“என்னங்க நான் சமையல் செய்ய தயாராகிட்டிருக்கேன். நம்ம ஜூமியன் வந்தா பேசி மானத்தை வாங்காதீங்க” என்று அபிராமியின் குரல் கேட்டு அதிர்ச்சியில் சமையலறைக்கு ஓட எழுந்த குணாவை இடைமறித்தது கதவை தட்டும் ஒலி.
“மேடம் தயாரா?” என்று கேட்டவாறே உள்ளே வந்தான் ஜூமியன் என்றழைக்கப்படும் ஜூம் ஒருங்கிணைப்பாளர்.
“டேய் பாதகா, போன வாரம் தான் என் மகனின் தேன்நிலவிற்கு ஜூம் மூலம் ஐரோப்பாவை சுற்றிக் காமிக்கிறேனு $12,000 பிடுங்குன. இப்ப என்னடா?” என்று பல்லை கடித்தவாறே கேட்டார் குணா.
“அடடா சார் நீங்க வீட்ல தான் இருக்கீங்களா. உங்களை எங்கேயாவது வெளியே அனுப்பி வைக்க மேடத்திடம் சொல்லியிருந்தேனே?” என்று இவரை உதாசினப்படுத்தினான் ஜூமியன்.
“வாங்க ஜூமியன், சமையல் ஆரம்பிக்கலாமா?” என்று பட்டுப்புடவை, தகதகவென கழுத்து நிறைய நகையோடு படுக்கையறையிலிருந்து வெளியே வந்தாள் அபிராமி.
“வழக்கம்போல என்னை சமையல் செய்யவெச்சி வேடிக்கை பார்க்க ஜூமியனை வரவழைச்சியிருப்பாளோ?” என்று யோசிப்பதற்குள் அபிராமி “என்ன ஜூமியன் கண்டிப்பா அடுப்பை பற்றவைக்கணுமா?” என்றாள்.
கருமம் என்று தலையில் அடித்தவாறே அவர்களை பின் தொடர்ந்து சமையலறைக்குள் நுழைந்தார் குணா.
நிலைக்கண்ணாடியும் மேக்கப் சாமான்களும் எப்படி சமையலறைக்குள் வந்தன? எப்படி சமையலறை இவ்வளவு பிரகாசமாக உள்ளது? என்று பல கேள்விகள் மின்னலாய் வந்தன குணாவிற்கு.
“மேடம் நீங்க ஒரு 2 நிமிஷம் கரண்டியால இந்த வாணலியில் வறுக்குற மாதிரி செய்யுங்க” என்று சொல்லியவாறே கைப்பேசியில் காணொளி பதிவு செய்ய துவங்கினான் ஜூமியன்.
“மேடம் இப்ப குக்கரை திறந்து மூடுற மாதிரி செய்யுங்க, அடடே அதுக்குள்ள வியர்த்துப்போகிடுச்சே. சார் சும்மா நிக்காதீங்க. டக்குனு மேடம் முகத்தை துடைச்சிவிடுங்க” என்று அதிகாரத் தோரணையில் அக்கறை காண்பித்தான் ஜூமியன்.
“டேய் என்னடா செய்யுறீங்க. சொல்லித்தொலைங்க” என்று கெஞ்சினார் குணா.
“என்னங்க, ரொம்ப டயர்டா இருக்கு. நீங்க எங்க இரண்டு பேருக்கும் ஜூஸ் போட்டு எடுத்துவாங்க. சொல்லுறேன். “ என்ற அபிராமியின் கட்டளையை செவ்வனே நிறைவேற்றினார் குணா.
“சார், மேடம் ஒரு யூடியுப் சேனல் துவங்கப்போறாங்க. பேரு என்ன தெரியுமா? அபிராமி அட்வைஸ். இந்த பேரை பிரபல ஜோசியர் $1000 மட்டும் வாங்கிட்டு குறிச்சி கொடுத்தாருனா பாருங்களேன்.” என்று ஜூமியன் சொல்லும்போதே விளங்கிவிட்டது குணாவிற்கு. “அதுக்கு ஏண்டா $1000. அபிராமியின் அழிச்சாட்டியம்னு வெச்சியிருக்கலாமே. ஆகா சனியன் யூடர்ன் போட்டு யூடியுப் வழியா வந்திருக்கு”.
