டாம் வகையினரோ, எங்கும் செல்லாமல் மற்றவர் காட்டும் படங்களை வெறுமனே உட்கார்ந்தபடி பார்ப்பவர்கள். இப்போது நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள். நாம் முந்தையவர்களைப் போல பல இடங்களுக்கும் சென்று ஒன்றை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டுமா? அல்லது அவற்றை அமர்ந்து பார்ப்பவர்களாக இருக்க வேண்டுமா? என்று கேட்டோம். அவர்கள் முந்தைய வழியைத் தேர்ந்தெடுத்தார்கள்.”

இத்தகைய முடிவை எடுத்ததோடு மட்டுமல்லாது அதனைச் செயல்படுத்துவதற்கு உண்டான வீட்டுச் சூழலையும் ராகுலின் பெற்றோர் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்தனர். ஒருவருட காலத்திற்கு சராசரி பள்ளிக் கல்வியிலிருந்து விலகி தன் மனதிற்குப் பிடித்த கல்வியைக் கற்க ராகுலை அனுமதித்தனர்.

அதுவரை எல்லாப் பிள்ளைகளையும் போல பெற்றோரின் நிழலிலேயே வாழ்ந்து வந்த ராகுல் தனது பயிற்சியைத் தான் வாழ்ந்த ஊரான கோவாவில் குடும்ப நண்பரின் வளர்ப்பு மீன் கடையில் அவருக்கு உதவியாக இருப்பதிலிருந்து தொடங்குகிறார். பின்னர் ஊர்வனவற்றில் உள்ள ஆர்வத்தினால் புனேயில் பாம்புப் பண்ணையிலும் மாமல்லபுரத்தில் முதலைப் பண்ணையிலும் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொள்கிறார். அதுமட்டுமின்றி விவசாயப் பயிற்சி, காளான் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்தும் அறிந்து கொள்கிறார். இந்தப் பயிற்சிகளில் தான் கற்ற பாடங்களை இந்தப் புத்தகத்தில் தெளிவாக சரளமான நடையில் பதிவு செய்திருக்கிறார். தனது பயணங்களின் போது தான் ஏமாற்றப்பட்ட சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர்கள் அதிக சுதந்திரம் தரும் பொழுது பிள்ளைகளுக்கு பொறுப்புணர்வும் அவசியமாகிறது. அந்தச் சுதந்திரத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளும்போதுதான் வளர்ச்சிப் பாதை நோக்கி நகர முடியும். ராகுலின் எழுத்தில் இதனை நன்கு உணர முடிகிறது. அந்த வயதிற்கே உண்டான விளையாட்டுகளில் ஈடுபட்டாலும் தனது குறிக்கோளில் இருந்து விலகாது தனது பயிற்சிக் காலத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இவ்வாறு ராகுல் தனது விருப்பத்தின் பேரில் செலவிட்ட அந்த ஒரு ஆண்டு அனுபவம் அவரது பின்னாளைய வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக அமைந்தது. இன்று ஒரு இயற்கை ஆர்வலராக இருக்கும் ராகுல், வனங்களில் சாகசச் சுற்றுலா ஏற்பாட்டாளராக இருக்கிறார். அதோடு நகருக்குள் புகுந்து விடும் பாம்புகளை கொல்லாமல் அவற்றைக் காட்டிற்குள் பத்திரமாக கொண்டு விடும் பணியையும் செய்கிறார். இதுகுறித்து அவர் மற்றவர்களுக்குப் பயிற்சியும் தருகிறார். இதுவரை 1500க்கும் மேற்பட்ட பாம்புகளை அவர் மீட்டிருக்கிறார். மேலும் எழுதுவதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் இன்றுவரை தொடருகிறது.    

அந்தக் காலகட்டத்தில், ஊர்வனவற்றோடு பழகுகையில் நிறைய கடிகள் வாங்கியிருக்கிறார். அது குறித்து ராகுல் இவ்வாறு எழுதுகிறார், “இப்போது என் வாழ்வை திரும்பிப் பார்க்கும்போது, சிலர் பரிசுக் கோப்பைகளை சேர்த்துவைப்பதைப் போலத்தான் நான் கடிகளை சேர்த்துவைத்துக் கொண்டிருந்திருக்கிறேன் என நினைக்கிறேன். இந்தச் செயல்கள் பார்ப்பதற்கு முட்டாள்தனமாகத் தோன்றினாலும், ஒருவேளை அப்படியே கூட இருக்கலாம் (சில கடிகள் மோசமாக வலித்தன), அந்தக் கடிகளின் விளைவாக ஒரு நல்ல விசயமும் நடந்தது. இப்போது அந்தமாதிரி கடிகளைக் குறித்து எனக்கு எந்தவித உள்ளார்ந்த பயமும் இல்லை. ஊர்வனவற்றைக் கையாளும்போது நான் மிக கவனமாக இருக்கிறேன், எனக்குக் கற்றுத்தரப்பட்ட எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கிறேன். அப்படியே கடி வாங்கினாலும் நான் ஒன்றும் பயந்துவிட மாட்டேன், அதைக் குணப்படுத்த என்ன வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்.”

சுதந்திரமான கற்றலின் பலன் இப்படித்தான் இருக்க முடியும்.

ஆங்கிலத்தில் ‘Free from school’ என்ற இந்தப் புத்தகத்தை தமிழில் “தெருக்களே பள்ளிக்கூடம்” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர் சுஷில் குமார். மூலத்தின் எளிமை கெடாமல் சிறப்பாக இந்தப் பணியைச் செய்துள்ளார் சுஷில் குமார். பிரகாஷ் மற்றும் இயல் அவர்களின் ஓவியங்களும் புத்தகத்திற்கு அழகு சேர்க்கின்றன.

தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் பிள்ளைகளின் கைபிடித்து அழைத்துச் செல்ல நினைக்கும் பெற்றோருக்கு இந்தப் புத்தகம் ஒரு கண்திறப்பாக அமையும். பதின்பருவத்தினர் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரும் இந்நூலினை அவசியம் வாசிக்கவேண்டும். அவர்கள் மனத்தில் பலவிதமான தேடல்களை  இந்நூல் விதைக்கும் என்பது நிச்சயம்.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

2 COMMENTS

  1. நல்ல விமர்சனம். இதை போன்ற புத்தகங்கள் கல்வி முறையில் மாற்றங்களை உருவாக்குவதற்கான வித்தாக அமையட்டும்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -