பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 25

சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு..!!!!

- Advertisement -

சந்தனமும் குங்குமமும் கொண்டு காதலியின் அழகினை மெருகேற்றுகிறார் நம் எஸ்.பி.பி என்று சொன்னேனல்லவா? எவ்வாறு மெருகேற்றுகிறார் என்று பார்க்கலாம் வாருங்கள். இதுவொரு தனிப்பாடல். பின்னே , காதலியின் அழகினைப் போற்றிப் புகழ்ந்து பாடும்போது கூட்டு சேர்த்துக்கொண்டா பாட முடியும்? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. தன்னந்தனியாகத்தான் உருகி உருகிப் பாடுகிறார் நம் பாடும்நிலா.

நம் எஸ்.பி.பியை ஒப்பீடு செய்து பார்க்க விரும்பினால் ஆயிரமாயிரம் அழகான உவமைகள் நிரல்கட்டி வந்து நிற்கும். ஆனாலும் நாம் வாழும் புவியோடு அவரை ஒப்பிடுவதே ஆகச்சிறந்த ஒன்றாக இருக்க முடியும் என் நான் எண்ணுகிறேன். புவியின் இயல்பு என்ன? புவி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது. அதேபோலத்தான் நம் எஸ்.பி.யும் பாடும்போது தானும் உருகி கேட்பவரையும் உருக வைத்துவிடுகிறார். இதில் உருகி என்பதை எடுத்துவிட்டு சிரிப்பு,அழுகை,மயக்கம்,சினம்,ஏக்கம் என எல்லா உணர்வுகளின் பெயரையும்  ஒவ்வொன்றாகப் போட்டுப்பாருங்கள். அத்தனையும் பொருந்தும்..

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி

தாமரைப்  பூமீது விழுந்தனவோ?

இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்

படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ?…

இதுதான் முதற்சரணம். மேடுபள்ளம் ஏதுமில்லாத பாறைகளற்ற மணற்பாங்கான சமவெளியில் பாய்கின்ற இயல்பான நீரோட்டம்போலத்தான் பாடத்தொடங்குகிறார். விழுந்தனவோ? என்ற கேள்வியைக்கூட நீட்டாமல் சட்டென்று மென்மையாகவே கேட்டுவிட்டு அடுத்த வரிக்குச் சென்றுவிடுகிறார். தடாகத்தில் என்ற சொல்லிலிருந்து பாகம்தான் என்ற சொல்வரையிலும் இயல்பான நீரோட்டமாய்ப் பாடும் நம் பாடும்நிலா அதற்கடுத்து மெலிதாய் ஓரிடைவெளி விட்டுவிட்டு அதன்பின்  உன் கண்களோ? என்று கேட்கிறார். அது எவ்வாறு உள்ளதென்றால், புதிதாய் நடந்தோடிப் பழகிய குழந்தை குடுகுடுவென்று ஓடிவிட்டுப் பாதியிலேயே நின்று சட்டென்று திரும்பி தன் தாயைப்பார்த்துச் சிரிப்பதைப்போலவே அத்துணைப் பேரழகாய் இருக்கிறது.

காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு

கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்

ஜதி எனும் மழையினிலே ரதி

இவள் நனைந்திடேவே –

முதலிரண்டு வரிகளையும் மென்குரலில் பாடியவர் அடுத்த வரியான காற்றில் அசைந்து வரும் என்பதில் குரலைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுகிறார். காற்றில் சொல்லிலிருந்து நனைந்திடவே வரையிலும் அவர் பாடும் ஒலியின் அலைவரிசை ஏறுமுகமாகவே ( வடமொழியில் ஆரோகணம்) இருக்கிறது. குரலின் அடர்வும் சற்றே மிகுந்து ஒலிக்கிறது.  அப்படியே அடுத்த வரிக்கு வரும்போது அதையே  இறங்குமுகமாகவும் அடர்வு குறைத்தும் பாடுகிறார்.

அதில் பரதம்தான் துளிர்விட்டுப் பூப்போல பூத்தாட

மனம் எங்கும் மணம் வீசுது எந்தன்

மனம் எங்கும் மணம் வீசுது –

என்ற வரிகளில் சரணத்தின் முதலிரண்டு  வரிகளின் வேகத்தைப்போலவே மெதுவேகம்தான் இருக்கும். அதற்குப் பெரிதும் துணை நிற்பது பாடலின் இசையென்பதையும் இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்…

இனி இரண்டாவது சரணத்திற்குச் செல்லலாம்.