“அதுமட்டுமில்லைங்க. நம்ம ஜூமியன் வாரா வாராம் நான் சமையல் செய்யுற மாதிரி காணொளி மட்டும் எடுத்துட்டு போய்டுவாரு. பிறகு அவரே அவங்க வீட்ல கஷ்டப்பட்டு சமைச்சி காணொளியில் ஒட்டிடுவாரு. பாவம் நமக்காக எவ்வளவு கஷ்டப்படுறாரு” என்று வருந்தினாள் அபிராமி.
“அடேய் இதுக்கு எவ்வளவு டா” என்றவரிடம் “வாரத்திற்கு $500 தான். அதுவும் மேடம் கட்டாயப்படுத்தியதால் தான்” என்று நல்லவன் போல ஜூமியன் பதிலளித்தான்.
“சரிடா, இப்ப எடுத்த காணொளில அப்படி என்ன சமைத்த மாதிரி காமிக்கப்போற. அதையாவது சொல்லு” ஆவலுடன் கேட்டார் குணா.
“வாழைப்பூ வடையும், வறுத்த சட்னியும்” என்ற பதிலில் ஆடிவிட்டார் குணா.
“என்னது வறுத்த சட்னியா? அப்ப குக்கரில் சமைச்ச மாதிரி காமிக்கப்போறது வாழைப்பூ வடையா? டேய் குக்கர்ல எப்படிடா வடை?” என்று பொறுமையை இழந்து கத்தினார் குணா.
“இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தோம். இப்படித்தான் ஒவ்வொருவரும் காணொளியை தேடி தேடி பார்ப்பார்கள். மேடம் எங்கேயோ போய்டுவாங்க. எப்படி என் தந்திரம்?” என்றவனை பெருமையாக பார்த்தாள் அபிராமி.
“அடுத்த வாரம் நறுக்கிய வெங்காயமும், நசுக்கிய தக்காளியும் அப்படினு எடுக்கப்போறேன். மேடம் கண் எரியக்கூடாதுனு ஐரோப்பால இருந்து வேகவெச்ச வெங்காயத்தை அனுப்ப சொல்லியிருக்கேன். தக்காளி நசுக்கும்போது மேடம் கை வலிக்குமேனு தாய்லாந்து தக்காளியை விமானத்துல அனுப்ப சொல்லியிருக்கேன்” என்று அடுக்கினான் ஜூமியன்.
“அதெல்லாம் சரிடா, எப்படி மக்கள் கூட்டத்தை இந்த கருமத்தை யூடியுப்பில் பார்க்க வைப்பே? இப்பலாம் யூடியுப் சேனல் ஆரம்பிக்காத வீடேயில்லை.” என்றவரை அருவருப்பாய் பார்த்தாவாறே “என்னங்க நம்ம ஜூமியன் உங்களை மாதிரியா? ரொம்ப நல்ல புத்திசாலி. நம்ம காணொளியை பார்த்து கருத்து பதிவு செய்யும் முதல் 100 பேருக்கு தலா 10$ பற்றுச்சீட்டு கொடுத்தா போதும். சீக்கிரமே பிரபலம் ஆகிடலாம். நீங்க எப்பவும் மந்தபுத்தியாவே இருக்கீங்க” என்றாள் அபிராமி.
“அப்படியா. நான் ஒரு தீர்க்கதரிசி. ஜூமியன் அடுத்து உன்னை வெச்சி பட்டிமன்றம் ஜூம்ல நடத்துவான் பாரு” என்றவாறே கும்பிடு போட்டார் குணா. நாமும் காத்திருப்போம்.
– தொடரும் இந்த ஜூம் கலாட்டா….
இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்