சந்தனக்  கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்

அரங்கேற அதுதானே உன் கன்னம்

மேகத்தை மணந்திட  வானத்தில் சுயம்வரம்

நடத்திடும் வானவில் உன் வண்ணம் –

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி என்றும், காத்திருப்பேனோடி இதோ பார் கன்னத்து முத்தமொன்று என்றும் பாரதியே மயங்கி உருகிக் கிறங்கிப் பாடியிருக்கிறான் என்றால் இப்பாடலை எழுதிய கவிஞன் மட்டும் விதிவிலக்கா என்ன? பாட்டெழுதியவரும் பாடியவரும் மயங்கித்தான் தத்தம் செயலைச் செய்திருக்கிறார்கள். அரங்கேற அதுதானே என்று பாடியபின் அக்குரலிலொரு மயக்கம் ஏற்றிப்பின் உன் கன்னம் என்று பாடுகிறார். நாமும் அக்குரலில் மயங்கத்தானே செய்கிறோம்!!!

இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட

புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்..

கலைநிலா மேனியிலே

சுளை பலா சுவையைக் கண்டேன்…

புத்தம்புதுக் கற்பனையை அழகுத்தமிழில் சொற்களாய் வடிக்கும்போது கிடைக்கின்ற மனநிறைவும் மகிழ்வும் அளவிடமுடியாமல் ஆர்த்தெழுந்து நம்மை மூழ்கடிக்கும். இரண்டு குடத்தைக்கொண்ட தம்புரா அவ்வகைமையைச் சேர்ந்த ஓர் உவமைப்பாடுதான்.  இப்பாடல் வெளிவந்த காலகட்டத்தில் இருந்த இளம்பருவத்தினர் இவ்வரியைக் கொண்டாடித்தான் தீர்த்திருப்பர். அடுத்தவரியிலும் பாருங்கள் .. பொதுவாகக் கவிஞர்கள் பலாச்சுளை என்றுதான் எழுதுவது வழக்கம். ஆனால் நம் டி.ஆரோ சுளை பலா சுவையைக் கண்டேன் என்கிறார். பாடும்போது  கொஞ்சம் பிசகினாலும் கொடூரமாய் மாறிவிடக்கூடிய ஒருவித சொற்கோவை அது. சுளை பல என்று கேட்டுவிடும். ஆனால் துல்லியத்திற்கே அறைகூவல் விடுமளவுக்குத் துல்லியமாய்ப் பாடுவதில் வாய்தேர்ந்தவர் நம் எஸ்.பி.பி. ஆயிற்றே.. அவராவது பிசகுவதாவது..!

அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி

மதிதன்னில் கவி சேர்க்குது எந்தன்

மதிதன்னில் கவி சேர்க்குது –

சுளை பலாச் சுவையில் மயங்கிக்கொண்டே மேற்கண்ட இறுதிவரிகளையும் பாடுகிறார். அட, அதற்குள் இரண்டு சரணங்கள் முடிந்துவிட்டனவா? என்று ஏங்க வைத்துவிடுகிறது இப்பாடல்.

ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்

ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

சலங்கை இட்டாள்  ஒரு மாது சங்கீதம் நீ பாடு

சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்

அதைக்  காண்பதில் எந்தன் பரவசம் ….

இதுதான் பல்லவி. சலங்கை இட்டாள் ஒரு மாது என்று பாடுவது கூடுதல் அழகினை அள்ளித் தெறிக்கிறது. விழிகளின் பழரசத்தைக் காண்கையில் மனத்தில் தோன்றும் பரவசம், அதை வெளிப்படுத்தும்விதம் என அவ்வுணர்வினை நம் எஸ்.பி.பி பாடுவது ,குறிப்பாக எந்தன் பரவசம் என்ற சொற்களைப் பாடுவது ஒளிந்தோடி விளையாடும் குழந்தை சட்டென்று தன் தாயைக்கண்டால் வெளிப்படுத்தும் உணர்வினை, பெருமூச்சுடன் கலந்த பெருமகிழ்வினையும் அதிர்ச்சியையும் கலந்த உணர்வினை ஒத்ததாக இருக்கிறது. கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே தெரியும்.

இப்போதுதான் சிறப்பான ஒன்றினைப் பார்க்கப் போகிறோம். இப்பாடலின் தொடக்கத்தில் ” ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ” என்று ஓர் இசைப்பண்ணினைப் பாடுகிறார் நம் எஸ்.பி.பி . அதை மட்டுமே திரும்ப திரும்பக் கேட்டிருக்கிறேன் நான். அது, பந்தியில் உட்கார்ந்து  வெறுமனே பாயாசம் மட்டுமே சாப்பிட்டுவிட்டு மனமும் வயிறும் நிறைந்து திரும்புவதைப்போன்ற உணர்வைத்தரும்.  அதேபோல பல்லவி முடிந்ததும்

                     ” தத்தத் தகதிமி தத்தத் தகதிமி

         தத்தத் தகதிமி தோம்

என்று அவர் இசைகுறிப்பொலிகளைப் பாடும்போது கேட்பவர் எவரும் மனத்திற்குள்ளேயே ஒரு சதிராட்டம் ஆடிப்பார்ப்பதைத் தவிர்க்க முடியாது.

அதேபோலவே முதற்சரணம் முடிந்ததும்

                                   ” நாதிந்தின்னா  நாதிந்தின்னா

              நாதிந்தின்னா நாதிந்தின்னா

என்று தொடங்கி அவர் பாடுகையில் கைகள் தாளம் போடுவதையும்,  அடவு பிடிப்பதையும் தவிர்க்கவே இயலாது. பல்லவி, இரண்டு சரணங்களைவிடவும் மேற்கூறிய மூன்றையும் மட்டுமே தனியாகக் கேட்கலாம். திரும்ப திரும்பக் கேட்கலாம். அதுதான் எஸ்.பி.பி என்ற மாயக்காரனின் பெருஞ்சிறப்பு…

மைதிலி என்னைக் காதலி என்ற படத்திற்காக நம் டி.ஆர் எழுதிய அழகான பாடலிது. அமலா என்னும் நடன மாதினை நடிகையாக்கியதும் இப்படத்தில்தான். நடிக்க மாட்டேன் என்று மறுத்த அமலாவினை ஒப்புக்கொள்ள வைப்பதற்காகத் தன் மனைவி உஷாவினைத் தூது அனுப்பி, படத்திலும் அமலாவின் வேடம் நடனமங்கைதான் என்று துணிவூட்டித் தன் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

டி.ஆர் எழுதிய எத்தனையோ சிறந்த பாடல்கள் இருப்பினும் நான் எப்போதும் முதலிடம் கொடுப்பது ” ஒரு பொன்மானை நான் காண ” என்ற இப்பாடலுக்குத்தான். அவரின் தெள்ளுதமிழுக்கும் கொஞ்சும் கற்பனைக்கும் தலைவணங்கத்தான் வேண்டும். தெள்ளுதமிழ் வரிகளை நம் நெஞ்சை அள்ளும்வகையில் பாட வேண்டுமென்றால் உடனே நினைவுக்கதவைத் தட்டுவது எஸ்.பி.பி என்ற மூன்றெழுத்துதானே!

டி.ஆர், எஸ்.பி.பி , அமலா என்ற முப்பரிமாண அழகியலை உள்ளடக்கியது இப்பாடல். 

நீயொரு பொன்மான் என்று காதலியிடம் உருகியவர் அடுத்து அவளை மயில் என்கிறார். உன்னாலே துயில் இழந்து தவிக்கிறேனடி என்று சொல்கிறார். அதற்கு அவள் என்ன சொல்கிறாள்? என்று அடுத்த செவ்வாய்க்கிழமையில் தெரிந்து கொள்வோம் .. காத்திருங்கள்.

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

2 COMMENTS

  1. மிகச் சிறப்பு.. எனக்குப் பிடித்த டிஆர் பாடல்களில் இந்த பாடலுக்கும் இடம் உண்டு.
    இந்தப் பொன்மானை ரசிக்காதோர் உண்டோ!?
    டி.ஆர் ரின் வர்ணனையும்,நடனமும்,எஸ் பி பி யின் குரல் இனிமையும் காலம் கடந்து இந்த பாடலை நிறுத்தி இருக்கிறது.அதை மீண்டும் சிறப்பாக தனது எழுத்தின் மூலம் எல்லா ரசிகனின் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்த கவிதாயினி பிரபாதேவி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ??????

    • ஆகச்சிறந்த பாடல் என்று இதைக் கண்ணைமூடிக்கொண்டு சொல்லலாம் அண்ணா..
      எல்லோர்க்குள்ளும் உறங்கிக் கிடக்கிற டி.ஆர் சுவைஞனைத் தட்டியெழுப்புவோம். ❤❤

      தாங்கள் தரும் தொடர்பேரூக்கத்திற்குப் பேரன்பும் பெருமகிழ்வும் அண்ணா ❤❤?

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -